வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கருமேகங்கள் கூட்டம் காற்றிலடிக்கப்பட்டு வானத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. காற்றுவேறு சுழன்று சுழன்று அடித்தது. கல்லூரி வளாகத்துள் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விடைதருவிழா நடந்து கொண்டிருந்தது. கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் படித்து முடித்துவிட்டுச் செல்லும் மாணவர்களுக்குப் பல்வேறு விதமாக அறிவுரைகளைக் கூறினர்.
அனைத்துப் பேராசிரியர்களும் பேசி முடித்த பின்னர் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைக் கூறத் தொடங்கினர். அந்த இளங்கலை வகுப்பில் இருபத்தைந்து பேர் படித்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் உதவும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
அன்றுடன் அவர்களுக்கு வகுப்புகள் முடிந்தது. இனி அவர்கள் தேர்வுக்கு மட்டுமே வருவார்கள். பின்னர், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதென்பது இயலாத ஒன்று விடைதருவிழாவில் பேசிய மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனைவருமே அழுதனர்.
கவலையின்றி முடிந்த அந்தக் கல்லூரிப் பருவம் முடிவுற்றது. அவர்களுக்குத் துன்பந்தருவதாக இருந்தது. வெளியில் காற்று சுழன்றடிப்பதைப் போன்று இவர்களின் உள்ளங்களில் பிரிவெனும் காற்று சுழன்றடித்தது.
விழா நிறைவுக்கு வந்து மற்றவர்கள் களைந்து சென்றனர். ஆனால் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் யாரும் களைந்து செல்லவில்லை. மனம் விட்டுப் பேசிக் கொண்டனர். அவர்களுள் வகுப்புத் தலைவனைப் போன்றிருந்த ஒருவன் எழுந்து, “நண்பர்களே இந்த நாள் நம் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். இனிமேல் நாம் எப்போது எங்கே சந்திப்போம் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆண்டுதோறும் நாம் சந்தித்துப் பேசலாம் என்றாலும் நம் ஒவ்வொருவர் சூழலும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது… அனைவரும் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் இதே மார்ச்சு மாதம் மூன்றாம் தேதி வந்து சந்திக்க வேண்டும். அப்போது ஒவ்வொருவருடைய முன்னேற்றத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது என் உள்ளத்தில் எழுந்த ஆசை. நம்முடைய நட்பு இத்துடன் முடிந்து போய்விடக் கூடாது. வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். நான் சொல்றது ஒங்களுக்குச் சரின்னு பட்டா அனைவரும் இன்று உளமாறச் சத்தியம் செய்து உறுதி எடுத்துக் கொள்வோம்” என்று பேசிவிட்டு அமர்ந்தான்.
அவனது கூற்றை அனைவரும் ஆமோதித்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக அனைவருக்கும் முன்பாக வந்து இன்னும் பத்தாண்டுகள் கழித்து இதே மார்ச் மாதம் மூன்றாம் தேதி இக்கல்லூரிக்கு வருகை தருவேன். அன்று முழுவதும் கல்லூரியிலேயே இருந்து மற்றவர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வேன். இது சத்தியம்” என்று உணர்ச்சி பொங்கச் சத்யம் செய்தனர்.
வகுப்பில் உள்ள ஒவ்வொருவரும் தத்தம் டைரியிலும் ஆட்டோகிராபிலும் அந்தச் செய்தியைக் குறித்துக் கொண்டனர். இதனைப் பார்த்த அனைததுப் பேராசிரியர்களும் வியந்தனர். அவர்களின் நட்பினைப் பாராட்டினர்.
ஒருவருடன் ஒருவர் பிரியமுடியாத நிலையில் பிரிந்து சென்றனர். அடுத்தடுத்த காலங்கள் விரைந்து சென்றன. தேர்வுகளும் முடிந்தன. வானில் பறக்கும் சுதந்திரமான பறவைகளைப் போன்று அனைவரும் திசைக்கொருவராய்ப் பிரிந்து சென்றனர். கூடிக் கலந்த இதயங்களும் இதயச் சுமைகளுடன் கலைந்து சென்றன.
காலங்கள் மாறின. காட்சிகளும் மாறின. பத்தாண்டுகள் உருண்டோடியதே தெரியவில்லை. அன்று பத்தாண்டு நிறைவுற்று நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் மார்ச் மூன்றாம் நாள்.
அன்று கல்லூரியில் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வழக்கம்போல் மாணர்வள் தேர்வறைக்கு விரைந்து சென்று கொண்டிருந்தார்கள். எப்போதும் போல கேண்டின்காரர் மசால் வடைபோட்டுக் கேட்கும் மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அக்கல்லூரியின் வளாகத்திற்குள் ஆட்டோ ஒன்று நுழைந்தது. அதிலிருந்து கூங்கிளாஸ் அணிந்த வாட்டசாட்டமான முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் இறங்கினான். ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தான். கல்லூரிக் கேட்டின் அருகே ஆடைகள் கிழிந்து தலையெல்லாம் சடை வைத்துப் பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருந்தான். கேண்டீன் அருகே வந்தவுடன் அங்கிருந்த பெரியவரைப் பார்த்து, “ஐயா வணக்கம்! என்னைத் தெரியுதா? நான்தான் நாகராசன்… இந்தக் கல்லூரியில பத்து வருஷத்துக்கு முன்னால மாணவர் செயலரா இருந்தேன். ஞாபகம் இருக்கா…” என்றான்.
அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த கேண்டீன்காரப் பெரியவர், “அடடே…நல்லா ஞாபகம் இருக்கப்பா… ஆமா நல்லா இருக்கியா...? ஒன்னோட படிச்சவங்கள்ளாம் எப்படி இருக்காங்க… நீ என்னப்பா பண்றே…? என்று சரமாரியான கேள்விக்கணைகளால் அவனைத் துளைத்தெடுத்தார்.
மேலும் அவனிடம் வடையையும் டீயையும் கொடுத்து உபசரித்துக் கொண்டே ஏதோ கதை கேட்கத் தயாராவதுபோல் அவனருகே வந்தமர்ந்தார். அவரது உபசரிப்பில் மகிழ்ந்துபோன நாகராசன் பழைய நினைவுகளில் மூழ்கியவனாகத் தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கினான்.
“ஐயா நான் நல்லா இருக்கேன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜரா இருக்கேன். கலியாணம் ஆகி ஒரு குழந்தை. ஒங்களையெல்லாம் பார்க்க எனக்குச் சந்தோசமா இருக்குது. இந்தக் கல்லூரியில அறிந்த முகம் யாராவது தென்படமாட்டாங்களான்னு நெனச்சேன். ஒங்களப் பாத்துட்டேன். பத்து வருசஷத்துக்கு முன்னாடி நாங்க இங்க இருபத்தஞ்சுபேரு படிச்சோம். படிப்பு முடிஞ்ச நாள்ல இங்க பத்து வருஷம் கழிச்சு அனைவரும் வந்து சந்திப்போம்னு ஒவ்வொருத்தரும் சத்தியம் பண்ணிக்கிட்டோம்…இப்ப நான் மொத ஆளா வந்துருக்கேன்…வேற யாராவது எனக்கு முன்னால வந்தாங்களா…?”எனக் கேட்க,
கேண்டீன்காரர், “இல்ல தம்பி நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்க… கொஞ்ச இங்க இருங்க... சாருங்களுக்கு டீக்கொடுத்துட்டு வந்துடறேன்…”என்று கூறிக்கொண்டே டீக்கேனை எடுத்துக் கொண்டு சென்றார்.
நாகராசன் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே அவன் படித்த வகுப்பறையைப் பார்க்க வந்தான். அங்கு தேர்வு நடந்து கொண்டிருந்ததால் பேசாமல் கேண்டீனுக்கே வந்து அங்கு கிடந்த சேரில் அமர்ந்தான்.
அப்போது தேவதை போன்ற பெண்ணொருத்தி அவனை நோக்கி வந்தாள். வந்தவள் அவனையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். நாகராசனும் அவளை உற்றுப் பார்த்தான். பார்த்துவிட்டு, “நீ…நீங்க…நிர்மலாதானே…” என்றான். அவளும்…”நீ…நீங்க நாகராசன்தானே…” என்று விழிகள் மலர ஆச்சரியத்துடன் கேட்டாள்.
இருவரும் வகுப்புத் தோழர்கள். அவள் நாகராசனைப் பார்த்து, “நீங்க எப்ப இங்க வந்தீங்க…? என்றாள்.
“நான் வந்து ஒரு மணி நேரமாச்சு… நாம எல்லோரும் பத்துவருஷம் கழிச்சு இன்னக்கிச் சந்திக்கணும்னு முடிவு பண்ணினோம். ஞாபகம் இருக்கா” என்றவாறு நாகராசன் நிர்மலாவைப் பார்த்தான்.
“என்ன அப்படிக் கேட்டுட்டீங்க… அதனால்தான நான் வந்துருக்கேன்...” என்று கூறிய நிர்மலா தான் பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தன்னைப் பற்றிக் கூறினாள்.
அவர்களிருவரும் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்து வந்தனர். அவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள் பலரும் பணிநிரவலில் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தனர். யாரையும் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு இடமாகச் சுற்றிப் பார்த்ததில் அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவர்கள் இருவரும் கேண்டீனுக்கு வந்து அங்கிருந்த உணவுப் பொட்டலம் இரண்டை வாங்கிப் பிரித்து உண்ணத் தொடங்கினர்.
அப்போது அவர்கள் பார்த்த பிச்சைக்காரன் பசிக்கிறக்கத்தோடு கேண்டீனையே வைத்த கண் மாறாது பார்த்துக் கொண்டிருந்தான். அவனையும் அவனது தோற்றத்தையும் பார்த்த இருவருக்கும் மனம் சற்று கலங்கியது. கேண்டின்காரரிடம் மேலும் ஒரு பொட்டலத்தை வாங்கி அப்பிச்சைக்காரனை அழைத்து நிர்மலா கொடுத்தாள்.
முதலில் அவன் பேசாமல் கீழே குனிந்தவாறே இருந்தான், அடர்ந்த தாடி அவனது முகத்தையே மறைத்திருந்தது. சடையுடன் கூடிய தலைமுடியும் அழுக்கடைந்து போன ஆடையும் அவனின் பரிதாபகரமான நிலைக்குச் சான்று பகர்வனவாக இருந்தது. அவன் பொட்டலத்தை முதலில் வாங்காது மறுத்தாலும் நிர்மலாவும் நாகராசனும் வற்புறுத்தவே வாங்கிக் கொண்டான். அதனைக் கேண்டீனில் வைத்து உண்ணாது வயரிலருகிலேயே சென்று அமர்ந்து உண்டான்.
மீண்டும் வந்தமர்ந்த நிர்மலாவைப் பார்த்த நாகராசன், “ஆமா நிர்மலாஇந்த ஊர்லயே இருந்த நம்ம சந்திரன் கூட இன்னக்கி வரல பாரு… அன்னக்கி அவன்தான் எல்லாரையும் சத்தியம் பண்ண வச்சான்… எல்லாருக்கும் நல்லா ஒதவுனான்… அவன் கூட இன்னிக்கு வரலன்னா பாரு… என்ன… பிரண்ட்ஷிப்…? என்று அலுத்துக் கொண்டான்.
அதற்கு நிர்மலா, “இல்ல நாகராசன் சந்திரன் ரொம்ப நல்லவரு….அவருக்கு இப்ப என்ன மாதிரியான சூழலோ?.எல்லாரும் ஒரேமாதரியான சூழல்லயா இருக்கோம்… எத்தனைபேரு இன்னக்கி வரணும்னு நினச்சாங்களோ...? இல்ல நாம வர்ரதுக்கு முந்தி யாராவது வந்து பார்த்துட்டுப் போயிருக்கலாமில்ல…” என்றாள்.
“ஓஹோ… அப்படியும் இருக்கலாமில்ல… ஆனா யாரையும் பார்த்ததா கேண்டீன்காரர் சொல்லலியே… நான் வந்தபோது கல்லூரி வாசல்ல அந்தப் பிச்சைக்காரன் மட்டுமதான் ஒக்காந்துக்கிட்டிருந்தான்…” என்றான் நாகராசன். அவன் கூறியதுபோலவே கேண்டீன்காரரும் சொன்னார்.
நிர்மலாவும் நாகராசனும் தங்கள் முகவரி, கைப்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டனர். நேரம் சீக்கிரம் ஓடியது… மாலை 5.30 மணியாகிவிட்டது.
“நிர்மலா இனிமே யாரும் இங்க வரமாட்டாங்க… சரி வாங்க நாமபோவோம்…” என்று கூறிய நாகராசன் தனது முகவரி அட்டையையும், நிர்மலாவின் முகவரி விபரங்களையும் ஒரு தாளில் எழுதி யாராவது வந்தால் கொடுக்குமாறு கேண்டீன்காரரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினர்.
கிளம்பிச் செல்லும்போது கல்லூரி வாசலில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்த பிச்சைக்காரனுக்குச் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு ஆட்டோவில் சென்றனர்.
அவர்கள் இருவரும் போவதையே பார்த்துக் கொண்டிருந்த பிச்சைக்காரனின் கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவன் அழுதவாறே, ”நல்லவேளை நான்தான் சந்திரன் என்று என் நண்பர்களால் என்னை அடையாளம் காணமுடியவில்லை. கண்டுபிடித்திருந்தால் எந்தளவுக்கு வருந்தியிருப்பார்கள்… என் நண்பர்களாவது நன்றாக இருக்கட்டும்… அவர்களுக்கு எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது… என் வாழ்வில் நடந்த சீரழிவுகள் எனக்குள்ளேயே புதையுண்டு போகட்டும்… சரிவிலிருந்து மீண்டு மீண்டும் என் நண்பர்களைச் சந்திப்பேன்… இன்னக்கி என்னோட நண்பர்கள் இரண்டு பேரை சந்தித்ததே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு… ” என்று எண்ணமிட்டவாறு வானத்தை நோக்கிக் கைகூப்பினான் சந்திரன்.
அவனை ஆசிர்வதிப்பதைப் போன்று வானத்திலிருந்து மழைத்துளிகள் மண்ணில் விழத் தொடங்கின…