அறைக்கதவை பவ்யமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த போர்மென் சக்திவேலை நிமிர்ந்து பார்த்து “என்ன?” பார்வையால் கேட்டார் ராஜவேலு. ‘ராஜாளி குரூப் ஆஃப் கம்பெனி”களின் செல்வாக்கு மிக்க ஜெனரல் மேனேஜர்.
“சார்… பதினஞ்சு நாளா வேலைக்கு வராம இருந்த கோபி... இன்னிக்கு வந்திருக்கான் சார்… நீங்க சொன்ன மாதிரியே உங்களைப் பார்த்துட்டு வந்து வேலை செய்யச் சொன்னேன்…'மாட்டேன்”னு அடம் பிடிக்கறான் சார்”
“அப்படியா?…சரி... நீங்க போங்க சக்திவேல்… நான் ஆபீஸ் பையனை விட்டு அவனை வரச் சொல்லி கண்டிக்கறேன்”
போர்மென் சக்திவேல் சென்றதும் ஆபீஸ் பையனை அழைத்து, அந்த கோபியைக் கூட்டி வரும்படி சொன்னார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து நின்ற கோபிக்கு சுமார் இருபத்தியெட்டு வயதிருக்கும். வயதுக்கு மீறிய அனுபவப் பக்குவம் முகத்தில் தெளிவாய்த் தெரிந்தது.
“என்னப்பா… இதென்ன கம்பெனியா?… இல்ல சத்திரமா?… நீ பாட்டுக்கு நெனச்சா வர்றே… நெனச்சா போறே…. கொஞ்சமாவது டிசிப்ளின் இருக்கா உனக்கு?… போர்மென் கிட்டக்கூட அடங்காம எதிர்த்துப் பேசறியாமே… என்ன… வேலைல தொடர்ந்து இருக்கறதா உத்தேசமா?... இல்ல வெளியில் போற மாதிரி உத்தேசமா?” எடுத்த எடுப்பிலேயெ ராஜவேலு சத்தம் போட ஆரம்பிக்க,
“சார்… வீட்டுல அம்மா… அப்பா ரெண்டு பேருக்குமே உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு… ரெண்டு பேரும் படுத்த படுக்கையா இருக்காங்க… நான் ஒருத்தன்தான் பையன்… என்னைய விட்டா அவங்களைப் பார்த்துக்க வேற யாருமே கிடையாது… அதான் நானே லீவு போட்டுட்டு... கூடவே இருந்து நேரா நேரத்துக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்துக் கவனிச்சிட்டிருந்தேன்…” சொல்லும் போதே குரல் கமறியது அவனுக்கு.
“சரி... அப்படியே நிரந்தரமா வீட்டிலேயே இருந்துக்க வேண்டியதுதானே?… இன்னிக்கு எதுக்கு வந்தே… எந்த தைரியத்துல வந்தே… யாரும்... எதுவும் கேட்க மாட்டாங்கன்னு நெனச்சிட்டியா?”
“இல்ல சார்! ஏதோ இப்பக் கொஞ்சம் பரவாயில்லை... அவங்க வேலைய அவங்களே செஞ்சுக்கற அளவுக்குத் தேறிட்டாங்க… அதான் வந்துட்டேன்” அப்பாவியாய்ச் சொன்னான்.
“அப்ப… மறுபடியும் அவங்களுக்கு உடம்பு சரியில்லாமப் போனா மறுபடியும் லீவு போடுவே… அப்படித்தானே?”
“வேற என்ன சார் பண்ண முடியும், பெத்தவங்க முக்கியமில்லையா?”
“பெத்தவங்கதான் முக்கியமன்னா... அவங்களையே பார்த்துட்டு வீட்டோடவே கெட... இன்னிக்கே உன்னோட கணக்கை முடிக்கச் சொல்லிடறேன்… வாங்கிட்டு கௌம்பிட்டே இரு... நான் வேற ஆளை வெச்சு வேலை பார்த்துக்கறேன்”
“அய்யய்யோ… சார், அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க…” அவன் கெஞ்ச,
“இதப் பாருப்பா… இது கம்பெனி… இங்க ஆயிரம் பேர் வேலை பார்க்கறாங்க... அந்த ஆயிரம் பேருக்கும் ஆயிரம் சொந்தக் கவலைகள்… பிரச்சினைகள் இருக்கும்… அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது… எங்களுக்கு வேலை முக்கியம்… அவ்வளவுதான்” திடீரென்று குரலை உயர்த்திக் கத்தினார் ராஜவேலு.
பதில் பேச இயலாது மௌனமாய்த் தலை குனிந்து நின்றான் கோபி.
அவனின் அந்த அமைதி ராஜவேலுவை சற்று சாந்தப் படுத்த,
“தம்பி… வயசாயிட்டாலே பெரியவங்களுக்கு அப்பப்ப ஏதாவதொரு கேடு வந்திட்டேதானிருக்கும்… அதுக்கெல்லாம் நாம முக்கியத்துவம் குடுத்திட்டிருந்தா நம்ம வாழ்க்கை வண்டி ஒழுங்கா ஓடாது... அதனால நான் ஒண்ணு சொல்றேன் அது மாதிரி செய்”
ஜி.எம்.மிடமிருந்து வந்த அந்த கனிவான வார்த்தைகளில் நெகிழ்ந்து போன கோபி “சொல்லுங்க சார்” என்றான் ஆவலாய்.
“பேசாம ஒரு நல்ல முதியோர் இல்லமா பார்த்து அவங்களை சேர்த்து விட்டுட்டு… நீ ஒழுங்கா வந்து வேலையப் பாரு”
சட்டென முகம் மாறி அவரை எரித்து விடுவது போல் பார்த்த கோபி “இங்க பாருங்க சார்… வயசான காலத்துல பெத்தவங்களை கூட இருந்து அனுசரணையா கவனிச்சுக்காம அவங்களை முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுட்டு… பொண்டாட்டி பின்னாடியும்… சொத்துக்குப் பின்னாடியும் ஓடறவனெல்லாம் உண்மைல மனுசங்களே இல்ல சார்… பெத்து..வளர்த்து ஆளாக்கிய அம்மா… அப்பாவ அனாதைகளாக்கி ஏதோவொரு இல்லத்துல தள்ளி விட்டுட்டுத் திரியறவனுக எல்லாரும் அவங்களோட முதுமைக் காலத்துல அதுக்கான தண்டனைய அனுபவிச்சிட்டுத்தான் சார் சாவானுக..” என்று ஆத்திரமாய்ச் சொல்ல
“முடிவா... என்னதான் சொல்றே?… வேலைக்கு ஒழுங்கா வர மாட்டே… அப்படித்தானே?”
“எனக்கு என்னைப் பெத்தவங்கதான் சார் முக்கியம்… அதுக்கப்புறம்தான்... இந்த வேலை… சம்பளம்… எல்லாம்… இந்த வேலைல இருந்துட்டு அவங்களை கவனிக்க முடியாதுங்கற ஒரு நெலைமை வரும் போது… இந்த வேலையே தூசுதான் சார்…வேண்டாம் சார்… இன்னிக்கே என்னோட ராஜினாமாவக் குடுத்துட்டு இப்படியே போயிடறேன்...” சொல்லிவிட்டு வேக வேகமாக வெளியேறினான் கோபி.
அவன் சென்ற பிறகு கிட்டத்தட்ட அரை மணி நேரம் வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜவேலு படீரென்று மேசை டிராயரைத் திறந்து “அன்பாலயா முதியோர் இல்லம்” என்ற பெயருக்கு தான் எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து “பரக்..பரக்”கென கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார்.
அடுத்த நிமிடமே போனை எடுத்து அவசர அவசரமாக எண்களை நசுக்கி ‘விமலா…நான் என் முடிவை மாத்திக்கிட்டேன்... அப்பாவையும்… அம்மாவையும் நான் முதியோர் இல்லத்துக்கு அனுப்பப் போறதில்லை… அவங்களை அங்க அனுப்ப எனக்கு இஷ்டமில்லை. அவங்க நம்ம கூடத்தான் இருக்கப் போறாங்க… வெச்சிடு”
மறுமுனையிலிருந்து மறுப்புக்குரல் எழும் முன் ‘பட்’டென போனை வைத்தார்.
மனதில் ஏதோவொரு பாரம் குறைந்தாற் போலிருந்தது அவருக்கு.