என்னங்க அப்படி பாக்குறீங்க? இவன் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் இல்லைன்னா? உங்க வீட்டில் ஒரே நாள்ல பிறப்பும் இறப்பும் நடந்திருக்கா? அப்படி ஒரு நிலைமையை நினைச்சாவது பாத்திருக்கீங்களா?
புதுசா பிறந்த வரவை நினைச்சுப் பூரிப்பீங்களா? இல்லை பிரிந்த உறவை நினைச்சு அழுவீங்களா? என்னடா தெரியாமல் இவன் பக்கத்துல உட்காந்துட்டோமேன்னு வருத்தப்படுறீங்களா? காலையில இந்த பஸ்ல தான் ஆரம்பமாச்சு என் பயணம்.
என் பேரு சிவசுப்ரமணியம். 'சிவா'னு கூப்பிடுவாங்க. சின்ன குடும்பம். அம்மா, அப்பா, ஒரு அக்கா. அப்பா கவுன்சிலர், அம்மா ஹவுஸ் வைஃப். அக்காவுக்கு இன்னிக்கு தான் ஆண் குழந்தை பிறந்திருக்கு. அப்பா தான் எல்லாமே வீட்டுல. ஆனா ஏனோ அம்மா சில சமயம் ஒரு முடிவு எடுத்துட்டா அப்பா அமைதியா போய்டுவார். அஞ்சு வயசிருக்கும் போது இதப்பத்தி அம்மா கிட்ட கேட்ட நியாபகம் இருக்கு. அதுக்கு அவங்க "குற்ற உணர்ச்சி" அப்டின்னு பதில் குடுத்தாங்க. அதுக்கு அர்த்தம் அந்த வயசுல எனக்கு புரியலைங்க. அப்பா கொஞ்சம் கடுமையாத்தான் நடந்துக்குவார். அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதா அப்பா சொல்லுவார். என் தாத்தா பெரிய பணக்காரர். அதனால என் அப்பா அவர் பேரை சொல்லியே நிறைய காரியம் சாதிச்சதா சொல்லுவாங்க அம்மா. 40 வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல 'சண்டியர்'னு பேர் எடுத்தவர் எங்க அப்பா. நிறைய பேர் என்னை இன்னைக்கு தான் முதல் தடவை பாக்குறாங்க இந்த ஊர்ல. அவரை பத்தி குறைஞ்சது ஒரு மணி நேரம் பேசுனாங்க எல்லாரும்....
ஓ! இந்த ஊருக்கு வந்த விஷயத்தை சொல்லலை இல்லை. அக்காவுக்கு பிரசவம் ஆச்சுன்னு சொன்னேன் இல்லை. குழந்தை பிறக்குற நேரத்துல எங்க குல தெய்வம் கோயிலில் அர்ச்சனை பண்ணனும்னு சொல்லிட்டாங்க அம்மா. அதான் 150 கிலோமீட்டர் தள்ளி இருக்குற இந்த ஊருக்கு வந்தேன். ஒரே நாள்ல உங்க வாழ்க்கையில் பல எதிர்பாராத மாறுதல் நடந்திருக்கா? எனக்கு இன்னைக்கு அப்படி ஒரு நாள் தான். காலையில் இதே பஸ் ஏறுனேன் எங்க ஊர்ல.
*******
"ஏன் சார் பஸ்ஸை எப்போ எடுப்பீங்க?"
"உட்காருப்பா எல்லாத்துக்கும் டைம் இருக்கு."
"தம்பி."
"என்னங்க?"
"உட்காரலாமா?"
"ம்"
"என்னய்யா முகம் வாட்டமா இருக்கு?"
"விகடன் கிடைக்கலை. தொடர்ந்து ஆறு வருஷமா படிக்கிறேன். ஒரு வாரம் கூட தவறினது இல்லைங்க. போன ஆறு நாளும் அலைச்சல். நிக்கக் கூட நேரம் இல்லை. இன்னைக்காவது வாங்கலாம்னு பாத்தா கிடைக்கலை. அதான்"
"சரி விடுங்க தம்பி. வழி பூரா பேசிக்கிட்டே பூட்டா ஒன்னியும் தெரியாது. என்ன கோயிலுக்கா?"
"ஆமாங்க. அக்காவுக்கு பிரசவம். குழந்தை பிறக்குற நேரத்துல பூஜை பண்ணனும்னு அம்மா என்னை அனுப்பிட்டாங்க."
"நல்ல விசயம் தம்பி. எல்லாம் நல்ல படியா நடக்கும்."
"நல்லதுங்க."
"நானும் கோயிலுக்குத்தேன் போறேன். கோயில் இருக்கே அதுக்கு தெக்கால 8 கல்லு நடந்தா என்னோட ஊரு தம்பி. 35 வருசமாச்சு சொந்த ஊரவுட்டு வந்து. ஆனால் இந்த கோயிலுக்கு மட்டும் எல்லா வருசமும் இந்த நாள் போயி மஞ்சுளா பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடுவேன்."
"ஓ!"
"மஞ்சுளா ஆரு தெரியுமுல்ல? என் உசுரு!"
"ம்"
"தம்பி பேரென்ன?"
"சிவா... ... ... சிவசுப்ரமணியம்"
"காதலிச்சிருக்கியா?"
"இல்லங்கய்யா"
"காதலிக்கணும்... எல்லாரும் காதலிக்கணும்."
"நீங்க... ... ...?"
"அதான் சொன்னேன்ல. மஞ்சுளா... இப்போ அவ எங்க இருக்காளோ? எப்படி இருக்காளோ...?"
"அப்டின்னா?"
"தெரியலை தம்பி. தகவல் இல்லை. கடசியா அவ வாக்கப்பட்டு போனப்போ பாத்தது. அதுக்கப்புறம் நானும் அந்த ஊர்ல இல்லை."
"சாரிங்க..."
"ம்..."
"அது வந்து...உங்களுக்காக வருத்தப்பட்டேங்க."
"அட வுடுங்க தம்பி. இப்போ வருத்தப்பட்டு என்ன ஆவப்போவுது. எல்லாம் தலை எழுத்துப்படிதான் நடக்கும்."
"அப்படி என்ன தான்யா ஆச்சு? நீங்க தப்பா நினைக்கலைன்னா..."
"இதுல தப்பா நெனக்க என்ன தம்பி இருக்கு ? எங்க அய்யா விவசாயி. நானும் எங்க அய்யாவும் இப்போ போறோமே அந்த ஊருக்கு தான் வேலைக்கு போவோம். அந்த ஊரு பொண்ணு தான் மஞ்சுளா. லட்சணமான பொண்ணு. மகாலட்சுமி மாதிரி இருப்பா... பாத்ததும் புடிச்சி போச்சு மனசுக்கு. ஆனா அந்த காலத்து காதலுக்கு ஒங்கள மாதிரி கையால காதலிக்கத் தெரியாது தம்பி. ஒரே ஒருக்கா தான் அவ மேல கை பட்டுச்சு. கண்ணுல தண்ணி வெச்சுட்டா. அதுக்கே அவ கண்ணாடி வளையல் ஒடஞ்சு போச்சு. அதுக்கு எனக்கு நானே தண்டனை குடுத்துக்கிட்டேன். தா தெரியுது பாத்தியா கன்னத்துல நீட்டா ஒரு தழும்பு இது அவ வளையலால நானே ஆழமா கிழிச்சிக்கிட்டேன். மிஞ்சினது வெறும் தழும்பு தான் தம்பி. அப்போ கிழிச்சதை விட அவ இல்லாத இந்த வாழ்க்கை... இப்போ வாழும் போது தான்... இந்த தழும்பு அடிக்கடி வலிக்குது."
"வண்டி கொஞ்ச நேரம் நிக்கும் போய் சாப்பாடு சாப்பிடுறவங்க சீக்கிரம் சாப்டு வந்திடுங்க."
"சாப்புடுறீயளா தம்பி?"
"இல்லங்க எனக்குப் பசிக்கலை..."
"அக்காளுக்கு இப்படி இருக்கும் போது எங்க சோறு எறங்கும்? நமக்கு புடிச்சவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா மனசு கெடந்து அடிச்சிக்கும். கெழவனுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்னு நெனக்காத தம்பி. மஞ்சுளாக்கு ஒரு நோவோ, பரிட்சையோ வந்தா எனக்கு எந்த வேலையும் ஓடாது. காதல் இப்போதான் பழகிப் போன வார்த்தை மாதிரி தெரியுது தம்பி. என் காலத்துக் காதல் அவ கோலத்துல வெச்ச பூசணிப் பூவை ஆருக்கும் தெரியாம வூட்டுக்கு எடுத்துட்டு போறது... அய்யனார் கோவிலோரமா இருக்க கள்ளிச்செடில முள்ளால ரெண்டு பேரு பேரையும் எழுதுறது... இப்படி சின்ன சின்னதாத்தான் வெளிப்படுத்துவோம். இதெல்லாம் காதலான்னு நெனப்பயே. அப்போவெல்லாம் காதல் மனசுல சாஸ்தி ஆனா வெளியில சொன்னது கம்மி. இப்போ மனசுக்குள்ள இருக்கான்னு கூட தெரியலை... ஆனா ஒன்ன ஒன்னு காதலிக்கறதா பெருசா சொல்லிக்கிட்டு திரியுதுவோ."
"ஆமாங்க...!"
"காதல் ரொம்ப கொடூரமானது தம்பி. நல்லதும் பண்ணும் கெட்டதும் பண்ணும். மொத ரெண்டு வருசம் காதல்ல ரொம்ப சந்தோசமா போச்சு தம்பி. எங்க அய்யாவுக்கு நானும் நாலு பேரு மதிக்கிறா மாதிரி நல்ல நெலமைக்கு வரணும்னு ஆசை. ஆனா எல்லாம் விதிப்படி தான நடக்கும். அந்த சம்பவத்துக்கு அப்புறம் ஊர்ல இருக்க எனக்கு பிடிக்கலைப்பா. ஏதோ மனசு போன போக்குல வாழ்ந்து இப்போ மேஸ்திரியா இருக்கேன். என்னப்பா பதிலே காணோம். தொந்தரவா இருக்கா?"
"அப்படி இல்லங்கய்யா. பெரியவங்க நீங்க... எப்படி உங்களுக்கு ஆறுதல் சொல்றதுன்னு எனக்குத் தெரியலைங்க."
"இனிமே ஆறுதல் சொல்லி என்ன ஆவப்போவுது தம்பி?"
"ஏன் அய்யா எல்லாமே அவங்களுக்கு தானா?"
"ஆமாம். பின்ன? இந்த பொம்பளை சாதி ரொம்ப பாவம் தம்பி. பொறந்துல இருந்து பெத்தவங்களுக்காக வாழறாங்க... அப்புறம் கட்டிக்கிட்டவனுக்காக வாழறாங்க... மஞ்சுளாவும் அப்படித்தான் போயிட்டா... அவளுக்காக யார் வாழ்றது? அதான் நான்... அவளுக்காக வாழ்ந்துட்டு இருக்கேன். ஏன் தம்பி இது காதல் இல்லையா?"
"அப்போ உங்களுக்காக எப்போ வாழப் போறீங்க... ?"
"எனக்காகவா? வாழ்வேன் தம்பி... என் காதலுக்கும் வாழ்வுக்கும் இப்போ சம்பந்தம் இல்லை. என் மனசுக்கு அவ போதும்பா. இப்போ... போய்கிட்டு இருக்கோமே இதான் என் ஊரு. பக்கத்து ஊருல தான் கோயில் இருக்கு... அவளோட ஊருக்குள்ள இன்னும் 15 நிமிசத்துல போயிடுவோம். அந்தா தெரியுது பாரு ஒரு ஓட்டு வூடு அங்கதான் நான் பொறந்தேன்."
*******
"அய்யா... இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணும்?"
"வந்தாச்சுப்பா. ஒரு பல்லாங்கு தூரம் தான்."
"கோயில் தொறந்திருக்குமா?"
"நாலு மணி ஆவும் தொரக்க. வெளிய வேப்பமரம் ஒன்னு இருக்கும் அங்க படுத்தா நல்லா இருக்கும்... அங்க பாரு நெறைய பேரு ஒக்காந்திருக்காங்களே அது தான்... கோவில்!. நாமலும் அங்க போய் படுத்திருந்து கோயில் தொரந்த உடனே போய் தரிசனம் பண்ணிட்டுப் போவோம்."
"நீங்க விட்டுக் கொடுத்திருக்க கூடாதுங்க."
"தம்பி எதை சொல்றீங்க?"
"அதான். உங்க... காதலை..."
"ஓ! அதைச் சொல்றீங்களா? சில விசயம் கைய விட்டு போகணும்னு இருந்தா யாராலயும் எதுவும் செய்ய முடியாதுப்பா. அந்த ஊரு பெரிய எடத்து பையனுக்கும் மஞ்சுளா மேல ஆசை. அங்க ரெண்டு பேரோடக் காதலைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும் நடுவுல வந்தான். அவ சம்மதிக்கலைன்னு தெரிஞ்சும் ஆளுங்களை விட்டு பஞ்சாயத்தை கூட்டிட்டான். அவன் மஞ்சுளாவை கெடுத்ததா ப்ராது குடுத்தாங்க. அவ இல்லைன்னு அழுததை ஊரும் நம்பலை... பெத்தவங்களும் நம்பலை... பணமிருக்கிறவன் சொல்றதை அப்படியே நம்பிட்டாங்க... மஞ்சுளாவை அவனுக்கே கட்டி வெச்சிட்டாங்க... அன்னைக்கு அவளைப் பாத்ததுதான். எப்படி இருக்கான்னு கூட தெரியலை. எவ்ளோவோ சம்பாதிக்கணும்னு நெனச்சேன் தம்பி. ஆனா இப்போ என்னிடம் இருக்கறது ஒரு ஓட்டு வூடுதான். பொஞ்சாதி, புள்ள குட்டி இல்லை. சொத்துன்னும் சொந்தம்னு சொல்லிக்க ரெண்டு தென்னமரம். இதா பாத்தியா இந்த தேங்கா. இது எம்மரத்து கா தான். கா பறிக்கவே மாட்டேன்யா. இது மட்டும் மஞ்சுளாக்காக... இந்த மரமும் எம் மவன் மாதிரி தான். கா பறிச்சிட்டா கோச்சிப்பான் ராவுல காத்தடிக்க மாட்டான். அப்புறமா கூட உக்காந்து சமாதானப்படுத்துவேன். 'அம்மாக்காகதானடா' -ன்னு சொன்னாக் கேட்டுப்பான். நல்ல புள்ள. வருசா வருசம் இப்படி ஒரு தேங்கா அர்ச்சனை பண்ணுவேன் அவ பேருக்கு. இன்னிக்கு அவ பொறந்த நாள் தம்பி. மஞ்சுளா, திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. அய்யா நா சத்த இப்படி கண்ணை மூடுறேன். கோயில் நடை தொறந்தா கொஞ்சம் எழுப்பி விடுங்க தம்பி."
*******
"ஹலோ! சொல்லுங்கப்பா.."
"டேய் அக்காவுக்கு ஆம்பளை புள்ள பொறந்திருக்குடா. உங்க அம்மா அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு சீக்கிரம் வர சொன்னா. என்ன?"
"சரிப்பா" என்று செல்போனை சட்டைப்பையில் வைத்தேன்
"அய்யா... அய்யா..."
என் குரலுக்கு அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை.
இதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர் "சார். அவருகிட்ட ரொம்ப நேரமா அசைவே தெரியல. கொஞ்சம் தள்ளுங்க என்னன்னு பாப்போம்..."
"என்னங்க ஆச்சு?"
"தெரிஞ்சவரா சார்?"
"ஆமாம்."
"தவறிட்டாருங்க. சொல்ல வேண்டியவங்களுக்கு தகவல் தந்திடுங்க. கோயில் பக்கத்துல உசுரு போயிருக்கு நல்ல சாவு தான்."
"நீங்க இந்த ஊரா?"
"ஏன் கேக்குறீங்க?"
"நான் ராசமாணிக்கம் பேரன்."
"எந்த ராசமாணிக்கம்?"
"பழைய பஞ்சாயத்து போர்டு தலைவரு..."
"அடடே தெரியாம போச்சே தம்பி. நல்லா இருக்கீயளா? முன்னாடியே வரதா சொல்லி இருக்கலாமே! ஏதாவது ஏற்பாடு பண்ணி இருப்போமே."
"அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. எனக்கு ஒரு உதவி பண்ணனுமே!"
"சொல்லுங்க சார் செஞ்சிடுவோம்..."
"இந்தாங்க தேங்கா. மஞ்சுளா, திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. ஒரு அர்ச்சனை மட்டும் பண்ணிடுங்க."
"இது எதுக்கு சார். நாங்களே ஒரு ஸ்பெஷல் அர்ச்சனை பண்ணிடுறோம்."
"இல்லங்க. இந்த தேங்காய் மட்டும் உடச்சு அர்ச்சனை பண்ணிடுங்க போதும்."
"சரிங்க சார். இவ்ளோ தூரம் வந்துட்டு சாமி பாக்காம போறீங்களே!"
"இல்லங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. வரேங்க."
*******
பெரியவரை அவரு ஊருக்கு கொண்டு போய் எல்லா காரியமும் பண்ணிட்டு வரேங்க. அவர் கடைசியா கண்ணை மூடும் போது வந்த கண்ணீர் அந்த தழும்புல தேங்கி நின்னுச்சு. எதுக்காக அழுதிருப்பார்? ஒரு வேளை அர்ச்சனை பண்ண முடியாம தான் சாக போறதை அவர் உணர்ந்திருப்பாரா? இல்லை தன்னோட சோகத்தை ரொம்ப நாள் கழிச்சு காது குடுத்து கேக்க ஒரு ஜீவன் கிடைச்சதை நினைச்சு சந்தோஷத்துல கண்ணு கலங்கி இருந்திருப்பாரா? எதுவா இருந்தா என்னங்க? அந்த கண்ணீர் அந்த தழும்பை ஆத்திடும். என்னோட அம்மா மேல சாகுற வரைக்கும் உசுரா இருந்த மனுசனை அப்பா ஸ்தானத்துல நினைச்சு எல்லாம் செஞ்சுட்டு வந்திருக்கேனே நான் பண்ணது தப்பா...? நீங்கதாங்க முடிவைச் சொல்லனும் ...