உறங்கிக் கொண்டிருந்த கணவனைச் சுரண்டினாள் கெளri. “ஏங்க..! ஸ்டோr ரூமுக்குள்ளார ஏதோ சத்தம் கேட்குது... திருடனா இருப்பான்னு நெனைக்கறேன்… போய்ப் பாருங்க”
ஏற்கனவே பயந்தாங்கொள்ளியான பிரபு அவள் சுரண்டலில் திடுக்கிட்டு விழித்து. ‘திருடனா… எங்க... எங்க?”பதறினான்.
அபபோது ஸ்டோர் ரூமுக்குள் யாரோ இருவர் நடக்கும் ஓசையும், கிசுகிசுப்பாய்ப் பேசும் சத்தமும் கேட்க, “ஏங்க..கண்டிப்பாத் திருடனுகதாங்க... ரெண்டு பேர் இருப்பானுக போலிருக்கு” என்றவள் கட்டிலுக்கடியில் குனிந்து நீண்ட தொட்டில் கம்பியை எடுத்து அவனிடம் நீட்டி “இந்தாங்க... இதை எடுத்திட்டுப் போயி அவனுகளை நாலு சாத்து சாத்துங்க... ஓடிடுவானுக” என்றாள்.
“அய்யோ... நான் மாட்டேன் சாமி… கத்தி கித்தி வெச்சிருப்பானுக... பொருட்கள் திருட்டுப் போனா சம்பாதிச்சுக்கலாம்… உசுரு போயிட்டா” போர்வையை எடுத்து முக்காடிட்டுக் கொண்டான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு,
“அய்யோ..அம்மா” என்ற அலறல் சத்தம் கேட்க, மெல்ல போர்வையை விலக்கியவன் கௌரி அந்த இரண்டு திருடர்களையும் தொட்டில் கம்பியால் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்க மிரண்டு போனான்.
மறுநாள் காலை பல் துலக்கிக் கொண்டே புழற்கடைப் பக்கம் போன பிரபு அங்கே பக்கத்து வீட்டுப் பெண்ணும் கௌரியும் பேசிக் கொண்டிருக்க அதில் தன் பெயரும் இடம் பெற கூர்ந்து கவனிக்கலானான்.
“தொட்டில் கம்பிய எடுத்து அந்த ரெண்டு திருடனுகளையும் எம்புருஷன் சாத்துன சாத்தில் எனக்கே கண்ல தண்ணி வந்திடுச்சு... அவனுகளா ‘அய்யோ... அம்மா’ன்னு உசுரு போற மாதிரி கத்தறானுக... எங்க இவரு அடிக்கற அடில அவனுக செத்துக்கித்துப் போய்டுவானுகளோன்னு பயந்து நான்தான் தடுத்து அவனுகளைத் தொரத்தி விட்டென்”
விக்கித்துப் போனான் பிரபு.