இரண்டு மூன்று நாள் முயன்று செய்த அழகிய 'டீப்பாயின்' ஒரு காலை மூலையில் சாத்தி வைத்துவிட்டுத் தலையில் உருமா (முண்டாசு) கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் துடைத்துக் கொண்டே செல்லையா ஆசாரி ஏதோ சிந்தனையுடன் மூன்றாவது முறையாக வீட்டின் முன்புற வாசலுக்கு வந்து நின்று கொண்டு நீளவாக்கில் கிடக்கும் தெருவையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது மனதில் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன. தபால்காரர் வருவரா? மாட்டாரா? அவரது உள்ளத்தில் பல்வேறு வினாக்கள் எழுந்தன. ‘கடவுளே இன்றாவது தபால்காரர் வந்து என் மகனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும்’. என்று மனதிற்குள்ளாகவே தனது குலதெய்வத்தை வேண்டியபடியே இருந்தார்.
செல்லையா தெருக்கடைசியில் இருக்கும் பிள்ளையார் கோவிலை ஒட்டி வலது புறமாகத் திரும்பும் தெருவின் மொணங்கையே (திருப்பம்) வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் தபால்க்காரரைக் இன்னுங் காணோமே? எங்க தொலைஞ்சாரு மனுசன்.. யார் வீட்டிலாவது, மோரு இல்லாட்டிக் கஞ்சித் தண்ணி வாங்கி குடிச்சுட்டுப் பேசிக்கிட்டிருப்பாரு….ம்…ம்…ம்…வரட்டும் என்று அமைதியாக இருந்துவிட்டார்.
தபால்காரர் சின்னையா நல்லவர். யாருக்குக் கடிதம் வந்தாலும் வராவிட்டாலும் அவரைப் பார்த்து, “என்ன சார் லெட்டர் எதுவும் வந்திருக்குதா…?” என்று கேட்டால் அவர் கடிதம் ஏதும் வராவிட்டாலும் அவரிடம் இல்லை என்று கூறாது, “ஐயா, நாளை நமதே” என்று புன்னகையுடன் கூறிவிட்டுச் சென்றுவிடுவார். அவரிடம் ஏன் அப்படிச் சொல்றீங்க...? என்று கேட்டால் அதற்கு அவர், “இங்க பாருங்க கடிதம் வந்துருக்கான்னு என்னைப் பார்த்து நம்பிக்கையோட கேக்கறவங்களோட நம்பிக்கையை என்னால இல்லைன்னு சொல்லிச் சிதறடிக்க முடியலை… நாளை நமதேன்னு சொன்னா… அவரு நம்பிக்கையோட போவாருல்ல… அதனாலதான் அப்படிச் சொல்றேன்” என்பார். அவருடைய இந்தக் குணத்திற்காகவே அவரிடம் யாராக இருந்தாலும் ரெண்டொரு வார்த்தையாவது பேசாமல் போகமாட்டார்கள்… அவரும் யாராக இருந்தாலும் ‘என்னங்க நல்லாருக்கீங்களா..?’ன்னு கேட்டுட்டே போவாரு…
அதுலயும் தபால்காரருக்குச் செல்லையா பேருல சொல்ல முடியாத அளவுக்கு ஒருவிதப் பாசம்.. அதனால செல்லையா பேருக்கு எதுவும் வரலேன்னானும் கூட அவரு வீட்டுக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதையெல்லாம் பேசிப்புட்டுத்தான் போவாரு… அதனால செல்லையாவிற்குத் தபால்காரரு மேல சொல்ல முடியாத அளவுக்கு அன்பு... அதனால தபால்காரரு கிளம்பரேன்னாலும் செல்லையா வம்படியாப் பேசிட்டிருப்பாரு.
ஆனா இப்போ செல்லையாவுக்குத் தபால்காரர் மேலப் பயங்கர கோவமா வருது. வெட்டிப்பய, இழவெடுத்தவன்னு என்னென்னவோ முணுமுணுன்னு திட்டிக் கொண்டே திண்ணையில ஒக்காந்து புகையிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார்.
கைகள் புகையிலைப் பொட்டலத்தைப் பிரித்தாலும் அவரது மனம் எதைப் பற்றியோ சிந்தித்த வண்ணம் இருந்தது. அதனை அவரது நெற்றியில் விழுந்த கோடுகள் சொல்லியது அவரது சிந்தனை முழுக்க முழுக்க அவரது ஒரே மகன் முருகேசனைப் பற்றியதாகவே இருந்தது.
முருகேசன் தவமாய்த் தவமிருந்து பதிமூன்று வருடங்களுக்குப் பின்பு பிறந்தவன். அவன் பிறந்த கொஞ்ச நாள்லேயே அவனோட அம்மா இறந்து போயிடிச்சு. அவரும் அவருடைய அக்காவுந்தான் பாடுபட்டு அவன வளர்த்தாக. தாயில்லாப் பிள்ளைன்னு ரொம்பப் பாசங்காட்டி வளத்தாரு செல்லையா. முருகேசனப் பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டாரு. ஆனா அவன் பள்ளிக்கூடத்துக்குப் போவனான்னுட்டான். என்னத்தச் செய்ய… எப்படியோ நாலாவது வரைக்கும் மகனக் கொண்டுக்கிட்டு வந்துட்டாரு செல்லையா… மகனுக்குப் படிப்பு வராததுல இவரு மனசு ஒடஞ்சு போய்ட்டாரு. நாலங்கிளாஸ் முழுப்பரிட்சையைக் கூட முருகேசன் எழுதலை. அவனப் பள்ளிக்கூடத்திற்குப் போடான்னு சொன்னாரு செல்லையா. ஆனா அவனோ, “அப்பா பள்ளிக்கூடங்கற வார்த்தைய இன்னொருதரம் சொன்னீன்னா நான் வீட்ட விட்டு ஓடிருவேன்னு” பயமுறுத்தியதால அந்த வார்த்தையக் கூட மறந்துபோய்ட்டாரு செல்லையா.
பெரியவனா முருகேசன் வளர்ந்துட்டான். சரி தன்னோட குடும்பத் தொழிலான தச்சுத் தொழிலு பாக்க விருப்பமில்லேங்கரானேன்னு விவசாயம் பாருடான்னு கையிலிருந்த காசப் பணத்தப் போட்டு நிலம் வாங்கிக் கொடுத்தாரு செல்லையா. முருகேசன் விவசாயத்தையும் செஞ்சு பாத்தான். செல்லையாவுக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. ஆனா விவசாயமும் ரொம்ப நாள் நீடிக்கலே. தொடர்ந்து நாலு வருசம் மழை இல்லாமப் போனதால முருகேசன் விவசாயம் பண்ணமுடியாதுன்னுட்டு நிலத்தை ஒத்திக்கு விட்டுட்டான்.
செல்லையாவுக்கு மனசுல வருத்தம். இருந்தாலும் என்ன செய்ய… ஒத்தப் பிள்ளை… செல்லையாவுக்கு மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு… அவருக்கு முருகேசன் நிலத்தை அடகுக்கு வைத்தது கூட பெரிதாகப்படலை. ஆனால் தன் மகன் கெட்ட சகவாசத்தால் தானும் ஊரை விட்டுட்டுப் பட்டனத்துக்குப் போறேன்னு ஒத்தைக் காலில் நின்றபோதுதான் அவர் செய்வதறியாது நொந்துபோனார். தன் வயதில் எத்தனையோ பேர் ஊரை விட்டுச் சென்றாலும் பிறந்த மண்ணை விட்டு போவது பற்றிய எண்ணம் கூட செல்லையாவுக்கு ஏனோ தோன்றவில்லை.
இப்போது மகன் போறேன்னு சொல்றப்போ அவன இருக்க வைக்கிறதுக்கான வழியும் தெரியாமல் தடுத்து நிறுத்தறதுக்கான காரணமும் புரியாமல் செல்லையா கிட்டத்தட்ட பாதி செத்துவிட்டார்ன்னே சொல்லலாம். மகன் பட்டணத்துக்குப் போறத அவரால தடுக்க முடியல. செல்லையா சொல்றதக் கேக்காம முருகேசன் சென்னைக்குப் போயிட்டான்.
முருகேசன் பிழைப்புத் தேடிச் சென்னைக்குப் போயி அங்கேயிங்கே என்று அலைந்து திரிந்து பிறகு எதோ ஒரு தனியார் மருத்துவமனையில் காக்கியுடை அணிந்து வார்டனானான். பின்னாடி, ஆளகீள பிடிச்சு தாசில்தார் ஆபீஸ்ல பியூனா ஒரு நெரந்தர வேலையத் தேடிக்கிட்டான். இதுல செல்லையாவுக்கு ஒரு ஆறுதல் கெடச்சது. எங்கயோ கஷ்டப்படாம தம்மகன் இருக்கானேன்னு மனசுக்குள்ள சந்தோஷப்பட்டாரு.
அதுக்கப்புறம் மவனுக்கு கல்யாணத்த பண்ணிவெச்சு பொண்ட்டாட்டியோட அவன் சென்னைக்கு போனதும் இதெல்லாமும் நடந்து கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சு. ஊரைவிட்டுட்டுப் போவதில்லை என்று இருந்தாலும் கூட ஒரு கட்டத்துல தன்னோட முடிவ மாத்திக்கிறதுன்னு முடிவு செஞ்சாரு. எப்படா தன்னைத் தன் மகன் கூப்பிடுவான் அவனுடன் போகலாமென்று நினத்தார். ஆனால் அது இலவு காத்த கிளி மாதிரியான கதையா ஆயிருச்சு.
கடைசி வரையிலும் செல்லையாவை அவரு மகன் கூப்புடவே இல்ல. 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப்பான்னு' செல்லையா மனசத் தேத்திக்கிட்டாரு. அவன் இவர நெனைக்காட்டியும் இவரு அவன நெனச்சுக்கிடே இருந்தாரு…
செல்லையாவுக்கு இப்ப ஒரே கவலைதான் இருந்துச்சு… தன்னோட மகனுக்கு எட்டு வருஷமாகியும் குழந்தையில்லையேன்னு கவலைப்பட்டாரு… பேரக்குழந்தைய பாக்க முடியலியேன்னுதான் செல்லையாவுக்குக் கவலை. தன்னோட குறை தன் மகனுக்கும் தொடருதேன்னு செல்லையா மனசுல போட்டு புழுங்கிட்டிருந்தாரு.
நாளிதழ்களில படிச்சதவச்சு இப்போ இருக்கற முன்னேற்றத்த கேள்விப்பட்டு சாமிக்கு மொட்ட போடரது நேந்துவிடரதுன்னு பண்ணிணாலும் கூடவே கட்டாயம் நல்ல டாக்டர்கிட்டப் போய்க் காட்டி குழந்த பெத்துக்கறதுக்கான வழியப் பாருன்னு விலாவாரியா மகனுக்கு லெட்டர் எழுதிப் போட்டும் எட்டு மாசமாச்சு. முருகேசன் ஊருக்கு வந்தே நாலு வருஷமாகிப்போச்சு. ஊர்க்காரங்கல்லாம், “ஆசாரி ஐயா ஒமக்கு என்ன கவலை….ஒம்மவன் மெட்ராசுல அரசாங்க வேலை பாக்குறான்… அவங்கூடப் போயி இருந்துக்கய்யா…” என்று பாக்கற போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாங்க… இவருக்கும் போகக் கூடாதுங்குற எண்ணமில்லை…
அவரு மகன் கூப்டாத்தான… கண்டுக்காம இருக்கான்… பெத்த மனசு கேக்குதா…? தினமும் தன் மகனிடமிருந்து கடிதத்தையோ இல்லை அவனே நேராக கிளம்பி வந்துவிடுவானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார் செல்லையா.
இப்படி எதிர்பார்த்துக்கிட்டிருப்பதே செல்லையாவிற்கு வாடிக்கையாகி விட்டது. இன்றும் அதேதான். தபால்காரரை எதிர்பார்த்துப் புகையிலையை மென்றுகொண்டிருந்தார். தூரத்தில் தபால்காரர் வருவது போலத் தெரிந்தது. ஆங்காங்கே வெளிரிப்போய் வியர்வையால் தொப்பலாக நனைந்துபோன பழுப்பு நிற யுனிபார்மில் முன்னாடிச் சக்கரத்தில் இரண்டும், பின்னாடிச் சக்கரத்தில் ஒரு கம்பியும் காணமல் போன ஒரு சைக்கிளில் கீறீக்-கீறீக் என்று ஒரு தாளலயத்தோடு வாயெல்லாம் பல்லாக தபால்க்காரர் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.
தபால்காரரைப் பார்த்தவுடன் செல்லையா ஆசாரிக்குக் கடுமையான கோபம் வந்தது. இருந்தாலும் கோபத்தைக் காட்டாது மறைத்துக் கொண்டார். எங்கே தபால்காரர் கோபித்துக் கொண்டு பேசாமல் போய்விடுவாரோ என்று அமைதியாக இருந்தார்.
அவரது முகத்தைப் பார்த்த தபால்காரர் "என்னப்பு ரொம்பக் கடுகடுன்னு உக்க்காந்திருக்கீக, ஒங்கக்கா இன்னக்கியும் காசு கேட்டுத் தகராரு பண்ணுச்சாக்கும்?" என்று கூறிக்கொண்டே வந்து திண்ணையில் உட்கார்ந்தார்.
செல்லையா ஆசாரி புருவத்தைச் சுருக்கி அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கோபத்திற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட தபால்காரர் சின்னையா, “சரி சரி மொறைப்பை விடுங்க…மொதல்ல எனக்கொரு சொம்பு தண்ணீ கொடுப்பு சரியான வெய்யிலு" என்றார்.
வீட்டுடனிருந்த அவரின் அக்கா மகள் கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டுத், தான் கொண்டுவந்த பையில் தேடிக்கொண்டே, "அப்பு இன்னக்கி நீ நரி முகத்துல முளிச்சியோ. ஒம்புள்ளேக்கிட்டருந்து மணியார்டரு வந்துருக்குப்பு" என்று அவன் சொல்லி வாய் மூடவில்லை செல்லையாவுக்கு மிகுந்த பரவசமடைந்து, சட்டென்று எழுந்து போய் வேலியோரமாக அப்போதுதான் போட்ட புகையிலையை துப்பிவிட்ட்டு ஒட்டமும் நடையுமாக வந்தார்.
அதைப் பார்த்த தபால்க்காரர் சின்னையா "அட இங்க பாருடா கிழவன் துள்ளிக்கிட்டு வாரத" என்று செல்லையாவைப் பார்த்துக் நக்கல் பண்ணியதையும் பொருட்படுத்தாது தபால்காரரைப் பார்த்து "ஏய்யா தபால்காரரே என்மவன் லெட்டர் எதாச்சும் எழுதியிருக்கானா?" என்று லாட்டரியில் பெரிய தொகை கிடைத்ததைப் போன்று மிகுந்த ஆர்வத்தோடு கேட்டார்.
தபால்காரர் சின்னையா "லெட்டர் என்னாத்துக்கு அப்பு…. ஒனக்குத்தான் ஓம்மவன் சொளயா ஐநூறு ரூபா அனுப்பியிருக்கான். அப்பறமென்ன தீபாவளிக்கு அதுபோதாதா ரொம்பச் சந்தோஷமா இருப்பியா?” என்றவாரே ஐந்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு மணியார்டரின் கீழ் பாகத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு,
"அப்பு தீபாவளி நேரமில்ல நிறையா மணியார்டரு இருக்கு அதான் நான் வர லேட்டாயிடுச்சு, நா வரேன் நாளப் பின்னேப் பேசிக்கலாம்"னுக் கிளம்பிச் சென்றார். மகன் தனக்கு ஏதாவது எழுதியிருப்பான்னு அந்த மணியாடர் துண்டைத் திருப்பித் திருப்பி ஆவலாகப் பார்த்தார் செல்லையா.
அதில் "இந்த தீபாவளிக்கும் என்னால வர முடியாது. இத்துடன் ரூபா ஐநூறு அனுப்பியுள்ளேன் – முருகேசன்" என்று மட்டுமே எழுதியிருந்தது. செல்லையாவின் முகத்தில் பெருத்த ஏமாற்றம். நிர்மலமான வானத்தின் மேகத்தின் நிழல் மண்ணில் படர்வதுபோல ஒருவிதமான சோகம் படந்தது. அவர் மனதில் கொட்டாப்புளியைக் கொண்டு யாரோ அடித்ததைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது.
“யாருக்கு வேணும் அவன் பணம்… அப்பா நீ வாப்பான்னு ஒரு வரி எழுதல… அட அது வேணாம் உங்கள் மகன்னுகூட ஒரு வார்த்தை அதுல எழுதலயே… யாரோ மூணாவது மனுசனுக்கு எழுதற மாதிரில்ல எழுதியிருக்கான்… அட பணம் அனுப்ப வேண்டாம்…… என்னைய வந்தாவது ஒரு எட்டுப் பார்த்துட்டுப் போகலாம்… இல்ல ஒரு கடுதாசி கூடப் போடலாம்… எதுவுமே முடியல அவனால…என்ன தாயி பிள்ளைங்கற உறவு… எல்லாம் கானல் நீரு மாதிரிதான்... இருக்குற மாதிரி இருக்குது… கிட்டேப் போயிப் பார்த்த ஒண்ணுமில்லை… இந்த நெலமை எனக்கு மட்டும்தானா இல்ல என்னமாதிரி எல்லாருக்குமே… இப்படியா…ஒண்ணுமே புரிஞ்சுக்க முடியல..” என்று பலவாறு சிந்தித்துக் கொண்டே தன் மகன் அனுப்பிய பணத்தையும் அவன் எழுதியிருந்த அந்த வரியையும் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே செல்லையாஆசாரி நீண்டநேரம் திண்ணையிலேயே மெளனமாக உட்கார்ந்திருந்தார்.
செல்லையா ஆசாரியின் நெஞ்சப்படபடப்பைப் போன்று ஐந்து நூறுரூபாய் நோட்டுக்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.