மதிய உணவுக்குப்பின் விழிப்பும் தூக்கமும் இல்லாத ஒரு மந்தமான சூழலுக்குள் முரளி ஆட்பட்டுக் கொண்டிருக்கும் போது அவனது செல்போன் குழந்தைச் சிரிப்பதைப் போன்று ஒலித்தது.
…ச்சே… கொஞ்ச நேரம் கண்ணசரலாம்னா விடமாட்டேங்கிறாங்களே. ஏந்தான் இந்த செல்போனக் கண்டுபிடிச்சானோ தெரியல. அலுப்புத்தீரப் படுக்கக் கூட முடியலே..’’ என்று சலிப்புடன் போனை எடுத்தவன் முருகேசன் என்ற பெயரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான்.
முருகேசன் இவனது நெருங்கிய உயிர் நண்பன். அவனுக்குத் திருமணமாகி நாலைந்து வருடங்கள் கழித்தும் குழந்தையில்லாத நிலையில் அவன் மனைவி கருத்தரித்து இதோ நேற்றுத்தான் பிரசவத்திற்காக அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தான். குழந்தை பிறந்து விட்டதா? என்ற மகிழ்ச்சியுடன்,
“டேய் முருகேசா எப்படிடா இருக்க. ஒம்மனைவிக்கு குழந்தை பொறந்திருச்சா” என்று கேட்டான்.
மறுமுனையில் அவனது நண்பன், ”டேய் எனக்குப் பெண்குழந்தை பெறந்துருக்குடா. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா..’’ என்று மகிழ்ச்சியில் திணறிப் போய்ப் பேசினான்.
“டேய் வாழ்த்துக்கள்… ஆமா... சுகப் பிரசவந் தானே! தாயும் பிள்ளையும் எப்படி இருக்காங்க.?” –என்று கேட்ட முரளிக்கு
‘‘ரொம்ப நல்லா இருக்காங்கடா! கடவுள நினச்சு வேண்டியது வீண் போகலடா. அதுவும் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் சுகப்பிரசவமா ஆகியிருக்குமா? எல்லாம் கடவுள் செயல்டா. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்டா’’ என்று கூறிக்கொண்டே போனான் முருகேசன்.
முரளிக்கு சுள்ளென்று கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
‘‘ஏன்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களாடா? கடவுளாம்ல… கடவுள். டேய் முட்டாள் ஒனக்கும் ஒன் மனைவிக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்த டாக்டருக்குத்தான்டா நன்றி சொல்லணும். அவங்கள நீ நம்பி சிக்சை எடுத்துக்கிட்ட. அவங்களும் தங்களோட திறமையினால எல்லா சிகிச்சையும் செஞ்சு இன்னக்கி ஒனக்கு அழகான பொம்பளப் பிள்ள சுகப்பிரசவமாப் பொறந்திருக்கு. அதுக்கு அந்த டாக்டர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்று முரளி குட்டிப் பிரசங்கமே வைத்து விட்டான்.
முருகேசனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இருப்பினும் அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. இதில் யாரும் தலையிட முடியாது என்று எண்ணிக் கொண்டு,
“டே அப்படில்லாம் சொல்லாதடா... நிச்சயம் நான் கும்புடுற சாமி தாண்டா இதுக்கு காரணம்... என்னோட குலதெய்வம் கொடுத்த செல்வம்டா இது. அப்படி இல்லேனா இத்தனை நாளா ஏன் குழந்தை பெறக்கல... சொல்லு… உனக்கு நம்பிக்கை இல்லேன்றதுக்கா இப்படியெல்லாம் சொல்லாதடா ?…..’’ என்றான்.
முரளியோ விடவில்லை. அவன் கூறுவதுதான் சரியென்று நிரூபிக்க முயன்றான்.
“சரிடா..கடவுள் இருக்கார்னா ஏன் டாக்டர்ட்டப் போய் டெஸ்ட் அதுஇதுன்னு பண்றீங்க… கோவிலுக்குப் போயி அரசமரத்தச் சுத்திப்பிட்டு அப்படியே விட்டுற வேண்டியது தானே!… படிச்சவன் மாதிரியாடா பேசுறே?..’’என்றான்.
முருகேசனும் விடுவதாயில்லை.
“டேய் முரளி அததுக்கு நேரம் வரும் போதுதான்டா கடவுளே பாத்து யாராருக்கு என்ன செய்யணும்னு செய்வாரு... அவர முழுமையா நம்பணும் தெரியும்ல’” என்றான்.
‘‘ ஆமா கடவுளுக்கு ஒவ்வொன்னா பாத்து செய்யருது தான் வேல, போடா … அறிவு கெட்டவனே’’ என்று வெடுக்கென்று பதிலளித்தான் முரளி.
நம்பிக்கை இல்லாத முரளியின் பேச்சு முருகேசனுக்கு என்னவோ போலிருந்தது. இருந்தாலும் நண்பனுக்காகப் பொறுத்துக் கொண்டான்.
முரளியிடம். ‘‘டேய் எத்தனையோ பேருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாம இருக்கறாங்க தெரியுமா? எல்லாம் கடவுள் செயல்டா. இத ஒனக்குப் பிடிச்சாலும், பிடிக்காவிட்டாலும நம்பித்தான் ஆகணும்’’ என்றான்.
அதற்கு முரளி, “இல்லவே இல்ல... இப்ப கூட நீ கடைசியாப் பார்த்த டாக்டர் தான் சரியான ட்ரீட்மென்ட் கொடுத்து இத நடத்திருக்காங்க புரிஞ்சுக்கோ” -
என்று கூறவே முருகேசனுக்குச் சிறு குழப்பம்…
”சரி அதெல்லாம் விடுடா... நான் தேவையில்லாம ஏதேதோ பேசுறேன். ஆமா ஒன்னோட குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போற... நல்ல தமிழ்ப் பேரா வைடா... மற்றவங்க மாதிரி டஸ்சு புஸ்சுனு ஏதாவது பெயரை வைச்சுப்பிடாதே… ஆமா” என்று முரளி கூறியவுடன்,
‘‘அதாண்டா எனக்கு ஒண்ணுமே புரியல... என்ன பேர் வைக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு... டேய் ஒனக்கு தெரிஞ்ச நல்ல தமிழ்ப் பெயராச் சொல்லுடா” –என்றான் முருகேசன்.
“நான் ஒரு யோசனை சொல்லவாடா, பேசாம உன் மனைவிக்குப் பிரசவம் பாத்த டாக்டர் பேரே வைச்சுப்பிடு... என்னைக் கேட்டா ஒங்களோட மகிழ்ச்சிக்கு அவங்க தான் காரணம்..” என்றான் முரளி
இது சரியான யோசனையாகப் படவே முருகேசன் சரியென்று கூறிவிட்டுக் கைபேசித் தொடர்பைத் துண்டித்தான்…
பழங்களை வாங்கிக் கொண்டு முருகேசன் டாக்டர் கமலியின் அறைக்குள் சென்ற முருகேசன்…
‘‘வணக்கம் டாக்டர். ரொம்ப நன்றி டாக்டர்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…” என்று டாக்டரைப் பார்த்துக் கூறினான்.
“அடடே! வாங்க முருகேசன் சார். நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.. குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போறீங்க… அத முதல்ல சொல்லுங்க” என்றார் டாக்டர் கமலி.
“குழந்தைக்கு ஒங்க பேரைத் தான் டாக்டர் வைக்கப் போறேன்” என்றான் முருகேசன்-
‘‘என்னோட பேரா ... என்னங்க … நீங்க... ஆமா... ஏன் என்னோட பெயரை வைக்கப் போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?” என்றார் டாக்டர் கமலி.
“என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... நீங்க கொடுத்த ட்ரீட்மென்ட் தான் குழந்தை பொறக்க காரணம் ... நீங்க எங்க குடும்பத்துக்குக் கடவுள் மாதிரி அதனாலதான் ஒங்க பேரை வைக்கலாம்னு இருக்கோம்” என்றான் முருகேசன்.
”அப்படியெல்லாம் இல்லிங்க? நாங்க செய்யல. எல்லாம் கடவுளோட செயல். எங்க கைல எதுவும் இல்ல. மனிதர்கள் எல்லாரும் கருவிங்க. கடவுள் அந்தக் கருவிய இயக்குறார். கருவிகளாகிய நாம கடவுள் நடத்தறது மாதிரி நடந்துக்குறோம். நான் செயல்பட்டது கூட அது போன்றதுதான். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு அவர நம்பி நாங்க எங்க கடமையைச் செய்யிறோம். அது மட்டுமில்லாம உங்களோட நம்பிக்கை. நீங்க எங்கள நம்புனீங்க. நாங்க கடவுள நம்பினோம். நம்ம எல்லோருடைய நம்பிக்கையும் வீண் போகல. வெற்றியடைஞ்சுருக்கு. அதனால நாம கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். நீங்களும் ஒங்க மனைவியும் கடவுள நம்பி செயல்பட்டீங்க. ஒங்க நம்பிக்கையை வீண்போகாமக் கடவுளா ஒங்களுக்கு வழிகாட்டி இருக்காரு. சந்தோஷமா ஒங்க மனைவியோடு சேர்ந்து கடவுளோட பேராப் பாத்து வைங்க. அந்தக் கடவுள தொடர்ந்து நம்புங்க. அந்த நம்பிக்கைதான் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு மாதிரி. சரிதானே நான் சொல்றது… நன்றி நீங்க மகிழ்ச்சியாப் போயிட்டு வாங்க…’’ என்று கூறி மகிழ்வுடன் வழியனுப்பினார் டாக்டர்.
டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்த முருகேசனுக்கு குழப்பத்திலிருந்து தெளிவு பிறந்தது. நம்பிக்கைதான் வாழ்க்கை என்று மனதில் எண்ணிக் கொண்டு, மகிழ்ச்சி பொங்க தன் மனைவியையும் புதுவரவான குழந்தையையும் பார்க்கச் சென்றான்.