மிஷ்லாவின் போட்டோவும் பெயரும் இன்று காலைப் பேப்பர்களில் வந்துள்ளன. இன்று மிஷ்லா என்றால் யாருக்கு தெரியப் போகிறது? இப்போது அவள் பரவலாக அறியப்படும் பெயர் ராஜலட்சுமி ஐ.ஏ.எஸ்.
ஐ.ஏ.எஸ்.ராஜலட்சுமி எனக்கு மனசுக்குள் வரவே மாட்டேன் என்கிறாள். என் மனசில் இன்னும் நிற்பதெல்லாம் இரட்டைப் பின்னல், செஞ்சாந்துப் பொட்டு, பாவாடை தாவணியில் எப்போதும் குறுகுறுப்பாக இருக்கும் சுட்டிப் பெண் எச்சுமி, மிஷ்லா என்று புனை பெயர் சூட்டிக்கொண்டு, கொட்டு முரசு கையெழுத்துப் பத்திரிகையிலும், இளம் கவிஞர்கள் அரங்குகளிலும் லட்சியக் கங்குகளை வீசிக்கொண்டிருந்த அந்த முகம்தான்.
ஆரம்ப எண்பதுகள். மிஷ்லா எனக்கு அறிமுகமான அந்த சந்தர்ப்பத்திலும் அவள் போட்டோ பேட்டி, பத்திரிகைகளில் வந்திருந்தது. பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்திருந்தாள். பதினொன்றாம் வகுப்பில், மயிலாப்பூர் மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்தாள். அங்கு படித்துக் கொண்டிருந்த என் பெண் கவிதாவின் வகுப்புத் தோழி ஆனாள். அவள் மூலம் கவிதாவுக்கும் எனக்கும் ஓர் இளைஞர் குழு பரிச்சயம் ஆகியது.
அந்தக் குழு, ஒரு இலட்சிய, இலக்கிய ஆர்வக் குழு. ”இன்றைய இளைஞர்கள் சமுதாயமே கெட்டுப் போய் விட்டது. நாடு குட்டிச் சுவராகத்தான் போகப் போகிறது” என்று அரிஸ்டாட்டில் காலம் முதல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். சமீப காலமாக, adolescent psychology என்றெல்லாம் கருத்தரங்கு நடத்தி, கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நான் சொல்லும் இளைஞர்களைப் பார்த்தவர்களுக்கு எள்ளளவும் இத்தகைய சோர்வோ அவநம்பிக்கையோ வராது. இவர்கள் காந்திஜி பெயரில் ஒரு சங்கம் அமைத்து சிறிய அளவில் சமுக சேவைகள் செய்து வந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்களுக்கு பாடம் சொல்லித் தருவது, பார்வையற்றவர்களுக்கு படித்துக் காட்டுவது, பதிவு செய்து தருவது, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது. கொட்டுமுரசு கையெழுத்து பத்திரிகையில் லட்சிய வேகம் மிக்க எழுத்துகள்தான் வெளியாகும். இவர்கள் சந்திக்கும் போதெல்லாம் வெட்டிப் பேச்சு, அரட்டை என்று ஒன்றுமே இருக்காது. நல்ல இலக்கியம், சமுதாயப் பிரச்சினைகள், அந்த மாதம் ஆற்ற வேண்டிய பணி இப்படித்தான் இருக்கும். ஆச்சரியம்தான். ஆனால் உண்மை. இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து நடத்திய ஓர் இளைஞனைப் பற்றிச் சொல்ல வேண்டும். வேணு. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். காந்தியத்தில் ஆழ்ந்த பற்று. பாரதியிடம் பக்தி. சுவாமி விவேகானந்தரிடம் ஈர்ப்பு. எதிர்காலத்தில் கிராமப்புறத்து ஏழைக் குழந்தைகளுக்காக ஓர் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
கவிதா மூலமாக,எனக்கு மிஷ்லா, வேணு தொடர்பும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தன. காந்திஜி சங்க செயல்பாடுகளில் நானும் பங்கு பெறும் வாய்ப்பை நல்கினார்கள். அங்கிள் என்று மரியாதை அளித்தாலும் நண்பனாகப் பழகும் உரிமையைத் தந்தார்கள். அவர்களுடன் பழகும் போது நானும் ஓர் இளைஞனாகி விட்ட உணர்வே எனக்கு ஏற்படும்.
பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த இவர்கள் சேவைச் செலவுகளுக்கு தங்கள் பாக்கெட் மணி சேமிப்பையே பயன்படுத்தினர்கள். நிதி ஆதாரத்தை வலுப்படுத்த அவர்கள் புதியதோர் உத்தியை மேற்கொண்டார்கள். அவரவர் வீட்டில் வரும் கல்கி, குமுதம், விகடன், கலைமகள் பத்திரிகைகளில் வரும் தொடர்களைச் சேமித்து பழுப்பு அட்டை போட்டு தைத்து வாடகைக்கு கொடுப்பது. வாடகை வாரம் எட்டணா. அந்தந்த வாராந்திரக் கூட்டத்தில் கணக்கு கொடுக்க வேண்டும்.. இந்த நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மிஷ்லாவுக்கு கொடுக்கப்பட்டது.
அந்த வார மீட்டிங்கில் மிஷ்லா எட்டணா உபரியாகக் கொடுத்தாள், அவள் சொன்ன விளக்கம், ”என்னிடம் இருந்த புத்தகங்களில் ஒன்றை நான் எடுத்துப் படித்தேன் அதற்கான கட்டணம் இது.”
இந்தச் சின்னப் பெண்ணிடம் இப்படி ஒரு நேர்மையா? எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரோ என்று எனக்குத் தோன்றியது. திரும்பி வீட்டுக்கு நான் கவிதா, மிஷ்லா, வேணு வந்து கொண்டிருந்தோம். நான் மிஷ்லாவிடம் சொன்னேன், ”அவ்வளவு துல்லியமாகக் கணக்கு பார்க்கத் தேவையில்லை. உன் வீட்டுப் புத்தகங்களையும் தானே கொடுத்திருக்கிறாய்? தவிரவும் நீ பொறுப்பெடுத்துக் கொண்டு வேலை செய்கிறாயே?”
வேணுவின் முகம் சட்டென்று மாறியது தெரிந்தது, வழக்கமாக என்னிடம் இனிமையாகவும் கனிவாகவும் பேசுபவன் சற்று கடுமையாகவே சொல்லி விட்டான், ”அங்கிள், நீங்கள் தவறான அறிவுரை. கொடுக்கிறீர்கள். பொதுப்பணியில் எந்தவித சமரசம் செய்து கொள்வதோ, முறைகேட்டை நியாயப் படுத்திக் கொள்வதோ கூடாது. இந்தப் பாடத்தைத்தான் நாம் காந்திஜியின் சத்திய சோதனையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்:” நான் பதில் பேசவில்லை. சின்ன பையன் பேசுகிறான், வயது ஆக ஆக வாழ்க்கையில் அடிபட அடிபட விவேகம் வரும்!”
மிஷ்லா குழம்பியிருப்பது அவள் முகத்தில் தெரிந்தது.
ஏறத்தாழ 25 வருஷங்கள் ஆகி விட்டன. அவரவர்கள் கல்யாணம் வேலை என்று பிரிந்து போய் விட்டார்கள். வேணு திட்டமிட்டபடியே கிராமப்புறத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக இலவசப் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறான். ஆக வேணு மட்டும்தான் தன் கனவுகளுக்கு அஸ்திவாரம் கொடுத்து, தூண் வைத்து விடாமல் சேவை செய்து வருகிறான்.
மிஷ்லா ஐ.ஏ.எஸ்.தேறி மணிப்பூர், மேகாலயா, பீஹார் என்று எங்கெங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறாள். எப்போதாவது சென்னை வரும் போது இயன்றால் சந்திப்பு. அவ்வளவே. புத்தகத்துக்கு காசு கொடுத்த பழைய கதையைப் பிரஸ்தாபிப்பேன். அவள் பேச்சை மாற்றி விடுவாள். அச்சுப்பிச்சு பழைய பேச்சு பிடிக்கவில்லை என்று முடிவு கட்டிக் கொண்டு பிற்பாடு அந்தப் பேச்சையே எடுப்பதில்லை.
ஆரம்பத்தில் மிஷ்லா பெயர், போட்டோ பேப்பரில் வந்திருக்கிறது என்று சொன்னேனே, விஷயம் இதுதான். ஏதோ சலுகைக்காக ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறாள். முகத்தை மூடிய படி போலீஸ் வேனில் ஏற்றிய செய்தியும் படமும்தான் அது.
வேணு சொன்னது சரி. நான் தான் தப்பு செய்திருக்கிறேன். ஒரு குழந்தை இயேசுவை யூதாஸ் ஆக்கிய பாவம் என்னுடையது. அன்று மாலை வேணுவைச் சந்தித்த போது மிஷ்லா விவகாரம் பற்றிப் பேசி விடப் போகிறானோ என்று பயமாக இருந்தது.