அதிகாலையில் எழுந்து பரபரப்பாய்க் கிளம்பினாள் யாமினி.
'த்தூ!... குடும்ப மானத்தைக் குழி தோண்டிப் புதைக்க வந்த சனியன்!” சமையல் கட்டிலிருந்து அம்மாவின் அர்ச்சனை கேட்டது,
யாமினி அதைக் கண்டு கொள்ளவுமில்லை… கவலைப்படவுமில்லை.
'இவளை இனிமே வீட்டுக்குள்ளார சேர்த்துக்கிட்டா… நம்ம சொந்தக்காரங்க மட்டுமல்ல… அக்கம்பக்கம் குடியிருக்கறவங்க… யாருமே நம்மை மதிக்க மாட்டாங்க!...கேவலமாய்ப் பார்த்துக் காறித் துப்புவாங்க!” இது அண்ணன்காரனின் ஆராதனை.
'ப்ச்!” உதட்டைக் கோணியபடி தன் காரியத்திலேயே கண்ணாயிருந்தாள் யாமினி.
'ஒரு பொட்டச்சி… நம்ம பேச்சையெல்லாம் கேட்காம… அந்தத் தொழிலுக்குப் போறேன்னு பகிரங்கமாச் சொல்லிட்டுக் கிளம்பறான்னா… இந்தக் கண்ராவியை என்னன்னு சொல்றது?...' சமையல் கட்டிலிருந்து வெளியே வந்து மகனிடம் கூவினாள் யாமினியின் தாயார்.
'நம்ம சொந்தத்துல இப்படியொரு கேவலமான சிறுக்கி எந்தக் குடும்பத்திலேயும் பொறக்கலை… நான் அடிச்சுச் சொல்வேன்!” தன் உள்ளங்கையில் தானே குத்திக் கொண்டு அம்மாவின் கூவலுக்கு ஆதரவு காட்டினான் மகன்.
அந்தக் கத்தல்கள் எதையும் கண்டு கொள்ளாமல் செருப்பை மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கினாள் யாமினி.
பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்மணிகள் போகும் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து, 'ஹூம் …நம்ம லட்சுமியம்மா வயத்துல இப்படியொரு புள்ள வந்து பொறக்கணுமா?” சொல்லியவாறே கழுத்தை நொடித்தனர்.
'காசு சம்பாதிக்கணும்கற ஆசை எல்லாருக்கும் வரும்தான்… இல்லேன்னு சொல்லலை!... அதுக்காக என்ன தொழிலுக்கு வேணாலும் போக முடியுமா?”
'கர்மம்… கர்மம்…. இனி இதுக்கு கண்ணாலமேது…காட்சியேது?...ஊர் முழுக்கச் சுத்திச் சுத்தித் திரிய வேண்டியதுதான்”
நாசூக்காய்த் திரும்பி அவர்களை நெருப்பாய் நோக்கினாள் யாமினி.
'படக்”கென்று வீட்டிற்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டனர் அந்த வாய்ப் பேச்சு வீராங்கனைகள்.
மெலிதாய் முறுவலித்தபடியே தன் நடையை வேகப்படுத்திக் கொண்டாள் யாமினி.
வழியில் இருந்த பெட்டிக்கடையைத் தாண்டிச் செல்லுகையில், 'டேய்…‘கலிகாலம் நடக்குது… கலிகாலம் நடக்குது‘ன்னு ஆளாளுக்கு சொன்னாங்க… நான் நம்பலை!... இப்ப நம்பறேன்!” பீடியை உறிஞ்சியபடியே அவளை நக்கலடித்தான் கட்டம் போட்ட சட்டைக்காரனொருவன்.
'பின்னே?... கௌரவம்… மரியாதை… இதையெல்லாம் பாத்தா வசதியான வாழ்க்கை கெடைக்குமா?...”இன்னொரு பீடி பதில் சொன்னது.
'டேய்… நம்மையும் கஸ்டமரா சேர்த்துக்க முடியுமா?ன்னு கேட்டுச் சொல்லுடா!”
'விருட்”டென்று அவர்கள் பக்கம் திரும்பி, பரிகாசமாய், 'ஈஈஈஈஈஈ”என்று இளித்து விட்டு நடந்தாள் அவள்.
'யப்பா!” அபிநயித்தான் கட்டம் போட்ட சட்டைக்காரன்.
சரியாக ஏழரை மணிக்கு அந்தக் கடைத் தெருவின் முகப்பிற்கு வந்த யாமினி தனக்காக அங்கு காத்திருந்த ஆண்களைப் பார்த்துத் தலையாட்டினாள்.
அவர்களும் 'தயார்” என்னும் விதத்தில் தலையாட்டியவாறே சற்றுத் தள்ளி நடக்க,
அவர்களைப் பின் தொடர்ந்தாள் யாமினி.
அந்தக் குறிப்பிட்ட இடத்தில் மினுமினுக்கும் மஞ்சள் பெயிண்டுடன், சந்தனப் பொட்டு… மாலை மரியாதையுடன் நின்றிருந்த புது ஆட்டோவை நெருங்கி அதைத் தொட்டு வணங்கினாள்.
காக்கிச் சட்டையணிந்த ஒருவன் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி, பூசை செய்து முடித்த பின்,
இன்னொருவன் ஓடி வந்து, முன் சக்கரத்தினடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து விட்டு, 'ம்…உள்ளார உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணும்மா!” என்றான்.
அவர்கள் அனைவரின் கைதட்டலுக்கு நடுவில், ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, நிதானமாய் நகர்த்தினாள். யாமினி.
'அப்படியே மார்க்கெட்டை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வாம்மா!”
பத்தாவது நிமிடம் திரும்பிய யாமினி, ஆட்டோவை நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள்.
வயதான ஒரு ஆட்டோ டிரைவர் அவளை நெருங்கி வந்து, 'அம்மா… யாமினி!.. உன்னைய நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்மா!... பொம்பளைங்களை முடக்கி வெச்சிருக்கற இந்த சமுதாயத்துல… பொம்பளைங்கன்னா சாதாரணமில்லை… ஆம்பளைங்களுக்கு நிகரா எங்களாலேயும் எதையும் செய்ய முடியும்”ன்னு நிரூபிக்கற மாதிரி வீட்டிலிருக்கறவங்க எதிர்ப்பையும்… அக்கம் பக்கம் இருக்கறவங்களோட அரசல் புரசல் பேச்சுக்களையும் தூசிய ஊதுற மாதிரி ஊதித் தள்ளிட்டுத் தைரியமா வந்து இந்த ஆட்டோ டிரைவர் தொழிலை ஏத்துக்கிட்டியே உண்மையில் நீதாம்மா புதுமைப் பெண்!...”
தன் தந்தை வயதான, அந்த நபரின் காலைத் தொட்டு வணங்கிய யாமினி, 'அய்யா… நல்ல மனங்கள் இருக்கற வரைக்கும் நாட்டுல நன்மைகள் நடந்திட்டேதான் இருக்கும்!... அதைத் தடுக்க யாராலேயும் முடியாது!”
விண்ணுலகில் பாரதி மீசையை நீவிக் கொண்டார்.