பல மாதங்களுக்குப் பிறகு தோழியைக் காண ஆசை ஆசையாய் அவள் வீட்டிற்கு வந்த சாவித்திரி தோழியின் முகத்தில் அப்பியிருந்த கனமான சோகத்தைக் கண்டு தர்ம சங்கடமானாள். 'கேட்கலாமா?… வேண்டாமா?” என்று நீண்ட நேரம் மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி விட்டு இறுதியில் கேட்டே விட்டாள். 'ஈசுவரி…என்னாச்சு உனக்கு?… ஏன் இப்படி கப்பல் கவுந்து போன மாதிரி மூஞ்சிய வெச்சிட்டிருக்கே?”
மெல்லத் தலையைத் தூக்கிச் சாவித்திரியின் முகத்தை நேருக்கு நேர் சில வினாடிகள் பார்த்த ஈசுவரி 'பொசுக்” கென்று அழ ஆரம்பிக்க 'ப்ச்…என்ன ஏதுன்னு சொல்லாம இப்படி திடீருன்னு அழுதா எப்படி?… காரணத்தைச் சொன்னா என்னால் ஆன ஏதாவதொரு உதவிய நானும் செய்வேனல்லவா?”
சில நிமிடங்கள் அழுது முழத்த பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டு பெச ஆரம்பித்தாள் ஈசுவரி ”சாவித்திரி…என் சொகத்துக்கான காரணத்தை வெளிய சொல்றதுக்கே வெட்கமாயிருக்குது… கெட்டா நீ கூடச் சிரிப்பெ… 'வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணையும்…கல்லூரில கடைச வருசம் படிக்கற பையனையும் வெச்சுக்கிட்டு இதென்ன கூத்து,'ன்னு,…”
”சரி.. சரி.. பீடிகை போதும் விசயத்தைச் சொல்லு”
”என் புருசன் கடந்த ஆறு மாசமா ஒரு புது கெட்ட பழக்கத்துக்கு அடிமையாயிருக்கார்”
”என்ன பழக்கம்…குடியா… இல்ல... சீட்டாட்டமா… இல்ல ”அந்த ”விசயமா,”
”ஊஹூம்… நீ சொன்ன எதுவுமேயில்லை”
”என்னது… இதுல எதுவுமேயில்லையா … எனக்குத் தெரிஞ்சு இதுகளைத் தவிர வேற கெட்ட பழக்கங்களே இல்லை...”
”இருக்கு… மோசமான… ஆபாசமான…அசிங்கமான இங்கிலீஸ்… மலையாளப் படங்களை வெறி பிடிச்ச மாதிரி தினமும் பார்க்கறது… அந்தக் கருமங்களைப் பார்க்கறதுக்காக அலையறது… ச்சை… இப்படியொரு கெட்ட பழக்கம்”
அருவருப்பாய் முகத்தைச் சுளித்தாள் சாவித்திரி.
”பாத்தியா… நான் சொன்னதும நீயே முகத்தைச் சுளிக்கறே”
ஒரு சிறிய யோசனைக்குப் பின் நிதானமாய்க் கேட்டாள் சாவித்திரி ”எங்க போயி அந்தக் கருமங்களைப் பார்க்கறார்,…தியெட்டரிலியா... இல்ல…”
”தியெட்டரிலதான்… இந்த மாதிரிப் படங்களைப் போடறதுக்குன்னே சிட்டில சில தியேட்டர்க இருக்குதாம்… அங்க தெனமும் இவரு தவறாம ஆசர் ஆயிடறாராம்… ஒருத்தர் ரெண்டு பேரல்ல… கிட்டத்தட்ட பத்துப் பதினஞ்சு பேரு சொல்லிட்டாங்க…எல்லாரும் சொந்தக்காரங்க வேற…என்... மானம் பொகுது..”
”சரி..சரி..விடுடி... ஆம்பளைகன்னா கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க… அதைப் போய் பெரிசா நெனச்சுக்கிட்டு…..”
”அப்படி நெனச்சுத்தான் நானும் ஆரம்பத்துல சும்மா இருந்துட்டென்… இப்ப அது விபரீதமாயிடுச்சுடி…சாயங்காலம் ஆனா குடிக்க வேண்டியது…குடிச்சுட்டுப் போயி இந்த மாதிரிக் கருமங்களைப் பார்த்திட்டு நடு ராத்திரி வர வேண்டியது… வந்து அடிக்கற கொட்டம் இருக்கே…. சாமீ…தாங்க முடியலைடி… வீட்டுல வயசுப் பையன் இருக்கான்கற நெனப்பெ இல்லாம… ச்சை…நாறடிக்கறாருடி”
சாவித்திரிக்கு ஈசுவரியைப் பார்க்கவெ பாவமாயிருந்தது. ”சரிடி… காலைல போதையெல்லாம தெளிஞ்சப்பறம்… நல்லா நறுக்குன்னு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேக்க வேண்டியதுதானே...?”
”கேட்டேனே… கேட்டதுக்கு ”ஏண்டி காலைல இருந்து மில்லுல மாடாட்டம் வேலை செய்யறேன்... ஏதோ சாயங்காலம் அந்த சில மணி நேரம்தான் கொஞ்சம் சந்தோசமாயிருக்கேன்… அது பொறுக்கலையாடி உனக்கு”ன்னு என்னையேத் திருப்பி கேட்கறார்… இவரு அந்தத் தியேட்டர்களுக்குப் போறது… அங்க லைன்ல நிக்கறது… அந்த மாதிரிப் படங்களுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுட்டு அலையறது… எல்லாத்தையம்… நெறைய பேர் கவனிச்சிட்டுத்தான் இருக்காங்க… அவ்வளவு ஏன்… இப்பவே... அவரு முதுகுக்குப் பின்னாடி அவரைக் கேவலமாப் பேசிச்… சிரிச்சிட்டுத்தான் இருக்காங்க… இது இப்படியே தொடர்ந்தா… நாளைக்கு அது பொண்ணோட கல்யாணத்தையே அல்லவாப் பாதிச்சுடும்,… பொண்ணோட அப்பன் இப்படின்னு தெரிஞ்சா எவன் வருவான் பொண்ணைக் கேட்டு”
”நீ சொல்றதும் சரிதான் ஈசுவரி….”பெரிய மனுசன்”னு பேரு வாங்க வேண்டிய வயசுல இப்படி ”தறுதலைத் தகப்பன்”னு பேரு வாங்கினா எப்படி?” யோசனையில் ஆழ்ந்தாள் சாவித்திரி.
சில நிமிடங்களுக்குப் பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவள் போல் ”ஏன் ஈசுவரி… இப்படிச் செய்தால் என்ன? …. உங்க வீட்டுக்காரர் போற அதே தியேட்டருக்கு… அதே டைமுக்கு… அதே லைனுக்கு… உன் பையனையம் அனுப்பி நிக்கச் சொல்லேன்...”
”என்னடி சொல்றே?”
”எங்கே பையன் தன்னைப் பார்த்திடுவானோ? ….கேவலமா நெனச்சிடுவானோன்னு வெக்கப்பட்டுக்கிட்டு அவரு அந்தப் பழக்கத்தையே விட்டாலும் விட்டுடுவாரல்லவா?”
குழப்பத்தில் ஆழ்ந்தாள் ஈசுவரி. ”ஏண்டி சாவித்திரி…இது சரிப்பட்டு வரும்னு நீ நெனைக்கறே?”
”ஒரு முயற்சிதானே?…பண்ணித்தான் பார்ப்பொமே...”
”சரி” அரை மனதுடன் தலையாட்டினாள் ஈசுவரி.
ஒரு மாதத்திற்குப் பிறகு,
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்… அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் சாவித்திரியைச் சேரும்” மனதிற்குள் பாடினாள் ஈசுவரி. இப்போதெல்லாம் அவள் கணவன் சாயங்காலம் வேலை முடிந்ததும் நேரே வீட்டிற்கு வந்து விடுகிறார் குடிக்கவும் போவதில்லை… அந்தத் தியேட்டர்கள் பக்கமும் போவதில்லை.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு,
தோழியைக் காண ஆசை ஆசையாய் அவள் வீட்டிற்கு வந்த சாவித்திரி தோழியின் முகத்தில் அப்பியிருந்த கனமான சோகத்தைக் கண்டு தர்ம சங்கடமானாள். ”கேட்கலாமா… வேண்டாமா,” என்று நீண்ட நெரம் மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி விட்டு இறுதியில் கேட்டெ விட்டாள். ”ஈசுவரி… என்னாச்சு உனக்கு? … ஏன் இப்படி கப்பல் கவந்து போன மாதிரி மூஞ்சிய வெச்சிட்டிருக்கே?”
”அதையேண்டி கேட்கறே?… அன்னிக்கு நீ வந்திட்டுப் போன நாளிலிருந்து என் புருசன் திருந்திட்டாரு… குடிக்கறதில்லை… தியேட்டர்ப் பக்கமே போறதில்லை… ஆனா…” என்று இழுத்தாள் ஈசுவரி.
”என்னடி... ஆனா… ஆவன்னா?”
”இப்ப அந்தப் பழக்கம்... என் பையனுக்கு ஒட்டிக்கிடுச்சு… இப்பல்லாம் அவன்… தினமும் தவறாம அந்த மாதிரிப் படங்க ஓடுற தியேட்டர்களில் ஆசர் ஆயிடறான்… ஊரே சொல்லிச் சிரிக்குது… த்தூ... மானம போகுது…”
தலை சுற்றியது சாவித்திரிக்கு.