கண்ணனுக்கு எல்லோரையும் போலப் பனியன் அணிந்து கொண்டு விளையாட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. ரோட்டில் போகும் தன்வயதொத்த சிறுவர்கள் பனியன் அணிந்து விளையாடிக் கொண்டு செல்வதை ஆசை தீரப் பார்ப்பான்.
அவனுடன் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பெரியசாமிக்கு அவனது அப்பா மஞ்சள் கலரில் முண்டாப் பனியன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதனை அவன் போட்டுக் கொண்டு தெருவில் வந்தபோது கண்ணன் ஓடிப் போய் அவனை நிறுத்தி அவன் அணிந்திருந்த பனியனைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தான்.
கண்ணன் பெரியசாமியிடம், ‘‘டேய் இந்தப் பனியன் ஒனக்கு ரொம்ப நல்லாயிருக்குடா. எப்படா வாங்கின?’’ என்று கேட்டான்.
அதற்குப் பெரியசாமி, ‘டேய் நேத்துத்தான் எங்க அப்பாரு வாங்கித் தந்தாரு. இதே மாதிரி இன்னொரு பனியனும் வீட்டில வச்சிருக்கேன்.
ஏன் ஒங்கம்மா ஒனக்கு வாங்கித் தரலயா? என்று கேட்டான்.
கண்ணனுக்கு முகம் ஒரு மாதிரியாப் போய்விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, ‘இல்லடா நாளைக்கு வாங்கித் தர்ரதா எங்க அம்மா சொன்னுச்சுடா. சரி சரி நீ போ’’. என்று கூறிவிட்டு தளர்ந்த நடையுடன் தனது வீட்டை நோக்கிச் சென்றான்.
அவன் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலைமோதின. இன்று எப்படியாவது தனது அம்மாவிடம் கூறி பனியன் வாங்கித்தரச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். கட்டிட வேலைக்குச் சென்றிருந்த தன் அம்மா வரும் வரை வீட்டின் வெளித் திண்ணையிலேயே அமர்ந்திருந்தான்.
அவனது தந்தை இருந்தவரை அவன் ராஜா மாதிரி இருந்தான். அவன் கேட்டதை எல்லாம் கடன் பட்டாவது வாங்கிக் கொடுப்பார் அவனது தந்தை. ஒருநாள் கட்டிட வேலைக்குச் சென்றவர் கட்டடிடத்தில் வேலை செய்தபோது சாரம் சரிந்து உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார். அதிலிருந்து அவன் குடும்பம் மீள நீண்ட நாளாகியது. வீட்டிலிருந்து அவனது தாயார் குடும்பச் சுமையை முழுமையாகச் சுமக்க வேண்டியதாயிற்று.
ஓட்டைக் குடிசை வீட்டில் அவனும் அவன் அக்கா இருவர், அவன் அம்மா ஆகிய நால்வரும்தான். இருப்பினும் வீட்டில் வறுமை. அவன் அம்மா முத்தம்மாள்தான் குடும்பத்திற்காக உழைக்கின்றாள். அவள் சம்பாதித்துத்தான் மூன்று உயிர்கள் உயிர் வாழ வேண்டும். தனது தாயாருக்காகக் காத்திருந்த கண்ணன் தெருக்கோடியில் தன் தாயார் வருவதைப் பார்த்து வேகமாக ஓடினான்.
மகன் ஓடி வருவதைப் பார்த்த முத்தம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. படபடப்புடன் மகனை நோக்கி ஓடினாள். ‘என்னடா கண்ணா. ஏன்டா வேகமா ஓடி வாரே?’’ என்று ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்தாள். அவ்வாறு அணைப்பதில் அவளுக்கோர் சுகம்.
அம்மாவின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்ட கண்ணன் அவளின் கையைப் பற்றி அவளுடன் நடக்கத் தொடங்கினான். அவன் அம்மாவிடம், ‘‘அம்மாம்மா … எனக்கு ஒரு கலரு பனியன் வாங்கித் தாம்மா. ஏங்கூடப் படிக்கிறவங்கல்லாம் போட்டிருக்காங்க. நானும் அவங்க மாதிரிப் போட்டுக்கணும்மா. வாங்கித் தர்ரியா?’’என்று கேட்டான்.
அவளுக்கு மனதில் வலி ஏற்பட்டது. மகனின் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத தனது வறுமையை நினைத்த அவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது. வீட்டிற்கு வந்ததும் மகனைத் தனது மடியில் அமர வைத்துக் கொண்டு, ‘ராஜா வாங்கித் தர்ரேன்டா. கொஞ்சம் பொறுத்துக்கடா. என் கண்ணுல்ல. அம்மா காசு சேத்து உனக்கு வாங்கித் தரேன். என்ன சரியா.’’ என்று சமாதானமாக மகனிடம் கூறினாள்.
ஆனால் அவனோ விடுவதாக இல்லை. முத்தம்மாவைப் பார்த்து, ‘‘நாளைக்கு வாங்கித் தர்ரியா?’’ என்று விடாப்பிடியாகக் கேட்க அவளுக்குப் பதில் கூற முடியவில்லை. இரு மூத்த பெண்குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு சரியான சட்டை, பாவாடையே வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இவனுக்கு எங்கே எப்படி புதுப் பனியன் வாங்கிக் கொடுக்க முடியும். சித்தாள் வேலைக்குப் போய் வயிற்றை நிரப்புவதே பெரும்பாடாக உள்ள நிலையில் எதை வாங்குவது? என்று திண்டாடிக் கொண்டிருந்த முத்தம்மாவிற்கு மனதில் கவலை பூரான் போன்று ஊறியது.
பெண் பெரியவளாகி விட்டால் அவளுக்கு நல்ல துணிமணி வாங்கிக் கொடுக்க வேண்டுமே. இப்பவோ அப்பவோ என்றிருக்கும் அவளுக்கு எதை வைத்து செய்ய வேண்டிய முறையெல்லாம் செய்வது என்ற கவலை அரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மகனின் சிறிய ஆசையினைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே என்ற துக்கம் மனதில் உருள கண்ணீர் சிந்தினாள்.
அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்குத் தான் ஏதாவது தவறாக அம்மாவிடம் கேட்டு விட்டோமோ? என்று எண்ணம் எழ அம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவனும் அழுதான். அழுகையின் ஊடே, ‘‘வேண்டாம்மா. . . .இனிமே கேட்கல. . .நீ அழாதம்மா . .’’என்று கூறி அம்மாவின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
அப்போது வீட்டினுள்ளிருந்து வந்த முத்தம்மாவின் மூத்த மகளான லெட்சுமி அம்மாவைப் பார்த்து, ‘‘அம்மா அம்மா நீ கோவிச்சுக்கலன்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா?’’ என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டாள்.
முத்தம்மா தன் மகளைப் பார்த்து, ‘சரி சொல்லு’ என்றாள். லெட்சுமி, ‘‘அம்மா நான் ஒங்கூட வேலைக்கு வரட்டுமா? நான் வேலை பார்க்கிற காச வச்சு தம்பிக்குப் பனியன் வாங்கிக் கொடுக்கலாம்ல’’ என்று தம்பியின் மீது பாசம் பொங்கக் கூறினாள்.
முத்தம்மாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. அவளது கணவன் குழந்தைகளை எவ்வாறேனும் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அவற்றையெல்லாம் சிரமங்களைப் பொருட்படுத்தாது வாங்கிக் கொடுத்தான். அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தனது துயரங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு மூவரையும் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்தாள் முத்தம்மா. இந்நிலையில் மகள் லெட்சுமியின் கூற்று அவளுக்குச் சுரீரென்று மனதுள் தைத்தது.
கண்களில் கண்ணீர் மல்க மகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். ‘‘கண்ணுங்களா நீங்க நல்லாப் படிக்கணும். நீங்க படிச்சுப் பெரிய ஆளா ஆகணும். எதுக்காகவும் ஒங்க படிப்ப நிப்பாட்டப்படாது. நான் எப்படியாவது பனியன் வாங்கித் தர்ரேன் போதுமா’’ என்றாள்.
முத்தம்மாவின் அப்போதைய பதிலில் சமாதானம் அடைந்தான் கண்ணன். அவனுக்குப் பனியன் வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள் முத்தம்மா. அவளுக்கு எந்தவிதமான வழியும் புலப்படவில்லை. அவளுக்குத் திடீரென்று ஒரு யோசனை வந்தது.
கட்டிடத்தில் பூச்சுப் பூசியவுடன் சிமெண்ட் பாலைத் தொட்டுத் துடைப்பதற்குப் மெல்லிய பனியனைக் கொடுத்து வீட்டு உரிமையாளர்கள் துடைக்கச் சொல்வார்கள். அந்தப் பனியன் நல்லா இருக்கும். அந்தப் பனியனை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து நம் மகனுக்குக் கொடுத்தால் என்ன? என்ற எண்ணம் மனதுள் வந்தது.
அந்தப் பனியன் பெரிதாக இருந்தாலும் தற்போதைக்கு அதனை மகனுக்குக் கொடுத்து அவனைச் சமாதானப்படுத்த எண்ணினாள். மறுநாள் காலையில் எழுந்து வேகவேகமாக வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டு குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளம்பிச் செல்லுமாறு கூறிவிட்டு கட்டிட வேலைக்குப் புறப்பட்டாள்.
கொத்தனார்களும், சித்தாள்களும் மேஸ்திரியும் வேலை செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். விறுவிறு என்று அவரவர் தத்தம் வேலைகளைச் செய்யத் தொடங்கினர். முத்தம்மாளும் தனது வேலையான கலவையைக் கொண்டு வந்து கொத்தனாரிடம் கொடுத்து சுவரைத் தேய்த்துவிடும் வேலையை ஆரம்பித்தாள்.
முத்தம்மாவின் மனதுள் யாரும் பார்க்காதபோது சுவரைத் தேய்க்கக் கொடுத்த பனியனை இடுப்பில் சுற்றி மறைத்து எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பரபரப்புடன் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். உணவு இடைவேளையின்போது சேலை மாற்றுவதைப் போல் கட்டிடத்தின் உள்ளே சென்று சுவரைத் தேய்ப்பதற்குக் கொடுத்த பனியன்களில் சற்று நல்லதாக எடுத்து தனது சேலைக்குள் வைத்துச் சுற்றிக் கொண்டு யாரும் பார்க்காதவாறு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டுவந்த சோற்றைப் பிள்ளைகளை நினைத்தவாறே சாப்பிட்டு முடித்தாள்.
அன்று வேலைத்தளத்தில் யாருடனும் அவள் பேசவில்லை. மற்றவர்களும் அவளது இயல்பை அறிந்திருந்ததால் அதுபற்றி அவளிடம் கேட்கவில்லை. வேலை முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றபோது அவளுடன் எப்போதும் கூட வரும் அவள் வீட்டினருகில் குடியிருக்கும் வேலம்மாளுடன் சேர்ந்து விரைவாக நடந்து வீட்டிற்கு வந்தாள்.
தனது மகன் இருக்கிறானா? என்று பரபரப்புடன் தேடினாள். கண்ணன் தூத்தில் விளையாடுவதைக் கண்டு அவனை, ‘‘டேய் . . .கண்ணா . . . இங்க வாடா’’ என்று அழைத்தாள்.
அவனும் அம்மாவின் குரல் கேட்டு விளையாட்டை அப்படியே விட்டுவிட்டு கன்றுக் குட்டி போன்று துள்ளிக் குதித்து ஓடிவந்தான். ஓடிவந்த மகனை கட்டி அணைத்த முத்தம்மாள் மகனிடம் அவனுக்குப் பனியன் கொண்டு வந்துள்ளதாகக் கூறினாள்.
கண்ணன் தன் அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தான். முத்தம்மா அவனைப் பார்த்துக் கொண்டே தனது இடுப்பில் சொருகி மறைத்து வைத்திருந்த பழைய பனியனை எடுத்துக் காண்பித்தாள். அதனைக் கண்ட கண்ணனின் முகம் சுருங்கிப் போய்விட்டது.
‘‘அம்மா இது ஏதும்மா?’’ என்று கேட்டான். முத்தம்மாவோ உண்மையைச் சொல்ல விரும்பாமல் தான் வேலை செய்த வீட்டில் கொடுத்ததாகப் பொய் கூறினாள். அப்பனியன் நைந்து போய் இருந்தது. அம்மாவின் சமாளிப்பைப் புரிந்து கொண்ட கண்ணன் பனியனையும் அம்மாவையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, ‘‘அம்மா எனக்குப் பனியன் வேண்டாம்மா. நீ எனக்காகக் கஷ்டப்படுறதப் பார்த்துட்டு பனியனே வேணாம்னு விட்டுட்டேம்மா. ஏம்மா நான் சொன்னதைக் கேட்டு அழறே’’ என்று கேட்டான்.
முத்தம்மா தன் மகனைப் பார்த்து, ‘‘ஏண்டா ராஜா பனியன் பிடிக்கலையா? இப்போதைக்கு இதைப் போட்டுக்கடா பெறகு உனக்கு நல்லதா வாங்கித்தரேன்’’ என்று கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு கூறினாள்.
அம்மாவின் அழுகையைக் கண்ட கண்ணன், ‘‘சரிம்மா அழாதேம்மா…. இதப் போட்டுக்கறேன்…’’ என்று பெரிய அளவில் இருந்த அந்தப் பனியனை வாங்கிப் போட்டுக் கொண்டான். அது ஆங்காங்கே சிறிதளவு கிழிந்து ஏதோ குளிருக்கு ஒன்றைப் போர்த்திவிட்டது போன்று இருந்தது.
பனியனைப் போட்டுக் கொண்டு விளையாடச் சென்ற தன் மகனைக் கணவனைப் பற்றிய நினைவுகளுடன் கண்களில் கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டே இருந்தாள் முத்தம்மாள்….