கல்பனாவை கடைசியில் பெண் பார்க்க சம்மதிக்க வைத்து விட்டதற்காக கல்பனாவின் அப்பா குணசீலன், நிம்மதிப் பெருமூச்சு விட்டார். எவ்வளவோ தள்ளிப் போய், இப்போதாவது அவள் சம்மத்தித்தாளே என்று நினைத்துக் கொண்டு, பெண் பார்ப்பதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் இரண்டு பேரைக் கூப்பிட்டிருந்தார். வருவதாகச் சொல்லி இருந்தார்கள்.
பக்கத்து ஊரில் தான் அவரின் தங்கை இருக்கிறாள்.
ஆனால் அவளைக் கூட்டி வர பயம்...
அக்கம் பக்கத்தில் இருக்கும் குடித்தனக்காரர்களுக்கு அந்த பழைய விஷயம் தெரியாது... ஆனால் தங்கைக்கு தெரியும்...
அவள் ஏதாவது மாப்பிள்ளை வீட்டாரிடம் உளறி கொட்டி கொட்டிவிட்டால்...
கல்பனாவின் அம்மா, கல்பனாவிற்கு பத்து வயதாய் இருக்கும் போதே இறந்து விட, குணசீலன் வேறு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாமல், தன் ஒரே மகளைக் கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்துக் கொண்டு வரும் போது தான் அவளுக்கு அந்தக் கோர சம்பவம் நடந்தது. அப்பாவிடம் சொல்லாமலே நடந்த கல்லூரிக் காதல் அது. அவருக்குக் கூட, அந்த காதல் விசயம், அந்தச் சம்பவம் நடந்ததற்குப் பிறகுதான் தெரியும்...
எட்டு வருடங்களுக்கு முன், கல்பனா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது அது.
உடன் படித்துக் கொண்டிருந்த சேகரும் கல்பனாவும் காதலித்து இருக்கிறார்கள். படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் செய்து கொள்வதாகவும் முடிவு செய்து இருந்திருக்கிறார்கள்.
இதை அப்பாவிடம் சொல்லவில்லை கல்பனா..
அது ஒரு விடுமுறை நாள்...
அந்த நகரத்தை ஒட்டிய பிக்னிக் தளம் - அது ஒரு அணை - பைக்கில் இருவரும் செல்வதாக முடிவு ஆனது...
பைக்கை அணையின் கீழே நிறுத்தி விட்டு சேகர் வருவதற்குள், கல்பனா மேலே ஏற ஆரம்பித்து விட்டாள்...
“ இரு... இரு நானும் வர்ரேன்...” என்று சொல்லி விட்டு சேகர் கூட வந்து சேர்ந்தான்...
“ எனக்கு இந்த மாதரி இடம் ரொம்பப் பிடிக்கும்....” என்றாள் கல்பனா.
அணைக்கு மேல் வந்து சேர்ந்தார்கள்...
விவசாயிகளின் நீர்ப்பாசனத்துக்கும், மக்களுக்குக் குடி நீர் வழங்குவதற்காகவும் அணையின் இரண்டு மதகுகள்...
அங்கு குனிந்து இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, கல்பனா கால் தடுக்கி உள்ளே விழுந்து விட, அவள் அந்த ராட்சத வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாள்.
மரணம் சமீபத்தில்தான் என்பது கல்பனாவுக்கு தெரிந்த போது, ஒரு கை அவளைத் தாங்கி பிடித்தது. அது சேகரின் கை. சேகர், கல்பனாவை அருகிலுள்ள பாறையைப் பிடித்துக் கொள்ளச் சொல்ல, கல்பனா பிடித்துக் கொண்டாள். ஆனால் கல்பனாவின் கண் எதிரே சேகரின் தலை பக்கத்திலிருந்த பாறையின் மீது மோதி ரத்த வெள்ளமாகிப் போய், அவன் இறந்து போனான்.
கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுத்துக் கொண்டிருந்த கல்பனா கடைசியில் அப்பாவின் வற்புறுத்தலுக்காக சம்மதித்தாள். அதற்குள் வயது இருபத்து ஒன்பது ஆகி விட்டது.
காரில் வந்து இறங்கிய மாப்பிள்ளை வீட்டாரை, கல்பனாவின் அப்பா வாசல் வரை சென்று வரவேற்று கூட்டி வந்து வரவேற்பு அறையில் உட்கார வைத்தார்.
வருவதாகச் சொல்லி இருந்த பக்கத்து வீட்டு பெண்கள் இரண்டு பேரும் வந்திருந்தார்கள் உதவிக்காக...
பெண்ணைப் பெற்ற அவர் மனம் அடித்துக் கொண்டது.
கல்பனாவின் காதலும், அந்த சோகமும் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரிந்து இருக்குமோ என்று பயந்து கொண்டிருந்தார்...
மாப்பிள்ளையும் அம்மாவும் மட்டும் வந்து இருந்தார்கள். அந்த அம்மா முதலில் பேச ஆரம்பித்தார்கள்.
“ இரண்டு மூனு விஷயம் எங்க குடும்பத்தை பத்தி மொதல்லே சொல்லிடறேன். உங்களுக்கு சம்மதமா இருந்தா மேல் கொண்டு பேசலாம்....” என்று சொல்லி நிறுத்தினார்கள்.
உடன் உட்கார்ந்திருந்த குணசீலனும், அறைக்கு உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த கல்பனாவும் திகைக்க, அந்த அம்மா தொடர்ந்தார்கள்.
“ வீட்டுக்காரர் பதினைந்து வருசத்துக்கு முன்னாடி போயிட்டாரு. அதுக்கு அப்புறமும் இரண்டு சோகம் நடந்திச்சு எங்க குடும்பத்தில... ஒன்னு, இந்த மூத்த பையன பத்தினது. இரண்டாவது இளைய மகனை பத்தினது.. அவன் இப்ப உயிரோடு இல்ல...” கண்களில் வழிந்த நீரைத் துடைத்து விட்டு, மீண்டும் பேச ஆரம்பித்தார்கள் அந்த அம்மா.
“ இவனுக்குக் கல்யாணம் நடந்து நாலு மாசத்திலே இவன் சம்சாரம் கார் விபத்துல செத்து போயிடிச்சி... மறு கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லிக் கிட்டு இருந்த இவனை நான் தான் கெஞ்சி சம்மதிக்க வைச்சு கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்..” நிறுத்தி விட்டு மறுபடியும்.
“ இரண்டாவது பையனைப் பத்திச் சொல்லட்டுங்களா.. அவன் பேரு சேகர். காலேஜ்ல படிக்கும் போது, கூட படிக்கிற ஒரு பொண்ண லவ் பண்ணியிருக்கான் போலிருக்கு. எங்களுக்கு யாருக்கும் தெரியாது. ரெண்டு பேரும் பைக்கிலே டேம்க்கு பிக்னிக் போனாங்களாம்... அந்தப் பொண்ணு தவறி வெள்ளத்தில விழுந்துடிச்சாம்... அதைக் காப்பாத்த போய், அந்த பொண்ணக் காப்பாத்திட்டு இவன் செத்துப் போயிட்டான்... அந்தப் பொண்ணு யாருன்னு கூட தெரியாது. அதுக்குக் கூட கல்யாணம் ஆயிருக்கலாம்...” நிறுத்த,
உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த கல்பனா, ஓடி வந்து அந்த அம்மாவின் காலில் விழுந்து, “ அது நா தாங்க... உங்களுக்கு மருமகளா வர எனக்கு சம்மதங்க.......” என்றாள்.