இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

விவசாயி கோடீசுவரனாக முடியுமா?

அண்டனூர் சுரா


“ஒரு விவசாயி கோடீஸ்வரனாக முடியலையே ஏன் சார்?”

இப்படியொரு சந்தேகத்தை கேட்டவுடன் மொத்தத் தலையும் முனியாண்டியை வையாத குறையாகத் திரும்பிப் பார்த்தது. பின்னே எத்தனை முறைதான் இதே கேள்வியை கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பக் கேட்பது.



புயலுக்கு விலகிக்கொடுத்து நிமிர்ந்து நிற்கும் கோரைப் புல் போல பல மௌன எதிர்ப்புகளை சம்பாதித்து நின்று கொண்டிருந்தார். அரையாள் உயரம், மார்புக்கும் கீழே பானையை கவிழ்த்த மாதிரியான தொந்தி. முழு பௌர்ணமி வழுக்கை. தொம்பைக் கூத்தாடிகளைப் போல சட்டை உடுத்திருந்தார். பாலில் நனைத்து எடுத்தது போல அவர் உடையில் அத்தனை பளிச்.

பதினெட்டுப்பட்டி சுற்று வட்டாரக் கிராமத்தில் விரல் விட்டு எண்ணிடக்கூடிய பண்ணையார் வரிசையில் இவரும் ஒருவர். வீட்டைச் சுற்றி ஒரே இடத்தில் இருபது ஏக்கர் விவசாய நிலம். தாடி முளைத்தது மாதிரி நிலத்தைச் சுற்றிலும் தென்னை மரங்கள். இருப்பினும் தானும் பணக்காரன் என காட்டிக் கொள்ளுமளவிற்கு வீடு வாசல் இல்லையே என்கிற கவலை அவர் மனதில் முள்ளாக வருடிக் கொண்டிருந்தது. சின்னதாக ஒரு குடிசை வீடு. மனைவி இவர் விடும் மூச்சுக்காற்றுக்கும் தவறாது தலையாட்டிவிடும் ரகம். இரண்டு மகன்களும் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும் வசதி மிக்க ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு வாசலில் இரண்டு ஜோடி காளை மாடுகள் எப்போதும் அசை போட்டபடி மொய்க்கும் ஈக்களை தலையால் விரட்டிக் கொண்டேயிருக்கும். அதன் வேலைகளை டிராக்டர் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதன் பிறகு அதன் ஒரே வேலை வைக்கோலைத் தின்று சாணம் போடுவதுதான். வீட்டுக்கு அருகில் ரயில் வண்டி நிற்கும் தூரத்திற்கு நீண்டதொரு வைக்கோல் போர்.

“குண்டூசி தயாரிக்கும் முதலாளி வீட்டில் நானோ கார் நிற்கும் போது, நவதானியம் விளைவிக்கும் விவசாயி வீட்டில் ஒரு அம்பாசிடர் கார் கூட நிற்க வேண்டாமா?” என அடிக்கடி தனக்குள் கேட்டுக்கொள்வார். விவசாயத்தால் கோடீஸ்வரான முதல் நபர் இந்த முனியாண்டினு உலகம் பேச வேண்டும் என்பதே அவருடைய ஒரே லட்சியம். வீட்டைச் சுற்றியுள்ள நிலங்கள் யாவும் பாட்டன் சொத்துதான் என்றாலும் நிலத்தைச் சமப்படுத்தி பூமியைக் குடைந்து தண்ணீர் எடுத்து மானவாரி நிலத்தை முப்போக நிலமாக மாற்றியதெல்லாம் இவரோட சொந்த முயற்சி.



விவசாய நிலத்தைப் பார்க்கப் போகையில் மண்வெட்டியோட போறாரோ இல்லையோ, குடை எடுக்காமல் போகமாட்டார். அந்தியும் சந்தியும் ஏழை பாளைங்க அவர் தோட்டத்தில் மண்ணை மிதித்துக் கொண்டிருப்பார்கள். அவர் ஊர் சுற்றிட்டு வருவதற்குள் தோட்டத்தை விட்டு யாரும் போய் விடக்கூடாது. வியற்வை காயும் முன் கூலியைக் கொடுத்திடணுமுன்னு நபிகள் சொன்ன வாசகத்தை கொள்கைப் பிடிப்பாக பிடிச்சிக்கிட்டவர். வரப்பில் நடந்து வரும்பொழுதே தலைகளை எண்ணுவார். வேலையாட்களை நெருங்கியவுடன் பணத்தை எண்ணுவார். அத்தனையும் அழுக்கு படியாத சலவை நோட்டாகவே இருக்கும். அணிந்திருக்கும் மோதிரங்களை காட்டுவதற்காகவே அடிக்கடித் தலையை சொறிவார். போகிறவர் வருகிறவர் அத்தனைப் பேருக்கும் கும்பிடு போடுவார். கைச்செயினை காட்டிக் கொள்ள அரைக்கை சட்டைதான் அவருடைய பாரம்பரிய உடை. இவையெல்லாம் எத்தனை மாதத்திற்கு? செய்யும் விவசாயத்தின் ஆணி வேர் உடும்புப் பிடியாக மண்ணைப் பிடிக்கும் வரைக்கும் தான். அதற்குப்பிறகு கழுத்திலும் கைகளிலும் மின்னும் சொக்கத்தங்கம் செட்டியார் கடை லாக்கப்புக்குள் போய் பத்திரமாக உட்கார்ந்து கொள்ளும். சில சமயம் வெள்ளி அரைநாண் கயிறு கூட அடகு பிடிக்கப்பட்டதுண்டு. கடன் வைத்து உரமெடுப்பதோ காக்க வைத்துக் கூலி கொடுப்பதோ அவரது அகராதியில் கிடையாது. எல்லோரும் விவசாயம் செய்வது முதல் பட்டத்தில் பட்ட கடனை அடைக்க என்றால் இவர் விவசாயம் செய்வது கோடீஸ்வரனாக. கிட்டத்தட்ட மனதளவில் அதுவாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பக்கத்து தெரு ஒரு வாலிபன் சொன்னான். ”முனியாண்டி அண்ணே... வாழப்போற கொஞ்ச காலத்துக்குள்ளே நீங்க கோடீஸ்வரனாகணுமுன்னா உடனே கிளம்பி என் கூட டவுனுக்கு வாங்க. பஸ் செலவும் சாப்பாடு செலவும் என்னோடது.”



கோடீஸ்வரன் என்கிற அந்த சொல் அவர் காதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது. பங்களாவிற்குள் இருந்தபடி உலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். வாசலில் இரண்டு மூன்று சொகுசு வாகனங்கள் நிற்க வேண்டும் என்கிற மோகம் அவரை ஒரே வீச்சில் வீட்டை விட்டு கிளப்பி பக்கத்து டவுன் முருகையா லாட்ஜில் கொண்டுப் போய் நிறுத்தியது.

வெட்டி நட்டுவைத்த வாழை மரத்தாட்டம் அத்தனை பேரும் பேண்ட் உடுத்திக் கொண்டு விரைப்பாய் நிற்க, முனியாண்டி மட்டும் வேட்டியை அவிழ்ப்பதும் பின் இடுப்பில் இடுக்கிக் கொள்வதுமாக இருந்து கொண்டிருந்தார். ஒருவர் மாறி ஒருவர் மைக் பிடித்துக் கொண்டிருந்தனர். இவர் படித்திருப்பது ஐந்தாம் வகுப்புதான் . அவர்கள் பேசும் தஸ், புஸ் பேச்சை வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த கருப்பு டை யை மெல்ல இழுத்து விட்டப்படி நின்று கொண்டிருந்தார் ரெகுநாத். மார்க்கெட்டிங் பிசினஸின் தென்மண்டல சேர்மன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் கோடைக்கால மழைபோல சடசடவென்று சில கைத்தட்டல்கள். அவருக்கு அருகில் கோட் சூட் உடுத்திக் கொண்டு பலரும் முடிச்சாக உட்கார்ந்திருந்தார்கள். சொகுசு கூடிப்போன புல்லும் நாட்டியம் ஆடுவதைப்போல சிலர் தொடைகளை ஆட்டிக் கொண்டு கவனிப்பதைப்போல பாசாங்கு செய்தனர். அவர்களுக்கு எதிரே கல்லூரி இளைஞர்கள், பட்டதாரிகள், இலட்சாதிபதிகள், அரசு ஊழியர்கள் என பலரும் முளைத்திருக்க கடைசி வரிசையில்தான் முனியாண்டிக்கு ஒரு இடம் கிடைத்தது.



ரெகுநாத் கோட் பாக்கெட்டுக்குள்ளேருந்து கைக்குட்டையை மெல்ல உருவி முகத்தில் ஒத்தடம் கொடுத்து விரலால் மைக்கைத் தட்டி பார்வையாளர்களை தன் வசப்படுத்தினார் .

எந்திரன் பட ரோபோ போல மெல்ல எழுந்தார் முனியாண்டி. அதே கேள்வியை மறுபடியும் கேட்டார் “ஒரு விவசாயி கோடீஸ்வரானாக முடியுமா சார்?”

வழி தவறி வந்தவிட்ட மானை போல அந்த மனிதரை புதிராக பார்த்த ரெகுநாத் பிறகு தனது இராமாயனத்தை தொடங்கினார்.

“ நான் முதலில் பட்டதாரி ஆசிரியர் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” அதற்குள் அருகில் இருந்தவர் ” பத்து வருடத்திற்கு முன்பு” என குறுக்கிட்டார்.

கடனுக்கு சிரிப்பதைப் போல அருகில் இருந்தவர்கள் “கிண்கிணி“ யென சிரித்து வைத்தார்கள்.

“ஆமாம். லட்சாதிபதி தோழர் சொல்வதைப் போல நான் பத்து வருடத்திற்கு முன்பு நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர். எனக்கு அரசுப்பணி கிடைத்த போது என்னுடைய மாதச்சம்பளம் வெறும் நான்காயிரம் ரூபாய். என்னுடைய கிராமத்திலிருந்து ஐம்பது மைல் தூரத்தில் பணி. போக, வர பெட்ரோல் செலவு, டீ செலவு, தினப்பத்திரிக்கை, ட்ரெஸ் ..... என என்னுடைய மாத சம்பளத்தில் துண்டு பட்ஜெட் விழுந்தது. ஒரு நாள் பரிச்சயமான ஒரு நண்பரை எதேச்சையாக பார்த்தேன். என்னிடம் பத்து நிமிடம் பேசினார். உங்களைப் போல நானும் அவர் சொன்ன தகவல்களை ஒரு காதில் வாங்கி மறு காது வழியாக விட்டுவிட்டேன். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா! தொடர்ந்து என்னிடம் அவர் பேசப்பேச அவருக்கு கீழ் இந்த பிசினஸில் தன்னை இணைத்துக் கொண்டேன். வெறும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து மின் சிக்கனம் செய்யும் கருவி ஒன்று வாங்கினேன். எனக்குக் கீழே இரண்டு துடிப்பான இளைஞர்களைச் சேர்த்தேன். இப்ப இந்த நொடியில் எனக்கும் கீழே வலது புறம் இருநூறு பேரும் இடது புறம் நூற்றி எண்பது பேரும் இருக்கிறார்கள். இப்ப என்னுடைய வாரச்சம்பளம் நான் அரசு பள்ளி ஆசிரியராக இருந்திருந்தால் வாங்கும் மாதச்சம்பளத்தை விட அதிகம். இது வாரச்சம்பளம்தான். இது இல்லாமல் மாதம் இரண்டாயிரம் ரூபாய் பென்சன், பண்டிகைக்கால போனஸ் என பல சலுகைகள் உண்டு... ... ...”



தட்டான் உடல்வாகு கொண்ட சுடிதார் பெண் ஒருத்தி மெல்ல தலை தூக்க, வலிப்பு வந்தால் அவசரமாகக் கொடுக்கும் சாவிக் கொத்தைப் போல மைக்கை அவள் கையில் திணித்தார்கள்.

“ இந்த பிசினஸ்க்கும் கீழ் யார் யாரெல்லாம் சேரலாம் சார்?”

“குட் நல்லதொரு கேள்வி. “

முனியாண்டி ரெகுநாத்தை வெட்கையாக பார்த்தார். பின்னே, இதற்கு முன்பு நான்கு முறை ஒரே கேள்வியை கேட்ட அவருக்கு பதிலளிக்கவில்லை என்றாலும் ” குட். நல்லதொரு கேள்வி ” என்று கூட ஒப்புக்கு சொல்லி வைக்கவில்லையே. அவருக்கு அவமானம் கலந்த ஆகாத்தியமாக இருந்தது.

“வருங்கால லட்சாதிபதி பெண் கேட்டிருக்கும் கேள்விக்கு என்னுடைய ஒரே பதில் எல்லோரும் இந்த சங்கிலித் தொடர் பிசினஸில் இணையலாம் என்றாலும் படித்த பட்டதாரிகள் வேலை தேடும் இளைஞர்களைச் சேர்ப்பதன் மூலமே மிக விரைவில் லட்சாதிபதி என்னும் இலக்கை அடைய முடியும்”

அடுத்து ஒருவன் எழுந்தான் . “ யாரெல்லாம் கோடீஸ்வரன் ஆக முடியும்?”

“நம்ம நாட்டு மினிஸ்டர்களைத் தவிர மீதமுள்ள எல்லோரும் கோடீஸ்வரனாக முடியும்“

“ஏன் அவங்க ஆக முடியாது?” மற்றொருவன்.

“என்னப்பா நீ. கோடீஸ்வரனாக இருந்தால் தானே மினிஸ்டராகவே ஆக முடியும்“



ரெகுநாத் இப்படியொரு கமெண்ட் அடித்தவுடன் கடல் அலை ஓங்கி எழுந்து வந்து கைத்தட்டி மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்ட மாதிரியான ஆரவாரமும் அதனைத் தொடர்ந்து நிசப்தமும் நிலவியது.

இனியும் பொறுப்பதில்லை என வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு எழுந்தார் முனியாண்டி.

“தம்பி... என்னுடைய கேள்விக்கு நீங்கள் சுத்தி வளைக்காம பதில் சொல்லுங்க. ஒரு விவசாயி கோடீஸ்வரனாக முடியுமா? முடியாதா?”

மைக்கை நிறுத்தி வைத்துக் கொண்ட ரெகுநாத் “நீங்கள் கேட்பது ரொம்ப நல்லக்கேள்வி. இது வரைக்கும் எந்த ஒரு விவசாயியும் கோடீஸ்வரன் ஆகலையே ”

“அதான் ஏன்?”

“ நம்ம விவசாய நிலங்கள் எல்லாம் மழையை நம்பியே இருக்கு”

“ என்னிடம் ரெண்டு பம்ப் செட் சர்வீஸ் இருக்கு சார்.“

“இருந்தும் மின்சாரம் சரிவர கிடைப்பதில்லையே. அதுமட்டுமல்ல . ஒரு நெல் மூட்டையை விட ஒரு உரம் மூட்டையின் விலை அதிகம் . வேலை ஆட்களுக்குச் சம்பளம் அதிகம். இன்னும் பல காரணங்கள். ஒரு வேளை நிலச்சுவான்தாரர்கள் நிலத்தில் இறங்கி வேலை பார்த்தால் கோடீஸ்வரனாக ஆகக் கூடுமோ என நான் நினைக்கிறேன். “

அவரது பதில் முனியாண்டிக்கு திருப்தி அளித்திருக்கும் போலும். வந்த வேலை முடிந்ததென்று வெகுவெகு வென நடையை வீட்டுப்பக்கம் திருப்பினார். மனைவியையும் தன் மகன்கள் இருவரையும் வயலுக்குள் திணித்தார். முதற்பட்டம் நெல் இருநூறு மூட்டை. அடுத்த பட்டம் வாழை பத்து லோடு. அதைத் தொடர்ந்து உளுந்து ஐம்பது மூட்டை. முப்போகமும் முடிந்தும் மனைவியோட தாலியை அடமானத்திலிருந்து திருப்ப முடியலையே. அவரோட வெள்ளி அருணாக்கயிறு செட்டியார் வீட்டு அலமாரியை விட்டு வருவேனாங்குதே. ஒவ்வொரு பட்டம் விவசாயத்திற்கு பிறகும் பேந்தப்பேந்த முழித்தார் முனியாண்டி .

*****

பழைய குடிசையின் முதுகில் ஒரு பங்களா ஒன்று எழும்பியிருந்தது. அதன் உச்சத்தை மொட்டை மாடி என்று யாரும் சொல்லிடக்கூடாதென சூரிய ஆற்றலைச் சேமிக்கும் கலன் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அருகில் உலகத்து சேனல்களையெல்லாம் காற்றிலிருந்து உறிஞ்சி வீட்டுக்குள் அனுப்பிவைக்க வெள்ளைக் குடை விரித்தபடியே இருந்தது. பங்களாவிற்கு அருகில் வண்ண ஆஸ்பட்டாஸ் கொண்டு கொட்டகை ஒன்று போட்டிருந்தார்கள். அதற்குள் மாடுகளுக்கு பதிலாக இரண்டு சொகுசு வாகனங்கள்.

“அட ! நம்ம முனியாண்டி அண்ணன் வீடா இது. வீடே பல கோடி போகுமே ” இது வழிப்போக்கர்களின் பேச்சு. வீடு விஸ்தாரமாக சொகுசு கூடி நின்றாலும் நிலவளம் இரண்டு ஏக்கராக சுருங்கிப் போயிருந்தன. தென்னைகள் தலைவிரித்திருந்த இடங்களில் கான்கிரேட் தூண்கள் நட்டு நின்றன.

முனியாண்டி பங்களாவை ஒட்டி ஜோடி போல வளர்ந்திருந்த அந்த ஒற்றைத் தென்னை மர நிழலில் நின்று கொண்டு மிச்சமிருக்கும் நிலத்தையும் சமப்படுத்துவதைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். பாம்பு போல வளைந்து நெழிந்து சென்ற உயிரூட்டமான வாய்க்காலை மட்டம் தட்டி அதில் செம்மண்ணை கொட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் நிலத்தைப் பல கூறுகளாகப் பிரித்துச் சாயம் பூசிய கற்களை புதைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சொல்லிக் கொள்ளாமல் வந்து சுற்றி வளைத்தது எப்போதாவது வந்து பெய்யும் எல்லைக்கட்டி பெய்யும் மழை. இன்னைக்கு போறேன் நாளைக்கு போறேனு ஒரு வாரம் கங்கணம் கட்டி கொட்டித் தீர்த்தது.

ஊரே தெப்பக்குளம். குளம், குட்டையில் கரையைக் காணாம். தண்ணியைக் கண்ட முனியாண்டிக்கு ஆசை சின்னதாய் துளிர் விட்டது. “இந்த தண்ணியப் பயன்படுத்தி நாத்து நட்டு அறுத்தால் விளையும் நெல் சாப்பாட்டுக்கு ஒரு வருசம் வருமே “ புல்ரசர் தொட்டுத் தடவிய நிலத்தை டிராக்டர் விட்டு மண்ணைக் கிளறினார். கயிற்றைப் பிடித்து நாத்து நட்டு வீட்டு உச்சத்தில் நின்றபடி அழகைத் தினம் ரசித்தார். பூப்பெய்த பெண்ணாட்டம் நாளுக்கொரு வளர்ச்சி. இக்கரையை விட எக்கரை பச்சை ? என எங்கும் பச்சை மயம். முனியாண்டி மனதில் ஒரு நிறமாற்றம். தரையைப் போலவே ஒரு வித குளிர்ச்சி. பார்த்துப் பார்த்துப் பூரித்தாலும் விடை கிடைக்காத கேள்வி ஒன்று அவர் ஆழ் மனசில் இருந்து கொண்டிருந்தது .

“ஒரு விவசாயி கோடீஸ்வரனாக வாழ முடிவதில்லையே ஏன் ?”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p127.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License