நகரப் பேருந்து ஒரு வழியாக பேருந்து நிலையத்தை விட்டுக் கிளம்பி விட்டது. “காயாம்புஞ்சைக்கு ஒரு டிக்கட் கொடுப்பா” கிழவி தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நடத்துனரிடம் நீட்டினாள். அவள் மடிமீது ஏதோ சற்றே பெரிய சாக்கு மூட்டை வேறு.
“வண்டி காயாம்புஞ்சைக்குப் போகாதும்மா. கேட்டுக்கிட்டு ஏற வேண்டாமா?” ரெண்டு ரூபாய் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு, நோட்டைக் கிழவியின் கையிலிருந்து வெடுக்கெனப் புடுங்கி தன் பையில் போட்டுக் கொண்டு “வலையபட்டி திருப்பத்தில் இறங்கி நடந்து போம்மா” என்றார் நடத்துனர்.
“அய்யா, அப்பா, வண்டியக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுய்யா, வலையபட்டி முக்கத்துலே இறங்கினா காயம்புஞ்சைக்குப் போக நான் ரொம்ப தூரம் வெய்யில்லே நடக்கணுமேப்பா, இந்த வயசானக் கிழவி மேல இரக்கம் காட்டுப்பா, கையிலே வேறு சில்லறைக் காசும் இல்லப்பா” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு, எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள் அந்தக் கிழவி.
‘‘பேசாம ஒக்காரும்மா; சாகப் போறதெல்லாம் வண்டியிலே ஏறிக்கிட்டு நம்ம உயிரை வாங்குதுக! ஒன்னய யாருமா வண்டியில ஏறச் சொன்னா? பேசாம வீட்டிலேயே கெடக்க வேண்டியதுதானே?” என்று கடுகு வெடித்தாற் போன்று படபடவென்று பேசினார் நடத்துனர். அவர் கவனம் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் போட்டு காசு வசூலிப்பதிலேயே இருந்தது.
கிழவிக்கு வயது எண்பதுக்குக் குறையாது. நல்ல பழுத்த பழம் போன்றவள். தோல் பூராவும் ஒரே சுருக்கம் சுருக்கமாக உள்ளது. வெய்யிலின் கொடுமையில் அவள் முகம் மிளகாய் வற்றலைப் போல சிவந்து விட்டது.
அதற்குள் பஸ் வலையபட்டியை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டது. பஸ்ஸின் ஆட்டத்தில் நின்று கொண்டிருந்த கிழவி அவளையறியாமலேயே மீண்டும் தன் இருக்கையில் தள்ளப்பட்டாள்.
அவள் வாய் மட்டும் “அட முருகா …. ஆண்டவனே … ” என்று எதைஎதையோ நினைத்துப் புலம்பிக் கொண்டே இருந்தது.
கிழவியைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. இந்தக் கண்டக்டர்தான் அவளை அந்த இடத்தில் இறக்கிவிட்டால்தான் என்ன? நமக்கும் தான் வயசாகும். அப்பொழுது நாம் ஊருக்கெல்லாம் போக மாட்டோமா? அவள் மனம் நோகும்படி நடந்து கொண்ட கண்டக்டரின் நடத்தை என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
தள்ளாத வயதில், கடுமையான வெய்யிலில், கையில் சுமையுடன் பஸ்ஸில் ஏறி, சாமர்த்தியமாக அதுவும் தன்னந்தனியாக பயணம் செய்கிறாளே என்று எனக்குள் ஒரு பரிதவிப்பு.
காயாம்புஞ்சை வழியாக இந்த பஸ் போகுமா என்று ஒரு வார்த்தை யாரிடமாவது கேட்டு விட்டு அவள் ஏறியிருக்கலாம் தான். படித்த விபரம் தெரிந்தவர்களுக்கே சமயத்தில் இதுபோல தவறு ஏற்படக் கூடும். பாவம் வயசான இந்தக் கிழவி என்ன செய்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.
வலையபட்டியை நெருங்கும் முன்பே, போக்குவரத்து ஸ்தம்பித்து பஸ் நிற்க ஆரம்பித்தது. எறும்புக் கூட்டம் போல் வரிசை வரிசையாகப் பேருந்துகளும், லாரிகளும், கை வண்டிகளும், ஆட்டோக்களுமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நின்று கொண்டிருந்தன.
யாரோ ஒரு அமைச்சர், எங்கோ ஒரு பகுதியில், மக்கள் குறை கேட்க வரப் போவதாகவும், அவரின் காரும், அவரின் ஆதரவாளர்களின் கார்களும், பாதுகாப்பு போலீஸ் வண்டிகளும் வரிசையாகப் போன பின்பு தான், போக்கு வரத்து இயல்பு நிலைக்குத் திரும்புமாம்.
வெகு நேரமாக இப்படி ட்ராஃபிக் ஜாம் ஆகியுள்ளதாக பேசிக்கொண்டனர், பஸ் அருகில் நின்ற ஒரு சில கரை வேட்டி அணிந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்.
இங்கு டிராஃபிக் ஜாம் ஆகி மக்கள் தவித்து நிற்கும் பகுதிக்கு அந்த அமைச்சர் குறை கேட்க நடந்தே வந்தாரானால், அவரை இங்குள்ள மக்கள் கொதித்துப்போய் ஜாமாக்கி விடுவார்கள், என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். யாரைப் பற்றியும் யாருக்கும் கவலையில்லை. ம்ஹும் … . . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கவலை என்று என் மனம் பல்வேறு சிந்தனைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
கீழே இறங்கி நிலமையை ஆராய்ந்த நடத்துனர், ஓட்டுனரிடம் வண்டியை சீக்கிரமாக ரிவேர்ஸ்ஸில் எடுக்கச் சொல்லி விசில் ஊத ஆரம்பித்தார். ‘‘ரைட்டுல கட் பண்ணு. இந்த டிராஃபிக் ஜாம் இப்போதைக்கு கிளியர் ஆகாது போலத் தோணுது. பேசாமல் இந்த டிரிப் மட்டும் காயாம்புஞ்சை வழியாப் போகலாமய்யா” என்றார்.
கிழவியின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று நினைத்து என்னுள் மகிழ்ந்து கொண்டேன்.
ஆனால் காயாம்புஞ்சைக்குச் சற்று முன்னதாகவே பஸ் எஞ்சினில் ஏதோ கோளாறு ஆகி வண்டி நின்று விட்டது. எஞ்சினைத் திறந்து பார்த்த ஓட்டுனர், நடத்துனரிடம் “ரேடியேட்டருக்குத் தண்ணி ஊத்தணும்யா” என்றார். ரேடியேட்டரிலிருந்து ஒரே புகையாக மிதந்து வந்து கொண்டிருந்தது.
“நடுக்காட்டில் நிறுத்தினா தண்ணிக்கு எங்கேய்யா போறது?” நடத்துனர் புலம்ப ஆரம்பித்தார்.
அதற்கு டிரைவர், ‘‘ஆமாய்யா எனக்கு இங்க கொண்டு வந்து நிறுத்தனும்னு ரொம்ப ஆசை பாரு. வண்டி அதுபாட்டுக்கு நின்னுபோச்சு. நான் என்னய்யா செய்யறது. சரி சரி இங்க எங்கயாச்சும் ரேடியேட்டருக்குத் தண்ணி கெடைக்குமான்னு பாப்போம்யா’’ என்று அலுப்புடன் கூறினார்.
இது தான் சமயம் என்று தன் பெரிய மூட்டையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய கிழவி, “இதோ தெரியுதே குடிசை. அது தான்ய்யா என்னோட வீடு. என் வீட்டுக்கு வாங்கய்யா. ஒங்களுக்கு வேண்டிய மட்டும் தண்ணி தாரேன்” என்று கூறினாள்.
ரேடியேட்டருக்கு இரண்டு குடம் தண்ணீர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சொம்பு நிறைய மோர் கொண்டு வந்து கொடுத்து, ஏம்பிள்ளைக மாதிரி இருக்கீங்க இந்தாங்கய்யா வெய்யிலுக்கு குளுமையாய் இருக்கும், இந்த மோரக் குடிச்சுட்டுப் போங்கய்யா” என்றாள் வாஞ்சையுடன்.
அவளுடைய உபசரிப்பில் ஓட்டுநரும் நடத்துநரும் கூனிக்குறுகிப் போய்விட்டனர்.
நடத்துநருக்கு வெட்கமாகப் போய்விட்டது. மனித நேயமின்றி கேவலமாக இந்தக் கிழவியைப் பேசிவிட்டோமே. நமக்குள்ள மனம்தானே இந்தக் கிழவிக்கும் இருக்கும். இந்தக் கிழவிக்கு உள்ள மனசு நமக்கு இல்லாமல் போய்விட்டதே. நாம் மற்றவர்கள் மத்தியில் அவளைத் தரக்குறைவாகப் பேசியிருந்தாலும் நம்மைப் பார்த்து தனது பிள்ளைகளாக நினைத்த அவளது உயர்ந்த உள்ளம் எங்கே? தரக்குறைவாக நடத்திய நாம் எங்கே? அந்த நடத்துநருக்கு முன் அக்கிழவி மலையென உயர்ந்து நின்றாள். அவளது உயர்ந்த உள்ளத்திற்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று கருதிய நடத்துநர் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு,
‘‘அம்மா என்ன மன்னிச்சிடுங்கம்மா இனி யாருகிட்டேயும் மனித நேயமில்லாம நடந்துக்க மாட்டேன். என்னோட கண்ணத் தெறந்திட்டீங்க. நன்றிம்மா. நான் வாரேன்’’ என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு தலைகுனிந்து நடந்தார்.
அந்தக் கிழவியோ, ‘‘ஏய்யா இப்படியெல்லாம் சொல்றே. பரவாயில்லய்யா நீ நல்லா மவராசனா இருய்யா” என்று தனது பொக்கை வாய் நிறைய நிறைந்த உள்ளத்துடன் வாழ்த்தினாள்.
பிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்து. ஆனால் நான் கண்ட காட்சியும், அந்தக் கிழவியின் உருவமும் என் மனதிலிருந்து நகராமல் உயர்ந்து நின்றது.
இந்தக் கிழவிக்குத்தான் எத்தனை பெரிய மனசு. இந்தக் கிழவி போன்று எல்லோரும் நல்ல மனசுடன் இருந்துவிட்டால் இந்த உலகம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்ற சிந்தனை ஓட்டமும் மனதில் எழுந்தது.