ஞாயிற்றுக்கிழமை.
கேபிள் டி.வி.க்காரன் வசூலுக்கு வந்திருந்தான். ஒரு வாரமாய்ச் சேமித்து வைத்திருந்த மொத்த ஆத்திரத்தையம் கொட்டினேன். 'ஒரு மாசம் கூடத் தவறாம மாசாமாசம் கரெக்டாப் பணம் குடுத்திட்டுத்தானே இருக்கோம்… அப்புறம் ஏன்யா கனெக்சனைக் கட் பண்ணினே?”
என் கூச்சல் கேட்டு வந்த என் மனைவியும் தன் பங்குக்கு கத்தினாள். சீரியல் இழப்பு, சீரியஸ் இழப்பு அவளுக்கு.
'த பாருங்க… உங்க வீட்டுக்கு மட்டுமல்ல… இந்த ஏரியாவுல யார் யார் வீட்டிலெல்லாம் பத்தாவது படிக்கும் மாணவ மாணவியர் இருக்காங்களோ… அவங்க வீட்டுக்கெல்லாம் ஆறு மாசத்துக்கு கனெக்ஷன் கட்! … உங்க பாப்பா இந்த வருஷம் பத்தாவது தானே?” சொல்லிவிட்டு அவன் நகர 'இது இவன் ஏரியா… இங்க இவனைத் தவிர வேற யாரும் வந்து கனெக்ஷன் குடுக்க மாட்டாங்க என்கிற தெனாவெட்டுல பேசறான்… ராஸ்கல்… இருக்கட்டும் அடுத்த சம்பளத்துல நானே ஒரு டிஷ் வாங்கி மாட்டறேன்… அப்புறம் என்ன பண்ணறான்னு பார்க்கறேன்.” ஆத்திரத்தில் உள்ளங்கையைக் குத்திக் கொண்டிருந்த என்னைப் பார்த்துச் சிரித்தபடியே வந்தார் கடைசி வீட்டு செந்தில்நாதன்.
'என்ன?… உங்க வீட்டுக்கும் கேபிள் கட்டா?”
'நம்ம கொழந்தைக படிப்பைப் பத்தி நமக்கில்லாத அக்கறை இவனுக்கென்ன?” கேட்டேன்.
'அது வேற ஒண்ணுமில்லை… மூணு வருஷத்துக்கு முன்னாடி அவன் தங்கச்சி… எப்பப் பார்த்தாலும் டிவி பார்த்திட்டே இருந்து… பத்தாவதுல பெயிலாகி… சூசைட் பண்ணிக்கிட்டா… அதோட பாதிப்புதான் இது… கேட்டா…'என்னோட ஆத்ம திருப்திக்காக..”ன்னு சொல்லுறான்… சரி… நல்லதுதானெ பண்றான்னு நானும் விட்டுட்டேன்… நீங்களும் விட்டுடுங்க…”
என்னையுமறியாமல் 'சரி’ யென்று தலையாட்டி விட்டு, டிஷ் வாங்கி மாட்டும் எண்ணத்தையும் உதறித் தள்ளினேன்.