இன்னக்கி எப்படியாச்சும் வாங்கீரணும்…பாவம் இந்தப் புள்ள… என்னக்குங் கேக்காத புள்ள இன்னக்கி வாயத் தொறந்து எனக்குத் துணி வாங்கிக் கொடும்மான்னு கேட்டுருச்சு… நானென்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்… எங்க தலை எழுத்து… அந்த மனுசன் மட்டும் உசுரோட இருந்திருந்தா... இப்படி கண்கலங்க விட்ருப்பாரா…? பாழாப்போன விஷக்காச்ச வந்து அப்படியே வாரிக்கிட்டுப் போயிருச்சு... என்ன பண்ணித் தொலைக்கறது…ம்... ஹூம்…ம் எல்லாந் தலையெழுத்து” என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே தான் வேலைபார்க்கும் வள்ளிக்கண்ணு அம்மாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் தவமணி.
அவளைக் கண்ட வீட்டுக்கார அம்மா வள்ளிக்கண்ணு, “என்னடி தவமணி இப்புட்டு நேரங்கழிச்சு வர்றே… ரொம்ப யோசனையோட இன்னக்கி வந்திருக்க… என்ன சங்கதி..” என்று கேட்டாள்.
அதனைக் கேட்ட தவமணிக்கு கேட்போமா... வேண்டாமா…? என்ற தயக்கம் வர மனதைத் திடப்படுத்திக் கொண்டு, “ஆமாம்மா…எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது… அவசரமா முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. என்னோட அடுத்த மாசச் சம்பளத்துல புடிச்சுக்குங்கம்மா.” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.
அதைக் கேட்ட வள்ளிக்கண்ணம்மாள் நீலியாகி விட்டாள். “ஆமாண்டி, நீ பத்தாயிர ரூபா சம்பள வாங்குற... அதுல முன்னூறு ஓவா பிடிச்சுக்கணுமாம்ல… போடி போக்கத்தவளே… ஏற்கனவே நெறய அட்வான்ஸ் வாங்கி இருக்க... அதெல்லாம் பிடிச்சது போக இப்ப வேற மூன்னூறு ருபா பிடிச்சுட்டா அப்பறம் அங்க என்னத்த இருக்கு… பெரிசா… கடங் கேக்க வந்துடா…” என்று எண்ணெயில் போட்ட கடுகைப் போன்று பொறிந்து தள்ளினாள்.
வள்ளிக்கண்ணு மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட தவமணிக்குச் அவளின் பதில் முகத்திலடித்தாற் போல் இருந்தது.
இருப்பினும் தன்னுடைய மன வேதனையை வெளிக்காட்டாது, “என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாளு வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்ல, அக்கம்பக்கத்துல இருக்கற புள்ளங்ககிட்டல்லாம் வேற சொல்லி வச்சிருக்காம். அதென்னவோ லக்கின்சுன்னு சுடிதார் ஒண்ணு வந்திருக்காமே... அத வாங்கணுமாம். பாவம் சின்னப்புள்ள ஆசப்படுறா… அதான் வாங்கிக் கொடுக்கலாமேன்னு…” என்று மென்று முழுங்கினாள் தவமணி.
“அடிப்போடீ இவளே… பொட்டப்புள்ளங்க அப்படித்தான் கேட்டுக் கண்ணக் கசக்கும். அடம்புடிக்கும்... இப்படியே அந்தப் புள்ள கேக்கறதுக்கு எல்லாத்துக்கும் வளஞ்சு வளஞ்சு போனீயான ஒம்பாடுதான் திண்டாட்டமாப் போயிரும்… சொல்லிப்புட்டேன். வீட்டோட சூழலத் தெரிஞ்சுக்க வேண்டாமா? லக்கின்சு… கிக்கின்சுன்னுக்கிட்டு… மொதல்ல ஒம்மவளுக்கு எதுக்கு இப்ப புதுத் துணி? பாப்பாவோட துணியெல்லாம் அவளுக்குத்தானே தர்றேன். ரெண்டு மூணு தடவையே போட்டதெல்லாம் கூட புதுசு போலக் கொடுத்துருக்கேனே. அதுல ஒண்ணப் போட்டுக்கச் சொல்லு கடன வாங்கி புதுசெல்லாம் வாங்கிக் கொடுக்காதே” என்றாள் வள்ளிக்கண்ணு.
“நீங்க சொல்றதெல்லாம் சரிதாம்மா… பொறந்த நாளுல புதுசு கட்டினாத்தானே நல்லா இருக்கும்… பழசப் போட்டுக்கிட்டா… மனசுக்கு ஒரு மாதிரியா இருக்குமா…? இருக்காதாம்மா” என்று அப்பாவியாய்க் கேட்டாள் தவமணி.
“ஆமாடி கேவலம் நீ முன்னூறு ரூபாய்ல வாங்குற புதுத் துணியவிட மூவாயிர ரூபா ட்ரெஸ்ஸை போடறது ஒம்மவளுக்குக் கசக்குதாமா?” என்று பொங்கினாள் வள்ளிக்கண்ணு.
‘அப்படில்லாம் இல்லம்மா… நீங்க… தெனம் தெனம் மிஞ்சின பிரியாணியும், கறி சோறும் கொட்டிக் கொடுத்தாலும், வீட்டில ஒரு வா கஞ்சி வச்சுச் சூடா உறிஞ்சுக் குடிக்கிறதுதாம்மா... எங்களப் போன்றவங்களுக்குத் தேவாமிர்தம்” என்று சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் தவமணி தன்னுடைய வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.
“எல்லாம் உன் நல்லதுக்குதான் தவமணி சொல்றேன். பொம்பளப் புள்ளங்களுக்கு ரொம்ப இடம் கொடுத்துறக் கூடாது… ஆமா… இன்னிக்கு கஷ்டந் தெரியாம அதக் கொண்டா இதக் கொண்டான்னு கேட்கிற மாதிரியேதான் கட்டிக்கிட்டுப் போனபிறகும் இருக்குங்க என்ன” என்று தவமணியின் பின்னாடியே வந்து அவளைச் சமாதானம் செய்வதைப் போன்று வார்த்தைகளைக் கொட்டிச் சென்றாள் வள்ளிக்கண்ணு.
இரண்டு நாட்கள் சென்றிருக்கும். துணிகளை ஒவ்வொன்றாக வாஷிங் மிஷினில் போட்டுக் கொண்டிருந்த தவமணி, வீட்டு எஜமானரின் சட்டைப் பையில் ஏதோ தட்டுப்பட கைவிட்டுப் பார்த்தாள். மொடமொடப்பாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். நேராக பகல்நேரத் தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்த வள்ளிக்கண்ணுவின் முன்பு வந்து ரூபாய் நோட்டுக்களை நீட்டினாள்.
“அம்மா சாரோட சட்டைப் பையில இருந்துச்சும்மா. தொவைக்கிறதுக்கு சட்டையக் கூடையில போடும் போதே பாத்துப் போடுங்கம்மா.” என்று கூறியவாறு வள்ளிக்கண்ணுவிடம் கொடுத்தாள். அசடு வழிய நோட்டுக்களை வாங்கிக் கொண்ட வள்ளிக்கண்ணு, “நல்ல வேளை, நீ பார்த்துட்டே…இல்லைன்னா ஆயிரம் ரூவாயும் அப்படியே வீணாப் போயிருக்கும்…” எனப் பல்லைக் காட்டிக் கொண்டு நெளிந்தாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பம்பரமாய்ச் சுழன்று அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு தவமணி வீட்டிற்குக் கிளம்புகையில் வள்ளிக்கண்ணு அவளை அழைத்தாள்.
“தவமணி ... அன்னைக்குக் கேட்டியில்ல… முன்னூறு ரூபா… இப்ப இந்தா ஐநூறு ரூவாய.. வச்சுக்க...” என்று நீட்டினாள்.
“பொண்ணுக்கு துணி வாங்கவா? வேண்டாம்மா. எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல வேலைக்காரம்மா லீவு போட்டிருச்சு. நாலஞ்சு நாள் அங்கே செய்யறதா ஒத்துட்டிருக்கேன். கணிசமா தருவாங்க. அதுல சமாளிச்சுப்பேன்.”
“அன்னிக்கு எடக்கு முடக்கா ஏதோ சொல்லிட்டேன்னு ராணியம்மாக்குக் கோவமாக்கும்?”
“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்கம்மா. ஆனாப் பாருங்க. இந்த வெள்ளி வந்தா பொண்ணுக்குப் பன்னெண்டு முடியுது. அறியா வயசு. ஒரு நா அதுக்குப் புரியும் என் சிரமம். நாமளும் இதெல்லாம் தாண்டி வந்தவங்கதானே. அடம் வளரும்னு நீங்க பாக்கறீங்க. அது கண்ணுல தண்ணி வரப்படாதுன்னு இந்த தாய் மனசு பாக்குது. ஏழைப்பட்டவங்களுக்கு நாளு, கெழமை, பண்டிகை எதுவும் வராமப் போனா நல்லாருக்கும். ஆனா வருதே. போகுது விடுங்க. நாலு நாளு கூடுதலா கஷ்டப்பட்டது, எம்புள்ள கண்ணு மலர்ந்து சிரிக்கயில மறஞ்சு போகும். நீங்க சொன்னாப்ல மாசம் பிறந்தா கைக்கு வர கொஞ்சங் காசாவது உங்க பக்கம் நிக்கட்டும். வரேம்மா.”
என்று கூறிவிட்டு தனது வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள் தவமணி.
‘கடனா இல்லே… தவமணி… அன்பளிப்பாகத்தான் கொடுக்க வந்தேன்’ என்று சொல்லுவதற்கு வகையின்றி நின்றிருந்தாள் வள்ளிக்கண்ணு.
அவளுக்குத் தவமணியைப் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாகத் தெரிந்தது… அவள் முன் தானே ஏழையாகிப் போனது போல் உணர்ந்தாள் வள்ளிக்கண்ணு.