அந்த பங்களா வீட்டின் முன் வெள்ளிங்கிரி வாத்தியார் வந்து நின்ற போது அதிகாலை ஐந்து மணி. பக்கத்துத் தெரு கோவிலிலிருந்து சுப்ரபாதம் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. இருட்டு விலகாத அந்தத் தெரு வெறுமையாயிருந்தது. அவ்வப்போது ஒன்றிரண்டு பால்காரர்கள் மட்டும் சைக்கிள் மணியை ஒலித்தபடி கடந்து சென்றனர்.
“கவுன்சிலரய்யா எந்திரிச்சுட்டாரா?” கேட்டிலிருந்த வாட்மேனிடம் சன்னமான குரலில் கேட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார்.
“ம்…ம்…எந்திரிச்சுட்டார்…ஆனா… ஏழு மணிக்கு மேலதான் ஜனங்களைப் பார்ப்பாரு… அப்படிப் போய் ஓரமா நில்லுங்க… அவரு ஆபீஸ் ரூமுக்கு வந்ததும் நானே கூப்புடறேன்!” அந்த நேரத்தில் கூட அவன் வாயில் பீடி.
“ஹூம்… கவுன்சிலர் வீட்டு வாட்ச்மேனுக்குக் கூட மனசுல கலெக்டருன்னு நெனப்பு!” தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து காம்பவுண்ட் சுவரோரம் ஒண்டி நின்று கொண்டார்.
பொழுது ‘பல…பல”வென விடிந்து தெருவில் ஜன நடமாட்டம் ஆரம்பித்ததும், மறுபடியும் வாட்ச்மேனிடம் வந்தார் வாத்தியார், “அய்யா… ஆபீஸ் ரூமுக்கு வந்துட்டாரா?”
“யோவ் பெருசு!.. அதான் சொன்னேனில்ல?.. ஏழு மணிக்கு மேலதான்னு… சும்மா வந்து எதுக்கு தொண தொணக்கறே?” எரிந்து விழுந்தான் வாட்ச்மேன்.
“அப்படியா சார்?... கொஞ்சம் கையைத் தூக்கி மணியைப் பாருங்க சார்!” வாத்தியார் கிண்டலாய்ச் சொல்ல,
வாட்ச் மேன் சட்டென்று மணியைப் பார்த்தான். மணி 7.20 ஆகியிருந்தது.
“அது வந்து… இப்ப வந்துடுவார்… நீங்க இப்படியே நேராப் போயி… அதோ அந்த போர்ட்டிகோவுக்கு இடது பக்கம் ஒரு ரூம் தெரியுது பாருங்க?... அங்க வெய்ட் பண்ணுங்க!”
மெலிதாய்ச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த வாத்தியார், அவன் காட்டிய அறையைத் தொட்டு அதன் வாசலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.
உள்ளே கவுன்சிலர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது இங்கே கேட்டது.
தன்னைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து சென்ற வேலைக்காரனை வலிய அழைத்துச் சிரித்தார் வெள்ளிங்கிரி வாத்தியார். அவனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சிரிப்பை எறிந்து விட்டுச் சென்றான்.
அறைக்குள் சென்ற அந்த வேலைக்காரன் “அய்யா…அந்த வாத்தியார் வந்திருக்காரு?” என்றான் கவுன்சிலரிடம்.
“யாரு?... அந்த ஸ்ட்ரீட் லைட் சிகாமணியா?” கேட்டு விட்டு வாய் விட்டுச் சிரித்தார் கவுன்சிலர்.
தான் குடியிருக்கும் தெருவுக்கு தெரு விளக்கு கோரி தினமும் நடையாய் நடப்பதால் அவருக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார் கவுன்சிலர்.
“ஆமாங்கய்யா… அதே வாத்தியார்தான்!” சொன்ன வேலைக்காரன் முகத்திலும் ஒரு இளக்காரப் புன்னகை.
“நான் இல்லேன்னு சொல்லிடுப்பா!”
“அப்படிச் சொல்ல முடியாதுங்கய்யா… ஏன்னா உங்க பேச்சுக்குரல் அதுவரைக்கு நல்லாவே கேட்குதுங்கய்யா!”
“ப்ச்… அட என்னய்யா?...” சலித்துக் கொண்டவர், “சரி…வரச் சொல்லு!” என்றார்.
“வணக்கம்” தன் கணீர் குரலில் சொல்லியபடியே உள்ளே வந்த வெள்ளிங்கிரியை அமரச் சொன்னார் கவுன்சிலர்.
அமர்ந்தவர், “தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்திருந்தேன்… கிட்டத்தட்ட மூணு மாசமாச்சு… ஒரு பதிலும் இல்லை... கெணத்துல போட்ட கல்லாட்டமிருக்கு!”
“பெரியவரே… நீங்க இன்னும் உங்க காலத்துலேயே இருக்கீங்க!... உங்களுக்குப் பிறகு மனு குடுத்தவங்கெல்லாம் தெரு விளக்கு வாங்கிட்டாங்க தெரியுமா?”
‘தெரியும்… அது தெரிஞ்சுதான் கேக்கறேன்”
“இங்க பாருங்க பெரியவரே!... நானே கவுன்சிலர்ன்னுதான் பேரு!... எனக்கு எந்தப் பவருமே கெடையாது!... நீங்க குடுக்கற மனுவை உங்க சார்புல கொண்டு போய் கார்ப்பரேஷன்ல கொடுக்கறேன்!... அவங்க சாங்ஷன் பண்ணிக் குடுத்தா வாங்கிட்டு வந்து தர்றேன்!... அவ்வளவுதான்!”
“அப்ப மத்தவங்களுக்கு சாங்ஷன் பண்ணின கார்ப்பரேஷன் எங்களுக்கு ஏன் பண்ண மாட்டேங்குது?”
“நீங்க செய்ய வேண்டிய ஃபார்மாலிட்டீஸ் செய்யலை… அதான்!”
“அதென்ன ஃபார்மாலிட்டீஸ்?” அப்பாவியாய்க் கேட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார்.
“என்ன பெரியவரே… தெரியாத மாதிரி கேக்கறீங்க?... சம்திங் வெட்டணும் தலைவா! அப்பத்தான் காரியம் ஆவும்!... ஈஸ்வரன் கோயில் வீதிக்காரங்க வீட்டுக்கு அம்பது… நூறுன்னு வசூல் பண்ணி என் கிட்டக் குடுத்தாங்க!.. அதைக் கொண்டுதான் நான் அவங்களுக்கு சாங்ஷன் வாங்கினேன்!”
“அப்ப லஞ்சம் குடுத்தாத்தான்... காரியமாகும்!... அப்படித்தானே?” வெள்ளிங்கிரி வாத்தியார் முகத்தில் எரிமலை உக்கிரம்.
“அதுல துளிக்கூட சந்தேகமில்லை!”
“தேவைதான்… உனக்கு ஓட்டுப் போட்டு உன்னைய கவுன்சிலராக்கினோம் பாரு!... எங்களுக்கு இதுவும் தேவைதான்… இன்னமும் தேவைதான்!”
“ஹலோ… நல்லாப் புரிஞ்சுக்கங்க… நீங்க எத்தனை மாசம் நடையா நடந்தாலும்... காசு குடுக்காம அங்க காரியம் நடக்காது… வீணா எதுக்கு நேரத்தையும் எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணறீங்க!”
“பாக்கறீங்களா… அஞ்சு பைசா கூடக் குடுக்காம தெரு விளக்கு போட்டுக் காட்டறேன் பாக்கறீங்களா?” சொல்லி விட்டு வேகமாய் எழுந்தார் வெள்ளிங்கிரி வாத்தியார்.
“அடடே… சவாலா?” கவுன்சிலர் முகத்தில் சிரிப்பு.
“அப்படியே வெச்சுக்கங்க!” விருட்டென வெளியேறினார்.
*****
அடுத்த வாரத்தில் ஒரு நாள்,
விஸ்கியின் உபயத்தால் அரை மயக்கத்திலிருந்த கவுன்சிலரைப் போன் தொந்தரவு செய்தது. “ச்சை!” சலித்துக் கொண்டே எழுந்து, “ஹ…ல்…லோ…வ்!” என்றார் குழறலாய்.
மறுமுனையில் மேயர்.
“சார்… வணக்கம் சார்!.. சொல்லுங்க சார்!”
“என்ன ரகுபதி… உங்க வார்டுல என்ன பிரச்சினை?”
“பிரச்சினையா?... ஒண்ணுமில்லையே!”
“என்னய்யா… ஒண்ணுமில்லைன்னு வெகு சாவகாசமாச் சொல்லுறே… அங்க ஒரு பெருசு… நாலஞ்சு நாளா உண்ணாவிரதமிருந்து இப்பவோ… அப்பவோன்னு கெடக்குதாம்”
“அது… வந்து சார்… நான் அஞ்சாறு நாளா ஊர்ல இல்லை… இன்னிக்கு காலைலதான் வந்தேன்… அதான் விபரம் தெரியலை… விசாரிக்கறேன் சார்!”
“நீயொண்ணும் விசாரிக்க வேண்டாம்… நானே விசாரிச்சிட்டேன்… யாரோ ஒரு வாத்தியாராம்… தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்தாராம்… இழுத்தடிச்சிருக்கீங்களாம்… ஏன்?”
“ஆமாம் சார்… வர வேண்டியதெல்லாம் வரலை… அதான்…”
“வேண்டாம்யா… விஷயம் பெரிசாயிருச்சு… பிரஸ்காரங்களும்… லோக்கல் டி.வி.க்காரங்களும்… அந்தாளைப் பத்தி செய்தி போட்டு அவனை ஹீரோவாக்கிட்டாங்க!... ஜனங்களும் ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சுக்கிட்டாங்க… இனி பைசாவை எதிர்பார்த்தா விஷயம் கோட்டை வரை கூடப் போய்டும்... அதனால விட்டுடு!...”
“சார்… கார்ப்பரேஷன்ல… கமிஷனர்கிட்ட….”
“அவங்ககிட்டயெல்லாம்… நான் சொல்லிக்கறேன்… நீ உடனே புறப்பட்டு வா!... நாம ரெண்டு பேருமே போயி அந்தப் பெரிசைப் பார்த்துப் பேசி… உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லிடலாம்!”
“சரி சார்!.. நான் இப்ப வந்துடறேன் சார்!”
மேயரும், கவுன்சிலரும் நேரில் வந்து ஒரே வாரத்தில் தெருவுக்கு விளக்குப் போட்டுக் கொடுப்பதாக உறுதியளித்த பின்னரே தன் உண்ணாவிரதத்தைக் கை விட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார்.
“இது நம்ம நாடுதானா?” என்று எல்லோருமே வியக்கும் வண்ணம் மறுநாளே தெருவிளக்குப் போடும் பணி ஆரம்பமாக, வெள்ளிங்கிரி வாத்தியாரின் புகழ் நாலாப்புறமும் பரவியது. மீடியாக்கள் அவரை எவரெஸ்டில் கொண்டு போய் அமர்த்தி வைத்தன.
*****
வெயிலுக்கு குடை பிடித்தபடி நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் அதிகாரியை கண் ஜாடை காட்டி அழைத்தான் தியாகு. வெள்ளிங்கிரி வாத்தியாரின் ஒரே மகன்.
தயங்கியபடியே வந்த அந்த நபர், “என்ன சார்?..என்ன விஷயம்?”
“அது…வந்து…உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!”
“பரவாயில்லை இங்கியே சொல்லுங்க!”
“வந்து… நம்ப வீட்டு வாசலை ஒட்டி ஒரு தெரு விளக்கு போடணும்… நீங்க மனசு வெச்சா முடியும்!... ஹி…ஹி..” அசிங்கமாய்ச் சிரித்த அவனை அருவருப்பாய்ப் பார்த்த அந்த அதிகாரி.
“எது… உங்க வீடு?” கேட்டார்.
“அதோ… அதுதான்!”
தியாகு காட்டிய வீட்டைத் திரும்பிப் பார்த்த அதிகாரி கண்களால் அளந்து விட்டு, உதட்டைப் பிதுக்கினார். “ம்ஹூம்….அந்த இடத்துல வராது!... கொஞ்சம் தள்ளித்தான் வரும்!...” என்றார்.
“தெரியும் சார்… அது தெரிஞ்சுதான் உங்ககிட்ட வந்திருக்கேன்!... ஹி… ஹி”
“சரி... இப்ப நான் என்ன பண்ணனும்கறே?”
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்”
“புரியலை”
“நீங்க எதையும் கண்டுக்காம… நம்ம வீட்டு வாசல்ல ஒரு விளக்குக் கம்பத்தைப் போடுங்க!... நான் வேணா உங்களைத் தனியாக் கவனிக்கறேன்…. ஹி… ஹி”
அதுவரையில் உறுதியாயிருந்த அந்த அதிகாரி மெல்ல மெல்ல நிறம் மாறத் துவங்கினார்.
“அது… வந்து எனக்கு மேலதிகாரி ஒருத்தர் இருக்கார்… அவரு இன்ஸ்பெக்சன் ரிப்போர்ட்டுல “ஓ.கே!”ன்னு கையெழுத்துப் போடணும்… அதுக்கு அவரையும் சரிக் கட்டணும்!”
“அதென்ன… பண்ணிட்டாப் போச்சு!” வெள்ளிங்கிரி வாத்தியார் மகன் அசிங்கமாய்ச் சிரித்தபடி சொன்னான்
“சரி... சரி... ஆளுங்க பார்க்கறாங்க… நாம பேசிட்டு நிக்கறதைப் பார்த்தா சந்தேகப்படுவாங்க… நீங்க நகருங்க… நான் பார்த்துக்கறேன்!” அந்த அதிகாரி பணத்தாசை வசமாகிச் சொல்ல,
நகர்ந்தான் வெள்ளிங்கிரி வாத்தியார் மகன் தியாகு.
*****
சோடியம் வேப்பர் ஒளியில் அந்தத் தெரு ஜெகஜோதியாகக் காட்சியளித்தது.
லேசான மழைத் தூறலும், இதமான குளிர்காற்றும் அந்த அழகுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்கு,
நடந்து கொண்டிருந்த வெள்ளிங்கிரி ஆசிரியரின் நெஞ்சம் நிறைந்திருந்தது. “ஆஹா… எத்தனை வருஷக் கனவு…இன்னிக்கு நிறைவேறியிருக்கு… ஹூம்… இதை நிறைவேத்தறதுக்குள்ளாரதான் எத்தனை தடைகள்… எத்தனை தடங்கல்கள்!”
தன் வீட்டு வாசலை அடைந்தவர், அங்கு நின்று கொண்டிருந்த மகனிடம், “பாத்தியாடா… நம்ம தெருவை?...”
“ம்..ம்.. பார்த்தேன்...பார்த்தேன்…”
“இந்தத் தெருவுக்கு தெரு விளக்கு கெடைச்சதுகூட எனக்கு பெரிய சந்தோஷமில்லை… ஒரு பைசா கூட லஞ்சம் குடுக்காம இதை வாங்கினேன் பாரு அதுதாண்டா பெரிய சந்தோஷமாயிருக்கு!.. ... ... அதாவது… மக்கள் நெனச்சா… மக்கள் மனசு வெச்சு உறுதியா எதிர்த்து நின்னா இந்த நாட்டுல எல்லா இடத்திலுமே புரையோடிக் கெடக்கற லஞ்சம்ங்கற புற்று நோயைக் கண்டிப்பா அழிச்சிடலாம்னு தெரியுது… என்ன நான் சொல்றது…?” அப்பாவியாய்க் கேட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார்.
தர்ம சங்கடமாய் விழித்த அவர் மகன் தியாகு, “அது…வந்து…ஆமாம்…ஆமாம்ப்பா!” என்றான் திக்கித் திணறி. அப்போது அவன் பார்வை அவனையுமறியாமல் தன் வீட்டு வாசலில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த சோடியம் வேப்பர் மின் விளக்கு அண்ணாந்து பார்த்தது.