அதுவரை லேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை சற்று வலுக்கவே தனது ஆக்டிவா ஹோண்டாவை வேகமாக முறுக்கினாள் தீபா. ஆனாலும் வீட்டை அடைவதற்குள் முழுவதுமாய் நனைந்து போனாள். அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் ஓடினாள்.
“ஏண்டி... இப்படி மழைல நனைஞ்சிட்டு வராட்டி எங்கியாச்சும் கொஞ்ச நேரம் நின்னுட்டு மழை விட்ட பிறகு வரக் கூடாதா?” துண்டை நீட்டியபடியே அம்மா திட்ட,
“அது சரி… சும்மா நின்னாலே பசங்க விடுற ஜொள்ளு பருவ மழைய மீறுது… இப்படி நனைஞ்சுட்டு வேற நின்னோம்ன்னு வெச்சுக்க… அவ்வளவுதான்... அவனுக விடற ஜொள்ளுக்கு ஒரு அணைக்கட்டே கட்ட வேண்டியிருக்கும்… அது சரி… கண்ணன் இன்னும் வரலையா?” என்று கேட்டாள் கண்களால் தேடியவாறே,
“என்னமோ புதுசா கேட்கறே?… அவன் என்னிக்குத்தான் நேரத்துல வீட்டுக்கு வந்திருக்கான்… ஹூம்... உங்கப்பன் போனப்புறம் இவன்தான் வீட்டுக்கு ஆம்பளையாயிருந்து வீட்டை நிர்வகிப்பான்னு நெனச்சேன்… ஆனா இவன் என்னடான்னா... கொஞ்சங் கூடப் பொறுப்பே இல்லாம கண்ட நேரத்துல வர்றான்…போறான்… காலேஜூக்கும் ஒழுங்காப் போறதில்லையாம்… கண்ட பசங்களோட சுத்தறானாம்... கம்பளைண்ட் வருது...!”
அம்மாவின் புலம்பலில் சலிப்படைந்த தீபா முகத்தைச் சுளிக்க,
அதைச் சிறிதும் சட்டை செய்யாத அவளின் தாய், “உன் தம்பிதான் ஒரு பக்கம் அப்படி இருக்கான்னா… இன்னொரு பக்கம் நீ பாட்டுக்கு ஆம்பளையாட்டம்... கராத்தே கிளாஸ்… யோகா… ஜிம்ன்னு சுத்திட்டிருக்கே… எனக்கு இந்த வீட்டுல நடக்கறது எதுவுமே பிடிக்கலை இந்தக் கண்ராவிகளைப் பார்க்கறதை விட எங்கியாச்சும் போய்த் தொலைஞ்சுடலாம்ன்னு இருக்கு”
உண்மைதான், படித்து முடித்த தீபா மத்த பெண்களைப் போல் ஏதோ ஒரு ஆபீஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவோ… டெலிபோன் ஆபரேட்டராகவோ வேலைக்குப் போகாமல் பிடிவாதமாய் போலீஸ் வேலையில் சேர்ந்து இன்னொரு கிரண்பேடி ஆகியே தீரணும்கற வெறியில் கராத்தே பயிற்சியில் ஈடுபாடு செலுத்துவது அவள் தாய்க்குப் பிடிக்கவேயில்லைதான்… என்ன பண்ண முடியும்?... வளர்ந்த பிள்ளைகளை கண்டிக்கவும் முடியாது... தண்டிக்கவும் முடியாது... அதனால்தான் தினமும் புலம்பியே தன் ஆதங்கத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
இரவு பத்து மணியிருக்கும்,
அழைப்பு மணி அலற தீபா சென்று கதவைத் திறந்தாள். விநோதமான முனகலுடன் தள்ளாடியபடி நின்றிருந்தான் கண்ணன்.
“அடப்பாவி... குடிச்சுட்டு வந்திருக்கியா?” அவள் கேள்வியை அலட்சியப்படுத்தியபடி உள்ளே சென்றவனைத் தடுத்து நிறுத்தி முகர்ந்தவள் நெற்றியைச் சுருக்கினாள். “என்ன இது... இவன்கிட்ட லிக்கர் வாசம் துளிக்கூட இல்லையே… அப்புறம் ஏன் தள்ளாடறான்… உளர்றான்?”
“டேய்... கண்ணா... ஒழுங்கா சொல்லு… என்ன பண்ணிட்டு வந்திருக்கே… ஏன் இப்படித் தள்ளாடுறே?” அதட்டலாய்க் கேட்டாள் தீபா.
அவனோ அதற்கும் பதிலேதும் சொல்லாமல் “கெக்கெ..கெக்கெ” என்று கேனத்தனமாய்ச் சிரித்து விட்டு அடுத்த விநாடியே ‘தொப்’பென்று படுக்கையில் விழுந்து குறட்டை விடலானான்.
எதுவுமே புரியாத நிலையில் அவன் டேபிள் டிராயரைக் குடைந்தவளுக்கு சில மாத்திரைகள் கிடக்க நைஸாக அவற்றை எடுத்துக் கொண்டு நழுவினாள்.
மறுநாள்.
தனக்குத் தெரிந்த மருத்துவத் தோழியொருத்தியிடம் அந்த மாத்திரைகளைக் காட்டி விசாரிக்க அவை போதை மாத்திரைகளென்று தெரிந்ததும் அதிர்ந்தாள். “அய்யோ… கண்ணனா இப்படி?... ஆண்டவா இது என்ன சோதனை?”
அன்று இரவே அம்மாவுக்குத் தெரியாமல் கண்ணனிடம் விசாரித்தாள். ஆரம்பத்தில் மழுப்பலாய்ப் பேசியவன் சிறிய இடைவேளைக்குப் பின் ஒப்புக் கொள்ள,
முதலில் கண்டித்தாள். பிறகு கெஞ்சினாள். கடைசியில் அழுதாள்.
சகோதரியின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் கரைந்து போன கண்ணன் “அக்கா… அக்கா அழாதக்கா… இப்ப சொல்றேன்க்கா... இனிமே அந்தக் கர்மத்தக் கையால் கூடத் தொடமாட்டேன் போதுமா?”
கையைப் பிடித்துக் கொண்டு தளுதளுத்தவனின் குரலில் இருந்த குற்ற உணர்ச்சி அவளை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது.
ஆனால் அந்த நிம்மதிக்கு அல்பாயசு என்பது மறுநாளும் கண்ணன் மாத்திரையின் தாலாட்டலில் மிதந்து வந்த போதுதான் புரிந்தது.
இனி அதிரடி நடவடிக்கைகளால் மட்டுமே அவனைத் திருத்த முடியம் என்பதைத் தெளிவாய் உணர்ந்து கொண்ட தீபா அன்றிலிருந்தே அவனுக்குக் கொடுக்கப்படும் பாக்கெட் மணியைக் கட் பண்ண வீட்டில் சில பொருட்கள் காணாமல் போகத் துவங்க,
யோசித்தாள். “என்ன செய்யலாம்?..”
தீவிர யோசிப்பிற்குப் பின் “கரெக்ட்…அதுதான் சரியான வழி… இவனைக் கண்டிப்பதை விட… இவனுக்குப் போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் ஆட்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைக்கணும்”
செயல்படத் துவங்கினாள்.
கண்ணனுக்கே தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று மறைந்திருந்து நோட்டமிட்டாள்.
“இந்தாங்க… இந்த வாட்சை வெச்சுக்கிட்டு மாத்திரை குடுங்க” கண்ணன் நீட்டிய வாட்சைப் பெற்றுக் கொண்ட ஒரு தாடிக்காரன் அவனுக்கு இரண்டே மாத்திரைகளைத் தர,
மிட்டாய் கிடைத்த சிறுவனாய் மகிழ்ந்து துள்ளலுடன் அதைப் பறித்துக் கொண்டான் கண்ணன்.
“அடப்பாவி அது என்னோட வாட்ச் ஆச்சே… அதைத்தான் காணோமின்னு ரெண்டு நாளா நான் தேடிக்கிட்டிருக்கேன்…”
சட்டென்று மறைவிலிருந்து வெளிப்பட்ட தீபாவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன கண்ணன் “அக்கா… நீ… எப்படி… இங்க…?”
“மொதல்ல உன் கையில் இருக்கற அந்த மாத்திரையை என்கிட்ட குடு” என்றவாறு அதைப் பிடுங்கப் போனாள் தீபா.
ஆனால் அதற்குள் ஒன்றைத் தன் வாயில் போட்டு அவசரமாய் விழுங்கினான் கண்ணன்.
“ராஸ்கல் நீயெல்லாம் வாயில் சொன்னா திருந்த மாட்டேடா”
“பளார்;” அக்காவின் அந்தப் பேயறையில் தெறித்துப் போய் விழுந்தான் கண்ணன்.
சூழ்நிலையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட தாடிக்காரன், “ஏய்… யாருடி நீ… அவனை எதுக்குடி அடிச்சே?” கேட்டவாறே சரமாரியாய் தீபாவைத் தாக்க ஆரம்பிக்க,
கதறினாள். “கண்ணா…” கத்தினாள்.
போதை வலைக்குள் புகுந்து கிடந்த கண்ணனுக்கு சகோதரியின் அலறல் சற்றும் கேட்காது போய் விட,
இனி அவனை நம்பிப் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த தீபா தானே அந்த தாடிக்காரனை தாக்க முனைந்தாள். சட்டென்று அவன் கத்தியை விரித்து அவள் வயிற்றில் பாய்ச்ச முயல, தான் கற்று வைத்திருந்த கராத்தே முறைகளைப் பயன் படுத்தி அதைத் தடுத்து அந்தக் கத்தி எகிறிப் போய் விழும்படிச் செய்தாள் தீபா. இதற்குள் எங்கிருந்தோ வந்த நான்கு தடியர்கள் அவளை வளைத்துப் பிடிக்க அந்த தாடிக்காரன் கோபத்துடன் அவள் மேல் சட்டையைக் கிழித்தான்.
ஆபத்து இனி தன் கற்புக்குத்தான் என்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண்புலி ஆவேச உறுமலுடன் அந்த நால்வரின் பிடியிலிருந்து விடுபட்டு, பாய்ந்து சென்று தரையில் கிடந்த கத்தியை எடுத்து, தாடிக்காரனின் வயிற்றில் ஆழமாய்ச் செருகியது.
சூடான சிகப்பு திரவம் பீச்சியடிக்க அந்த நால்வரும் அடுத்த விநாடி அங்கிருந்து பறந்தனர்.
போலீஸ் நிலையம்.
லாக்கப் கம்பியைப் பிடித்துக் கொண்டு கதறினான் கண்ணன். “அக்கா என்னைய மன்னிச்சுடுக்கா... என்னாலதானே உனக்கு இந்த நிலைமை”
“பாவி மக...' போலீஸ்காரி ஆவேன்…போலீஸ்காரி ஆவேன்”…ன்னு சொல்லிட்டேயிருந்தியே… இப்ப கைதியாகி நின்னுட்டியே” தீபாவின் தாய் குமுறினாள்.
“அக்கா…இனிமே உயிரே போனாலும் அந்தப் போதை சமாச்சாரங்களை நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்க்கா… இது உம்மேல சத்தியம்க்கா... இனிமே பொறுப்பாயிருந்து நம்ம குடும்பத்த நான் காப்பாத்தறென்க்கா… என்னைய நம்புக்கா... நம்புக்கா…”
கண்ணீருடன் அவன் சொன்ன விதம் தீபாவின் உள்ளத்தில் அவன் மீது இலேசான நம்பிக்கையை ஏற்படுத்தி விட. “ரொம்ப நன்றி கண்ணா... உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வரணும்கறதுக்காகத்தான் இத்தனை வருஷமாக் காத்திட்டிருந்தேன்… இது போதும்... எனக்கு”
“அக்கா போலீஸ் ஆகணும்கற உன்னோட ஆசை... கனவு... லட்சியம் எல்லாத்தையும் பாவி நான்... அநியாயமா அழிச்சிட்டேனே…இந்தப் பாவத்த நான் எங்க போய்க் கழுவுவேன்..”
“அப்படி நினைக்காதப்பா… நீ திருந்தறதுக்கு… உனக்கு பொறுப்பு வர்றதுக்கு… நான் குடுத்த விலைதான் என்னோட ஆசை… கனவு… லட்சியம்… எல்லாம்… இட்ஸ் ஓ.கே...” வெகு எளிதாகப் பேசி விட்டுப் புன்னகைத்த தீபாவைக் கையெடுத்து வணங்கினான் கண்ணன்