'என்ன மேன் இதென்ன டேபிளா?.. இல்லை குப்பைக் கூடையா?”
குனிந்து எழுதிக் கொண்டிருந்த குமார் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். தன் டேபிளுக்கு எதிரே நின்று எம். டி. ராஜசேகர் தன்னைத் தான் திட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து அவசரமாய் எழுந்து நின்றான்.
'வாட் ஈஸ் திஸ்?…இங்க ரெண்டு மூணு ஃபைல் திறந்து கெடக்கு…. அங்க நாலஞ்சு பேப்பர் ஃபேன் காத்துல துடிச்சிட்டிருக்கு…. ரெண்டு பேனா திறந்தே கெடக்கு… போன் குப்புறக் கெடக்கு… காலைல டீ சாப்பிட்ட எச்சில் டம்ளர் எடுக்காம அப்படியே கெடக்கு… ச்சை… 'டேபிள் மேனர்ஸ்”ன்னா என்னன்னு தெரியுமா மேன் உனக்கு?… இப்படியொரு கசகசப்புல உட்கார்ந்து எப்படித்தான் வேலை செய்ய முடியுதோ உன்னாலே?... பத்து நிமிசத்துல இந்த டேபிள் க்ளீன் ஆகணும்… இல்ல ஐ வில் டேக் ஆக்சன்” சொல்லிவிட்டுத் தன் அறையை நோக்கி நடந்த எம். டி. ராஜசேகரை நடுக்கமாய்ப் பார்த்தான் குமார்.
இரவு. டைனிங் டேபிளில் எம். டி. ராஜசேகரும் அவரது எட்டு வயது மகள் நிவேதிதாவும் அமர்ந்திருக்க திருமதி ராஜசேகர் பரிமாறிக் கொண்டிருந்தார்.
குருமாவுடன் சப்பாத்தியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜசேகர் பக்கத்திலிருந்த சட்னிப் பாத்திரத்தைத் திறந்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்துத் தன் பிளேட்டில் இட்டுக் கொண்டார்.
அப்போது மிஸஸ் ராஜசேகர் ஜாம் பாட்டிலை எடுத்து வர 'வெரி குட்… நானே கேட்கலாமென்றிருந்தேன் நீயே கொண்டு வந்திட்டே..” சொல்லியவாறே பாட்டிலை வாங்கி அதிலும் கொஞ்சம் தன் பிளேட்டில் கொட்டிக் கொண்டார்.
'டாடி” நிவேதிதா மெல்லிய குரலில் அழைக்க,
'என்னம்மா?”
'என்ன டாடி இது?… ஒரு கம்பெனி எம். டி ...நீங்க!… இப்படியிருக்கீங்க!… போங்க டாடி… எனக்குப் பிடிக்கலை”
அவர் எதுவும் புரியாமல் அவளைக் கூர்ந்து நோக்க,
'பின்னே என்ன டாடி… ஏற்கனவே ப்ளேட்ல குருமா இருக்கு… அதை முழுசும் சாப்பிட்டு முடிச்சிட்டுத்தான் சட்னி போட்டுக்கணும்… நீங்க என்னடான்னா அதுக்குள்ளாரயே சட்னியப் போட்டுக்கறீங்க… சரி… பரவாயில்லை… அந்தச் சட்னி பாத்திரத்தை திறந்தீங்களே?… திரும்பவும் மூடி வெச்சீங்களா… அது பாட்டுக்குத் திறந்தே கெடக்கு…”
ராஜசேகர் விழிக்க,
'அதை விடக் கொடுமை… மம்மி ஜாம் பாட்டிலைக் கொண்டு வந்ததும்… அவசரமாய் வாங்கி ஜாமையும் ப்ளேட்ல போட்டுக்கிட்டீங்க… ஜாமை எடுக்கும் போது அந்த ஸ்பூனை கொஞ்சம் கூட யோசிக்காம எச்சில் கையாலேயே எடுக்கறீங்க… இதுக்கு நடுவுல செல் போன்ல வேற பேசறீங்க… ச்சை… போங்க டாடி… உங்களுக்கு டேபிள் மேனர்ஸ் கொஞ்சம் கூட இல்லை டாடி… இந்தப் பக்கம் ஒரு பாத்திரம் திறந்து கெடக்கு… அந்தப் பக்கம் ஜாம் பாட்டில் திறந்து கெடக்கு… பக்கத்துல செல்போன்… நீங்க சாப்பிடுற ப்ளேட்ல குருமா… சட்னி… ஜாம்…ன்னு ஒரே கலவரமா இருக்கு..”
செல்லமாய்க் கடிந்து கொண்டு தன் எட்டு வயது மகளை ஊடுருவிப் பார்த்தார் எம். டி. ராஜசேகர் அவர் கண்களுக்கு அங்கு அமர்ந்திருப்பது, ஆபீஸில் தன்னிடம் திட்டு வாங்கிய குமாராய்த் தெரிய,
தலையைச் சிலுப்பிக் கொண்டார்.