நானும் எனது நண்பரும் தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதிகாலையில் எழுந்து சாலையின் வழியாக நடந்தோமென்றால் கிட்டத்தட்ட நான்கு மைல் நடந்து சென்று பின்னர் நான்கு மைல் நடந்து வருவோம். திரும்பி வீட்டிற்கு நாங்கள் வர கலையில் எட்டு மணியாகிவிடும். சில சமயம் மழை பெய்தால் நடைப் பயிற்சிக்குச் செல்ல முடியாது.எனது வீடம் எனது நண்பரது வீடும் அருகருகே என்பதால் எப்போதும் இருவரும் சேர்ந்தே எங்கு வேண்டுமென்றாலும் செல்வோம். அதனால் எங்கள் தெருவில் உள்ளோர் எங்களை இரட்டையர்கள் என்று கிண்டலாக அழைப்பதுண்டு. அவ்வாறு அழைக்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாங்களிருவரும் சிரித்துக் கொள்வோம்.
நாங்கள் நடைப்பயிற்சியின் போது பல விசயங்களைப் பேசிக் கொண்டே செல்வோம். அரசியல், இலக்கியம், குடும்பம், நாட்டுநடப்பு எனப் பல்வேறு விசயங்கள் அதில் அடங்கும். ஒருமுறை அன்பு செலுத்துவதில் தாய்தான் சிறந்தவளாக இருக்கிறாள். தந்தையாகிய ஆண் யாரிடமும் அன்பாக இருக்க மாட்டார். ஆண்கள் சுயநலத்தன்மை கொண்டவர்களாக இருப்பர். பெண்கள் தான் தியாக மனப்பான்மை உடையவராக இருப்பார் என்று கூறினார். ஆனால் இல்லை என்று அதனை வெகு ஆக்குரோஷமாக நான் மறுத்தேன்.
என் நண்பன் என்னைப் பார்த்து, ‘‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’’ மறுக்கணுங்கறதுருக்காக மறுக்காதே… உலக நடைமுறையை உணர்ந்து சொல் என்றான்.
அதற்கு நான் அவனிடம், ‘‘டேய் இங்க பாருடா நான் உலக நடைமுறையை நன்கு உணர்ந்ததலதான் ஆணித்தரமா சொல்கறேன். பல உண்மைகள் உனக்குத் தெரியாது. எதையாவது பார்த்துட்டு நீ பாட்டுக்கு உளறாதே’’ என்றேன்.
அதற்கு அவன், ‘‘ஆமா இவருக்கு எல்லாம் ரொம்பத் தெரியும்… பெரிசா அப்பாக்கள்தான் ஒசந்தவருன்னு சொல்ல வந்துட்டாரு… பேசாமா வாய மூடிக்கிட்டு வாடா’’ என்றான்.
எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அவனது கையைப் பிடித்து, ‘‘டேய் நான் சொல்றது உண்மை. உண்மையா நடந் கதையை ஒனக்குச் சொல்றேன். கேளு. வா இந்தப் பாலக்கட்டையில ஒக்காரு. நான் நடந்த கதையை, இப்ப நடந்துகிட்டு இருக்கிற கதையச் சொல்றேன். நான் சொல்லப் போறது முழுக்க முழுக்க உண்மை தெரிஞ்சுக்கோ. நான் சொன்னதைக் கேட்டுட்டு ஒன்னோட மனசயும் கருத்தையும் கண்டிப்பா நீயே மாத்திக்குவே’’ என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த பாலக்கட்டையின் மீது அமர்ந்தேன்.
அவனும் நான் கூறப் போகும் உண்மைக் கதையைக் கேட்கும் ஆர்வத்தில் பாலக்கட்டையில் என் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்தான். நான் சென்ற வாரம் கரூர் சென்று வந்த நிகழ்விலிருந்து ஆரம்பித்தேன்.
‘‘டேய் நான் ஒரு வேலையா கரூருக்குப் போயிருந்தேன்ல. அப்ப என்னோட நண்பரோட அப்பாவப் பார்த்தேன். அவரு டைலர் வேல பாக்குறாரு. நான் கரூருல இருந்தபோது அவரிடம் தான் சட்டை தைக்கக் கொடுப்பேன். அவரு காந்தியவாதி. நேர்மையானவர். நெடுநெடுவென்று வளர்ந்த ஒற்றை நாடி உடம்பு. பஞ்சுப் பொதிபோன்ற நரைத்த தலை முன்பல் ஒன்றில்லாத நிலையில் கட்டையான அளவான மீசை கொண்டவர். தணலைப் போன்ற சிவந்த நிறமுடையவர்.
என்னை எப்போது பார்த்தாலும் முகம் மலர, ‘‘சார் வாங்க…வாங்க’’ என்று கூறி சிறிய ஸ்டூலை எடுத்துப்போட்டு அமரச் செய்து தைப்பதை விட்டுவிட்டு என்னோடு தனது மனதில் உள்ளதை எல்லாம் பேசுவார்.
நான் இந்த வாரம் போனபோதும் அவ்வாறே செய்தார். ஏழு வருடங்கள் கழித்து நான் அவரைப் பார்க்கிறேன். அந்த டைலர் என்னைப் பார்த்ததும் அமர வைத்துவிட்டு, ‘‘அடேயப்பா ஏழுவருசங்கழிச்சு ஒங்களப் பாக்குறேன். நல்லாருக்கீங்களா? எங்கள மறக்காம நெனப்பு வச்சுப் பாக்குறீங்களே! ரொம்பச் சந்தோசம் சார்!’’ என்று நெகிழ்ந்து போனார்.
நானும்,‘‘அப்பறம் நல்லாருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்,
‘‘எனனத்தங்க சொல்றது. எல்லாரும் நல்லா இருக்காங்க. கஷ்டஜீவனம்தான்’’ என்று அழாத குறையாகக் கூறினார்.
ஏன் என்னாச்சு ஒங்க மகன்களெல்லாம் ஒங்கள நல்லாப் பாத்துக்கறாங்களா? இல்லையா?’’ என்று கேட்டேன்.
அவரோ, ‘‘ஒங்களுக்கு இருக்குற அக்கறை என்னோட பிள்ளைகளுக்கு இல்லீங்களே! எனக்கு எழுபது வயசாயிருச்சு. நாலு பசங்களப் பெத்து ஒரு சந்தோசமுமில்லிங்க’’ என்றார். நான் மௌனமாகக் கேட்க அவர் மேலும் தொடர்ந்தார்.
‘‘மூணு ரூபாச் சம்பளத்துல ஒரு டெக்ஸ்டைல்ஸ்ல டைலரா வேலைக்குச் சேர்ந்தேன். அப்பறம் தனியா ஒரு மெஷின வாங்கிக் கடை போட்டேன். எட்டுப்பேரை நான் ஒழைச்சுத்தான் காப்பாத்த வேண்டிய நெலமை. அப்போது கூட நான் யாருகிட்டேயும் கடன் வாங்குனதே இல்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு. ஆனா இப்போ ஒண்ணும் சொல்றாப்ல இல்லை’’ என்று பெருமூச்செறிந்தார்.
‘‘ஒண்ணுங் கவலப்படாதீங்க…’’ என்று நான் சமாதானம் கூறினேன்.
அவரோ, ‘‘நான் எப்படிங்க கவலப்படாம இருக்க முடியும். இந்த ஊருல தையக்கடை வச்ச முத ஆளு நான்தான். வேற கடையே கெடையாது. ஒரு சட்டை தைச்சா ஒரு ரூபா இன்னக்கி நூறு ரூபா. அன்னைக்கு வேலை அதிகம் பார்ப்பேன். கூலி கொறவு. இன்னிக்கு வேலை இருக்கு. கூலியும் கூட. ஆனா என்னால முந்திபோல வேலை செய்ய முடியல. அனைக்கிக் காலையில எட்டு மணிணில இருந்து ராத்திரி பதினோரு மணி வரைக்கும் ஒக்காந்து வேலை பாப்பேன். ஒரு நாளைக்குப் பத்துச் சட்டை தைச்சுடுவேன். இன்னக்கி முடியுதா? பார்வைக் கோளாறு வேற. ஒரு சட்டைதான் இன்னக்கித் தைக்க முடியுது’’ என்று மன வேதனையுடன் கூறினார்.
நான் அவருக்கு ஆறுதல் கூறுவது போன்று, ‘‘ ஏன் கவலப்படுறீங்க. ஒங்க நாலு பிள்ளைகளும் இருக்கறாங்கல்ல’’ என்றேன்.
‘‘நாலு பிள்ளைங்க இருக்கறானுகன்னுதான் பேச்சு. ஒண்ணுக்கும் பிரயோசனமில்ல. எல்லாம் கெட்ட சகவாசத்துனால கடனாளியா இருக்கிறாங்க’’ என்றார்.
‘‘என்ன இப்படிச் சொல்றீங்க..? அப்படி என்னதான் தப்புப் பண்றாங்க’’ என்று நான் திரும்ப அவரைக் கேட்டேன்.
அவரோ, ஒவ்வொரு மகனைப் பற்றியும் கூற ஆரம்பித்தார்.
‘‘இங்க பாருங்க மூத்தவன் தனபாலு இருக்கறானே அவன் ஈடி போஸ்டுமேனா வேலை பாக்குறான் ஆறாயிரம் வரை சம்பளம். அவன் குடும்பம் நடத்தவே போதல. அதோடு மட்டுமல்லாது கெட்டவங்களோடு சேந்துகிட்டுப் பாழாப்போன குடிக்கு அடிமை ஆயி கடன வச்சிருக்கான். அவனுக்குக் கஷ்டத்தக் கொடுக்கக் கூடாதுன்னு எதையும் அவனுகிட்ட நான் கேக்குறதில்ல. அவன் குடும்பத்த அவன் நல்லபடியாப் பத்துக்கட்டுமுன்னு இருந்துட்டேன்.
ரெண்டாவது பையன் பேங்குல அப்ரசைரா இருக்கிறான். அவனுக்கு மூவாயிரத்தைந்நூறுதான் வர்றதால அவனும் சேர்க்கை சரியில்லாம குடிகாரனா மாறி இப்பத்தான் அதுலருந்து அவன வெளியில மீட்டுக் கொண்டு வந்து ஏங்கூட வச்சிருக்கேன்’’ என்று பெருமூச்சுடன் கூறினார்.
‘‘ஆமா ஒங்க மூணாவது பையன் விஜயகாந்த் எப்படி? அந்தத் தம்பி எப்படி இருக்கறாப்பல’’ என்றேன்.
‘‘அவனா…? அவனுக்குக் கலியாணமாயிருச்சு. அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கெடையாது. அவன் பொண்டாட்டி வந்த மூணுமாசம் எங்க கூட ஒண்ணாத்தான் இருந்தான். அப்பறம் நான் தனிக்குடித்தனம் போகணும்னு சொல்ல்லிட்டா அவன் பொண்டாட்டி. நானும் சரி போங்கன்னு சொல்லிட்டேன். அவனும் பொண்டாட்டி பேச்சைத் தட்ட முடியாம அவளக் கூட்டிக்கிட்டு ஈரோட்டுக்குப் போயி அங்க டைலர் வேலை பார்த்துக்கிட்டு இருக்கான். அவன் ரொம்ப சிரமப்படுறான்னு, அவனாவது நிம்மதியா இருக்கட்டும்னு அவனிடம் எதுவும் நான் கேக்கறது இல்லை’’ என்றார்.
‘‘ஒங்க நாலாவது பையனாவது ஒங்கள நல்லாப் பாத்துக்கிறானா? அவன் ஒழுங்கா இருக்கானா? எப்படி?’’ என்று கேட்டவுடன் அவரோ,
‘‘அதை ஏன் கேக்குறீங்க… நான் அன்னைக்குக் கஷ்டப்பட்டு அவனுங்களப் படிக்க வச்சேன். அவனுக பத்தாவதோடு படிச்சிப்புட்டு நின்னுட்டாங்க. எல்லோருக்கும் என்னோட தொழிலக் கத்துக் கொடுத்தேன். கத்துகிட்டானுக. இவனும் டைலர்தான். நல்லா சம்பாதிக்கிறான். ஆனா சேர்ர கூட்டாளிக சரியில்லை. தப்புப்பண்றான். இவன் குடியோட சூதாடுறான். நான் வாங்கி வந்த வரம் அப்படி…. என்னத்தச் செய்யச் சொல்றீங்க?’’ என்று அழமாட்டாத கொறையாகச் சொன்னார்.
நானோ, ‘‘ஏன் அவன் செய்யிற தப்பத் தட்டிக் கேட்கக் கூடாதா?’’ என்றேன்.
அதற்கு அவர், ‘‘எங்கங்க கேட்குறானுக. நல்லா சம்பாதிக்காறான். கெட்ட சகவாசத்துனால அத்தனையும் இழந்துட்டுக் கடனாளியா இருக்குறான். முன்னெல்லாம் யாரும் தப்பு செஞ்சுட்டா அவனுகளத் திருத்த முடியும். சொன்னாக் கேட்டுக்குவாங்க.. இப்ப முடியுதா…? நீங்க நெனச்சுக்கலாம் எனக்கிட்ட எந்தக் கெட்ட பழக்முமில்லைன்னு.. என்னைப் போல ஸ்மோக் பண்ணினவங்க யாரும் கெடையாது தெரியுங்களா? ஒரு நாளைக்கு அஞ்சு பாக்கெட்டு ஆறுபாக்கெட்டுன்னு சிகரெட் குடிச்சேன்’’ என்றார்.
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘‘என்னங்க வெளையாட்டுக்குத்தானே சொல்றீங்க’’ என்று கேட்டேன்.
அவரோ, ‘‘இல்லீங்க உண்மை…தாங்க. பின்ன எப்படி விட்டேன்னு நெனக்கிறீங்களா? அது ஒரு கதைங்க.. ஒரு நாளு என்னோட பையன் நாலு பேரும் வெளையாண்டுகிட்டு இருந்தாங்க. நான் வெளியில போயிட்டு வீட்டுக்கு வந்து திண்ணையில ஒக்காந்தேன். இந்த நாலவாது பய ஜெயகாந்தன் இருக்கறானே அவன் வீட்டுல இருந்த சிகரெட் டப்பாவிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கைல வச்சு டேய் இப்படித்தாண்டா அப்பா சிகரெட்டத் தட்டித் தட்டி வாயில வப்பாருன்னு சொல்லிக் கொண்டிருந்தான். அதப் பாத்து ஒடனே அன்னிக்கே சிகரெட்டத் தொடலே விட்டுட்டேன். ஆனா இவனுக பிள்ளைங்க முன்னாலேயே தப்புன்னு தெரிஞ்சும் செய்யிறான். இவனையும் திருத்திக் கொண்டாந்துட்டேன். இவன் இப்பத்தான் கடன எல்லாம் அடச்சிகிட்டு இருக்கறான். நான்தான் கஷ்டப்பட்டேன். ஏம்பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டுமின்னு நெனச்சேன். முடியல சார்.. அவனுகளும் கஷ்டப்படறானுக…பார்க்கக் கஷ்டமாகஇருக்கு’’ என்று மனவேதனையுடன் கூறினார்.
‘‘ஆமா எப்படித்தான் நீங்களும் ஒங்க சம்சாரமும் சாப்பிடுறீங்க?’’என்று கேட்டேன்.
‘‘இங்க பாருங்க சார்… என்னோட கண்ணே… இந்தக் கண்ணு பிரசர்ல வெடிச்சுப்போயி பார்வை தெரியாது. இந்த இன்னொரு கண்ணு லேசா பார்வை தெரியுது. கண்ணாடியப் போட்டுக்கிட்டு வேலை செய்யறேன். மாசம் நாலாயிரம் ரூபா சம்பாதிச்சிருவேன். இப்ப இந்தக் கண்ணும் பார்வை மங்குது. ரெண்டு கண்ணுமே இறந்தவங்களோட கண்ணு. எந்த மகராசனோடதோ தெரியலே…இப்பவும் கண்ணுக்குப் பதிஞ்சு வச்சிருக்கேன். கெடச்சா நல்லாயிருக்கும். இந்தக் கண்ணுக்குத் தெனமும் ரெண்டு சொட்டு மருந்து ஊத்தணும். இதுக்குமட்டும் மாசம் இரண்டாயிரம் ரூபா வருது.. பத்தும் பத்தாதுக்குத் திண்டுக்கல்லுல பேங்ல வேலை பாக்குற என்னோட மச்சினன் இரண்டாயிரம் ரூபா மாசாமாசம் அனுப்பிடறாரு. அதுலதான் நாங்க சாப்ட்டுக்கிறோம்’’ என்றார்.
எனக்கு மனம் மிகவும் வேதனை அடைந்து விட்டது. ‘‘ஏங்க இந்த நெலையிலகூட நீங்க ஒழைச்சுச் சாப்பிடுறீங்களே… ஒங்க பையனுகளுக்கிட்ட எதுவும் கேட்கக் கூடாதா?’’ என்று கேட்டேன்.
‘‘பாவம் சார் அவனுக. அவனுகள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான் நான் நெனக்கறேன். அவனுக நல்லாருந்தா எனக்கு மனசுக்குச் சந்தோஷம் சார். ஒவ்வொருத்தனும் கெட்ட பழக்கமில்லாம இருந்தாலே போதும் சார். நல்லா இருப்பாங்க. ஆனா அவங்களால அப்படி இருக்க முடியல சார். என்ன பண்றது. நான் எவ்வளவோ சொல்லிப் பாக்குறேன். ம்ஹும்… அப்பதைக்குக் கேட்கறான். அப்பறம் காத்துல விட்டர்றான். என்னத்தச் செய்யிறது’’ என்றார் கவலையுடன். கண்ணீர்த்துளிகள் அவரது கடைக்கண்ணில் துளிர்த்தது.
பதட்டத்துடன், ‘‘அடடா அழாதீங்க….’’ என்றேன்.
‘‘இல்ல சார் யார்ட்டயாவது என்னோட மனசுல இருக்கறத எறக்கி வச்சிரணும்னு இருக்கேன் சார்… ஐயாயிரம் ருபாயவது நான் கைல வச்சிகணும் சார்’’ என்றார்.
நான் புரியாமல், ‘‘அது என்ன ஐயாயிரம் ருபாய் எதுக்கு?’’ என்றேன்.
அவரோ, ‘‘ஆமா சார்…இன்னும் சரியா ஒன்னரை வருஷம்தான் நான் உசுரோட இருப்பேன். என்னோட ஜாதகத்துல அப்படித்தான் இருக்கு… நான் இறந்து போயிட்டா என்னோட பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாதுங்க சார்… என்னோட ஈமச்செலவுக்காக யாரிட்டயும் போயி அவங்க கடன் வாங்கக் கூடாது….இத்தன வருஷமா யாருக்கிட்டயும் நான் கடன் வாங்கினது கெடையாது…அது மாதிரி என்னோட சாவுக்குப் பெறகும் எனக்காக என்பையன்க கடன் வாங்கக் கூடாது சார்…. அதனாலதான்…’’ என்றார் அவர்.
அவரது உயர்ந்த எண்ணமும் ஒரு தந்தையின் கடமை தவறாத நல்லுள்ளமும் என்னுள்ளத்தையே கரைத்துவிட்டது. நான் அவரைப் பார்த்துக் குரல் கம்ம…,‘‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க…நீங்க நல்லாருப்பீங்க….ஒங்க பையனுகளும் நல்லாருப்பாங்க…’’ என்றேன்.
ரொம்ப நன்றி சார்…ஒங்களடோ வாழ்த்தாவது என்னோட பையனகள நல்லாருக்க வைக்கட்டும் சார்…அடடா… சார் என்னோட கஷ்டத்த ஒங்ககிட்ட சொல்லி…ஒரு டீ கூட ஒங்களுக்கு வாங்கிக் கொடுக்கல பாருங்களே…வாங்க..டீயாவது குடிச்சிட்டுப் போங்க…’’ என்றார்.
‘‘இல்லீங்க ஒங்களப் பாக்கணும்மின்னு ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டே இருந்தேன். இந்தப் பக்கமா ஒரு வேலையா வந்தேன். ஒங்களப் பாத்துட்டேன். அம்மாவையும் ஒங்க பையங்க எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க…ஒங்களப் பாத்ததுல ரொம்பச் சந்தோஷம்…ஒங்க மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்…அப்ப நான் வரட்டுங்களா…’’ என்று அவரை வணங்கி விடை பெற்றேன்.
அவரோ,‘‘ சார் ஒங்க மாதிரி யாரும் காது கொடுத்துக்கூட மற்றவங்க கஷ்டத்தக் கேட்க மாட்டேங்கறாங்க.. ஒலகம் மாறிப்போச்சு சார். என்னால ஒங்களப் பாக்க வரமுடியாது. நீங்களாவது இந்தப் பக்கம் வந்தா எங்களப் பாத்துட்டுப் போங்க…ஒங்க குடும்பத்துல எல்லாரையும் விசாரித்ச்சதாச் சொல்லுங்க..ஒருவாட்டி ஒங்க மனைவியையும் புள்ளைங்களையும் அழைச்சிகிட்டு வாங்க’’ என்று கூறி என்னை வழியனுப்பி வைத்தார்.
இதை என் நண்பனிடம் கூறிவிட்டு, டேய் இப்பச் சொல்லுடா தந்தைங்கறவர் தன்னோட புள்ளங்களுக்கு எள்ளளவு கூட கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாதுன்னு நெனக்கிறாரே அன்பு, தியாகம் என்ற உணர்வு இல்லாமலா?’’ என்றேன்.
கீழே குனிந்திருந்த என் நண்பனின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் கரகரவென வழிந்தோடியது. அவன் அழுதவாறே, ‘‘டேய் என்னை மன்னிச்சுக்கடா. இப்படியொரு தந்தை இருப்பார்ன்னு நெனச்சுக்கூடப் பாக்கல. நான் நீ சொன்னதை ஒத்துக்கறேன். தாய், தந்தை ரெண்டுபேருமே தங்களோட பிள்ளைங்க நல்லாருக்கணுங்கறதுக்காகப் பல தியாகங்களப் பண்றாங்க. ரெண்டு பேரும் இதுல ஒண்ணுதான். இதையெல்லாம் புள்ளங்க நெனச்சுப் பாத்து வாழ்ந்தா எப்படி இருக்கும்’’ என்றான்.
நானோ, ‘‘நீ சொல்றது உண்மைதான்டா. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு வாய்கிழியப் பேசுறாங்க படிச்சவங்க. ஆனா தாய் தகப்பனப் பிச்சைக்காரங்களா நடத்தராங்க. படிச்சும் பதராத்தான் இருக்கறாங்க…என்ன செய்யிறது. படிக்கிறது ஒண்ணு…நடக்கறது ஒண்ணு. அவங்க படிச்சதுக்கும் நடத்தினதுக்கும் சம்பந்தமேயில்லேடா…ம்….சரி…சரி…வா. ரொம்ப நேரமாயிருச்சு…..வா…. வீட்டுக்குப் போவோம்’’ என்று என் நண்பனை அழைத்தேன்.
இருவரும் நடந்து வீட்டிற்கு வந்தோம். வழியில் எதுவும் பேசவில்லை. இருவரது உள்ளத்திலும் கரூரில் இருந்த அந்த டைலர் தந்தைதான் இருந்தார்… வேறொன்றுமில்லை…