நண்பர்களுடன் காடுகளைச் சுற்றிப்பார்க்க அவசர, அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான் ராஜு.
அலைபேசியில் பதிவாகியுள்ள தொடர்பு எண்களைச் சிறு காகிதத்தில் எழுதிக் கொண்டிருந்த ராஜுவின் அப்பா, சில ஆயிரங்களை அவனிடம் நீட்டினார்.
“அட போங்கப்பா, நீங்க எந்தக் காலத்தில் இருக்கீங்க? ஜீபே, போன்பேன்னு எத்தனையோ இருக்கு... நீங்க எப்போ இதெல்லாம் கத்துக்கப் போறீங்களோ...!” என்றபடி காலணிகளைத் தேடினான் ராஜு.
நண்பர்களுடன் காடுகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளை, காற்றுடன் சேர்ந்து அடைமழை பெய்யத் தொடங்கியது.
ஒதுங்க இடமில்லாமல் அங்குமிங்கும் ஓடிப் பிரிந்து விட்டனர்.
நண்பர்களைத் தொடர்பு கொள்ளத் அலைபேசியை எடுத்தான்.
அது, மழையில் நனைந்து செயலிழந்து போனதைக் கண்டு அதிர்ந்து போனான்.
உணவுகள் நண்பர்களின் கைப்பையில் சிக்கிக் கொண்டது. பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது.
தூரத்தில் மலைக்கிராமம் ஒன்று தென்பட அதை நோக்கி நடந்தான்.
அங்கிருந்தத் திண்ணைக் கடையில். “ஐயா பணமெல்லாம் என்னோட மொபைலில் இருக்கு. மொபைல் வேற மழையில் நனைஞ்சிடுச்சி, ஏதாவது சாப்பிடக் கொடுங்க. ஊருக்குப் போய்ப் பணம் அனுபுறேன்” கெஞ்சலானான்.
அவரும் அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்.
அலைபேசியை மட்டுமே நம்பி வந்து செய்வதறியாது நின்றான்.
“மொபைல் நம்பர் ஞாபகம் இல்ல. எப்படி ஊர் போவது ?” என்று கோபத்தில் தன் கையிலிருந்த பையை வீசி எறிந்தான். அதிலிருந்து பேப்பரால் சுருட்டப்பட்ட ஒன்று விழுந்தது. பிரித்த போது, சுருட்டப்பட்ட காகிதத்தில் அப்பாவின் மொபைல் எண், பணம் இருந்தது.. அலைபேசிகளும்செயலிகளும் எப்போதும் கைகொடுக்காதென்பதற்காக அப்பா முன்கூட்டியேச் சிந்தித்து வைத்திருப்பதை கண்டு பெருமூச்சு விட்டான் ராஜு.