அதை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது மோகனுக்கு. “ச்சே..என்னவொரு அவமானம்… இத்தனை பேர் முன்னாடி வெச்சு எப்படியெல்லாம் திட்டிட்டாரு எம்.டி..! அப்பப்பா...! எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்… ம்ஹூம்… வார்த்தைகளல்ல நெருப்புக் கங்குகள்..! சாட்டையடிச் சிராய்ப்புக்கள்! அட... மத்தவங்க பார்த்ததைப் பத்திக்கூட கவலையில்லை… கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜமுனாவுமல்ல நான் திட்டு வாங்கறதைப் பார்த்துட்டா…! அவமானம்… அவளை இப்பத்தான் சன்னமாத் தேத்தி ஒரு செட்டப்புக்குக் கொண்டு வந்திருந்தேன்… இந்த சமயத்துல இப்படியொரு நிகழ்ச்சியா…?” கண்ணீரே வந்து விடும் போலிருந்தது அவனுக்கு.
ஜமுனா வேறு அவ்வப்போது இலேசாய்த் தலையைத் தூக்கி அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்க அவன் ரத்தம் சூடேறிக் கொதித்தது. “இந்த எம். டி. கெழவனை விடக் கூடாது… ஏதாவது செய்தாகணும்… என்ன செய்யலாம்...?” தீவிரமாக யோசித்தான்.
சாத்தானொன்று கெட்ட நேரத்தில் அவன் மனசுக்குள் சட்டெனக் குடியேறி “இதுக்கு யோசனை என்ன வேண்டிக் கெடக்கு… அவனைப் போட்டுத் தள்ளிடு” என ஆணையிட முதலில் இலேசாகத் தயங்கியவன் பிறகு சாத்தானுக்கு அடிபணிந்து திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.
இரவு 8.30 மணி.
மேல் தட்டு வாக்கத்தைச் சேர்ந்த பணமுதலைகள் குடியிருக்கும் அந்த பங்களா ஏரியா அந்த நேரத்திலேயே மயான அமைதி கண்டிருந்தது. ஏதோ ஒரு பங்களாவிலிருந்து டி. வி. சத்தம் இலேசாக அவ்வப்போது கேட்டது.
தன் மேல் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வந்து விடக் கூடாதென்பதற்காக தன் அண்ணன் மகள் “சுகன்யா யூ.கே.ஜி”யையும் உடன் அழைத்துக் கொண்டு எம். டி. பங்களாவின் முன் நின்ற மோகன் வாடச்மேனிடம் பவ்யமாக விசாரித்தான்.
“ம்…ம்…பெரியவர் மட்டும்தான் இருக்கார்” சோம்பேறி வாட்ச்மேன் முனகலாய்ச் சொன்னான்.
“கெழவன் தனியாத்தான் இருக்கானா...? அப்ப நான் வந்த நேரம் நல்ல நேரம்தான்” என மனசுக்குள் சொல்லிக் கொண்ட மோகன் “நான் கம்பெனில வேலை பார்க்குற ஸ்டாப்… எம்.டி.யைப் பார்க்கணும்”
“இருங்க” என்றவன் உள்ளே சென்று போர்ட்டிகோவிலிருந்த காலிங் பெல்லை அழுத்தினான்.
இரண்டே நிமிடத்தில் முன் ஹாலில் ஒளி படர கதவு திறந்தது.
“யாரு?” கண்ணாடி அணியாத எம்.டி. மோகனை உற்றுப் பார்த்துக் கேட்க,
“சார் நான் மோகன்... அக்கவுன்ட்ஸ் செக்சன்”
“ம்... ம்… உள்ளார வா”
போனான். ஆட்டோமாடிக் கதவு தானாக சாத்திக் கொண்டது.
ஹால் சோபாவில் அமர்ந்த எம்.டி. “ம்... உட்காருப்பா” என்றார்.
தயங்கினான்.
“பரவாயில்லை உட்காருப்பா”
உட்கார்ந்தான்.
“யாரது... பாப்பா... உன்னோட பொண்ணா?” சுகன்யாவைப் பார்த்து அவர் கேட்க,
“அண்ணன் பொண்ணு சார் ... எனக்கு இன்னும் கல்யாணமாகலை சார்”
“சரி... என்ன விஷயம்?”
“சார்... ஆடிட்டர் ஆபீசுக்கு அனுப்பின அந்த ஸ்டேட்மெண்ட்ல ஏகப்பட்ட தப்புக்களைப் பண்ணினது ப்யூர்லி என்னோட கேர்லஸ்தான் சார்... நீங்க திட்டினது மொதல்ல மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்தது... அப்புறம் யோசிச்சுப் பார்த்தப்ப உங்க எடத்துல நான் இருந்தாலும் அப்படித்தான் திட்டியிருப்பேன்னு புரிஞ்சுது... அதான் உங்கள நேர்ல பார்த்து, எதிர்த்துப் பேசினதுக்கு மன்னிப்பு கேட்டுட்டுப் போலாம்ன்னு வந்தேன்” தரையைப் பார்த்தபடி சொன்னான்.
“அட... அதை இன்னுமா நீ நெனச்சிட்டிருக்கே?… விடப்பா... நான் அதை அப்பவே மறந்திட்டேன்” என்று கேசுவலாகச் சொல்லியவாறே எழுந்தவர் சுகன்யாவைப் பார்த்து “பாப்பா... என்ன சாப்பிடறே... கூல்டிரிங்ஸ் சாப்பிடுவியா?” என்று கேட்டபடியே அடுத்த அறையிலிருக்கும் ப்ரிட்ஜை நோக்கி நடந்தார்.
ப்ரிட்ஜில் அவர் கை வைக்கவும் பாக்கெட்டிலிருந்த அவர் செல்போன் அழைக்கவும் சரியாயிருந்தது. ப்ரிட்ஜை அப்படியே விட்டு விட்டு ஜன்னலோரம் நகர்ந்து அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
இதுதான் தக்க சமயம் என முடிவ செய்த மோகன் “குள்ள நரியே... ஆபீஸ்ல வெறிநாய் மாதிரி என்னைக் கொதறிட்டு இப்ப வேசமாப் போடறே?… இருடா... இன்னும் கொஞ்ச நேரம்தாண்டா உன்னோட ஆட்டம்” என்று மனசுக்குள் கருவிக் கொண்டே பக்கத்திலிருந்த டைனிங் ஹாலுக்குள் சடாரென நுழைந்து மேஜை மேலிருந்த ப்ரெட் ஸ்லைஸ் மேலெல்லாம் தான் கொண்டு வந்திருந்த சிறிய பாட்டிலிலிருந்த கொடிய விஷத்தைக் கொட்டி விட்டு அவர் திரும்பி வருவதற்குள் மீண்டும் அதே இடத்தில் வந்து அப்பாவி போல் அமர்ந்து கொண்டான்.
அடுத்த கால் மணி நேரத்தில் அவன் அங்கிருந்து வெளியேறியதும் வெளியில் சென்றிருந்த எம்.டி. யின் மனைவி வீட்டிற்குத் திரும்பினாள்.
“ஹூம்... இந்த வேலைக்காரனுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது… ப்ரெட் ஸ்லைஸையெல்லாம் ஓப்பனா வெக்காதேன்னு பல தடவை சொல்லியாச்சு... மண்டைல ஏறவே மாட்டேங்குது... எத்தனை கொசுக்கள்... கரப்பான் பூச்சிகள் இதுல வாய் வெச்சிட்டுப் போச்சுதுகளோ?” என்றபடி அந்த ப்ரெட் ஸ்லைஸ் மொத்தத்தையும் சமையலறை வேஸ்ட பக்கெட்டில் கொட்டினாள்.
மறுநாள்.
எம்.டி. யின் சாவுச் செய்தியை எதிர்பார்த்து ஆபீசுக்குச் சென்ற மோகன் நொந்து போனான்.
பத்து மணி வாக்கில் சபாரி சூட்டில் ‘டக்..டக்’ கென்று நடந்து வந்த எம்.டி. அவன் ஏமாற்றத்தை இன்னும் அதிகப்படுத்தினார்.
“எப்படி? எப்படித் தப்பிச்சான்?”
மாலை ஆறு மணிக்கு சோர்வாய் வீடு திரும்பிய மோகன் வீட்டில் யாருமே இல்லாதது கண்டு குழப்பத்திலாழ்ந்து பிறகு “ஓ...! இன்னிக்கு வெள்ளிக்கிழமையல்ல... அண்ணனும் அண்ணியும் குழந்தையைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போயிருப்பாங்க” தெளிந்து அமைதியானான்.
தனியாய் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வயிறு பசிக்க டைனிங் ஹாலுக்குள் வந்து தேடினான். “ஆஹா… அண்ணின்னா அண்ணிதான்… நான் பசியோட வருவேன்னு தெரிஞ்சு ரெடியா சப்பாத்தி பண்ணி வெச்சிருக்காங்க”
ஐந்தே நிமிடத்தில் பத்து சப்பாத்தியைக் காலி செய்து விட்டு “ஆவ்” என்று ஏப்பம் விட்டபடி சென்று மறுபடியம் டி.வி. க்குள் மூழ்கினான்.
அடிவயிற்றில் ஆரம்பித்த அந்த அமில எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறி தொண்டை வரைக்கும் வர தீயை விழுங்கியவனாய்த் துடித்தான். “உவ்வே” என்ற அசுரக் கத்தலுடன் வாந்தி எடுத்தான்.
தரையெங்கும் ரத்தச்சகதியை ஏற்படுத்தி விட்டு அடுத்த நிமிடத்தின் இறுதி நொடியில் மரணத்தைச் சூட்டிக் கொண்டான்.
அதே நேரம், கோவிலில்,
“ஏங்க... எந்திரீங்க கௌம்பலாம்…” மோகனின் அண்ணி சொல்ல,
“இருடி... இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்திட்டுப் போகலாம்”
“அய்யோ... உங்க தம்பி வந்து பசியோட காத்திட்டிருப்பார்”
“அதான் டைனிங் டேபிள் மேல எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு வந்திட்டியல்ல... அவனே எடுத்து சாப்பிட்டுக்குவான்”
“இல்லைங்க... சப்பாத்திக்கு ஜாம் தொட்டு சாப்பிடறதுன்னா அவருக்கு ரொம்ப பிரியம்… நான் வேற ஜாம் பாட்டிலை அலமாரிக்குள்ளார வெச்சிட்டு வந்திட்டேன்... பாவம் தேடுவார்”
“மம்மி... கவலைப்படாதீங்க சித்தப்பாவுக்கு நான் வேற ஜாம் ஊத்திட்டுத்தான் வந்தேன்” சுகன்யா சொல்ல,
“வேற ஜாமா?... என்னடி சொல்றே?”
“ஆமாம் மம்மி…நேத்திக்கு சித்தப்பா அவங்க எம்.டி.க்கு ஒரு சின்ன பாட்டில்ல ஜாம் கொண்டு போய் ப்ரெட்டுக்கு ஊத்தினாரு... அதோட மிச்சத்த அவரோட டேபிள் டிராயர்ல வெச்சிருந்தாரு... நான் அந்த மிச்சத்தை எடுத்து சித்தப்பாவுக்கு சப்பாத்தி மேல் ஊத்திட்டு வந்திட்டேன்”
“போடி... நீ என்ன சொல்றேன்னே புரியலை” அவள் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டு அவர்கள் நிதானமாய்க் கிளம்பினார்கள்.