'தினஓசை” பத்திரிக்கை அலுவலகம்.
'எடிட்டரைப் பார்க்கணும்” நடிகை சிநேகாவின் சாயலிலிருந்த அந்த வரவேற்பாளினியிடம் கேட்டாள் காயத்ரி.
'நீங்க?”
ஒரு விநாடி யோசித்தவள் 'அவங்க ரிலேட்டிவ்… என்னோட ஜாப் விஷயமா வரச் சொல்லியிருந்தார்”.
'அப்படியா?.. அப்பப் போங்க” எடிட்டர் அறை இருக்குமிடத்தைச் சுட்டிக் காட்டியபடியே சிணுங்கும் போனை எடுத்து 'ஹலோ” சொன்னாள் அந்த வரவேற்பாளினி.
'எடிட்டர்” என்கிற வாசகத்தைத் தாங்கியிருந்த கதவைத் தள்ளி உள்ளே நுழைந்த காயத்ரியைப் பார்த்து 'யெஸ்” என்ற எடிட்டரின் முன் வழுக்கையில் லேசாய் வியர்வைத் துளிகள். கடும் உழைப்போ?.
“சார்… ஐ யாம் காயத்ரி”
“உட்காரும்மா”
அவர் காட்டிய நாற்காலியில் அமர்ந்தவள் “சார். ஒரு ஆறு மாசம் முன்னாடி உங்க பத்திரிகைல ஒரு செய்தி வெளியிட்டிருந்தீங்களே… “அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு இளம் பெண் தற்கொலை”ன்னு... அந்த இளம் பெண்ணோட தங்கை நான்”
சில விநாடிகள் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்த எடிட்டர் “ம்ம்ம்... யெஸ்... யெஸ்... ஞாபகமிருக்கு... சொல்லும்மா என்ன வேணும் உனக்கு?”
“சார்... அந்த சாவு தற்கொலைன்னு எப்படிப் போட்டீங்க?…யாரு உங்களுக்கு அப்படித் தகவல் தந்தது?...போலீஸ் எப்.ஐ.ஆர். பார்த்தீங்களா?... அதுல என்ன போட்டிருந்திச்சு?... தற்கொலைன்னா போட்டிருந்திச்சு?”
திடுமென குரலை உயர்த்திப் பேசிய காயத்ரியைக் கையமர்த்திய எடிட்டர் “தெரியும்மா... தெரியும்... தேதி காலாவதியான மாத்திரைகளைத் தவறுதலாகச் சாப்பிட்டதுனாலதான் அந்தப் பொண்ணு இறந்து போச்சுன்னு... நல்லாவே தெரியுமே”
“அப்புறம் ஏன் சார், அப்படி ஒரு செய்தி போட்டீங்க?..” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள் காயத்ரி.
“இதெல்லாம் ஒரு “வியாபார தந்திரம்”ம்மா... அதாவது... சர்க்குலேஷன் டிரிக்கு”... சும்மா... வெறுமனே “பெண் சாவு“ன்னு போட்டா எவனும் பேப்பரைப் பார்க்க மாட்டான்... அதுவே.. “இளம்பெண் தற்கொலை” , “பருவப்பெண் பரிதாபச் சாவு”ன்னு போட்டா அவனவன் என்னவாயிருக்கும்?... ஏதுவாயிருக்கும்?ன்னு தெரிஞ்சுக்க அடிச்சுப்புடிச்சு பேப்பரை வாங்கிப் படிப்பானுக…”
“உங்களோட அந்த வியாபார தந்திரம் அந்தக் குடும்பத்தாரை எவ்வளவு பாதிக்கும்ன்னு யோசிச்சுப் பாத்தீங்களா?”
“ஹா..ஹா..ஹா..” என்று சிரித்த எடிட்டர், “ஏம்மா... நீ அடுத்த நாள் பேப்பரைப் பார்க்கலையா?.. “இளம்பெண் தற்கொலை”ன்னு தவறுதலா செய்தி வெளியாயிடுச்சுன்னு மறுப்புச் செய்தி போட்டு மன்னிப்பும் கேட்டுட்டோமே…”
“ஓ…மன்னிப்புக் கேட்டுட்டா... எல்லாப் பாதிப்பும் சரியாயிடுமா?… இப்படிச் சொல்ல “உங்களுக்கு வெட்கமாயில்லையா?... அடுத்தவங்க வேதனைல லாபம் பார்க்கறீங்களே… நீங்கெல்லாம் மனுசங்கதானா?”
“ஹலோ… ஹலோ… ஹோல்டான்... ஹோல்டான்... என்ன... விட்டா ஓவராப் பேசிட்டே போறே... இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி வந்து ருத்ர தாண்டவம் ஆடுறே?” தன் மூக்குக் கணணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டு படு காசுவலாகக் கேட்ட எடிட்டரை எரித்து விடுவது போல் பார்த்த காயத்ரி,
“என்ன ஆயிடுச்சா?... யோவ் ... என் கல்யாணமே அதனாலதான்யா தடைப்பட்டுக் கெடக்குது” தன் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாக்கிக் கொட்டினாள்.
“அதெப்படி... அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”
“என்ன….சம்மந்தமா? ... ஹூம்... வர்ற வரன்களெல்லாம் “மூத்தவ தற்கொலை பண்ணிக்கிட்டாளாமே…பேப்பரில எல்லாம் கூட நியூஸ் வந்து நாறிப் போச்சாமே”ன்னு கேக்கறாங்க... நாங்க எவ்வளவுதான் கரடியாக் கத்தி “அது தற்கொலையில்லை... தெரியாத்தனமா எக்ஸ்பயரியான மாத்திரைகளைத் தின்னுட்டா”ன்னு சொன்னாலும் அதை துளிக்கூட நம்பாம வந்த வழயிலேயே திரும்பிப் போய்டறாங்க... சில பேரோ அதையே சாக்கா வச்சுக்கிட்டு எங்ககிட்டயிருந்து அதிகப்படியா எவ்வளவு கறக்க முடியும்ன்னு பார்க்கறாங்க... இதெல்லாம் யாரால?... உங்களாலதானே?”
“த பாரும்மா... நாங்க தவறுதலா ஒரு செய்தி போட்டுட்டோம்... அப்புறமா... அது தவறுன்னு தெரிஞ்சதும் மறுநாளே மறுப்பும்... மன்னிப்பும் கேட்டு நியூஸ் குடுத்துட்டோம்... தட்ஸ் ஆல்!.. மேற்கொண்டு இதைப் பத்தி உன்கிட்டப் பேச நான் விரும்பலை... எனக்கு நெறைய வேலையிருக்கு... ப்ளீஸ்... கௌம்பறியா?”
வெகு நாசூக்காகத் தன்னை “கெட் அவுட்” என்று சொல்லிய எடிட்டரின் முகத்தருகே குனிந்து “அப்ப... உங்க நியாயப்படி... ஒரு தப்பு செய்துட்டு... அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டா அந்தத் தப்பு சரியாய்டும். அப்படித்தானே?” தணிவான குரலில் கேட்டாள்.
“அப்புறமென்ன?... தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டாச்சுன்னா அதோட மேட்டர் ஓவர்... அத விட்டுட்டு அடுத்ததுக்குப் போயிட்டேயிருக்கணும்”
“தேங்க்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்” சொல்லிவிட்டு வேகமாய்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த காயத்ரி அந்த வரவேற்பாளினியிடம் சென்று எடிட்டரின் வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டாள்.
பப்ளிக் பூத். “ஹலோ... யாரு... எடிட்டரோட மிஸஸ்தானே?” பரபரப்பாய்க் கேட்டாள் காயத்ரி.
“ஆமாம்… நீங்க?”
“மேடம்... நான் பத்திரிக்கை ஆபீஸ்லயிருந்து பேசறேன்... ஒரு கெட்ட செய்தி... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எடிட்டர் சார்... நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லிட்டு அப்படியே சேர்ல சாய்ஞ்சு உட்கார்ந்தார்… நாங்க டாக்டருக்குப் போன் பண்ணி... உடனே வரச் சொன்னோம். பட்... டாக்டர் வர்றதுக்கு முன்னாடியே நம்ம சார்... நம்ம சார்... இறந்திட்டாருங்க மேடம்”
“எ..ன்..ன..ங்..க” என்று கத்தியபடி மறு முனையில் அந்தப் பெண்மணி கீழே விழுந்தது காயத்ரிக்குத் தெளிவாகக் கேட்டது.
அந்தத் தொடர்பைத் துண்டித்து விட்டு எடிட்டருக்குப் போன் செய்தாள்.
“சார்… ஒரு செய்தி தவறுதலாக் கன்வே ஆயிட்டுது… அதனாலென்ன மன்னிப்புக் கேட்டுட்டாப் போச்சு... “மன்னிச்சுடுங்க சார்”
சொல்லிவிட்டு நிதானமாய் போனை வைத்தாள்.