மதியம் தூங்கக் கூடாது என்ற முடிவுடன் கொட்டாவியை அடக்கிக் கொண்டு மேஜை மீது இருந்த அன்றைய பேப்பரை புரட்டியவளுக்கு அந்தப் பக்கத்தில் சிரித்த முகத்துடன் இருந்த அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் சட்டென்று தூக்கம் கலைந்தது. திக்கென்று இருந்தது… ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை… மீண்டும் ஒருமுறை புகைப்படத்தை உற்றுப் பார்த்தேன் அந்தக் கண்களையும் சிரிப்பையும் பார்த்ததும் சட்டென்று பொறி தட்டியது. ஆனால் …. பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்ததும் உறுதியாகிவிட்டது… இது… நம்ம மணிதான். சுமார் இருபது வருடங்களில் முகம் சற்று உப்பி அகண்டு இருந்தது.
ஆழ்மனத்தின் ஏதோ ஒரு கடைக்கோடி மூலையில் ஆழமாகத் தோண்டிப் புதைத்து இறுக்கமாக மூடி வைத்திருந்த நினைவுகள் கரையைத் தாண்டிய சுனாமி அலைகளாகப் பீறிட்டு எழுந்து என்னைத் திக்குமுக்காடச் செய்தது.
மீண்டும் ஒருமுறை பேப்பரைப் பார்த்தேன். அம்மா பாத்திருப்பாளோ… அம்மா பேப்பர் படிக்க மாட்டாள். அப்பா கண்டிப்பாகப் பாத்திருப்பார். அப்பா அம்மாகிட்ட நிச்சயமா சொல்லியிருக்க மாட்டார்.
மாமா பாத்திருப்பாரா…? மாமா நினைவு வந்ததும் கூடவே மாமியின் நினைப்பும் சேர்ந்து எழுந்தது. என் அக்காவைப் பெண் பார்க்க வந்த போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் அப்பா மாமாவை அறிமுகம் செய்து வைத்தார். மாப்பிள்ளை பக்கத்தில் வயதான ஒருத்தர் மாமாவிடம் எங்க வேலை, எத்தனை பசங்க என்று விசாரித்த போது சற்றும் தயக்கமின்றி எனக்கு ஒரே பொண்ணு. மாப்பிள்ளைக்கு அமெரிக்கால வேலை. அங்கேயே செட்டிலாயிட்டா… என்றதைக் கேட்டதும் பக்கென்றிருந்தது எனக்கு. ஏதோ அவசர வேலையாய் உள்ளே போன மாமியின் பின்னால் நானும் போனேன். சமையலறையின் மூலையில் போய்ப் புடவைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு திரும்பிய மாமியின் முகம் சாதாரணமாயிருந்தது.
இருபது வருஷத்துக்கு முன்னால மாமாவும் மாமியும் வீட்டுக்கு வந்த அந்த நாள் இன்னும் நன்றாக நினைவிருந்தது. அப்பாவும் மாமாவும் மைத்துனன், மாப்பிள்ளை என்ற உறவுக்கும் மேல் நல்ல நண்பர்கள். அவர்களுக்கிடையே இருந்த நட்பு உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரசித்தம்.
பள்ளிக்கூடத்திலிருந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த நான் கூடத்தில் அவர்களைப் பார்த்ததும், ஹை மாமா மாமி... என்று துள்ளிக் கொண்டு ஓடி வந்தேன். அம்மா கையைப் பிடித்து இழுத்துப் போய் பால் குடிச்சுட்டு ரூமுக்கு போய் எதையாவது படிச்சிண்டிரு... பெரியவங்க பேசற இடத்திற்கு வராதே என்று தேவையில்லாமல் அதட்டியது வினோதமாய் இருந்தது. அப்போதுதான் மாமியின் அழுது சிவந்த முகத்தையும் மாமாவின் இறுக்கமான முகத்தையும் பார்த்துவிட்டு மேலே ஏதும் பேசாமல் உள்ளே ஓடிவிட்டேன். இருந்தாலும் கூடத்திலிருந்து அவ்வப்போது மாமியின் விசும்பலும், மாமாவின் சில சமயம் கோபமான, சில சமயம் தழுதழுத்த குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. ரூமுக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டவள் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கதவருகே காதை ஒட்ட வைத்துக் கேட்டபோது…
பொறுக்க முடியல எனக்கு தியாகு... நேத்திக்குப் போட்டு அடி சாத்திட்டேன். இன்னிக்கு என்னடானா நாலு பக்கத்துக்கு லெட்டர் எழுதி வெச்சுட்டுக் கெளம்பிட்டான். இதோ இவ அழுகையைக் காண எனக்கு சகிக்கலே... நா என்ன பண்ணுவேன் சொல்லு தியாகு... சைக்கியாட்ரிச்டுட கூட்டிண்டு போயி வைத்தியம் பார்க்கக் கூடத் தயாரா இருந்தேன். நாலஞ்சு வருஷமா நா படற வேதனை ஒனக்குத் தெரியாது. ஸ்கூல்ல டீச்சர் கூப்பிட்டு உங்க பையனைக் கண்டிச்சு வைங்கோ… பசங்களைவிட பொண்ணுங்க கூடத்தான் அதிகம் பழக்கமுன்னு சொன்ன போது பொறுக்கித்தனம்னு கண்டிச்சேன். நாளாக நாளாக இவன் நடத்தை எனக்கே ஒரு மாதிரி இருந்தது. வெளில தலை காட்ட முடியல. பசங்கள் எல்லாம் கிண்டல் பண்றாம்மான்னு இவ மடியில் படுத்துண்டு அழறவனைப் பாத்து எனக்கு பாவமாவும் இருக்கும், பத்திண்டும் வரும்.
நா என்ன பாவம் பண்ணேன் தியாகு… எனக்கு மட்டும் ஏன் இப்படி…?
மாமாவின் பேச்சைக் கேட்டதும் மணியைப் பற்றித்தான் என்று புரிந்து போனது… மணி படிப்பில் ரொம்ப கெட்டி. படம் வரைவதில் கில்லாடி. என்னுடைய டிராயிங் நோட்டில் நான் எக்செலண்ட் வாங்கிய படமெல்லாம் மணி போட்டுக் கொடுத்ததுதான். ஆனா நாளாக நாளாக எனக்கே அவன் பேசறது , நடந்துக்கறது ஒரு மாதிரி வித்யாசமாக இருக்கும். என்னன்னு சொல்லத் தெரியல... கண்ணாடி முன்னாடி அதிக நேரம் நின்னு தன்னையே உத்து உத்து பாத்துப்பான். ஒரு முறை லீவுக்கு மாமா வீட்டிற்கு போயிருந்த போது, மாமியும் அம்மாவும் பக்கத்த் கோயில்ல கச்சேரிக்கு போயிட்டா. அப்பாவும் மாமாவும் வாக்கிங் போயிட்டா. மாமா பெண் ஹரிணி டியூசன் போயிருந்தாள். வீட்டில் மணியும் நானும் மட்டுமே. நான் பக்கத்து வீட்டில் உள்ள பெண்களோடு அரட்டைக் கச்சேரியில்… தண்ணி குடிப்பதற்காக வீட்டுக்குள் வந்த போது ஹாலை ஒட்டியிருந்த ஹரிணியின் ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது. கதவு ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. சாத்தியிருக்கும் கதவைத் தட்டி விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்ற ‘நாகரிகம்’ தெரியாத அந்தக் கால நான் இந்த நேரத்தில் லைட் என்ன என்று அணைப்பதற்காக கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனவள் போன வேகத்தில் ஓடி வந்துவிட்டேன். ஹரிணியின் பாவாடை, தாவணியில், கையில் வளையலும், நெற்றியில் பொட்டுமாய் கண்ணாடி முன் சுற்றிச் சுற்றித் தன் அழகை ரசித்துக் கொண்டிருந்த மணி… சில நொடிகளில் வெளியே வந்த மணியின் முகத்திலும் கலவரம்… என்னிடம் அவன் ஒன்றும் பேசவில்லை என்றாலும் அதற்குப் பின் எனக்கும் அவனுக்கும் தர்மசங்கடமான ஒரு இடைவெளி நிரந்தரமானது… ஏனோ இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று தோன்றியது… சொன்னால் மணி திட்டு வாங்குவானே என்று பச்சாதாபம் வேறு… அதற்கும் மாமா , மாமி இப்போ அழுவதற்கும் உள்ள தொடர்பு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது அப்போது.
எத்தனை பெயிண்டிங், எத்தனை சர்டிபிகேட்ஸ் … பக்க பாக்க ஆற்றாமையா இருக்கு எனக்கு… என் பிள்ளை மட்டும் ஏன் இப்படி…. கண்ணில் கண்ணீருடன் மாமாவின் அரற்றலுக்கு அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை…
சரி வாசு… இப்படியே புலம்பிண்டிருந்து என்ன பிரயோஜனம். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தியா - அப்பா.
கைத்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட மாமா… எதுக்கு கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும். ஏன் போனான்னு நமக்குத் தெரியும். விலாவரியா லெட்டர் எழுதி வெச்சுட்டு போயிருக்கான். இந்த லெட்டரைப் போலிசுக்கிட்ட காமிச்சு அவா கேக்கற கேள்விக்கு வேற பதில் சொல்ல முடியுமா என்னால…
வெறித்த பார்வையுடன் “பிள்ளை இல்லன்னு ஆயிடுத்து எங்களுக்கு… அவ்வளவுதான் …” மாமியிடமிருந்து பெரிய விம்மல். புடவைத் தலைப்பைச் சுருட்டி வாயில் அடைத்துக் கொண்டவளின் பக்கத்தில் போய் அணைத்துக் கொண்டாள் அம்மா.
அதற்கப்புறம் சொல்லி வைத்தாற்போல் மணியைப்பற்றி யாரும் எதுவும் பேசியதேயில்லை… இரண்டே மாதங்களில் வடக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு போன மாமா ஹரிணி கல்யாணத்திற்கப்புறம் தான் சென்னையில் வீடு வாங்கிக் கொண்டு செட்டிலானார்.
சமயத்தில் மணி என்று ஒருத்தன் இருந்தானா என்பதே கனவு போல் இருக்கும் எனக்கு… இன்றைய பேப்பர் செய்தியும் புகைப்படமும் விரிப்பின் கீழ் தள்ளப்பட்ட குப்பை விஸ்வரூபம் எடுத்தது போல் என்னைப் பார்த்து சிரித்தது…
இருபது வருட காலத்தில் மணி… இல்லை... இல்லை… மாலா, வீட்டை விட்டு வெளியேறியதும் பட்ட துன்பங்களையும் எதிர்கொண்ட அவமானங்களையும் நான்கே வரிகளில் கோடிட்டிருந்தார் நிருபர். இப்போது மாலா வரைந்த படங்கள் சர்வ தேச ஓவியக் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையும் கண்காட்சிக்காய் மாலா அடுத்த மாதம் வெளிநாடு செல்லவிருப்பதுமே செய்தி…
மணியைப் பற்றி என் கணவரிடம் கூட நான் ஒன்றுமே சொன்னதில்லை என்று நினைவுக்கு வந்தது… சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவார்... ஊகிக்க முடியவில்லை… சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு… எப்போது குழப்பம் வந்தாலும் நான் எந்த முடிவும் எடுப்பதில்லை. நிகழ்ச்சிகளை அதன் போக்கில் விட்டு விடுவேன். அது போல அவர் சாயங்காலம் ஆபீசிலிருந்து வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் … அப்ப சொல்லணும்னு தோணினால் சொல்லலாம் . இல்லாட்டா விட்டுடலாம்…
ஆனால் நாள் முழுக்க மனம் ஏதோ பரபரப்பாகவே இருந்தது. வேலையெல்லாம் முடித்துவிட்டு டிவி முன் உட்கார்ந்து கொண்டு சானல் சானலாகத் தாவிக் கொண்டிருக்கையில் காலிங் பெல் கேட்டுக் கதவைத் திறந்தேன்.. அலுப்புடன் சோபாவில் அமர்ந்தவருக்கு காபி கொண்டு வந்த போது.. “என்ன குப்பை ப்ரொக்ராம் பாத்திண்டிருக்க என்று எரிச்சலுடன் இவர் கேட்டதும் தான் டிவியைப் பார்த்தேன். திருநங்கைகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஊர்வலத்தில் ஒரு திருநங்கை ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்… டக்கென்று சானலை மாற்றிய கணவரிடம் ஒன்றும் பேசவில்லை நான்.
இருபது வருடம் கழித்து வெளியே வந்த மணி மன ஆழத்திற்கு மீண்டும் சென்று விட்டான்.