மதுரை பெரியார் பேருந்து நிலையம். கூட்டம் அலைமோதியது. பகல் நேர வேலையாதலால் சூரியன் சுட்டெரித்தான். வெயிலில் வெளியூருக்குச் சிவராமனும் அவனது நண்பனும் சென்றுவிட்டு அலைந்து திரிந்து வந்ததால் அவர்களுக்குத் தாகம் எடுத்தது. பேருந்தை விட்டு இறங்கியதும் ஜில்லுன்னு ஏதாவது குடித்தால் இதமாக இருக்குமென்று தோன்றியது.
அதனால் எதிரில் தென்பட்ட மீனாட்சி குளிர்பானகம் கடைக்குச் சென்று அமர்ந்து இரண்டு லெமன் ஜூஸ் வரவழைத்துக் குடித்தனர். கடைக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருவரும் குடித்து முடித்தனர். வெயிலுக்கு அது சற்று இதமாக இருந்தது. அவர்களின் தாகவிடாயும் குறைந்தது.
வீட்டிற்குச் சென்று உண்பதற்கும் அங்கேயே கொஞ்சம் சாத்துக்குடியும் வாங்கிக் கொண்டான் சிவராமனின் நண்பன். மொத்தம் எவ்வளவு என்று கடைக்காரைப் பார்த்து சிவராமனின் நண்பன் கேட்டபோது அவர், “தம்பி அம்பத்தஞ்சு ரூவா ஆச்சு தம்பி” என்றார். அவன் தன்னிடம் இருந்த ஐந்நூறு ரூபாயை எடுத்துக் கடைக்காரரிடம் கொடுக்கவே, அவரோ, “தம்பி கோவிச்சுக்காம அம்பத்தஞ்சு ரூபாய் சில்லறையா இருந்தாக் கொடுங்க… இங்க சில்லறைக்குத் தட்டுப்பாடா இருக்கு தம்பி…” என்றார்.
சிவராமனின் நண்பன் தன் சட்டைப் பையிலும் பர்சிலும் தேடிப் பார்த்தான்… ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது.. ஐந்து ரூபாய் குறைந்தது…அவனிடம் ஐந்நூறைத் தவிர வேறு ரூபாயும் இல்லை… என்ன செய்வது என்று யோசிக்கையில் அவனது நண்பன் சிவராமனிடம் கேட்டுவிடுவோம் என்று தனது நண்பன் சிவராமனிடம், ”ஏண்டா சிவா அஞ்சு ரூவா சில்லறை வச்சிருக்கியா…?” என்று கேட்டதற்கு அவனோ, “இல்லடா..” என்று கூறவே அவனை இருக்கச் சொல்லிவிட்டு ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கால் மணிநேரம் வெயிலில் அலைந்து திரிந்து சில்லறை வாங்கி வந்து கடைக்காரரிடம் கொடுத்தான்.
பின்னர் பைக்கை எடுப்பதற்காக நகராட்சி வண்டி நிறுத்தும் இடத்திற்கு இருவரும் சென்றனர். அங்கு சென்று, “டேய் சிவராமா ரசீதக் கொடு என்று கேட்க அவனோ தனது பர்சை திறந்து அதில் இருந்த ரசீதை எடுத்துக் கொடுத்தான். சிவராமனின் நண்பனும் ரசீதைக் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சிவராமானையும் ஏற்றிக் கொண்டு வீட்டிற்குப் பைக்கில் சென்றான்.
சிறிது நேரத்தில் இருவரும் வீட்டை அடைந்தனர்.
வீட்டை திறந்து உள்ளே போகும் போதே சிவராமனின் நண்பனுக்குக் கோபம் வந்துவிட்டது. “டேய் சிவராமா, நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சங்ககூட நான் நெனச்சுப் பாக்கலைடா. கடையில சில்லறை இல்லைன்னு அஞ்சு ரூபா கேட்டதற்கு இல்லைன்னு ஒடனே சொல்லிட்ட. கால்மணி நேரம் வீணாப் போச்சு. அதைவிட வெயில்ல தேவையில்லாத அலைச்சல். டேய் நீ பர்சுலேர்ந்து ரசீதை எடுக்கும் போதுதான் உன் பர்சுல கசிங்கின அஞ்சு ரூபாய் இருந்ததை நான் பார்த்தேன்டா. அப்பறம் ஏன்டா நான் அஞ்சுரூபா இருக்காடான்னு கேட்டபோது கொடுக்காமா இல்லன்னு பொய்வேற சொல்ற…? ச்சே….உன்னை எவ்வளவு பெருமையா நெனச்சிருந்தேன். தெரியுமா.. நீ கிராமத்தில் இருந்து இங்க வந்தபோது, எங்கூடப் படிச்ச நண்பன் கஷ்டப்படக் கூடாதேன்னு ஒனக்கு எத்தனை உதவி செஞ்சிருப்பேன்.. இப்ப நீ ஒரு நல்ல வேலையில நல்ல சம்பளத்துல இருக்கிறே… நல்ல நண்பனாத் தான ஒன்னை நடத்தினேன். அப்புறம் எதுக்குடா இப்படிச் செஞ்ச? ஏன்டா? பதிலே பேசமாட்டேங்குறே? சொல்லுடா? எதவேணுன்னாலும் பொருத்துக்குவேன்… இந்த மாதிரி பொய்சொல்றது மட்டும் எனக்குப் பிடிக்காது…? ஆமா… நான் தெரியாமாத்தான் கேக்குறேன் என்னவிட அந்த அஞ்சுரூபா ஒனக்குப் பெரிசாப் போச்சா…? இல்ல யாராவது பொண்ணு கிண்ணு வந்து ஒனக்கிட்ட வச்சிக்கச் சொல்லிக் கொடுத்தாளா? சொல்லுடா?” என்று கடுங்கோபத்துடன் கேட்டுவிட்டேன்.
இவ்வளவு தூரம் அவனைப் பேசியிருக்க வேண்டாம். இருந்தாலும் அவன் பொய் சொன்னது அவனது மனதை என்னவோ புழுப் போன்று குடைந்தது. அதனால்தான் அதிகம் பேசிவிட்டான்.
சிவராமன் எதுவும் கூறாது அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டு மனமுடைந்த நிலையில் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். சிவராமனின் நண்பனும் கோபம் தீர்ந்த உடன் வந்துவிடுவான் என்று அமைதியாக அவனது அறையில் இருந்தான்.
கதவைச் சாத்திக் கொண்ட சிவராமன் கையில் கிடைத்த புத்தகத்தைப் புரட்டினான். அவன் மனம் அதில் செல்லவில்லை. அவனது நினைவுகள் ஆறு மாதங்களுக்குப் பின்நோக்கி நகர்ந்தது.
வேலை கிடைத்து முதல் முறையாக வீட்டிற்கு மூன்று மாதம் கழித்து சிவராமன் செல்கிறான். அவனது அப்பா பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
”யாருப்பா குமாரப்பட்டி இறங்குப்பா, இறங்கு” என்று கூறியவுடன் பேருந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மகனைப் பார்த்து “சிவராமா ! நல்லா இருக்கியா?” என்று கட்டிப் பிடித்துக் கொண்டு பையை வாங்கியபடி கேட்டார். குரல் நடுக்கத்திலேயே அப்பாவிற்கு வேகமாக வயோதிகம் வருவதை உணர்ந்தான் சிவா.
தன் அப்பாவைப் பார்த்து, “நல்லா இருக்கேம்பா. ஆமா வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க? எங்க மோகனும் அன்னத்தையும் காணல? இன்னும் பள்ளிக் கூடத்திலிருந்து வரலையா?” என்று கேட்டுக் கொண்டே அப்பாவுடன் நடையைக் கட்டினான். அவனது கேள்விக்குப் பதிலளிக்காது வீட்டை நோக்கி நடந்தார் அவனின் அப்பா.
வீட்டை நோக்கி அப்பாவும் மகனும் நடையைக் கட்டினர். தெருவெங்கும் பல பல விசாரிப்புகள். அதற்கிடையில் வீடு வந்துவிட்டது. அம்மா வீட்டுத் திண்ணையில் எங்களுக்காகக் காத்திருந்தாள். கொஞ்சம் இளைத்து தான் போயிருந்தாள். நினைவு தெரிந்த நாள் முதலாய்க் குடும்பத்திற்காக ஓடாய் உழைப்பவள்.
“சிவராமா என்னபா இளைச்சுப் போயிட்ட? வேளா வேளாக்கு நீ ஒழுங்கா சாப்பிடுறியா? வா மொதல்ல சாப்பிடு. அப்புறமா மத்ததைப் பேசிக்குவோம். வேலைல்லாம் எப்படிப்பா இருக்கு? ஒன்னும் கடுமையானதா இல்லையே? விடாமல் பாச மழை பொழிந்தாள். எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக புன்னகை மட்டுமே புரிந்தான் சிவா.
“ஏப்பா ஓம் பிரண்டயும் கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல… அடுத்த முறை வர்றபோது ஓம் பிரண்டயும் கூட்டிக்கிட்டு வா. ஏப்பா நீ தலைக்கு எண்ணெய் வெக்கிறதே இல்லையா? இப்படியா வெச்சிருப்ப? நாளைக்கு சீயக்காய் போட்டுத் தலைக்குத் தேச்சுவிடறேன்” என்றாள்.
இதனைக் கேட்ட அப்பா “ஆமடா…ஒங்க அம்மாவுக்கு நீ வந்த சந்தோஷத்தில தல கால் புரியாது சிவராமா.. நீ போயி மொதல்ல கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடு. அப்புறமா நீயும் ஒங்க அம்மாவும் ஒக்காந்து கதைபேசுங்க.” என்று கூறியவுடன் சிவராமன் சென்று கைகால் கழுவிவிட்டு வந்து சாப்பிட்டான்.
சாப்பிட்டுச் சிறிது நேரம் கண்ணயர்ந்தான் சிவராமன். அவனது வீட்டில் வறுமை கோரத்தாண்டவம் ஆடவில்லை என்றாலும் அவ்வப்போது நான் இருக்கிறேன் எனத் தலைகாட்டிக் கொண்டே இருக்கின்றது.
அவனது அப்பா மளிகைக் கடையில் கணக்கராக வேலை செய்கிறார். அவருக்குச் சொல்லும் படியாக போதிய வருமானம் இல்லை. சிவராமன் தலை தூக்கினால் அவரின் பாரம் குறையும். சிவாவின் தம்பி மோகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். தங்கை அன்னம் பத்தாவது படிக்கிறாள்.
இந்தக் காலத்தில் மூன்று பிள்ளைகளைப் படிக்க வைப்பது சுலபமா என்ன? சிவாவின் சம்பளம் அவனின் மாதாந்திரச் செலவிற்கும், படிப்பிற்காக வாங்கிய கடனுக்குமே சரியாக இருக்கிறது. பல்லைக் கடித்துக் கொண்டு மாதம் ஆயிரம் ரூபாயை சிவராமன் வீட்டிற்கு அனுப்புகிறான்.
“அண்ணா ! எப்ப வந்த? நல்லா இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவனது தங்கை அன்னம். இந்த ஆறு மாதத்தில் இவள் நெடு நெடுவென சற்று வளர்ந்திருந்தாள். தங்கையைப் பார்த்த சிவராமன், “அடடே அன்னமா வாம்மா. ஏம்மா ..ஒழுங்கா படிக்கிறியாம்மா? ஆமா... மோகன் எங்க?”
“அவன் சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சு. அதனால பஞ்சர் ஒட்டக் கடையில இருக்கான். ஏன்ணா எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்க? எனக்கு ஒரு நல்ல சாமன்றிப் பாக்சு வாங்கித் தாண்ணே. இப்ப ஏங்கிட்ட இருக்கற பழசு துருபிடிச்சு போச்சு” என்று கூறி அன்னம் சிவராமனைக் கடைக்குக் கூட்டிச் சென்றாள். அவன் கடைக்குப் போகும் வழியில் அவன் தம்பி மோகன் எதிர்பட்டான்.
அவனைப் பார்த்த சிவராமன், “என்னடா வண்டியத் தள்ளிக்கிட்டு வர்ற?” என்றான். அதற்கு மோகனோ, “இல்லண்ணே…டியூப்புல இனிமே பஞ்சர் ஒட்ட முடியாதாம். புது டியூப்புத்தான் வாங்கிப் போடணுமாம். பெறகு போட்டுக்கிறேன். ஆமா… எப்பண்ணே வந்த?” என்ற தம்பியைப் பார்த்து, இந்தாடா ரூபா. போய் முதல்ல ட்யூப்ப மாத்து.” என்று இருநூறு ரூபாயைக் கொடுத்தான். ஏனென்றால், சைக்கிள் இல்லாம பள்ளிக்கூடம் போறது எவ்வளவு கஷ்டமென்று சிவாவிற்குத் தெரியும்.
இரவு சாப்பிட்ட பின்னர், சிவராமன் மாடிக்குச் சென்று வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மோகன் தயங்கித் தயங்கி சிவராமனின் அருகே வந்தான். “அண்ணா ! அடுத்த முறை வரும் போது ஒன்னோட பழைய பேண்ட் இரண்டைக் கொண்டுவா. என் பேண்ட் எல்லாம் சின்னமாப் போச்சு. டிரவுசர் போட்டா பசங்க கேலி பண்றாங்க. நான் கேட்டதா அப்பா அம்மா கிட்ட சொல்லாதண்ணே. அவங்க மனசு கஷ்டபடுவாங்க. சரியா?” என்று கூறிவிட்டுச் சென்றான். தம்பியின் கோரிக்கையைக் கேட்ட சிவராமனுக்கு அழுகையாக வந்தது. வெளியில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய, “ம்ம்” என்றான். தன் குடும்பத்தின் நிலையை உணர்ந்து மனம் நொந்தான்.
சிவராமன் ஊருக்கு வந்து இரண்டு நாள் போனதே தெரியவில்லை. அம்மாவின் கையால் சாப்பாடு, அப்பாவின் அறிவுரைகள், அனுபவங்கள், தம்பி தங்கையின் சேட்டைகள், அவர்களின் கோரிக்கைகள், எல்லாம் அவனது மனதைவிட்டு அகலாமலேயே நின்றன. அவன் ஊருக்குக் கிளம்பும் போது மீண்டும் அன்னம் யாருக்கும் தெரியாமல் வந்து அண்ணனிடம் தனக்குத் தாவணி வாங்கி வர வேண்டுமென நினைவு படுத்தினாள்.
அவனது அப்பா தன் மகனைப் பார்த்து, “பத்திரமா இருடா தம்பி. காலம் கெட்டு கெடக்கு. அடுத்த வருஷம் மோகனுக்கு நல்ல காலேஜ் ஏதாச்சும் இருந்தா விசாரிச்சு வையிப்பா... பணத்துக்குத் தான் என்ன பண்றதுன்னு தெரியல. ம்ம்…எப்படியாவது பார்ப்போம்…. சரி சரி சிவா நீ சீக்கிரம் வா, அஞ்சரை மணி பஸ்சை விட்டா ராத்திரிக்குத்தான் பஸ்ஸூ” என்று கூறிவிட்டு மகனின் பைகளைச் சைக்கிளில் வைத்துத் தள்ளிக் கொண்டே நடந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த சிவராமன் தனது அம்மாவைப் பார்த்து, “அம்மா வரேன்மா ! ஒடம்பை பார்த்துக் கொள்” என்றான். அதற்கு அவன் அம்மா, “எனக்கு என்னப்பா இருக்கு, நீ பத்திரமா இரு. ரோட்ல போறபோது பாத்துப் போ” என்று கூறிக் கொண்டே சிவராமனின் சட்டைப் பையில் எதையோ வைத்துக் திணித்தாள். அவன் பேருந்தில் போகும் போது தான் சட்டைப் பையைப் பார்த்தான். அதில் கசங்கிப் போயிருந்த ஐந்து ரூபாய் நோட்டு இருந்தது.
அந்த அஞ்சுரூபாயை ஆறு மாதம் ஆன பின்னரும் இன்னும் செலசெலவு செய்யாமல் பத்திரமாகத் தனது மணிப்பர்ஸில் வைத்திருந்தான். அந்த அஞ்சு ரூபாயைப் பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது.
அப்போது சிவராமனை வெகு நேரம் வரைக் காணாததால் அவனது நண்பன் வேகமாக வந்து டொக்..டொக்.. என்று கதவைத் தட்டவே சிவராமன் தனது நினைவுச் சுழலிருந்து விடுபட்டுக் கண்களைத் துடைத்தவாறே கதைவைத் திறந்தான்.
அவனைப் பார்த்த அவனது நண்பன் “ ஏன்டா கண்ணெல்லாம் கலங்கி இருக்கு..? நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா…? சொல்றா…? எதையா இருந்தாலும் நான் நேருக்கு நேராக் கேட்டுருவேன். எதையும் மனசுல வச்சிக்க மாட்டேன்….? நான் கேட்டதுல ஏதும் தப்பா இருந்தா மன்னிச்சுரு…”
இதனைக் கேட்ட சிவராமன், “அதெல்லாம் ஒண்ணுமில்லேடா… அந்த அஞ்சு ரூபாயப் பத்தி சொல்லாதது என்னோட தப்புத்தான்..உயிர் நண்பனான ஒனக்கிட்டே சொல்லாம இருந்துட்டேன்…” என்று பீடிகை போட்டான்.
சிவராமனின் நண்பனோ… இவன் ஏதோ காதல் கதையைப் பத்தித்தான் சொல்லப் போறான் என்று நினைத்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்து அவனையும் அமரச் செய்து அஞ்சு ரூபாய் பற்றிய தகவலைக் கேட்கத் தொடங்கினான்.
தனது நண்பனின ஆவலைக் கண்ட சிவராமன், “டேய் நீ நெனக்கிற மாதிரி இது யாரோ ஒரு பொண்ணு கொடுத்த ரூபா நோட்டு இல்ல…இதுல எந்தக் காதல் விசயமும் இல்ல… இந்த நோட்டு எங்க அம்மா கொடுத்த நோட்டு… மற்றவங்களுக்கு இது ஒரு காகிதம் மாதிரிதான் தெரியும்… இந்தக் காகிதத்துக்கு இவ்வளவு மதிப்புத் தர வேண்டிய அவசியம் இல்ல. ஆனா இந்த கசங்கின நோட்டை பார்க்கும் போதெல்லாம் எனக்கு எங்க அம்மாவோட அன்பான மொகந்தான் தெரியும். என்னதான் தன் மகன் சொந்தக் கால்ல நின்னாலும் அவ காட்டுற அன்புக்கும் பாசத்திற்கும் எல்லைகள் இல்லைன்னு சொல்லுகிற காகிதம் தான் இந்த அஞ்சு ரூபா. இதைப் பாக்குறபோது அந்த அஞ்சு ரூபாயில என்னோட குடும்பம், வீடு, தம்பி, தங்கை, அப்பா அம்மாவோட கஷ்டம் எல்லாம் கண்ணு முன்னாடி வரும். நான் தேவையில்லாமல் செலவு செய்ய நேரும் போது இந்த அஞ்சு ரூபாயை என்னோட பர்சில் பார்த்தவுடன் ச்சே… .. நம்மள நம்பி அங்க நாலு ஜீவன்க இருக்குது நமக்கு மட்டும் ஏன் இந்தத் தேவையில்லாத செலவு என்று யோசிக்க வைக்குது. இப்போதைக்கு நான் என்னோட குடும்பத்தைக் காப்பாத்தணும். அப்புறம் என்னால முடிஞ்ச மட்டும் சுத்தி இருக்கிறவங்களுக்கு ஒதவணும். இதுக்கு எல்லாம் ஊக்கத்தைத் தர்றது எங்க அம்மா கொடுத்த இந்த அஞ்சு ரூபாய் தான்” என்று கண்களில் கண்ணீர் வழியக் கூறினான்.
அவனது பேச்சைக் கேட்ட அவனது நண்பனுக்கும் கண்கலங்கி விட்டது. அவனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு, “என்னை மன்னிச்சிடு சிவராமா.. ஒனக்குள்ள இத்தனை பெரிய சுமையும் இலட்சியமும் இருக்குங்குறதை இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்… இனிமே ஒன்னோட லட்சியத்துக்கு உறுதுணையா நானும் இருப்பேன்” என்று கூறினான்.
அன்பான இரு நண்பர்களின் இதயங்கள் அன்பால் பின்னிப் பிணைந்தன. சிவராமன் பர்ஸை விட்டு அவன் எடுத்து வைத்திருந்த அந்த அஞ்சு ரூபாய் நோட்டு மின் விசிறியின் காற்றில் அசைந்து வந்து அவர்களின் மேல் விழுந்தது. அது நண்பர்கள் இருவருக்கும் சிவராமனின் அம்மா அஞ்சுரூபா நோட்டு வடிவில் மானசீகமாக வாழ்த்தைக் கூறுவது போன்றிருந்தது.