அம்மா சொன்ன அந்தச் செய்தி ஏற்படுத்திய மனவேதனையை மறக்கத்தான் நூலகத்திற்குள் நுழைந்து ஏதோவொரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன். ம்ஹூம்... ஒண்ணும் பிரயோஜனமில்லை… அந்தச் சங்கடம் என்னையும் மீறி என் மனத்தை ஆக்கிரமித்து வேறெந்த சிந்தனையையும் உள்ளே அனுமதிக்க மறுத்தது. “ச்சே” சலித்தபடியே புத்தகத்தை வைத்து விட்டு எழுந்து வெளியே வந்தேன். கால்கள் என்னையுமறியாமல் பக்கத்துப் பூங்காவை நோக்கிச் சென்றன. தனியே அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து தூரத்தில் “காச்...மூச்”சென்று சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
“ஹலோ... வெங்கடேஷ்… என்ன இந்தப் பக்கம்?” கேட்டவாறே பக்கத்தில் வந்தமர்ந்தான் சேரன். பால்ய சிநேகிதன்.
“ஒண்ணுமில்லைப்பா சும்மாத்தான்... பொழுது போகலை” சுவாரசியமேயில்லாமல் நான் சொன்ன விதம் அவனுக்குள் ஒரு சந்தேகத்தை உருவாக்க,
“என்னப்பா… ஏன் டல்லாயிருக்கே?… உடம்பு கிடம்பு சரியில்லையா?” கைகளைத் தொட்டுக் கேட்டான்.
“உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லை... நல்லாத்தான் இருக்கு… மனசுதான் சரியில்லை”
சில விநாடிகள் மௌனம் காத்த சேரன் “த பாரு வெங்கடேஷ்... சொல்லக்கூடிய விஷயமாயிருந்தா என்கிட்டச் சொல்லு… ஏதோ என்னால் முடிஞ்ச தீர்வு நான் சொல்லறேன்” என்றான் அவன் வெகு சிநேக பாவத்துடன்.
“எல்லாம் என்னோட கல்யாண விஷயம்தான் சேரன்”
“ஏன் பொண்ணு அமையலையா?... இல்ல ஏதாவது பணப்பிரச்சனையா?” என் தலை மேல் விழுந்து கிடந்த மரத்தின் சருகை எடுத்து வீசியவாறே கேட்டான்.
“ஜாதகத்துல ஏதோ தோஷமாம்” என்றேன் விரக்தியாய்.
“என்னவாம்?”
“எந்தப் பொண்ணை எனக்குப் பேசி முடித்தாலும், குறித்த நாளுக்கு முன்னாடியே அந்தப் பெண்ணுக்கு வேற யாராவது கூட கல்யாணம் முடிஞ்சிடுமாம்... நான் சொல்லலை... என் ஜாதகம் சொல்லுது”
“இதென்னப்பா... விநோதமாயிருக்கு?”
“ஆமாம்ப்பா… என்னோட ஜாதகப்படி எனக்கு நிச்சயம் மட்டும்தான் ஆகுமாம்… கல்யாணம் ஆகவே ஆகாதாம்” சொல்லும் போதே என் குரல் கம்மியது.
“உண்மையிலேயே இது ரொம்ப அநியாயம்ப்பா… நீ கூடவா இதையெல்லாம் நம்பறே?”
“நம்பாம என்ன பண்றது… அது மாதிரியே ரெண்டு சம்பவமும் நடந்து போச்சே”
“எப்படி?”
“மூணு மாசத்துக்கு முன்னாடி பெரம்பூர்ல ஒரு பொண்ணைப் பார்த்தோம்… எனக்கும் பிடிச்சிருந்தது வீட்டிலேயும் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது… சந்தோஷமாப் பேசி முடிச்சோம்… கடைசில என்னாச்சு தெரியமா? ஜவுளி வாங்கறதுக்கு வீட்ல இருந்தவங்க எல்லோரும் போயிருந்தப்ப அந்தப் பொண்ணு பக்கத்து வீட்ல குடியிருந்த ஒரு டெய்லர் கூட ஓடிப் போயிட்டுது”
“அது சரி… இது ஏதோ தற்செயலா நடந்திருக்கு… அதுக்காக இது ஜாதக தோஷம்தான் காரணம்னு சொல்ல முடியுமா?” அவன் இன்னும் நம்பாமலே பேசினான்.
“இன்னும் கேளு சேரன்…போன வாரம் புரோக்கர் ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினாரு… புடிச்சிருக்கு மேற்கொண்டு விசாரிங்கன்னு சொல்லியனுப்பினேன்… போய் விசாரிச்சிட்டு வந்து என்ன சொன்னார் தெரியுமா?… என்கிட்ட போட்டோ காண்பிச்சு என்னோட சம்மதம் வாங்கினார் பாரு... அன்னிக்கு மறுநாளே அது யார் கூடவோ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிச்சு”
“ம்ம்ம்ம்…” யோசித்தான் சேரன்.
“சுண்டல்... சுண்டல்” என்று கூவியபடி அருகில் வந்து நின்ற சிறுவன் நாங்களிருவரும் இருகிப்போன முகத்துடன் இருப்பதைப் பார்த்துவிட்டு “சுண்டல் வேணுமா சார்?” என்று கேட்பதைக் கூட மறந்து விட்டு நகர்ந்தான்.
“வெங்கடேஷ்... எனக்கொரு யோசனை தோணுது… நீ சம்மதிச்சா... நானே உனக்கொரு பொண்ணு பாக்கறேன்” என்று கூறி விட்டு சேரன் என் முகத்தையே பார்த்தான்.
“அட ஏம்ப்பா… நீ வேற… இன்னொரு பொண்ணு ஓடிப் போகனும்னு நெனைக்கறியா?” விரக்தியாய்ச் சிரித்தபடி கேட்டேன்.
“வேண்டாம்ப்பா… உன்னோட ஜாதகமே வேண்டாம்… நீங்க யாரும் இதுல தலையிடவும் வேண்டாம்... நீ கூட வர வேண்டாம்… என் மேல் நம்பிக்கை வை... நானே உனக்குப் பொருத்தமான பொண்ணை தேர்வு பண்ணி... எல்லாம் பேசி முடிச்சுடறேன். காதும் காதும் வெச்ச மாதிரி ரிஜிஸ்டர் மேரேஜை முடிச்சுடலாம்… அந்த ரிஜிஸ்டர் அன்னிக்குத்தான் நீ வர்றே... கையெழுத்து போடறே... பொண்டாட்டியக் கூட்டிட்டுப் போறே… என்ன... ஓ.கே…வா?”
யோசித்தேன். நடைமுறையில் இது சாத்தியமா?
“என்ன வெங்கடேஷ் யோசிக்கறே?…பொண்ணையே பார்க்காம எப்படி சம்மதிக்கறதுன்னு தயங்கறியா?”
“சேச்சே... அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை... உன் மேல் எனக்கு நம்பிக்கையிருக்கு… நீ நிச்சயம் எனக்குப் பொருத்தமான பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பேன்னு எனக்குத் தெரியும்… ஆனா… அப்படியெல்லாம் செஞ்சு ஜாதகத்தப் பொய்யாக்க முடியுமா?ன்னு சந்தேகமாயிருக்கு”
“அட... நான்தான் ஜாதகமே வேண்டாம்கறேனே… அப்புறம் எப்படி அந்த தோஷம் பலிக்கும்…யோசிச்சுப் பாரு’ சேரன் ஆணித்தரமாய்ப் பேச.
“சரி… முயற்சி பண்ணிப் பாரு” சம்மதித்து வைத்தேன்.
ஒரு மாதத்திற்குப் பிறகு சேரனிடமிருந்து கடிதம் வந்தது. ஒரு ஊரின் பெயரையும்… நாளையும்… நேரத்தையும் குறிப்பிட்டு அந்த நாளில்… அந்த ஊரில்… அந்த நேரத்தில் என்னை அங்கு இருக்குமாறு எழுதியிருந்தான். அன்றுதான் பதிவுத் திருமணமாம். அதுவரை அந்த முயற்சியானது துளியும் சாத்தியப்படாத ஒரு வீண் முயற்சியே என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்குள் லேசாய் நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. உண்மையில் சொல்லப் போனால் கல்யாணக் கனவுகள் கூட என்னுள் தோன்ற ஆரம்பித்தன.
அந்த நாளும் வந்தது. ஆசை ஆசையாய் ரயிலில் ஏறி… அந்த ஊரை அடைந்ததும் இறங்க வேண்டி எழுந்தேன். அப்போது நான் இறங்குவதற்குள் என்னைத் தள்ளிக் கொண்டு ஒரு ஆணும்… யுவதியும் வேகமாக பெட்டிக்குள் ஏற,
எனக்குள் கோபம் கொப்பளித்தது. அவர்களைப் பார்த்து முறைத்தேன்.
பெட்டியில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை.
“சார்... மன்னிச்சுக்கங்க சார்… நாங்க ரொம்ப அவசரத்திலிருக்கோம்... எங்களைத் துரத்திட்டு ஒரு கும்பல் வந்திட்டிருக்கு… நாங்க ரெண்டு பேரும் உள்ளார டாய்லெட்டுல ஒளிஞ்சுக்கறோம்… அவங்க வந்து கேட்டா “இங்க யாருமே வரலை”ன்னு சொல்லிடுங்க சார் ப்ளீஸ்” அந்த இளைஞன் கெஞ்சினான்.
“அட... நீங்க ரெண்டு பேரும் யாருப்பா... எதுக்கு உங்களைத் துரத்துறாங்க?” கேட்டேன்.
“நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்குயிராக காதலிக்கறோம் சார்... எங்களைப் பிரிக்கத்தான் எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க துரத்துறாங்க”
“சார்... ப்ளீஸ்… நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும்” இப்போது அந்தப் பெண் கெஞ்சினாள்.
‘வாழ்க்கைல எனக்குத்தான் காதலிக்கவும் கொடுத்து வைக்கலை… கல்யாணம் செய்துக்கவும் கொடுத்து வைக்கலை… அட்லீஸ்ட்… இந்த ஜோடிக்கு உதவி செஞ்சாலாவது எனக்கு அந்த பாக்கியம் கெடைச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கப் போற என்னோட ரிஜிஸ்தர் மேரேஜ் எந்தவிதக் குளறுபடியும் இல்லாம நடந்து முடியுதான்னு பார்ப்போம்’ என்று எண்ணியபடி அவர்களுக்கு சம்மதம் தெரிவித்தேன். கையெடுத்துக் கும்பிட்டபடி இருவரும் ஒரெ டாய்லெட்டிற்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டனர்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த கும்பல் என எதிரே நின்று தாறுமாறாக கேள்விகள் கேட்க “உஷ்...சும்மா ஆளாளுக்கு சத்தம் போடாதீங்க… நான்தான் சொல்றேனில்ல?... இந்தப் பெட்டிக்குள்ளார நீங்க சொல்ற மாதிரி யாரும் நுழையலேன்னு…” என்றேன் கத்தலாக,
இதற்குள் ஒருவன் பெட்டிக்குள் நுழைந்து மேலோட்டமாய்ப் பார்த்து விட்டு “யாரும் இல்லைடா” என்று சொல்லியவாறே குதித்து அடுத்த பெட்டிக்கு ஓடினான். கும்பலும் அவன் பின்னாலேயே ஓடியது. அடுத்த பெட்டியை அவர்கள் பார்த்து விட்டு இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டுவிட ‘தப..தப’வென்று குதித்து ப்ளாட்பாரத்தில் நின்றது அந்த கும்பல்.
நானும் இறங்கிக் கொண்டேன்.
ரயில் வெகு தூரம் வரை செல்லுவதை அவர்களுடன் சேர்ந்து நானும் ப்ளாட்பாரத்தில் நின்று ரசித்து விட்டு நிறைவுடன் அங்கிருந்து புறப்பட்டேன். மனசு முழுதும் இனம் புரியாத ஒரு சந்தோஷத் தூறல்.
அடுத்த கால் மணி நேரத்தில் சேரன் குறிப்பிட்டிருந்த இடத்தை அடைந்து அந்த பழங்கால அரசு அலுவலக கட்டிடத்திற்குள் நான் நுழைந்த போது சேரனும் அவனுடன் கிட்டத்தட்ட ஏழெட்டு பேரும் இறுக்கமான முகத்துடன் எனக்காக காத்திருந்தனர். என்னைப் பார்த்ததும் அவசரமாய் வந்து என்னைத் தனியே தள்ளிச் சென்ற சேரன் “ஸாரிப்பா... வெரி வெரி ஸாரிப்பா” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
எனக்கு எதுவும் புரியவில்லை.
“என்ன சேரன்… என்னாச்சு?” கேட்டேன்.
“உனக்காக நான் பார்த்து வெச்சிருந்த பொண்ணு ... இப்ப... இங்க வர்றதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் யாரோ ஒரு பையன்கூட ஓடிப் போயிடுச்சாம்… எப்படியும் ரயில்லேதான் போயாகனும்… ஆளுக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க… எப்படியும் பிடிச்சிட்டு வந்துடுவாங்க” என்றான்.
எனக்குத் தெரியும் அவர்களால் அந்த ஜோடியைத் திருப்பிக் கொண்டு வர முடியாதென்பது.
“சரிப்பா... பரவாயில்லை… எனக்காக நீ இந்த அளவுக்கு முயற்சி செய்தியே அதுவே எனக்கு திருப்தி... நான் வர்றேன்பா” சொல்லிவிட்டு அப்படியே திரும்பி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்தேன்.
ஏனோ ரயில் ஏறும் முன் அங்கிருந்த புத்தகக் கடையில் விவேகானந்தர் புத்தகம் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டேன்.