அடேய்... ரமேசு… …ஏய் ரமேசு… சு… என்று அடி வயிற்றிலிருந்து ஒரு அதட்டலுடன் தன் மகனைக் கூப்பிட்டாள் செல்லி. அன்றாடங் காய்ச்சியில் அல்லலுறும் இந்தியக் குடிமக்களுள் ஒருத்தியாக வாழ்ந்தாள் செல்லி.. கிராமத்தில் உறவுகளை விட்டுவிட்டுப் பல்வேறு கனவுகளுடன், இடம் பெயர்ந்து கணவனுடன் நகரத்தை நோக்கி நடை போட்டு வந்தவள்தான் செல்லி.
சும்மா சொல்லக் கூடாது. கூலி வேலை செய்து மனைவியைக் கண் கலங்காமல் காப்பாற்றி வந்தான் முனியம்மாவின் கணவன் கணேசன். கணேசன் செல்லி இவர்களின் இன்ப வாழ்க்கையின் அடையாளமாகப் பிறந்தான் ரமேஷ்… அப்பனும் ஆத்தாளும் உச்சி குளுந்து மகிழ்ந்தனர். ஏழைகளுக்கு இன்பம் நீடிக்க இயற்கைக்கு எப்பொழுதும் விருப்பம் இருக்காது போலும்... ரமேஷை மனைவி செல்லியின் கையில் கொடுத்துவிட்டு ஒரு விஷக்காய்ச்சலில் நிரந்தரமாகக் கண்ணை மூடினான் கணேசன்.
ரமேஷைப் பள்ளியில் சேர்த்தும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆகவே அம்மாவுடன் சின்னச் சின்ன வேலை செய்து வந்தான். செல்லி வீட்டு வேலை செய்வாள். மாலையில் இட்லி, வடை செய்து விற்றும் வந்தாள். அவள் வசிக்கும் இடத்தில் அவளுக்கும் சில வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
அவர்களின் வீடு ஒரு பெரிய கட்டடத்தின் பக்கவாட்டின் சுவரை ஒட்டியது. சுவர் ஒரு பக்கம். அதில் இரண்டு பக்கம் ஆணி அடித்துக் கயிறு கட்டி அதில் பழைய பாய், பிளாஸ்டிக் திரை என்ற பெயரில் ஒரு சுவர். எத்தனை எத்தனையோ குடும்பங்களில் இவர்களும் ஒருவர். பெரிய மழை வந்தால், கட்டிடத்தின் வாட்ச் மேன் கருணையில் வராண்டாவில் ஒதுங்க இடம் கிடைக்கும். எப்படியாவது ரமேஷ் கார் டிரைவர் ஆகி விட்டால் இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும். அதுவரை கஷ்டம் தான். இது செல்லியின் வெகுநாளைய கனவு.
அந்தக் கட்டடத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு கூட்டம் நடக்கும். அப்பொழுது செல்லி ஏதாவது தின்பண்டம் செய்து விற்பாள். வியாபாரமும் நன்றாக ஓடும். அவளுடன் போட்டி போட புதுப்புது தின்பண்டக் கடைகள் முளைக்கும். முதல் நாளே வாட்ச்மேன் சொல்லி விடுவார். நாளைக்கு விழா நடக்கப் போகிறது என்று. அன்றும் அப்படித்தான் வாட்ச்மேன் கூற, செல்லி சிறிது அதிகமாகவே மசால் வடைகளைச் சுட்டுத் தன் மகனிடம் கொடுத்து அனுப்பினாள். வேலையை முடித்துவிட்டு அவளும் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கலானாள். இலவசமாக வடை கிடைப்பதால் ஒரு நல்ல இடமாகவே செல்லிக்குக் கொடுப்பார் வாட்ச் மேன்.
“அண்ணே….இன்னைக்கு யாரெல்லாம் வர்ராக” என்று வாட்ச்மேனிடம் கேட்டாள் செல்லி. அதற்கு, “இன்னிக்குப் பெரிய பெரிய ஆட்கள், மேலதிகாரிகள், பெரிய படிப்பு படிச்சவங்க, பேப்பர்லே போட பேப்பருக்காரங்க, வீடியோகாரங்க, யாரோ புதுசா ஒரு சினிமா நடிகை, இதற்காக போலிஸ் எல்லாம் வருது செல்லி” என்றார் வாட்ச்மேன்.
செல்லி வாயைப் பிளந்தவாறு தொடர்ந்து வாட்ச்மேனிடம், “…ஆமா ஏண்ணே அவங்கள்லாம் வந்து என்னத்தை செய்யப் போறாகளாம்..” “அட போ தங்கச்சி....உனக்குப் படிக்கத் தெரியாது, சொன்னாலும் ஒனக்குப் புரியாது… சரி இருந்தாலும் சொல்றேன்..கேட்டுக்க.. இப்போ விலைவாசி எல்லாம் ஒசந்துகிட்டே போகுதுல்ல, ஏழைகளெல்லாரும் கஷ்டப்படறாங்களாம்… அதுக்கு இவுக கூட்டம் போட்டு எப்படி இதையெல்லாம் தீர்க்கலாம்னு யோசனை செய்யப் போறாங்களாம்…” என்று சொல்லிவிட்டுக் கூட்டம் வரவே கேட் வாசலில் நிற்கச் சென்றார்.
அதனைக் கேட்ட செல்லி, “ம்ஹூம்…நாட்டுல ஏதோ நல்லது நடந்தாச் சரி….” என்று மனதிற்குள்ளாகக் கூறிக் கொண்டே செல்லி கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஒதுங்கி நின்றாள்.
கட்டடத்திற்குள் முதலில் ஒரு பெரிய வேன் நுழைய.. அதிலிருந்து மாலைகளும் தோரணங்களும் இறங்கின. அதைத் தொடர்ந்து ஆட்களும் இறங்கி வாசலை அலங்கரித்தனர். இவர்களுக்குப் பின் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலிருந்து வந்த பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுப் பண்டங்கள் உள்ளே சென்றன. அதனைத் தொடர்ந்து கூட்டமும் வரத் தொடங்கியது.
பெரிய பெரிய கார்களில் செல்வச் செழிப்பில் மிதக்கும் பல அதிகாரிகள், பெண்கள் அவர்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கைக்காரர்கள்..என்று எல்லோரும் கட்டடத்தின் உள்ளே செல்ல.. ஒரு கார் வந்ததும் பொது மக்களின் கூச்சலுடன் அதிலிருந்து ஒரு நடிகை இறங்கி கட்டடத்தின் உள்ளே சென்றாள்.
செல்லியும் வெளியிலிருந்து எம்பி எம்பிப் பார்த்தாள். “இன்று எல்லா வடையும் வித்துப் போகும்” என்று அவள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால், உள்ளே போனவர்கள் வெளியே வருவதற்குள் வந்த ஜனங்களுக்குப் பசிக்குமே. ஜனங்கள் வடையை வாங்கிச் சாப்பிடுவாங்க…
வெளியில் வாலிபக் கூட்டத்தைப் போலிஸ் கட்டுக்குள் வைத்திருந்தது. இதைக் கண்ட செல்லிக்கு மனசுக்குள் காத்தாடி சுழல ஆரம்பித்தது. “வந்த அத்தினி ஆளும் நல்லாப் படிச்சவங்களாகத் தெரியறாங்க. என்னை மாதிரி விவரம் கெட்டவங்க இல்லே.. அவுக ஏறி வந்த அத்தினி காரும், அவுக போட்டுக்கிட்டு இருக்கிற துணியும் ரொம்ப விலை ஒசந்ததா இருக்கு… ஆமா.. இத்தினி படிச்சவக மத்தியிலே இந்த சினிமா நடிகை எதுக்கு வந்தாங்க… சரி….சரி எல்லாம் முடிஞ்சபொறகு வாட்ச்மேன் அண்ணே சொல்வாரு அப்ப தெரியுஞ்சுக்கலாம்…” இப்படி ஏதோ ஏதோ எண்ணங்களுடன் கால் கடுக்க நின்றிருந்தாள் செல்லி.
வெளியில் வந்தக் கூட்டத்திற்கும் உள்ளே நடக்கும் தலைப்புக்கும் தொடர்பு ஒன்றுமில்லை, அவர்கள் வந்தது நடிகைக்காகத்தான். நேரம் ஓடி ஒரு வழியாக மூடியிருந்த கட்டடத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளே ஏ.சி,யில் இருந்துவிட்டு வநதவுடனே வெய்யிலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் முகத்தைச் சுருக்கிக் கொண்டு உயரதிகாரிகள் வந்தனர். சிலர் நன்றாகச் சாப்பிட்டதால் நடக்க முடியாமல் நடந்து வந்தனர். சிலர் உண்ட களைப்பில் ஆடி ஆடி நடந்து வர, அவர்களின் கார் டிரைவர்கள் அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்து காரின் கதவைத் திறந்து விட, எஜமானர்கள் ஏறிச் சென்றனர்.
பத்து நிமிடத்தில் கட்டடம் காலியானது, நடிகை வெளிவர கூட்டத்திலிருந்து விசில், சத்தம், வாழ்க வாழ்க எனும் சத்தம். எப்படி காருக்குள் ஏறிச் சென்றாள் என்பது ஒருவருக்குமே புரியவில்லை. அப்படி ஒரு மின்னல் வேகம். எல்லோரும் சென்ற பின்னர் உணவு எடுத்து வந்த ஹோட்டல் ஊழியர்கள், அவர்களின் பாத்திரங்களுடன், ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா நிறைய எச்சில் பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் நிறைந்த குப்பைகளை கேட்டின் வாசலில் கொட்டிவிட்டு அவர்களின் வேனில் பறந்தனர்.
அவ்வளவுதான் இதற்காகக் காத்திருந்தது போல் ஒரு கும்பல் அந்தக் குப்பையை நோக்கி ஓடியது. ஹோட்டல் ஆட்கள் மிஞ்சிய உணவையும் குப்பையுடன் கொட்டிவிட்டுச் சென்றது….இந்தக் கும்பலுக்கு அன்று தீபாவளிதான். எச்சில் உணவை எடுத்துச் சாப்பிட அங்கேயும் ஒரு கூச்சல், சண்டை. இதில் தினமும் குப்பைத் தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பைகளை எடுக்கும் சிறுவர்கள், பெண்கள், பிச்சைக்காரர்கள் இவர்களுடன் தெரு நாய்களும் “எல்லா இனமும் ஓரினம்” என்றவாறு ஒருவருடன் ஒருவர் போட்டிபோட்டுக் கொண்டு எடுத்துச் சாப்பிட்டனர். கூட்டத்தை விரட்ட வாட்ச் மேன் கம்புடன் ஓடினார். இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த செல்லிக்கு ஒன்றுமே புரியவில்லை.
வறுமையை எப்படி ஒழிப்பது என்பதை பேச வந்தவர்களுக்குப் பசியின் கொடுமை என்ன என்பது எப்படித் தெரியும். அவர்கள் புளிச்சேப்பக்காரர்கள்… நன்கு உண்டு கொழுத்தவர்களுக்குப் பசியேப்பக்காரர்களின் வாட்டம் புரியுமா…? அவர்களின் சொகுசுக் காரும், உடையும் பார்த்தால் பசியுடன் ஒரு வேளை கூட இவர்கள் இருந்து இருக்கமாட்டார்கள். சில மணி நேரத்திற்கு இத்தனை தீனியா. அதை ஒருவரும் சரியாகச் சாப்பிடாமல் எறிந்துவிட்டு போய் இருக்கிறார்கள்.
செல்லிக்கு மனம் கொதித்தது. அரிசி விக்கிற வெலையில இப்படியா சோத்தைக் கொட்டுவாக… அடப் பாவிகளா… நீங்க… சாப்பிடாட்டியும் பரவாயில்லை.. இந்த பாவி ஹோட்டல் ஆளுக கீழே கொட்டுற சோத்தை பசியால துடிக்கிற இந்த ஏழை சனங்களுக்கு கையிலே கொடுத்துருக்கலாம்மிலே…. கீழ கொட்டி இந்தப் பாவி சனங்கள நாயி மாதிரில்ல நடத்துறாங்க… இவங்கள்ளாம் எப்படி வறுமையை ஒழிப்பாங்க… என்று மனதிற்குள் பலவாறு எண்ணிக் கொண்டிருந்தாள் செல்லி…
இருட்டில் காலி ஐஸ்கீரீம் டப்பாவிலிருந்து கையைவிட்டு ஒரு சிறுமி துழாவி நக்கிக் கொண்டிருந்தது…செல்லியின் கண்ணில்பட்டது…இதைக் கண்ட செல்லியின் நெஞ்சில் ரத்தம் கசிந்தது…நெசமாகவே செல்லிக்கு இந்த மீட்டிங்க் போட்ட புளிச்சேப்பக்காரர்கள் எப்படி ஏழையின் பசியைத் தீர்ப்பார்கள் என்று புரியவில்லை! அவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் துளிர்த்தன…