“எங்க இந்த மனுசன இன்னுங்காணோம்… வேகாத வெயிலுல செவனேன்னு வீட்டுக்குள்ளாற விழுந்து கெடக்கறத விட்டுட்டு வயக்காட்டுப் பக்கம் போகலைனு யாரு கெடந்து அடிச்சிக்கிறா? சும்மா ஒரு எடத்துல இருக்க மாட்டேங்குறாரு…? என்னத்தச் சொல்லறது….?” எனப் புலம்பியபடி வீட்டு வாசலில் சிட்டாள் பாட்டி நின்று கொண்டிருந்தார்.
கண் பார்வை மங்கி விட்டதால் நெற்றியில் கை வைத்து வெய்யிலை மறைத்துத் தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த சிட்டாள் பாட்டியை நெருங்கிய அவள் கணவர் சின்னையா தாத்தா “என்னத்துக்கு இப்படி வெயில்ல கெடந்து காயிற… நீ ஏற்கனவே ரொம்பச் செகப்பு. இதுல வெயில்ல நின்னா இன்னுங் கறுத்துப் போயிற மாட்டியா….?" என்று கிண்டலாகப் பேசியவாறே சிரித்துக் கொண்டு வந்தார்.
“ஆமா…மா…இவுக மட்டும் ரெம்பத்தான் தீத்தணலுமாதிரி செகப்பா இருக்காக பாரு… இந்த வலுப்பச் சப்புறதுக்கு மட்டும் கொறச்சல்லே… நாங்க கறுப்பாவே இருந்துட்டுப் போறம் நீங்க செகப்பாவே இருங்க… இந்த வெய்யிலுல்ல என்னத்துக்குப் போயி அலையிரீக….?”
“ஆம்பள ஆயிரம் எடம் போவான்… எல்லாத்தையும் பொம்பளகிட்ட அப்படியே சொல்லிப்புடணுமாக்கும்”.
“போவீக போவீக…போக மாட்டீக… ஆளப்பாரு ஆள…. வாக்கப்பட்டவ வாயில்லாப் பூச்சியா இருந்தா போவீக” என்ற பாட்டியின் குரலில் சற்று வேகம் கூடி இருந்தது .
“ஆமா ஏளே கெழவி…. ஏளே இப்பக் கத்தி ஊரக் கூட்டுற…?”
“அடடடா நான் கெழவி… இவுக இன்னும் பதினாறு வயசு கொமரன்” எனத் தனது முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டார் சிட்டாள் பாட்டி.
“ஏய்.. இந்தாப் பாருளே… நான் இப்பவும் இளவட்டந்தான்... ஏதோ ஏமாந்து போய் ஒங்கிட்ட வசமாச் சிக்கிட்டேன்…என்னத்தச் செய்யறது?”
“அடேயப்பா பிள்ளையில்லாத வீட்டுல கெழவன் துள்ளி விளையாண்டானாம்… அந்தக் கதையாவுள்ள பேசுறீய…? எங்க அப்பாகிட்ட வந்து ஒத்த காலுல நின்னுக்கிட்டு கட்டுனா ஒங்க மகளைத்தான் கட்டுவேன்னு சொல்லிக் கட்டுனதெல்லாம் ஒங்களுக்கு மறந்து போச்சாக்கும்… இந்த எளந்தாரிக்கு”
“என்னத்தச் செய்ய? அப்ப என்னோட வயசுக் கோளாறு… கிழக்குத்தெரு தேனம்மை என்கிட்ட எம்புட்டு ஆசையா பேசுவா… தெரியுமா… அவளயெல்லாம் விட்டுப்போட்டு ஒன்ன வந்து கட்டடிக்கிட்டேன் பாரு….ம்…ம்….ம்… இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம்?” என்றார் பொய்யான சோகத்துடன்.
“இந்தாப் பாருங்க..என்னோட வாயப் புடுங்காமா சும்மா இருங்க… இல்லன்னா… மானாங்கண்ணியாப் பேசிப்புடுவேன்… ஆமா… எவளப் பத்தியாவது எனக்கிட்ட பேசுனீக… அப்பறம் பாத்துக்கோங்க…” என்ற பாட்டியின் கோபத்தை பார்த்த தாத்தா, பொக்கை வாய் தெரிய விழுந்து விழுந்து சத்தமாகச் சிரித்தார்.
இந்த காட்சியைப் பார்த்த அவர்களின் பேரனின் புது மனைவி கலியாணிக்கு புரியாத புதிராக இருந்தது. அவள் தனது மாமியார் சந்திராவைப் பார்த்து, “என்ன அத்த இது… தாத்தாவும் பாட்டியும் இப்படி சண்டை போட்டுக்கறாங்க” என்றாள். இந்த கேள்வியை எதிர்பார்த்தவள் போல் சிரித்த சந்திரா, “நீ இப்பதானே புதுசு… அதான் இப்படி கேக்குற… ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு அவுக ரெண்டு பேரும் கொஞ்சிக்கறத… இந்த வீட்டுக்கு கலியாணமாகி வந்த இத்தன வருசத்துல நானும் பாத்துட்டேன்… இவுக இப்படித்தேன்” என்றார் .
இந்நிகழ்ச்சி கலியாணிக்கு ஆச்சரியமாக இருந்தது. செகப்பட்டியிலேயே பட்டுவயல் சின்னையா என்றால் அனைவருக்கும் தெரியும். அவ்வளவு மரியாதையும் மதிப்பும் மிக்கவராக இருந்தார். சின்னையா தாத்தா. அவரும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடையவர்களாக இருந்தனர். அவர்களது அன்பான வாழ்க்கையைப் பார்த்து ஊரே மெச்சியது.
அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். அனைவருக்கும் திருமணமாகி அவர்களது குழந்தைகளுக்கும் திருமணமாகி பேரன் பேத்திகளைக் கண்டுவிட்டனர். எண்பது வயதை இருவரும் தொட்டிருந்தனர். இருப்பினும் அவர்களைப் பார்த்தால் பத்து வயது குறைத்துத்தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அவர்கள் இருந்தனர். இதையெல்லாம் நினைத்துப் பார்த்த சந்திரா தனது மருமகளைப் பார்த்து, “ஏத்தா மதியம் ரெம்ப நேராயிடுச்சில்ல.. அவுக ரெண்டு பேரையும் கூப்புட்டுச் சாப்பாட்டைப் போடுத்தா” என்றாள். மருமகள் கலியாணியும் மதிய உணவுக்குத் தாத்தாவைச் சாப்பிட அழைத்தாள்.
“கெழவி சாப்ட்டுச்சா?” என்றார் தாத்தா.
“நீங்க வாங்க தாத்தா… அப்புறம் பாட்டிய கூப்பிடறேன்”
“இல்லப்பா நேரத்துக்கு கொஞ்சம் கஞ்சி குடிக்கலைன்னா ஒம்பாட்டி பசி தாங்க மாட்டா… போய் மொதல்ல அவளுக்குச் சோத்தப் போடு” என்றார்.
பாட்டியைச் சாப்பிட அழைக்க, பாட்டியும் அதே போல் தாத்தாவை முதலில் சாப்பிடச் சொல்லுமாறு கூற, கலியாணி தனது மாமியாரைப் பார்க்க அவளோ, நான் சொன்னேன்ல என்பது போல் அர்த்த புன்னகை பூத்தாள். ஒருவழியாய் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர். உண்ட மயக்கத்தில் ஆளுக்கொரு திண்ணையில் விரித்திருந்த பாயில் சற்றுக் கண்ணயர்ந்தனர். வேப்பமரக் காற்றும், தூரத்தில் வயலில் வேலை செய்யும் ஆட்களின் குரலும், தாலாட்டு போல் கேட்க அவர்களிருவரையும் தூக்கம் தழுவியது. அவர்களை மாமியாரும், மருமகளும் பெருமையுடன் பார்த்துவிட்டு நகர்ந்தனர்.
உச்சி வெய்யில் மண்டையை பிளக்க, திண்ணையில் அமர்ந்து தன் கண் கண்ணாடியுடன் போராடியபடி செய்தித்தாளில் ஆழ்ந்திருந்தார் தாத்தா.
“என்னங்க.. ரொம்பத்தான் விழுந்து விழுந்து படிக்கிறீக…. கலெக்டர் பரிச்சயாக்கும்… அத்தன பாடுபட்டு அந்த பேப்பரை படிக்காட்டித்தேன் என்ன?” என்றார் பாட்டி.
“ஏன்? ஒன்னமாதிரி நாட்டுநடப்பு தெரியாம இருக்கோணுமாக்கும்”
“ ஆமா…மா… நாட்டு நடப்பு தெரிஞ்சு இப்ப எந்த நாட்ட ஆளப் போறீக ?”
“நாட்ட ஆள வேண்டிய வந்தேன்… ஒன்ன கட்டிக்கிட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயுமா ஏம் பொழப்பு முடிஞ்சு போச்சு”
“ஆமா நாந்தேன் ஒங்க கைய புடிச்சு தடுத்துப்புட்டனாக்கும்?”
“அததுக்கு ஒரு குடுப்புன வேணுமுளே… எங்கப்பன் சொன்னாப்ல அந்த பாலகுறிச்சிக்காரிய கட்டி இருந்தா நாடாண்டிருப்பேனோ என்னமோ” என வேண்டுமென்றே பாட்டியை வம்புக்கு இழுத்தார் தாத்தா.
“அடியாத்தி … அவளக் கட்டியிருந்தா நாறிப் போயிருக்கும் ஒம்ம பொழப்பு….. பாவம்… கண்ண கெடுத்துகாதீகன்னு சொன்னா பேச்ச பாரு பேச்ச…” என முறைத்தார் பாட்டி.
அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்க “ஆரு அங்க வாரது…?” எனக் கண்ணைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள் பாட்டி.
“அம்மோய்… பெத்த மவள ஆருன்னு கேக்கறியே” என்றபடி அருகில் வந்து அமர்ந்தாள் பாட்டியின் மகள் ரெங்கநாயகி.
அருகில் வந்ததும் மகளை கண்டுகொண்டவர் “அடியாத்தி, வாத்தா வா… வா… ஆத்தா கோவுச்சுக்காத ஏங்கண்ணு சுத்தமா தெரியறதில்ல என்ன செய்ய” என்றார் வருத்தத்துடன்.
“ஏம்மா அதான் அண்ணன் ஆபரேஷன் பண்ணிவிடறேன்னு சொல்லுதில்ல” என ரெங்கநாயகி. கூற “என்னோட வயசுக்கு ஆஸ்பத்திரி பக்கமே போகலை.… இனிமே காலம் போன கடைசீல என்னத்துக்குத்தா எனக்கு ஆப்புரேசன் அது இதுன்னு..ஏதோ இருக்கற வரைக்கும் இருக்கறது போறபோது போறது”
“அது சரி…” எனச் சிரித்தாள் மகள்.
“ஏத்தா வெய்யிலத் தாழ வரக்கூடாதா…?… எதுக்குத்தா இப்படி உச்சி வெயிலுல வேர்த்து வடிய வரணும்?” என தன் முந்தானையில் மகளின் நெற்றி வியர்வையைத் துடைத்தார் பாட்டி .
“இப்படி நீ தொடைச்சுவிடற பாரு அந்தச் சொகத்துக்குத் தாம்மா நான் வார்றேன்” என வாய் வரை வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் விழுங்கினாள் ரெங்கநாயகி.
தான் பேரன் பேத்தி எடுத்துவிட்ட இந்த அறுபது வயதிலும் கூட தன்னைச் சிறு குழந்தை போல் நடத்தத் தன் அம்மாவால் மட்டுமே முடியும் எனத் தோன்றியது ரெங்கநாயகிக்கு எத்தனை வயது தான் ஆனா என்ன? தாய்க்குப் பிள்ளை தான். நம் பெற்றோர் உள்ள வரை மட்டுந் தானே நமக்கு இந்த உணர்வு சாத்தியம் எனத் தோன்றியது, அதன் பின்… என அதற்கு மேல் நினைக்க இயலாமல் ரெங்கநாயகிக்கு கண்ணில் நீர் நிறைந்தது. தாய் அதனைப் பார்த்து வருந்துவாளே எனக் கருதிய ரெங்கநாயகி அதை மறைக்கத் தோட்டத்தை ரசிப்பவள் போல் வேறு பக்கம் பார்த்தாள்.
பெற்றோரைத் தன்னுடன் அழைத்துச் சென்று சில நாட்களேனும் வைத்து கொள்ளும் ஆசையில் “ஏம்மா? நீயும் அப்பாவும் ஒரு பத்து நா எங்கூட வந்து இருங்களேன்… எப்பக் கேட்டாலும் இதோ வரேன் அதோ வரேங்கற,. அண்ணன் தான் உனக்கு புள்ளயா? நான் இல்லையா?” எனச் சண்டை போடுபவள் போல் ரெங்கநாயகி. கேட்க, அருகிலிருந்த சின்னையா தாத்தா அதனைக் கேட்டு,
“உங்கம்மாள வேணும்னா கூட்டிட்டு போப்பா… நாங்கொஞ்சம் அவ தொண தொணப்பில்லாம நிம்மதியா இருப்பேன்” எனக்கூற, சிட்டாள் பாட்டி அவரை முறைத்தார்.
“அப்பனுக்குதான் இந்தத் தோட்டம் காட்ட விட்டுப்போட்டு வர மாட்டாக… அப்படின்னா நீ மட்டுமாவது வாயேம்மா…” என மகள் கேட்க,
“இல்லத்தா… அது… வெயிலுக் காலம் முடியட்டும்… பொறவு நானு வாறன்”
“போம்மா நீ… இப்படி சொல்லிச் சொல்லியே பல காலம் ஓடிப் போச்சு” எனவும் “அடடே ரெங்கநாயகியா? ஏன் வந்தவ வெளியவே உக்காந்துட்டே… உள்ள வா, வா வந்து கொஞ்சம் மோருத்தண்ணி குடி” எனத் தன் நாத்தனாரை அழைத்தார் சந்திரா. “வர்ரேண்ணி வந்த ஒடனே அப்பனயும் அம்மாவையும் பாத்துப் பேசிக்கிட்டிருந்தனா… அப்படியே பேசிட்டே இருந்துட்டேன் அண்ணி… இதோ வரேன்” என உள்ளே சென்றாள் ரெங்கநாயகி. அவள் உள்ளே சென்றதும் “பாத்தீங்களா அண்ணி… அப்பன உட்டுபோட்டு ஒரு பத்து நா வந்திருக்க மாட்டேங்குது எங்கம்மா” என்றாள்.
“நீ வேற ரெங்கு. அத்தைய கொஞ்ச நேரம் காணோமுன்னா போதும், மாமாவும் உசுர வாங்கிருவாக. அன்னைக்கி உங்க சின்னமாமன் பொண்டாட்டி இறந்து போயிருச்சுன்னு... அத்த உங்க அண்ணங்கோட போயிட்டாக…அவுக வர்ற வரைக்கும் மெயின் ரோட்டுலேயே மாமா நின்னுட்டு இருந்தாக. ஆனா தெனமும் ரெண்டுபேருக்கும் சண்டைக்கு கொறயில்ல” என சிரித்தாள்.
“ரெண்டு பேருக்கும் எம்பதுக்கு மேல வயசாய்டுச்சு அண்ணி… ஒருத்தர் போய் ஒருத்தர் இருந்தா என்ன செய்வாகளோனு நெனச்சாலே பயமா இருக்கு” என்றாள் ரெங்கநாயகி நிஜமான கவலையுடன். அதையே தானும் பல முறை நினைத்தது தான் என மௌனமானாள் சந்திரா.
ஐப்பசி முடிந்து கார்த்திகை தொடங்க, வெயில் குறைந்து குளிரத் தொடங்கியது.
“முன்னயெல்லாம் தை மாசம் தரையுங்குளிரும்னு பழமொழி சொல்லுவாக. இப்ப கார்த்திகைலேயே ரெம்ப குளிராவில்ல இருக்கு… உங்க தாத்தன் கயித்து கட்டில திண்ணைல இருந்து உள்ளாற எடுத்துப் போடு கண்ணா” என்றார் பாட்டி, பேரனிடம்.
அதற்குத் தாத்தா “எனக்கொண்ணும் குளிரல… நான் இங்கயே இருக்கேன்” என்றார் வெளியில் இருந்தபடியே” மேலுக்கு வந்தா தெரியுமப்பறம்” என்றார் பாட்டி அக்கறையில் விளைந்த கோபத்துடன். “எல்லாம் எங்களுக்கும் தெரியும்…நீ சும்மா கெட” எனப் பாட்டியை அடக்கினார் தாத்தா.
“மனுசனுக்கு எதச் சொன்னாலும் வெளங்குதா? பட்டத்தான் தெரியும் பத்தஞ்சு கொடுத்தாத்தான் தெரியும்பாக…” என முணுமுணுத்தார் பாட்டி.
“நேத்தைக்கு சமஞ்சு இன்னைக்கி வந்தவளாட்டம், என்ன அங்க முணுமுணுக்குறே?ஏங் காதுல விழற மாதிரி கொஞ்சம் சத்தமாத்தேன் சொல்றது” என தாத்தா கேட்க, பேரன் கண்ணனும் அவன் மனைவி கலியாணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர். பாட்டிக்கு ஒரே வெட்கமாய்ப் போய் விட “இந்தக் கெழவனுக்கு எப்ப எதப் பேசுறதுன்னே வரைமொறை இல்லாமப் போச்சு….… வெக்கம் கேட்ட மனுஷன்” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
அன்றிரவு பாட்டிக்கு ஏனோ நல்ல குளிர் காய்ச்சல் வந்து விட அனத்தி கொண்டே இருந்தார். காலை நேரம் சற்று காய்ச்சல் மட்டுப்பட்ட போதும் முகத்தில் இருந்த சோர்வு விலகவில்லை.டாக்டரிடம் செல்லலாம் என மகன் அழைக்க “அட போடா… அதெல்லாம் கஷாயம் குடிச்சா தன்னால ஓடிப் போயிரும்” என மருமகளிடம் பக்குவம் சொல்லி கஷாயம் வாங்கிக் குடித்தார். அன்று முழுதும் தாத்தா வீட்டை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை.அடிக்கடி மனைவியை வந்து பார்ப்பதும், ஏதேனும் கேலி செய்து சிரிக்கச் செய்வதுமாய் நேரத்தைக் கடத்தினார்.
மற்றவர் எல்லாம் உறங்கச் சென்று விட, தாத்தா பாட்டியின் அருகில் அமர்ந்திருந்தார். கவலையுடன் தன்னருகில் அமர்ந்திருந்த தனது கணவனைப் பார்த்த பாட்டி, “ஏங்க எனக்கு எதுனா ஆகிப்போச்சுனா நீங்க என்ன செய்வீக?” என பாட்டி தயக்கமாய்க் கேட்க, ஒரு கணம் மௌனமாய் இருந்தவர். “வேறென்னத்தச் செய்யிறது… கெழக்குத் தெரு தேனம்மை இன்னும் கலியாணம் பண்ணிக்காம இருக்காளாமா… போய் பாக்கறது தான்” என்றார் சிரிப்போடு.. தனது கணவர் வேண்டுமென்றே பேச்சை மாற்றுகிறார் என்பதை உணர்ந்த பாட்டியால் அவரோடு சேர்ந்து வழக்கம் போல் சிரிக்க முடியவில்லை. மாறாக எதுவும் பேசாமல் கணவனைப் பார்த்துக் கொண்டே இருந்தார். சற்று நேரத்தில் உறங்கியும் போனார். தாத்தா அங்கேயே அமர்ந்து வெகு நேரம் மனைவியைக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது… “ஏம்மா ஒன்னைய விட்டுட்டு நாமட்டும் உசிரோட இருந்துருவேன்னா நெனச்சே… அடிப் பைத்தியம்…எப்படிடீ இருக்க முடியும்… அன்றில் பறவையைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கியா… ஆமா நீ எங்க கேள்விப்படப் போற… அந்த அன்றில் பறவைங்க ஒன்ன விட்டு ஒன்னு இருக்காதாம்… எப்போதும் சேர்ந்தேதான் இருக்குமாம்… அப்படி ஒன்னு இறந்து போயிருச்சுன்னா அடுத்த கணமே அந்த இன்னொரு பறவையும் இறந்து போயிருமாம்… ஆமடி சிட்டா நாம ரெண்டு பேரும் அன்றில் பறவைங்க மாதிரி… ஒருத்தர விட்டுட்டு ஒருத்தரு இருக்க மாட்டோம்……..”என்று மனதிற்குள் நினைத்தவாறே படுக்கச் சென்றார் சின்னையா தாத்தா…
மறுநாள் காலை…
“பாட்டி… எழுந்திரிங்க… காபித்தண்ணி கொண்டு வந்திருக்கேன்” எனப் பாட்டியை எழுப்பினாள் கலியாணி.
பாட்டி கண் திறக்காமல் போக, சற்று பயந்தவளாய் விரைந்து சென்று தன் கணவனை அழைத்து வந்தாள்.
வந்து பார்த்த கண்ணன், சில்லிட்டிருந்த பாட்டியின் உடலைத் தொட்டு அதிர்ந்தவனாய் “பாட்டி… எங்கள விட்டுட்டுப் போயிட்டியே….. ” என சத்தமாய் அழுதான்.
சற்று நேரத்தில் அழுகை சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் கூடி விட, தாத்தாவிடம் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதே இப்போது எல்லோருடைய கவலையாக இருந்தது. மனதைத் தேற்றிக் கொண்ட பாட்டியின் மகன், தந்தையின் கட்டில் அருகில் சென்று நின்றார்.
புன்னகை தேங்கிய முகத்துடன் உறங்கி கொண்டிருந்த தந்தையைக் கண்டதும் அழுகை பீறிட “அப்பா…” என்றார் அழுகையூடே. எப்போதும் ஆழ்ந்து உறங்கும் பழக்கம் உள்ளவர் தன் தந்தை என்பதால் “அப்பா…” என்றார் மீண்டும் சற்று குரலை உயர்த்தி. அதற்கும் பதில் இல்லாமல் போக தந்தையின் கையைத் தொட்டவர் அதிர்ச்சியுடன் கையை இழுத்துக் கொண்டார். தான் நினைத்தது தவறு என நினைத்தவர் போல் மீண்டும் தந்தையின் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தவர், முகம் வெளிற நின்றார்.
அருகில் வந்த அவரின் மனைவி “என்னங்க மாமாவுக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்க, “சந்திரா … அப்பா…அப்பா… அப்பாவும்….” என அதற்கு மேல் கூற இயலாமல் “அப்பா….” எனத் தன் தந்தையின் உடலை கட்டிக் கொண்டு கதறினார். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய்த் தாக்க நம்ப இயலாமல் உறவுகளும் நட்புகளும் ஸ்தம்பித்துப் போய் நின்றனர். சந்திராவுக்குத் தன் மாமியார் சிட்டாள் போன மாதம் வீட்டுக்கு வந்திருந்த உறவுப் பெண்மணி ஒருவரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. “சுமங்கலியாப் போகோணுமின்னு நீ சொல்லுறவ… எனக்கு அந்த ஆசையில்ல ஆத்தா… நானில்லாம இந்த மனுஷன் என்ன பாடு படுவாரோனு நான் ஆவியா அலையிறத விடத் தனியா இருக்கற வேதனைய நான் அனுபவிச்சுக்கறேன்… எப்படியும் அதுக்கு பொறவு நான் வெகு நாள் இருக்க மாட்டேன்” என்றார் பாட்டி அன்று.
அவர்களின் உண்மையான அன்புக்குப் பரிசாய்க் கடவுள் இருவரையும் ஒன்றாக அழைத்துக் கொண்டார் போலும் என நினைத்தாள் சந்திரா.
“பாட்டிக்காச்சும் அப்பப்ப ஒடம்புக்கு முடியாமப் போகும்… தாத்தா ஒரு நோக்காடும் இல்லாம தெம்பா இருந்த மனுஷனாச்சே… எம்புட்டு இணக்கம் இருந்தா ஒரே ராவுல தூக்கத்துலயே உசுரு போகும் ரெண்டு பேருக்கும்… எத்தன பேருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம்…” என ஊரே பேசிப்பேசி மாய்ந்தது. அன்றில் பறவைகளாய் ஒரு கணமும் பிரிய மனமற்ற அந்த இரு அன்பு உள்ளங்கள் இறப்பிலும் ஒன்றாக இணைந்து சென்றன. அன்றில் பறவைகளைக் காலன் கூடப் பிரிக்க முடியாதல்லவா…?