“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்….”
ஒலிபெருக்கியில் சீர்காழி கோவிந்தராசனின் குரல் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால் எங்கு பார்த்தாலும் விநாயகர் நீக்கமற நிறைந்து காட்சியளித்தார்.
நகரின் முக்கிய சாலையான கீழ இராஜவீதியின் இருமருங்கிலும் விநாயகர் பல அவதாரங்களை எடுத்து அடியவர்களுக்குத் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் புதுக்கோட்டை நகர் முழுவதும் விநாயகர் சிலைகளின் விற்பனை களைகட்டியிருந்தது. பொம்மை விற்கும் வியாபாரிகளை மக்கள் சூழ்ந்து கொண்டு விநாயகர் சிலைகளை வாங்கிக் கொண்டிருந்தனர். சந்திரனும், சசிகலாவும் தங்கள் செல்ல மகன் விக்னேஷைத் தூக்கி கொண்டு சாலையோரத்தில் இருந்த பொம்மைக் கடைகளை அலசி கொண்டிருந்தனர்.
சந்திரனுக்கும் சசிகலாவிற்கும் விநாயகர் இஷ்ட தெய்வமாவார். அவர்களுக்கு விநாயகரின் அருளால்தான் மகன் பிறந்தான். அதனாலேயே அவர்கள் தங்கள் மகனுக்கு விக்னேஷ் என்று பெயர் வைத்தார்கள். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் ஒரு விநாயகர் சிலையை வாங்கி வழிபாடு செய்வது அவர்களின் வழக்கமாக இருந்தது.
நாளை வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு நல்ல விநாயகர் சிலையொன்றை வாங்குவதற்காக வீட்டில் இருந்து மகனுடன் அவர்கள் கிளம்பியிருந்தார்கள். ஒவ்வொரு கடையாய் விசாரித்துக் கொண்டே வந்தார்கள். இரண்டு, மூன்று மணி நேரம் ஆகியும் அவர்கள் எதிர்பார்த்த விலையிலும், தரத்திலும் நல்லதொரு விநாயகர் சிலை அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
கொஞ்ச நேரத்திலேயே ஏதேனும் ஒரு சிலையை வாங்கி செல்வது என்று சந்திரன் முடிவு செய்து விட்டான். விநாயகர் என்ன கோவிச்சுக்குவா போறாரு?. ஏதாவது ஒண்ண வாங்கிட்டு வா சசி என்றான். அதற்கு அவள் “இங்க பாருங்க எதுக்கெடுத்தாலும் அவசரப் படாதீங்க. தெய்வ காரியத்துக்கு வாங்குறோம். பொறுமையா நல்லதாப் பார்த்துத் தானே வாங்க முடியும்” என்று சந்திரனின் வாயைச் சசிகலா அடைத்து விட்டாள்.
நேரம் செல்லச் செல்ல சந்திரன் ரொம்பவும் கடுப்பானான். விக்னேஷூம் சோர்வடைந்தான். பிறகு மூவரும் அருகில் இருந்த ஜூஸ் கடைக்குச் சென்று கரும்புச் சாறினை வாங்கி அருந்தி விட்டு மீண்டும் விநாயகர் சிலை வாங்கும் படலத்தைத் தொடர்ந்தனர். கரும்புச் சாறுக் கடையில் இருந்து நான்கு கடை தள்ளியிருந்த பொம்மைக் கடையில் இருந்த ஒரு சிலையை எடுத்துச் சசிகலா சந்திரனிடம் காட்டினாள். ரொம்ப நல்லாயிருக்கு என்றான் சந்திரன். அந்த நேரத்தில் புத்தர், இயேசு சிலைகளைச் சசிகலா காட்டியிருந்தால் கூட நல்லாயிருக்கு என்று தான் சொல்லியிருப்பான் சந்திரன்.
இருவருக்கும் அந்தச் சிலை பிடித்துப் போகவே கடைக்காரனிடம் விலையினைப் பேரம் பேசத் தொடங்கினர். கடைக்காரன் 450 ரூபாய் என்றான். சசிகலா 250 ரூபாய் என்று பேரம் பேச ஆரம்பித்தாள். 500 ரூபாய் கொடுத்தாவது இந்த சிலையை வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான் சந்திரன். கடைக்காரன் சசிகலாவிடம் இருந்த சிலையைப் பிடுங்கிக் கொண்டு “அம்மா இந்தமாதிரி நாங்க வித்தா தலையில துண்டப் போட்டுக்கிட்டுப் போக வேண்டியதுதான். ஏதோ கொஞ்சங் கொறச்சுக் கேப்பிங்கன்னு பார்த்தா முழுப் பூசணிக்காய சோத்துல போட்டு மறைக்கிறது மாதிரில்ல அடிமாட்டு விலைக்குக் கேக்குறீங்க… இந்தச் சிலைய வித்தா எனக்குப் பத்தோ இருபதோதான் கெடைக்கும்... அதவச்சி நான் எந்தக் கோட்டையக் கட்டப்போறேன்…நீங்க கேக்குற விலைக்கு நமக்குக் கட்டுபிடி ஆகாதும்மா…” என்றான்.
“ஹூம்… ஹூம்… கடவுளுக்குக் கூடப் பேரம் பேசக் கூடிய மக்கள் பெருகிப் போய்ட்டாங்க… எல்லாம் காலநேரத்தைத் தான் சொல்லணும்… என்னத்தச் செய்யிறது….” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான் கடைக்காரன். இதைச் சந்திரன் கேட்டதும் “ஆமா…மா…இந்தக் காலத்துல வியாபரிங்க எல்லாம் கடவுளையே வியாபாரப் பொருளாக்கிப் பணம் சம்பாதிக்க நெனக்கிறீங்கள்ள… அதெல்லாம் காலநேரமில்லாயாக்கும் ….” என்றான். இதனைக் கேட்ட கடைக்காரன் பேச்சைக் குறைத்துவிட்டுத் தனது வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான்.
மீண்டும் சசிகலாவிற்கும் கடைக்காரனுக்கும் பேரம் தொடர ஒரு வழியாக 350 ரூபாய் என்று பேசி முடித்து அந்தச் சிலையை வாங்கினாள் சசிகலா. கடைக்காரனுக்கும் ஒருவித மகிழ்ச்சி. கடைக்காரன் மகிழ்ச்சியுடன் சிலையை எடுத்துக் கொடுத்தான். இப்பொழுது சந்திரனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
அடுத்த நாள் காலையில் விக்னேஷூக்கு பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாறுவேடப் போட்டியை வைத்திருந்தனர். சந்திரனும் சசிகலாவும் யோசித்து யோசித்து மகன் விக்னேஷூக்கு விநாயகர் வேடம்போட்டுப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தனர். மகனுக்குப் பரிசு கிடைக்க வேண்டும் என்று மனதிற்குள் இருவரும் வேண்டிக் கொண்டனர்.
மாலையில் பள்ளி வேன் வந்ததும் அதிலிருந்து இறங்கி வந்த விக்னேஷ் வேகமாக ஓடி வந்து “அம்மா…” என்று கூப்பிட்டுக் கொண்டே வந்து சசிகலாவைக் கட்டி கொண்டான். சசிகலாவும், “ஏஞ்செல்லம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்துட்டியா….? ஆமா…ஸ்கூல்ல இன்னக்கி நடந்துச்சே மாறுவேடப் போட்டி அதில என்ன யாரு பரிசு வாங்குனாங்க….? என்று கேட்டாள்.
அதற்கு விக்னேஷ், “அம்மா நான் ஸ்கூல்ல நடந்த மாறுவேட போட்டியில் ஜெயிச்சுட்டேம்மா. முதல் பரிசு எனக்குத் தாம்மா. நீ காலையில போட்டு விட்ட விநாயகர் வேஷத்தால தாம்மா எனக்குப் பரிசு கெடைச்சது. எங்க டீச்சர் என்னை ரொம்ப பாராட்டுனாங்கம்மா” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
மகன் பரிசு வாங்கியதைக் கண்ட சசிகலா அவனை வாரி அணைத்து, “அப்படியா தங்கம், ரொம்ப சந்தோஷம் டா. அப்பாகிட்டச் சொல்லிட்டியா” என்றாள். “ம்ம்ம்.. சொல்லிட்டேனே” என்றான் விக்னேஷ். “நாம கும்பிடுற சாமி தான் உனக்குள்ள இருந்து உன்னை ஜெயிக்க வச்சுருக்காருப்பா” என்றாள் சசிகலா.
“என்னம்மா சொல்ற எனக்குள்ள சாமி இருக்காரா?” என்று குழந்தை மொழியில் புரியாமல் கேட்டான் விக்னேஷ். “ஆமாண்டா தங்கம். சாமி ஒனக்குள்ள மட்டுமில்ல எல்லாருக்குள்ளயும் இருக்காருடா” என்றாள் சசிகலா.
“ஆமா எல்லாருக்குள்ளேயுமா சாமி இருக்காரு?” என்று திரும்பவும் கேட்டான் விக்னேஷ். இதனைக் கேட்ட சசிகலா மகனைப் பார்த்து, “ஆமாப்பா எல்லாருக்குள்ளேயும் சாமி இருக்காருப்பா” என்று பதிலளித்தாள்.
“ஒனக்குள்ளயே சாமி இருக்காரு; அப்பாவுக்குள்ளேயும் சாமி இருக்காரு…எனக்குள்ளேயும் சாமி இருக்காரு… அப்புறம் ஏம்மா வேற ஒரு சாமியை வாங்க ரோடு ரோடா நேத்து நீயும் அப்பாவும் அலைஞ்சீங்க” என்றான் விக்னேஷ்.
சசிகலாவால் ஒன்றும் பேச முடியவில்லை. யாரோ தன்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு. தமிழிலக்கியம் படித்த அவளின் மனதில் திருமூலர் கூறிய, ”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்; தெள்ளத் தெளிந்தார்க்குச் சித்தம் சிவமயமாம்” என்ற திருமந்திரப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. சசிகலா பூஜையறையில் இருந்த விநாயகர் சிலையை நோக்கினாள். அந்தச் சிலை அவளைப் பார்த்து ஏளனம் செய்து சிரிப்பது போல் உணர்ந்தாள்.