Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கால மாற்றம்!

முனைவர். சி. சேதுராமன்


எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டன. நான் பிறந்த இடம் எங்கேயோ கிடக்கின்றது. அது ஒரு குக்கிராமம். நகரத்தின் நிழல் கூட படாத எழில் நிறைந்த அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் தான் நான் பிறந்தேன். ம்…ம்… இன்னக்கி நினைச்சாலும் அந்தக் கிராமத்தைப் பற்றிய பல்வேறு சம்பவங்கள் என் மனதில் என்றும் பசுமையாக நிழலாடிக்கிட்டேதான் இருக்கும். எத்தனை இருந்தாலும் பிறந்த இடத்தை மறந்திட முடியுமா…? அல்லது மறக்கத்தான் இயலுமா…? பிறந்து வளர்ந்து ஓடித்திரிந்த இடம் சொக்கம்னு சொல்வாங்க.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நான் பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் வாய்த்தது. ரொம்ப நாளாப் போகணும் போகணும் என்ற ஆசை என்னோட மனதில் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால் என்னால போக முடியல. எல்லாத்துக்கும் காரணம் இல்லமல் இல்லை. என்னோட வேலை அப்படி. நான் அரசுப் பணியில இருந்ததால விரும்பற போது எங்கும் போக முடியாது. இப்பத்தான் அதற்கு நேரம் வாச்சிருக்குது. இப்ப அரசுப் பணியிலிருந்து நான் ரிடையர்மெண்ட் ஆயிட்டேன். அதனால என்னோட கிராமத்தப் போய்ப் பார்க்கணுங்கற ஆசை இப்ப நிறைவேறப் போகுது.சிங்கம்புணரிக்குப் போற வழியில் உள்ள சிவப்பட்டி என்ற சிவபுரி கிராமத்தில் பிறந்து பள்ளி வாழ்க்கையை அங்கும், கல்லூரி வாழ்க்கையைச் சென்னையிலும் முடித்த எனக்கு வேலை பெங்களுரில் அமைய முப்பது வருஷங்களுக்கு முன் என் சொந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்தேன். அதற்குப் பிறகு கல்யாணம் காட்சியெல்லாம் திண்டிவனத்தில் முடிந்து குடும்பம் மனைவி குழந்தை ஆபீஸ் என்கிற நடைமுறை விஷயங்களில் மூழ்கிப் போனேன். ஆனாலும் அவ்வப்போது அடிமனதில் சொந்த ஊரின் மண்ணைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு ஏற்படும். நானும் அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவேன். ஆனால் ஒரு பெரிய அரசு நிறுவனத்தில் பொறுப்பான பணியில் இருந்த எனக்கு அவ்வளவு எளிதில் சொந்த ஊருக்குப் போவதென்பது சாத்தியப்படவில்லை.

என்னுடைய அந்த ஆசைகளும் முயற்சிகளும் ஏதாவதொரு காரணத்தால் அடிபட்டுப் போய்க் கொண்டேயிருந்தன. அதனால்தான் இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் முதல் வேலையாகப் பிறந்த மண்ணையும் சொந்தக் கிராமத்தின் இனிய மணத்தை முகர்ந்தும் உறவுகளின், உற்றாரின் முகத்தைப் பார்க்கவும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு விட்டேன்.

நான் என் சொந்த ஊருக்குப் போகப் போவதை என் மனைவியிடம் தெரிவித்த போது, அவள், 'ஏங்க என்னையும்தான் ஒங்க கூடக் கூட்டிட்டுப் போங்களேன்" என்றாள். மனைவி பிருந்தாவின் கோரிக்கையை என்னால் தட்ட இயலவில்லை.

எங்களுடைய ஒரே மகன் வினோத் சாப்ட்வேர் இஞ்ஜினியராக பெங்களுருவிலேயே இருந்தான். நாங்களும் அவன் கூடவே இருந்தோம். என் மகனிடம் இதைக் கூறியவுடன் அவனும் மகிழ்ச்சியுடன், ‘‘சரிப்பா.. நீங்க ரெண்டுபேரும் போய்ட்டு வாங்கப்பா..’’ என்று கூறிவிட்டான்.எனக்கு ரெட்டிப்புச் சந்தோஷம். மகிழ்ச்சியில் எனது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

எத்தனை அழகான கிராமம். கஞ்சி முட்டி, நெடுங்காலன், ஒடப்பம்பட்டியான், ஒலக்கையன், கருவாயன், மோடுமுட்டி என என் பால்யகால நண்பர்களின் பட்டப் பெயர்கள் அனைத்தும் என் நினைவுக்கு வந்தன. இந்தப் பட்டப் பெயர்களை வைத்து அழைத்தால்தான் அவர்கள் வருவார்கள். ஊருக்குள் இந்தப் பட்டப் பெயர்தான் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. உண்மையான பெயர்கள் மறந்து போய்விடும். அந்த அளவிற்குப் பட்டப் பெயர்கள் நிலைத்துவிட்டன. என்நினைவில் ஒவ்வொருவருடைய முகமும் நிழலாடியது.

இம்முகங்களுள் உலக்கையன் முகம் நினைவுக்கு வந்தவுடன் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது. நான் என்னை மறந்து சிரித்து விட்டேன். நான் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த என் மனைவி, ‘‘என்னங்க இப்படித் தனியாச் சிரிச்சிக்கிட்டு இருக்கிறீங்க.’’ என்று கேட்டவாறே என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

ஒண்ணுமில்ல பிருந்தா 'என்னோட சின்ன வயசு நண்பர்களைப் பத்தி நெனைச்சிட்டிருந்தேன். அதுல..'ஒலக்கையங்கற ஒருத்தனைப் பத்தி நெனைச்சப்பதான் என்னையே அறியாமச் சிரிச்சுட்டேன் அவனுக்கு இன்னொரு பேர் கூட உண்டு 'நண்டுக்குஞ்சு"ன்னு.." 'என்னது நண்டுக்குஞ்சா?" கேட்டு விட்டு அவளும் சிரித்தாள்.

அவன் ஒரு இடத்துல நிலையா இருக்க மாட்டான். சும்மா சும்மா எங்காவது சுத்தி திரிஞ்சுகிட்டே இருப்பான். ஒரு நாள் நாங்க எல்லோரும் பள்ளிக்குப் போய்க்கிட்டு இருந்தோம்.இவனும் எங்க கூட வந்தான். வந்தவன் திடீரென்று நீங்க போங்கடா நான் இந்தா வாரேன் என்று கூறிவிட்டு எங்கேயோ வேகவேகமாப் போனான். நாங்க பள்ளிக்கூடத்திற்கு வந்துட்டோம். பிரேயர் ஆரம்பிச்சு எல்லோரும் கிளாசுக்குள்ளே ஒக்காத்திருந்தோம். அப்போது அவன அவங்க அப்பாரு அடிச்சு இழுத்துக்கிட்டு வந்தாரு. என்னடான்னு பார்த்தா இவன் எங்ககூட வராம அவங்க பெரியம்மா வீட்டுக்குப்போயி எனக்குப் பயமா இருக்கு. பேயி தொரத்திக்கிட்டு வருது. அதனால நான் பள்ளிக்கொடத்துக்குப் போகமாட்டேன்னு சொல்லிருக்கான். இது தெரிஞ்ச அவனோட அப்பா அவனைப் புடிச்சி இழுத்துக்கிட்டு வந்தாரு. அவனும் அமைதியா கண்ணத் தொடச்சிக்கிட்டு இருந்தான். அவன் எதையோ பார்த்துப் பயந்து போயி இருக்கிறான் என்று எனக்குத் தெரிந்தது. அவனிடம் சென்று நான் என்னடா பண்ணினே என்று கேட்டேன். அதற்கு டேய் ஒண்ணுமில்லேடா. எனக்குப் பள்ளிக்கொடத்துக்கு தனியா வந்தபோது ஏதோ கருப்பா என்னைத் தொரத்துர மாதிரி இருந்துச்சு. அதனாலதான் எங்க பெரியம்மா வீட்டுக்குள்ள போயிப் படுத்துகிட்டேன்.’’ என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சொல்றத நம்புவதா? நம்பாமல் இருப்பதா என்று எனக்குப் புரியவில்லை. எதுக்காக அப்படிச் சொல்கிறான் என்று எனக்கு விளங்காமல் இருந்தது.'அவன் அதோடு மட்டும் நிக்கவில்லை. ஒரு தடவை பலத்த காத்தடிச்சு பள்ளிக் கூடத்து வேப்ப மரத்துல இருந்து ஒரு பெரிய மரப்பல்லி ஒண்ணு மேலேயிருந்து கீழ விழுந்து கெடந்திச்சு அதைக் கவனிக்காம அந்த வழியா நடந்து போன இந்த ஒலக்கையன் தெரியாத்தனமா அதை மிதிச்சுட்டான் . ஐயோ பேயி….பேயின்னு கத்த ஆரம்பிச்சுட்டான். அவன் கத்தின கத்துல பள்ளிக்கூடக் கட்டிடமே அதிர்ந்து போச்சு அவனோட கத்தலை யாராலும் நிறுத்தவே முடியலை கடைசில அவன் வீட்டுக்கு ஆளனுப்பிச்சு அவனோட அப்பா அம்மாவை வரவழைச்சு அவனை ஒப்படைச்சாங்க அடேயப்பா என்னமா அன்னக்கிக் கத்திக்கிட்டு மண்ணுல புரண்டு அவன் ஆர்ப்பாட்டம் பண்ணினான். அதை இப்ப நெனைச்சாலும் எனக்குச் சிரிப்பு நிக்க மாட்டேங்குது.." இதைக்கேட்ட பிருந்தா, ‘அட அவரு இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியா’ என்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

'அதுல இன்னும் ஒரு வேடிக்கை என்னன்னா, அதுக்கப்புறம் ஒரு வாரம் அவன் காய்ச்சல்ல விழுந்து இளைச்சுப் போயி அவன் பள்ளிக்கூடத்துக்கு மறுபடி வந்த போது உண்மையிலேயே அவனைப் பார்க்க பல்லி மாதிரியே ஒட்டிப் போயி இருந்தான் ."

'ஒங்க ஃபிரண்டுசரியான ஆளாத்தான் இருக்காரு போங்க"'இது மட்டுமில்ல பிருந்தா இது மாதிரி நெறைய இருக்கு... அந்த ஒலக்கையன் பயந்து போய் பண்ணின சேட்டை இருக்கே… அதெல்லாம் நெறைய இருக்கு. ஒரு தடவை எங்க பள்ளிக்கூடத்திலிருந்து பக்கத்துல இருந்த சினிமா கொட்டகைக்கு 'அதிசய மிருகங்களும் அற்புதப் பறவைகளு’ங்கற ஒரு மிருகங்கள் பத்தின படத்துக்கு எல்லா ஸ்டூடண்ஸையும் கூட்டிக்கிட்டு போனாங்க அந்தப் படத்துல மான் கூட்டத்துல சிங்கம் ஒண்ணு பூந்து ஒரு மானை மட்டும் துரத்திட்டுப் போய்க் கடிச்சுக் குதறுகிற மாதிரி ஒரு சீன் வந்தது பாரு. அதைப் பாத்துட்டு அந்த ஒலக்கையன் பண்ணின ஆர்ப்பாட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. படத்தையே நிறுத்திட்டு எல்லாரும் வந்து 'பயப்படாதப்பா அது நிஜமில்லை சும்மா படம்" ன்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அமைதியாகாம..'அய்யோ..அந்த மான் பாவம் யாராவது அதைக் காப்பாத்துங்க சிங்கத்தைச் சுடுங்க.." ன்னு கத்திக் கதறி விழுந்து புரண்டு அப்பப்பா பயங்கர கலாட்டாப் பண்ணிட்டான்.."

'ஏங்க அவரு இப்ப இருக்காரா? என்ன வேலை பாத்துக்கிட்டிருக்கார் ஏதாவது அவரைப் பத்தித் தகவல் தெரியுமா?" என்று என்னை விட ஆர்வமாகக் கேட்டாள் பிருந்தா.

'ம்..ஹூம்.. ஒரு தகவலும் இல்லை ஆள் இருக்கானா... இல்லையான்னே தெரியாது ஊருக்குப் போய்த்தான் விசாரிக்கனும் இருந்தா கண்டிப்பா பாத்துப் பேசிட்டுத்தான் வரணும் கரப்பான்பூச்சி பல்லி மரவட்டை இதுகளையெல்லாம் கண்டா பேயிதான் இப்படி பல்வேறு உருவத்துல வந்து நம்மலப் பயமுறுத்துதுன்னு நெனச்சுப் பயந்து அவன் பண்ற அலம்பல் இருக்கே ஒரே சிரிப்பா இருக்கும்.

நாங்கெல்லாம் வேணுமின்னே எங்காவது இருந்து அதுகளைப் பிடிச்சிட்டு வந்து அவன் மேலே போட்டு அவனைப் பயமுறுத்துவோம். ...ம்ம்ம்... அதையெல்லாம் இப்ப நெனச்சுப் பாத்தா எவ்வளவோ சந்தோஷமா இருக்கு?" என்று என் மனைவியிடம் கூறினேன்.

மறுநாள் பஸ்ஸில் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பொன்னமராவதிக்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து விட்டு காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து செகப்பட்டிக்குப் பஸ் பிடித்து ஏறி அமர்ந்தோம்.

ஊருக்குள் பஸ் நுழையும் போதே எனக்குள் ஆச்சரியம் விரிந்தது. 'அடடா நம்ப கிராமமா இது? தார் ரோடும் வாகனப் போக்குவரத்தும் பங்களாக்களும்... அடேங்கப்பா, என்னுடைய கிராமம் ஒரு நகரமாகவே மாறிவிட்டிருந்தது.

செகப்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க இறங்கினோம்.

இருவரும் ஊருக்குள் கிளம்பினோம்.

என்னுடைய நினைவுச் சுவட்டிலிருந்த பழைய ஊருக்கும் எதிரில் தெரியும் மாற்றமடைந்துள்ள புதிய ஊருக்கும் தொடர்பேயில்லாமல் இருந்தது. சில தெருக்களையும் சில இடங்களையும் என்னால் அடையாளமே புரிந்து கொள்ள முடியாமல் போனது. 'அந்தக் காலத்தில் இந்த இடத்தில் என்ன இருந்தது?" யோசித்துப் பார்த்துக் குழம்பினேன்.

'என்னங்க ஒண்ணுமே பேசாம வர்றீங்க. இதுக்குத்தானா இத்தனை வருஷமா காத்திட்டிருந்தீங்க?"

'இல்ல பிருந்தா என்னால நம்பவே முடியலை எனக்கு ஒரே ஆச்சரியமாயிருக்கு எல்லாமே மாறிவிட்டது... ஆளுங்க கூட மாறிட்டாங்க. அப்பவெல்லாம் ஊருக்குள்ளார யாராவது வேத்தாளுங்க வந்தா சம்மந்தம் இருக்கோ இல்லையோ எல்லாரும் விசாரிப்பாங்க. ‘ஆரு வீட்டுக்கு வந்திருக்கீங்க? ஓ அருகங்கலை சோலை வீட்டுக்கா? அவங்க சொந்தக்காரவுகளா நீங்க?"ன்னு பார்க்கறவங்க எல்லாரும் கேப்பாங்க கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க இப்ப என்னடான்னா நானும் நீயும் மணிக் கணக்கா தெருவுல நடந்திட்டிருக்கோம் யாரும் கண்டுக்கற மாதிரியே தெரியலை"

அவள் அமைதியாய்ப் புன்னகைத்தாள்.

வெயில் சுரீரென்று உறைக்க ஒரு கூல் டிரிங்ஸ் கடையில் நின்றோம்.

அந்தக் கடைக்காரரிடம் பழைய ஆட்களின் பெயர்களைச் சொல்லி மெல்ல விசாரித்தேன். நான் குறிப்பிடும் எந்த நபரையுமே அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசியில் அந்த ஒலக்கையனின் நிஜப் பெயரை சிரமப்பட்டு யோசித்து 'கருப்பையான்னு ஒருத்தரு அவங்க அப்பா கூட விறகுக்கடை வெச்சிருந்தாரு"

'இந்த ஊர்ல ஒரே ஒரு விறகுக்கடைதான் இருந்திச்சு அதுவும் இப்ப இல்ல"

'சரிங்க அவங்க வீடு அந்த ஆளுங்க... இருப்பாங்கல்ல?" என்று தொடர்ந்து விடாமல் கேட்டேன்.

'அதோ எதிர்ல தெரியுது பாருங்க அந்தக் கடைல விசாரிங்க அவங்கப்பாதான் இந்த ஊர்ல விறகுக் கடை நடத்திய ஒரே ஆளு"

எனக்குப் பிடி கிடைத்த மாதிரி இருந்தது. எதிர்க் கடைக்கு ஓடினேன்.

அது ஒரு ஆடு, கோழி இறைச்சி விற்கும் கடை.

அங்கிருந்த பையனிடம் கருப்பையாவின் பெயரைச் சொல்லிக் கேட்டேன்.

'அட அந்த அண்ணனா? உள்ளாறதான் வேலை செஞ்சிக்கிட்டு இருக்காரு போய்ப் பாருங்க" என்றான்.

பிருந்தாவை வெளியில் நிற்க வைத்து விட்டு நான் மட்டும் உள்ளே சென்றேன். மனதில் ஒரு இனம் புரியாத கனம் ஏறிக் கொண்டது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. முப்பது வருஷங்களுக்குப் பிறகு என் பால்ய நண்பனைச் சந்திக்கப் போகிறேன் அதுவும் யாரை?... நானும் பிருந்தாவும் ரெண்டு நாளாய்ப் பேசிப் பேசித் தீர்த்த அந்த ஒலக்கையனை. அவன் எப்படி இருப்பான்?

என்னை அடையாளம் தெரிந்து கொள்வானா?இன்னும் அதே பயந்தாங்கொள்ளித் தனத்தொடுதான் இருப்பானா? இல்லை மாறியிருப்பானா? நெஞ்சு 'திக் தி;க்"கென்று அடித்துக் கொள்ள ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து மெல்ல நடந்தேன்.

அங்கே பெரிய கிருதா மற்றும் கொடுவாள் மீசையோடு ஒரு ஆள் ஒரு பெரிய ஆட்டின் மீது அமர்ந்து அதன் கழுத்தை மும்முரமாக அறுத்துக் கொண்டிருக்க தயக்கத்துடன் கேட்டென். 'ஏங்க இங்க கருப்பையாங்கறவுக இருக்காகளா?"

தலையைத் தூக்கி 'ஆமா..நாந்தான் கருப்பையா என்னா வேணும் ஒங்களுக்கு? என்று கர்ண கடூரமான குரலில் கேட்டவரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அதில் பழைய ஒலக்கையனின் சாயல் தெரிய நொந்து போனேன்.

'ஏங்க விறகுக் கடைக்காரர் மகன் கருப்பையா நீங்களா?" நம்ப முடியாமல் மீண்டும் கேட்டேன்.

வேலையை நிறுத்தி விட்டு எழுந்து என் அருகே வந்து நின்ற அந்த ஆஜானுபாகு மனிதரை மேலிருந்து கீழ் வரை பிரமிப்பு நீங்காமல் பார்த்தேன்.

'நீங்க யாரு? அதச் சொல்லுங்க மொதல்ல" கரடுமுரடான குரலில் அவர் கேட்டார்.

'நான் தான் ரெங்கசாமி உங்க கூட கணேசர் செந்தமிழ் தொடக்கப்பள்ளிக் கூடத்துல ஒண்ணாப் படிச்சேன் கணபதி பையன்.."

அவர் விழிகளை விரித்துப் பார்த்து விட்டு 'அடடேடே.ரெங்கசாமியா நீங்க?" என்று காட்டுக் கத்தலாய்க் கேட்டு விட்டு இடியாய்ச் சிரிக்க, நான் துவண்டு போனேன்.

'அட என்னய்யா நல்லா இருக்கியா? டவுனுப் பக்கம் போனவுடனேயே ஊர்ப்பக்கமே வராம இருந்திட்டே… எங்கள எல்லாம் மறந்துட்டே… "முரட்டுப் பாசம் அவனுடைய பேச்சில் எதிரொலித்தது.”

'அப்படியில்லை கருப்பையா நான் பார்த்த வேலை அந்த மாதிரி… ஒங்களையெல்லாம் எப்படி மறக்க முடியும் "

பேசிக் கொண்டிருக்கும் போதே கடையின் முன் புறம் பார்த்த பையன் உள்ளே நுழைந்து 'அண்ணே காதர்பாயி கடைக்கு இருபது கிலோ கோழிக்கறி வேணுமாம்"

'ம்….ம் இருந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுடா " என்று பையனிடம் சொல்லி விட்டு என் பக்கம் திரும்பி 'அப்பறம் ரிடையர்டு ஆயாச்சா இல்ல இன்னும் வேலைல இருக்குறியா?" கேட்டவாறே கையை பின் புறம் செலுத்தி கோழிக் கூண்டுக்குள் நுழைத்து வரிசையாய் இருபது கோழிகளை எடுத்து 'படக்..படக்" கென கழுத்தை திருகி பக்கத்திலிருந்த டிரம்முக்குள் போட்டான் கருப்பையா.

அவன் செயல் எனக்கு அச்சமூட்டியது. பயந்தாங்கொள்ளி ஒலக்கையனா இவன்? ஒரு காலத்துல பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்து போன ஒலக்கையனா இவன்?" என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.

'என்னப்பா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பேசவே மாட்டேங்குறே. "

'இல்ல அது வந்து .நீ ..நீங்க .எப்ப ப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க நான் அப்ப வந்து உங்க கிட்ட சாவகாசமா பேசறேன்.." அட என்னய்யா ரெங்கசாமி… இருய்யா... இன்னக்கி நீ என்னோடதான் தங்குற..’’ என்று ஆணை வேறு இட்டான். என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘‘இல்ல… நான் சாயந்தரமா வர்றேன்… ஆமா சாயந்தரம் எத்தனை மணிக்கு வந்து ஒன்னப் பார்க்கட்டும்’’ என்று சற்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டேன்.

'சாயந்தரம் ஆறு மணிக்கு மேலதான் நான் ஃபிரியா இருப்பேன். அப்ப வர்ரியா பேசலாம்" என்றான் அவன்.

'ம்…ம்... சரி நான் அந்த நேரத்துக்கு வர்றேன்" என்று சொல்லி விட்டு அவசரமாய் வெளியேறி பிருந்தாவையும் அழைத்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.

'ஏங்க என்னாச்சு அந்த ஒலக்கையனப் பாத்தீங்களா?"

'ம்…ம் பாத்தேன்" சுரத்தின்றிச் சொன்னேன்.

'ஏங்க? ஒரு மாதிரியா சொல்றீங்க. அவரு சரியா பேசலையா?"

இல்ல பிருந்தா. மாலையில வந்து பார்ப்போம் மழுப்பலாகப் பதில் கூறிவிட்டு நடந்தேன். என் மனைவியும் என்னுடன் நடந்தாள்.எனக்குள் இன்னொரு ஆசை. நெடுங்காலன்னு என்னோட நண்பன் ஒருத்தன் எங்க ஊருல இருந்தான். அவன் நேர்மையானவன். படிக்கும் போதே நல்லவன்னு பேரெடுத்தான். வந்ததுதான் வந்தோம் அவனையும் தேடிப் பார்த்துவிட்டுப் போவோம் என்று நினைத்துக் கொண்டு அவனது அப்பா பெயரைச் சொல்லி அவனைப் பற்றிப் பக்கத்துக் கடையில் விசாரித்தேன்.

பத்துக் கடை தள்ளி வெளிநாட்டுப் பொருள்கள் விற்கும் கடை வைத்திருப்பவன் அவன் தான் எனத் தெரிந்து கொண்டு ஆவலுடன் பார்க்கச் சென்றேன். அவன் கடையில் இருந்தான். தலையெல்லாம் நரைத்துப் போய் தொந்தியும் தொப்பையுமாக ஆளே மாறிப் போயிருந்தான். என்னைப் பார்த்தவுடன் என்ன சார் என்ன வேணும்? என்று அடையாளம் தெரியாமல் கேட்டான்.

நான் சமாளித்துக் கொண்டு… என்னைத் தெரியலயா..? நான்தான் ரெங்கசாமி ஒங்ககூட ஒண்ணாப் படிச்சவன் என்றேன். அவன் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘‘அடடா…நம்ம ரெங்கசாமி.. வாப்பா.. கோவுச்சுக்காதேப்பா… நல்லா இருக்கியா... அது யாரு ஒங்கூட... ஒன்னோட மனைவியா… வாங்க உள்ளாற வாங்க’’ என்று பேச்சில் அன்பொழுக வரவேற்று கடைக்குள் உட்கார வைத்தான்.

எனக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பரஸ்பரம் பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொண்டோம். அப்போது ஒருவர் ஒரு பொருளைக் கேட்டுக் கடைக்கு வந்தார். என்னிடம் இதோ வர்றேன் எனக் கூறிவிட்டு வந்த வாடிக்கையாளரைக் கவனிக்க ஆரம்பித்தான் நெடுங்காலன் என்ற பட்டப் பெயர் கொண்ட கண்ணன்.

நான் அவன் வியாபாரம் செய்யும் விதத்தைக் கவனித்துக் கொண்டே இருந்தேன்.

வந்தவர் ஒரு சார்ஜர் லைட்டைக் கேட்டார். அது பெங்களுரில் தெருவோரக் கடையில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கும். ஆனால் அதனை கண்ணன் அதிகமான விலை வைத்துக் கூறினான். வந்தவரோ, ‘‘ஐந்நூறு ரூபாய்க்குத் தாங்க..’’ என்றார். கண்ணனோ, ‘‘இல்ல சார் அது கட்டுபடியாகாது... ஆயிரம் ரூபாய்ப் பொருளை ஒங்களுக்காக நான் எண்ணூறு ரூபாய்க்குத் தர்ரேன்…’’என்றான்.

வந்தவர், ‘‘இங்க பாருங்க இருநூறு சேர்த்து ஏழுநூறு தர்ரேன் தாங்க’’ என்றார். கண்ணன், ‘‘இல்ல சார்! மேல அம்பது சேர்த்துக் கொடுங்க’’ என்று கூறி அந்தச் சார்ஜர் லைட்டை பேக்கிங் செய்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

அந்த லைட்டின் விலை வெறும் முன்னூறு ரூபாய்தான். இவன் அநியாயமாக விலையைக் கூறி அந்த வாடிக்கையாளரை ஏமாற்றிப் பணம் வாங்கி விட்டான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எப்படி நேர்மையா இருந்தவன் இப்படி கேவலமா பொய் சொல்லி ஒருத்தர மனசார ஏமாத்திப் பிழைக்கக் கற்றுக் கொண்டான்… என் மனம் ஒரு நிலையில் இல்லை. ச்சே ஏன் இவனப் பார்க்க வந்தோம் என்றிருந்தது எனக்கு. அவன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, ‘‘என்ன சாப்பிடுறீங்க..’’ என்று கேட்டான்.

எனக்கு ஒண்ணும் வேண்டாம்டா... ஏன்டா நான் ஒண்ணு கேக்குறேன்… தப்பா நெனச்சிக்க மாட்டியே…’’ என்று பேச்சை ஆரம்பித்தேன். அவனும், ‘‘டேய் ரெங்கா என்னவேணுமின்னாலும் கேளுடா நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. ’’ என்றான்.

‘‘ஏன்டா இந்த சார்ஜர் முன்னூறு ரூபாய்தானடா போகும் நீ அநியாயமா வெலையச் சொல்லி ஒருத்தர ஏமாத்திட்டியோடா…இது நல்லாருக்காடா?’’ என்றேன்.

அவன், ‘‘ஹ.ஹ.ஹ.ஹ… என்று சிரித்துவிட்டு, அடப்போடா நானும் நேர்மையாத்தான் இருந்தேன். முடியல. வியாபாரத்தில இந்த மாதிரியெல்லாம் நேர்மையப் பார்க்க முடியாது. ஒலகம் புரியாமப் பேசறயே.. டேய் இங்க நேர்மையப் பத்திப் பேசுனா நம்மல ஓட்டாண்டி ஆக்கிடுவாங்க தெரியுமா..’’என்று கூறிவிட்டு சரிசரி, நீ இன்னக்கி ஏங்கூட சாப்பிடற… சாப்பாடு வாங்கிவரச் சொல்றேன்…’’ என்று கூறிக் கொண்டே கடைப் பையனைப் பார்த்து, ‘‘டேய் தம்பி பக்கத்து ஹோட்டல்ல நான் வாங்கி வரச் சொன்னேன்னு மூணு சாப்பாடு நான்வெஜ்ல உள்ள எல்லாத்திலேயேயும் ஒவ்வொண்ணு வச்சி வாங்கிட்டுவாடா..’’ என்று கூறினான்.

நான் மனசு சரியில்லாமல் வேகமாக எழுந்து, ‘‘இல்ல கண்ணா… கொஞ்ச நேரத்திற்கு முன்னால தான் சாப்பிட்டோம்…. சாயந்தரம் வந்து இரவு ஒன்னோட சாப்பிடுறோம். நீ யாவாரத்தக் கவனி… ஒன்னோட நெறையப் பேச வேண்டியிருக்கு….’’ என்று கூறிவிட்டு வேகமாக எழுந்து வெளியில் வந்தேன்.

என் நண்பனும், ‘‘டேய் சீக்கிரமா சாயந்தரம் கண்டிப்பா வரணும்… என்ன மறந்துடாதே’’ என்று கூறி என்னை வழியனுப்பினான்.

நான் வழிநெடுக எதுவும் பேசாது மௌனமாக வந்து கொண்டே இருந்தேன்.

என் மனைவி, ‘‘என்னங்க நீங்க பாட்டுக்கு விருட்டுன்னு எந்திரிச்சி வந்துட்டீங்க… எவ்வளவு நாள்கழிச்சி இவங்கள எல்லாம் பாக்கணுமின்னு வந்திருக்கோம்…’’ என்றாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல் நீண்ட நேரம் மௌனம் சாதித்து விட்டு கடைசியில் 'பிருந்தா நமக்குள்ளார புதைஞ்சு கிடக்குற பழைய நினைவுகளை, பழைய ஊரை, பழைய ஆளுகளை, அப்படியே உள்ளுக்குள்ளாரவே பத்திரமா அடைகாத்து வெச்சுக்கிட்டு அப்பப்ப அதுகளை ஞாபகப்படுத்திப் பார்த்து ரசிக்கலாமே தவிர, அவற்றை நேரில் பார்க்கனும்னு ஆசைப்படக் கூடாது அப்படி ஆசைப் பட்டா அந்தப் பழைய நினைவுகள் என்கிற மாபெரும் பொக்கிஷத்தை நாம் இழக்க வேண்டி வரும்"

'என்னங்க சொல்றீங்க... ? எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது? "

மெதுவாய்ச் சிரித்து விட்டு 'ஒனக்கு வௌக்கமா சொல்றேன். இளமையில உயிரக் கொல்லக் கூடாதுன்னு சொன்னவன் இப்ப உயிர்களைக் கொன்னு எடுத்துக்கிட்டு இருக்கான்… உண்மையே பேசணும் நேர்மையா இருக்கனும்னு சொன்னவன்… பொய் சொல்லி ஏமாத்திக்கிட்டு நேர்மையில்லாம இருக்கிறான்... என்னால அதச் ஜீரணிக்க முடியல. மனிதர்கள் கால வெள்ளத்துல திசைமாறிய பறவைகளா எப்படியெல்லாம் மாறிப் போயிடறாங்க... காலப் போக்கில தடம் மாறிப் போயிட்டாங்களே… இவனுகள காலம் மாத்துச்சா… இல்ல இந்தச் சமுதாயம் மாத்துச்சா… இல்ல… இவனுகளாகவே மாறிட்டானுகளா…? எனக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது " என்றேன். என் மனைவி ஏதும் புரியாமல் என்னை விநோதமாய்ப் பார்க்க,

நான் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு உள்ளுக்குள் குமுறிக் குமுறி அழுதேன். எனது மற்ற நண்பர்களைப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை. என்னென்னவெல்லாம் நினைத்து வந்தேனோ அவை தலைகீழாக இருந்ததைப் பார்த்தவுடன் என் மனதில் முள்தைத்ததைப் போன்று உணர்ந்தேன். எனக்கு ஏனென்று தெரியவில்லை, எதற்கென்றும் புரியவில்லை. ஆனால் எதையோ இழந்து விட்ட உணர்வு என்னையும் மீறி எனக்குள் வியாபித்திருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p174.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License