அரசு விரைவுப் பேருந்து மதுரையிலிருந்து விழுப்புரம் நோக்கி இருட்டைக் கிழித்துக் கொண்டு விரைந்தது. இரவு நேரப் பயணமாதலால் அதிகக் கூட்டமில்லை. பேருந்தின் சன்னல்கள் அடைத்திருந்த போதும் மார்கழி மாதக் குளிர் பேருந்துக்குள் இருக்கத்தான் செய்தது. கம்பளித் துண்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டு சன்னலோரமாக அமர்ந்திருந்தேன்.
பேருந்துக்குள் ஆடியோ, வீடியோ இரண்டும் வேலை செய்யாததால் இருந்த பத்துப் பேரும் நிம்மதியாக இருந்தோம். ஒரிருவர் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, ஒருவர் போனில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்.
பேருந்து ஓட்டுநர் நிறுத்தம் இல்லாத ஒரு இடத்தில் திடீரெனப் பேருந்தை நிறுத்தினார். எதற்கு இவர் இங்கு பேருந்தை நிறுத்துகிறார் என்று யோசிக்கும் போதே ஒரு இளைஞனும் இளவயதுப் பெண்ணும் மிகவும் அவசர அவசரமாக பேருந்தில் ஏறினர். பேருந்தின் விளக்கொளியில் அவர்களது முகம் சரிவரத் தெரியவில்லை. அவர்களது இளமையையும் நிலைமையையும் பார்க்கும் போது அவர்களிருவரும் நிச்சயம் வீட்டை விட்டு ஓடிவந்த காதல் ஜோடியாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. அவர்கள் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
நடத்துனரிடம் விழுப்புரத்துக்குப் பயணச்சீட்டு வாங்கினர். அந்தப் பெண் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவர்களைப் பின்னால் இருந்து பார்த்த போது அவனுக்கு இருபது வயசுக்குள் இருக்கும். அவளுக்குப் பதினெட்டு வயது கூட நிரம்பியிருக்க வாய்ப்பில்லை. 'இந்த வயசுல இதுக கெட்ட கேட்டுக்குக் காதல். இதுகளாலே வாழ்க்கைப் போராட்டத்துல வெற்றி பெற முடியுமா?’ என்று நான் நினைக்கும் போதே அவர்களது குசுகுசுப்பான பேச்சு எனது சிந்தனையை கலைத்தது.
"எனக்குப் பயமாயிருக்கு..." அவனது தோளில் சாய்ந்திருந்த அந்த இளம்பெண் விசும்பலினூடே பேசுவது மெல்லக் கேட்க, நான் இருக்கையில் சற்று முன் நகர்ந்து அமர்ந்து அவர்களின் பேச்சைக் கூர்ந்து கவனித்தேன்.
"அடலூசு... எதுக்குப் பயம்... எதாக இருந்தாலும் நான் இருக்கேன். என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..."
“ம்... இவனுக்கிட்ட என்ன இருக்கு... எப்படிப் பார்த்துக்குவான்” எனக்கு கோவங் கோவமாக வந்தது.
"இல்ல.. சித்திக்கு தெரிஞ்சா..."
"தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க… இல்ல அவங்கனால நம்மல என்னதான் பண்ண முடியும்..? நம்ம விஷயத்துல முடிவெடுக்க அவங்க யாரு... என்ன வந்தாலும் சந்திப்போம்..."
'அடேங்கப்பா... இவுக பெரிய தமிழ் சினிமா கதாநாயகன் எத்தனை பேரு வந்தாலும் பறந்து பறந்து அடிச்சு விரட்டப் போறாரு. மூதேவி... இழுத்துக்கிட்டுப் போற பொண்ணுக்கு ஒரு வேளை கஞ்சி ஊத்துமான்னு தெரியலை... இதுல என்ன வந்தாலும் சந்திப்பாராம்... முதல்ல இவளை வச்சி வாழ முடியுமான்னு யோசிச்சுப் பார்ரா பன்னாட…' எனக்குள் கோபம் எரிமலையாய்க் கனன்றது.
"இல்லை... என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..."
அவன் அந்தப் பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு, "இதப்பாரு…எதப்பத்தியும் நினைக்காம அப்படியே தூங்கு. எதாயிருந்தாலும் நாளைக்கிப் பார்த்துக்கலாம்" என்று கூறியவாறு அவளை அணைத்துக் கொண்டான்.
எனக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. “தம்பி...!” என்று அந்தப் பையனை அழைத்தேன். அவனும் என்ன என்பது போன்று என் பக்கம் திரும்பினான்.
"உனக்கு வயசு என்னப்பா?"
"என்னோட வயசு உங்களுக்கு எதுக்கு சார்...?"
"இல்ல சும்மாத்தான் கேக்கறேன் சொல்லுப்பா..."
"பத்தொன்பது... ஏன் சார்…?"
"இரு... அவசரப்படாதே... படிக்கிறியா..."
"இல்லை..."
"ம்ம்... இந்தப் புள்ள படிக்குதா...?
"ஆமா...சார்…"
"இந்த வயசுல ஒங்களுக்கு வாழ்க்கையின்னா என்னன்னே தெரியாது. அப்புறம் எப்படிப்பா இப்படில்லாம்?"
"நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியலை...சார்"
"புரியலையா... அதான் இந்தச் சின்னப்புள்ளைய இழுத்துக்கிட்டு ஓடுறியே... அதத்தான் சொல்றேன்… ஒங்க ரெண்டு பேருக்கும் குடும்பச்சுமையின்னா என்னன்னு தெரியுமா...?"
"என்னது இழுத்துக்கிட்டு ஓடுறேனா... என்ன சார் சொல்லுறீங்க..."
"என்னப்பா புரியாத மாதிரி நடிக்கிறே... உன்னோட ஆசை தீரும் வரைக்காவது அவளை... "
"சார்..." அவனது கத்தலில் பேருந்துக்குள் இருந்த அனைவரும் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தனர்.
"ஏம்பா உண்மையைச் சொன்னா கத்துறே..." நானும் பதிலுக்குக் கத்தினேன். அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"எது சார் உண்மை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தா காதலர்களாத்தான் இருக்கணுமா...?"
"காதலர்களா இல்லைன்னா நீங்க ஏன் இந்த நேரங்கெட்ட நேரத்துல ஓடி வந்து ஏறணும்... அப்பா அம்மாவை மறந்து இவளுகளும் அரிப்பெடுத்து ஓடியாந்துடுறாளுங்க..." கோபத்தில் எதைப் பேசுவதென்று தெரியாது யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டேன். அதைக் கேட்டதும் அந்தப் பெண் அழத் தொடங்கினாள்.
"இப்ப அழு... ஆத்தா அப்பன் மொகத்துல கரியை பூசிட்டு ஓடியாரும்போது இனிச்சிருக்குமே... அழுகையா வருது அழுகை"
"பேச்சை நிறுத்துங்க சார்… நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டே போறீங்க… இனிப் பேசினீங்க… அப்புறம் மரியாதை கெட்டுடும். இவ யாரு தெரியுமா சார்… இவ என்னோட தங்கச்சி... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தாளே காதலிக்கிறாங்கன்னு ஏன் சார் ஒங்கள மாதிரி உள்ளவங்கள்ளாம் நினைக்கிறாங்கன்னு தெரியல… நீங்க மட்டும் இல்லை நாட்டுல முக்கால்வாசிப் பேர் அப்படித்தான் நினைக்கிறாங்க. அது ஏன்னே தெரியலை. தனியா வண்டியில போறது அண்ணன் தங்கையாக இருந்தாலும் ஒங்க பார்வைக்கு அது தப்பாத்தான் தெரியுது. அதனாலதான் இன்னைக்கு பெரும்பாலான அண்ணன் தங்கைகள் சேர்ந்து எங்கயும் போக முடியறதில்லை."
எனக்கு என்னவோ போலாகிவிட்டது. பேச்சைச் சிறிது நிறுத்திய அந்த இளைஞன் மீண்டும் தொடர்ந்தான்.
"யாரையும் பர்த்தவுடனே மொதல்ல தப்பா எடை போடுறதை நிறுத்துங்க சார்… எங்கரெண்டு பேருக்கும் அம்மா இல்லை. அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி எங்களுக்கு நல்லவங்களா அமையலை. எவ்வளவு கொடுமை பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டாங்க. அப்பா எதுவும் கேட்டுக்கிறதுமில்லை… கண்டுக்கிறதுமில்லை… நான் படிக்கலை. ஆனா ஏந்தங்கச்சி நல்லாப் படிப்பா. இப்ப இவ படிப்பக் கெடுத்து சித்தியோட சொந்தத்துல ஒரு குடிகாரனுக்கு கலியாணம் பண்ணி வைக்க ஏற்பாடு நடக்குது. இவளை நல்லாப் படிக்க வைக்கணும். எங்க அம்மா செத்ததுக்கப்புறம், எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணியதால மாமா வீட்டு உறவு அத்துப் போச்சு. எங்கப்பா எங்களையும் மாமா வீட்டுக்குப் போக விடலை... இருந்தாலும் மாமா எங்களுக்கு உதவுவாருங்கிற நம்பிக்கையில அப்பாவும், சித்தியும் பக்கத்து ஊரு திருவிழாவிற்குப் போயிருக்கிற நேரத்துல யாருக்கும் தெரியாம மாமா ஊருக்கு கிளம்பிட்டோம்."
அவனுக்கு கண்ணீர் வந்தது... அந்தக் கண்ணீருக்கு காரணம் நான்தானே என்று நினைத்த போது எனக்கு வெட்கமாய் இருந்தது…என் மனம் கனத்தது…. அந்தப் பெண் தனது தாவணியால் அவள் கண்ணத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.
எல்லோரும் என்னை ஒரு புழுவைப் போல பார்த்தனர். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் குற்ற உணர்வு என்னை எரித்துக் கொன்றுவிடும் என்று நினைத்த நான் அந்தப் பையனின் கைகளை பிடித்துக் கொண்டு, 'தம்பி என்னை மன்னிச்சிருப்பா…ஏனோ தெரியலை இந்த பார்வை நல்ல நோக்கத்துல பார்க்கிறதை விட கெட்ட நோக்கத்துலதான் அதிகம் பார்க்குது. எதையும் ஆழமாய் பார்க்காமல் அவசர கதியில் பார்ப்பதுதான் இத்தனைக்கும் காரணம் என்னை மன்னிச்சுடுங்கப்பா...' என்றபடி அவர்களிருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.
அவனும் பரவாயில்ல சார்… ஒங்க நிலையில யாராக இருந்தாலும் அப்படித்தான் நெனக்கத் தோணும்… ஏன்னா காலம் அப்படி இருக்கு சார்… என்றபடி என்னைப் பார்த்து ஒரு சிறிய புன்னகையைப் படரவிட்டான்… அதற்குள் நான் இறங்கும் இடம் வரவே அவனிடம் விடை பெற்றுக் கொண்டு இறங்கி நடந்தேன்… பார்க்கிறவனோட பார்வையிலதான் எல்லாமே தப்பா சரியாங்கறது இருக்கு…எதையும் அவசரப்பட்டு நாம பார்த்துட்டு முடிவெடுத்து விடக் கூடாது… என்ற எண்ணம் என் மனதில் நிழலாட அந்த உடன் பிறந்தோருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு நடந்தேன்…”
ஒளிமயமான எதிர்காலம் என்னுள்ளத்தில் தெரிகிறது” என்ற பாடல் காற்றில் மிதந்துவர என்னுள் மகிழ்ச்சி பரவியது…