அன்று பள்ளி விடுமுறை என்பதால் மாலதி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இரண்டரை வயதுதான் நிறைந்திருந்தது.
அவளது பெற்றோர் அவளைத் தற்போதுதான் ஒரு புகழ்பெற்ற கான்ட்வென்ட் பள்ளியில் சேர்த்திருந்தனர்.
மாலதி எப்போதும் துறுதுறுவென்று இருப்பாள். எதைப் பற்றியாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு யாரும் பதில் கூறிவிட முடியாது. அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவளது அப்பத்தாதான் ஏதாவதொரு பதிலைக் கூறிச் சமாளிப்பாள். இருப்பினும் அதனைச் சரியென்று மாலதி ஏற்றுக் கொள்ள மாட்டாள். அவளுக்குப் அப்பத்தாவின் மீது அளவுகடந்த பாசம். எப்போதும் அப்பத்தாவைச் சுற்றிச் சுற்றியே வந்து விளையாடுவாள். அவளது அப்பத்தாவும் அவளுடன் சிறுகுழந்தை போன்று விளையாடுவாள். அன்றும் எப்போதும் போல் மாலதி விளையாடிக் கொண்டிருந்தாள்.
ஏனோ அன்று வீட்டில் மாலதியின் அப்பா முரளியும், அம்மா ஜானகியும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அப்பா யாருக்கோ போன் செய்வதும் பின்னர் ஜானகியிடம் விவரம் கேட்பதுமாக இருந்தார். இதெல்லாம் கவனித்தும் கவனியாதும் மாலதி விளையாட்டில் மும்மரமாக இருந்தாள்.
பகல் நேரத் தூக்கத்துக்குப் பின் எழுந்த முரளி, நேராகச் சமையல்கட்டுக்கு வந்தான். மனைவி ஜானகி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.
'என்ன ஜானகி! எல்லாம் ரெடியா?' என்று கேட்டான்.
'நாங்க எல்லோரும் ரெடிங்க. நீங்க தான்... இன்னும் ரெடியாகலை.. என்னதான் அப்படித் தூக்கமோ? பகல் நேரத்துல இப்படியா தூங்குவாங்க…ம்..ம்...சீக்கிரம் கௌம்புங்க.' என்று தன் கணவரை விரைவுபடுத்தினாள் ஜானகி.
'இன்னும் பத்து நிமிஷத்தில் நா ரெடியாயிடுவன்' சொல்லி விட்டுப் போன முரளி, சொன்னதை விட விரைவாக வந்தான்.
வீட்டின் முன்பகுதியில் முரளியின் அம்மா வேதநாயகி சோகமாக உட்காந்திருந்தாள்.
அப்பொழுது காப்பி டம்ளர்களோடு வந்த ஜானகியைப் பார்த்து, 'எங்க அம்மாவுக்கு வேண்டிய துணிமணி, சாமனெல்லாம் எடுத்துட்டியா?' என்று முரளி கேட்டான்.
'இதோ இரண்டு பெட்டிகளில் எடுத்துட்டேன்’ என்று கூறி வீட்டின் முன்பகுதியில் இருந்த பெட்டிகளைக் காட்டினாள் ஜானகி.
விளையாட்டில் மூழ்கியிருந்த மாலதி, ஓடோடி வந்து, 'ஏம்பா அப்பத்தா எங்க போறாங்க?' என்றாள் திடுமென.
'அப்பறம் சொல்றேன்.. இப்ப அப்பத்தாவுக்கு ஓடிப்போயி ஒரு முத்தம் கொடு’ என்று அன்புடன் தன் மகளை அணைத்துக் கேட்டான் முரளி.
குழந்தை ஒடிச் சென்று அப்பத்தாவை இறுக அணைத்து முத்தம் கொடுத்தது. முகத்தில் எந்தவிதமான பிரதிபலிப்புமின்றி ஜன்னலினூடாக வெறுமையாக இருந்த தனது அறையை வெறித்துப் பார்த்தபடியிருந்தாள் வேதநாயகி. அப்பத்தாவின் முகத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணாத மாலதி, தனது அப்பா, அம்மா இருவரது முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தனது அப்பத்தாவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இதைக் கவனித்த முரளி எங்கே தனது மகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாளோ என்று கருதி நிலைமையைச் சமாளிக்க,
'மாலதி குட்டி போயி காரில ஏறுங்க’ என்று கூறினான் முரளி.
எப்போதும் காரில் செல்லும் போது 'அப்பாவிற்குப் பக்கத்திலதான் இருப்பேன்' என்று அடம் பிடிக்கும் மாலதி, அன்று அப்பத்தாவின் அருகில் அமர்ந்திருந்தது மட்டுமல்லாது அப்பத்தாவின் தோளில் தனது தலையை சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் பிஞ்சு உள்ளத்தில் பல்வேறு எண்ண அலைகள். முகத்தில் குழப்பத்தின் சாயல். மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாலதி தனது அப்பத்தாவைப் பார்த்து,
'அப்பத்தா நீங்க எங்க போறீங்க?'
'முதியோர் இல்லத்துக்கு'
'முதியோருன்னா யாரு அப்பத்தா.......'
'என்னை மாதிரி வயசு போன கெழடுகதான்' என்ற அப்பத்தா தொடர்ந்தாள்.
'என்னால முன்ன மாதிரி இப்பல்லாம் ஓடியாடி வேலை செய்ய முடியாது. ரிப்பேராகிப் போன இந்த மெஷினால யாருக்கும் பயனில்லை. பயனில்லாத இந்த மெசினு இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? அதத் தூக்கி வெளியில போட்டுருவாகல்ல. அதுமாதிரிதான் என்னத் தூக்கிப் போடுறாங்க' என்று மனவேதனையுடன் தனக்குத் தானே பேசிக்கொண்டாள் வேதநாயகி.
மாலதி அப்பத்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பத்தாவின் முணுமுணுப்பு மாலதிக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது.
இதைக் கேட்டுத் துணுக்குற்ற முரளி, திரும்பித் தனது தாயின் முகத்தைப் பார்த்த முரளியின் கால்கள் 'ஆக்சிலேட்டரை' மிகவேகமாக அழுத்தின.
'அப்பத்தா... ஏன்... ... ... ' என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள் மாலதி.
'ஏய் மாலதி, சும்மா இருக்கமாட்டியா? மொச்சுமொச்சுன்னு என்ன பெரியமனுசியாட்டம் பேசிக்கிட்டே வாரே? பேசாம வாயை மூடிக்கிட்டு வரமாட்டியா?' அடக்கியது ஜானகியின் குரல். தொடர்ந்து. காரினுள் அமைதி நிலவியது. அந்த இறுக்கத்தை தளர்த்த கார்க்கண்ணாடியை சற்று கீழே இறக்கினான் முரளி. ஈரப்பதம் இல்லாமல் சூடாக இருந்த காற்று அவன் முகத்தில் மோதியது. ‘வெளியில் எங்கிருந்தோ, ‘‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை…’’ என்ற திரைப்படப்பாடல் மெலிதாக காற்றில் அலையாக வந்து கொண்டிருந்தது.
'ஏப்பா முரளி? இன்னும் ரொம்ப தூரம் போகணுமா? ரொம்ப நேரமா சாஞ்சுக்கிட்டே இருக்கறதாலே எனக்கு முதுகெல்லாம் வலிக்குதுடா' என்று தனது நடுங்கும் விரல்களால் கோடிட்டுக்காட்டிபடியே முதுகுத் தண்டை முனகியபடி வருடினாள் வேதநாயகி.
'இல்லம்மா இன்னும் கொஞ்சத்தூரம்தான். இந்தக் கோவிலைத் திரும்பினாப் பக்கம்தான்’ என்றான் முரளி.
மாலதிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று தன் அப்பத்தாவைப் பார்த்து மாலதி கேட்டாள். 'ஏன் அப்பத்தா, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒங்களை மாதிரி வயசானபிறகு நானும் அப்பா மாதிரியே அவங்கள இங்கதான கொண்டு வந்து சேர்க்கணும்?'
இதைக்கேட்ட முரளிக்கு இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு தாக்கியதைப் போன்று சுருக்கென்றிருந்தது.
கணவன், மனைவி இருவரது கண்களும் ஒருமுறை தமக்குள் சந்தித்து மீண்டன. அப்பார்வைகள் எத்தனையோ விஷயங்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டன.
'கோவில் திருப்பத்தில்' காரைத் திருப்பிய முரளி, போக வேண்டிய தெருவுக்குப் போகாமல், காரை ரிவர்ஸ் எடுத்து, கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, வீட்டை நோக்கிக் காரைத் செலுத்தினான்.
இதைக் கண்ட மாலதி தனது அப்பாவைப் பார்த்து, 'ஏம்பா அப்பத்தாவ முதியோர் இல்லத்தில விடலயா?' என்று விப்புடன் கண்களை விரித்தபடி கேட்டாள். அதற்கு முரளி, ‘‘இல்லடா செல்லம் அப்பத்தா இனி நம்ம வீட்டிலதான் இருப்பாங்க' என்றான். முரளியின் குரலில் ஒரு உறுதி தெரிந்தது. காரின் பின்னிருக்கையில் இருந்து, 'ஹும்…ஹும்..' என்று ஒரு நீண்ட பெருமூச்சு .
எங்கிருந்தோ வானொலிப் பெட்டியிலிருந்து,
‘‘அன்னையைப் போலொரு தெய்வமில்லை…
அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை…மனிதரில்லை’’
என்ற டி.எம்.எஸ்ஸின் குரல் கணீரென்று காற்றில் அலைஅலையாய் மிதந்து வந்தது.