அந்த முதியோர் இல்ல கேட்டிற்குள் நான் நுழையும் போது மணி பத்தரை இருக்கும். சூரியன் தன் உக்கிரத்தை அப்போதுதான் தொடங்கியிருந்தான்.
நேரே அங்கிருந்த அலுவலகத்திற்குச் சென்று, என் அடையாள அட்டையையும், எடிட்டர் எனக்குக் கொடுத்திருந்த அனுமதிக் கடிதத்தையும் காட்டி விட்டு முதியோர்களைச் சந்திக்கச் சென்றேன்.
எனக்குள் ஒரு உத்வேகம் அதீதமாய்ப் பீறிட்டது. 'என்னோட இந்தக் கட்டுரை பத்தோட பதினொன்னா இருக்கக் கூடாது...! எல்லோராலும் பேசப்படற… அளவுக்கு சிறப்பா இருக்கணும்...! முதியோர்களின் வேதனைக் கூப்பாட்டை அப்படியே எழுத்தால பிரதிபலிக்கணும்...! படிக்கறவங்க அப்படியே உருகிப் போய்விடணும்...! சமூகத்திற்கு இது ஒரு சாட்டையடியா இருக்கணும்...!”
கண்ணில் பட்ட முதல் பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தேன். பதிலுக்கு அப்பெண்மணியும் புன்னகைக்க, அருகில் சென்று, 'அம்மா...! வணக்கம்மா...! என் பேரு திவாகர்…நான் 'கூர்வாள்” பத்திரிக்கைல இருந்து வர்றேம்மா...! உங்களையெல்லாம் நேர்ல சந்திச்சு… நீங்கெல்லாம் எத்தனை வேதனைகளை உங்க உள்ளத்துல சுமந்துக்கிட்டு இங்க நடைப் பிணமா வாழ்ந்திட்டிருக்கீங்க...! அப்படிங்கறதை இந்த உலகத்துக்கு எடுத்துரைக்கத்தான் வந்திருக்கேன்மா...! உங்க உள்ளக் குமுறல்களை அப்படியே என்னிடம் கொட்டுங்கம்மா...!”
அப்பெண்மணி என்னை ஒரு மாதிரி விநோதமாய்ப் பார்க்க,
'இங்க பாருங்கம்மா...! நீங்க யாருக்கும்… எதுக்கும் பயப்படாம… வாழ்க்கைல நீங்க சந்திச்ச சோதனைகளை… துயரங்களையெல்லாம்… வெளிப்படையாகச் சொல்லுங்கம்மா...! அதே மாதிரி தங்களோட சுயநலத்துக்காக உங்களை இங்க கொண்டாந்து தள்ளிய உங்க வாரிசுகளைப் பத்தி… தைரியமாச் சொல்லுங்கம்மா...!”
என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி, 'தம்பி… நீ ரொம்ப அவசரப்படறே...! அதே மாதிரி கொஞ்சங்கூட யோசனையே இல்லாம மாக்கானாட்டம் பேசுறே...!” எனச் சொல்ல,
எனக்குச் சுரீரென்றது. 'என்னம்மா...! என்ன சொல்றீங்க!”
'பின்னே...? இங்க வந்திருக்கற எல்லோருமே அந்த மாதிரிக் கஷ்டப்பட்டுத்தான் வந்திருப்பாங்கன்னு… நீ நெனச்சிட்டிருந்தேன்னா… அது உன் தப்பு!”
நான் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தேன்.
'என்ன புரியலையா...? இப்ப என்னையே எடுத்துக்க… நான்... நானாக இஷ்டப்பட்டுத்தான் இங்க வந்து சேர்ந்திருக்கேன்...! நம்ப முடியலைதானே...? சொல்றேன் கேளு… என் மூத்த மகன் குழந்தை குட்டிகளோட அமெரிக்காவுல செட்டிலாயிட்டான்...! சின்னவன் மும்பைல கஸ்டம்ஸ்ல வேலைல இருக்கான்...! அவன் மனைவியும் அங்கியே ஒரு காலேஜ்ல இங்கிலீஸ் புரபஸரா இருக்கா...! இங்க நானும் எங்க வீடடுக்காரரும் மட்டும் இருந்தோம்...! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அவர் தவறினதும் ரெண்டு பசங்களும் என்னைத் தன்னோட வந்து இருக்கும்படி வருந்தி வருந்திக் கூப்பிட்டாங்க...! ஏனோ எனக்குத்தான் இந்த ஊரை விட்டுப் போகப் பிடிக்கலை...! பார்த்தேன்... நானே வலியக் கேட்டு இந்த முதியோர் இல்லத்துல வந்து சேரந்துக்கிட்டேன்...! ரொம்ப சந்தோஷமாவே இருக்கேன்...! பசங்க ஆரம்பத்துல ரொம்ப வருத்தப்பட்டானுக...! அப்புறம் புரிஞ்சுக்கிட்டானுக...! இப்ப தெனமும் ஒரு தடவை போன்ல பேசிடுவானுக...! மூணு மாசத்துக்கொரு தரம் வந்திட்டுப் போயிடுவானுக...!”
'சரிங்கம்மா…நூத்துல ஒண்ணு ரெண்டு கேசுக வேணா… உங்களை மாதிரி இருக்கலாம்... அதுக்காக…”
நான் பேசிக் கொண்டிருக்கும் போதே மெல்லத் தலையைத் திருப்பிய அப்பெண்மணி, சற்றுத் தொலைவில் ஈஸி சேரில் அமர்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த இன்னொரு பெண்மணியை அழைத்தாள்.
சிவந்த தலை முடி, மற்றும் சிவந்த தோலுடன் இருந்த அப்பெண்மணி, உடனே எழுந்து ஒரு விதமாய் ஆடியபடியே வந்து, 'வாட் ஓல்டு லேடி...? என்னா வோணும்...?யார் இந்தப் பையன்?” கேட்டாள்.
'சாரு… ஏதோ பத்திரிக்கை இருந்து வர்றாராம்… நாமெல்லாம் நம்ம வாரிசுகளால இங்க கொண்டாந்து தள்ளப் பட்டிருக்கோமாம்… அதைப்பத்தி இவரு கட்டுரை எழுதப் போறாறராம்!”
'ஹேய்…மேன்...! யார் சொன்னது அப்படி...? அதெல்லாம் தப்பு...! நாங்கெல்லாம் நாங்களா இஷ்டப்பட்டு சந்தோஷமாத்தான் இங்க வந்திருக்கோம்!”
'உங்களுக்கு மகன்… மகள்… யாராவது…?” அப்பெண்மணியிடம் மெல்லக் கேட்டேன்.
'யெஸ்… எனக்கு ஒரு டாட்டர்… ஒரு சன்...! டாட்டர் மேரேஜ் ஆகி… பெங்களுரூப் பக்கம் போயிட்டா...! சன்னுக்கு சென்னைல வேலை… கம்பெனியிலேயே வீடு குடுத்திருக்காங்க… அதனால அங்கியே இருந்திட்டான்...! சென்னை வெயில் எனக்கு ஒத்துக்காது... அதனால என்னால் அவன் கூடப் போய் தங்க முடியலை...! அதான் இங்க வந்திட்டேன்!”
எனக்குள் ஒரு மாற்றம் தோன்றியது. ' இதெல்லாம் உண்மையா...? அப்படியானால், முதியோர் இல்லத்துக்கு வர்றவங்க எல்லோரும் ஒரு கொடுமைக்குப் பிறகுதான் இங்க வந்து சேர்றாங்கன்னு சமூகத்துல எல்லாரும் நினைச்சிட்டிருக்கறது தப்போ...?”
'தம்பி… என்ன யோசனைல மூழ்கிட்டீங்க...? வேற யாரையாவது வரச் சொல்லவா?”
'வேண்டாம்மா… நான் புரிஞ்சுக்கிட்டேன்...!' என்றவன் தணிவான குரலில், 'இருந்தாலும் எல்லோருமே இதே மாதிரிதான்னு நினைக்க முடியலையே!”
'தம்பி… உண்மையைச் சொல்லப் போனா… இங்கிருக்கற முக்கால் வாசிப்பேர்… எங்களை மாதிரித்தான் தாங்களே இஷ்டப்பட்டோ… அல்லது சூழ்நிலைக்கேற்றபடி தங்களை மாற்றிக் கொண்டோ… இங்கு வந்து சேர்ந்திருக்காங்க...! ஒரு கால்வாசிப் பேர்தான் நீங்க நெனைக்கற மாதிரி கொடுமைல சிக்கி இங்க வந்து ஒதுங்கியிருக்காங்க!”
அப்பெண்மணி உறுதியோடு சொன்ன போது, என் மனதில் அந்த எண்ணம் ஓடியது. 'கரெக்ட்… கட்டுரையோட கான்ஸெப்டையே மாற்றி 'முதியோர் இல்லம் அது மகிழ்ச்சியின் முகத்துவாரம்” ன்னு டைட்டிலைப் போட்டு ரெடி பண்ணிட வேண்டியதுதான்!”