அந்த அலுவலகத்தில் மேலாளருக்கு அடுத்து அனைவரும் கண்டு பயப்படும் நபர் காசாளர்தான். காசாளர் வணங்காமுடி வருகிறார் என்றாலே மேலாளரைத் தவிர அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். அந்த அளவிற்கு அவர் எல்லோரையும் கடித்துக் குதறிவிடுவார். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. அவரிடமிருந்து பணம் வாங்குவதென்பது கல்லில் நாருரிப்பது போன்றது. அந்தளவிற்கு ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டு அதில் அவருக்குத் திருப்தி ஏற்பட்டாலொழிய அவரிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது.
வார்த்தைகளாலேயே புரட்டி எடுத்து விடுவார். அலுவலகத்தில் உள்ள அனைத்துச் சேர்களையும் பின்னி, அது ஆடாமலிருக்கச் சேர்களுக்குக் கீழ் புஷ் போட்டுத் தருவதாக ஒப்புக் கொண்டு வேலை பார்த்த ஒருவரும், அவருடன் வந்த சின்னப் பையனும் பணம் வாங்குவதற்காக காசாளரது அறை வாயிலிலேயே காத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெரியவருக்கு வயது அம்பத்தஞ்சு இருக்கும். பார்க்கப் பரிதாபமாகக் காணப்பட்டார். கூட இருந்த அந்தப் பையன் அவருடைய மகன் என்று அலுவலகத்தில் உள்ளவர்கள் கேட்டதற்குக் கூறியிருந்தார்.
காசாளர் வணங்காமுடி தான் அமர்ந்திருந்த அந்தச் சேரை உட்கார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்துச் சோதனை செய்து பார்த்தார். அவர் அமர்ந்திருந்த சேர் ‘லொடக்…லொடக்” என்று ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. அந்தச் சேரைக் குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது. ஜிவ்வென வணங்காமுடிக்குக் கோபம் தலைக்கேறியது.
‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு….புஷ் போட்டாச்சுன்னு சொன்னியே…இப்ப நான் ஒக்காந்துருக்கிற சேரே இப்படி ஆடிக்கிட்டு இருக்கே... ஒனக்கு எப்படிய்யா பில்லுல கையெழுத்துப் போட்டு பணத்தைத் தருவேன்… ஒன்னயப் போயி யாருய்யா இந்த வேலைக்குக் கூட்டியாந்தாங்க..இந்தமாதிரி அரைகுறை வேலை பாக்குறவங்க கிட்டயெல்லாம் ஒரு வேலையை நம்பி ஒப்படைக்கக் கூடாதுய்யா….”
அதனைக் கண்ட வயர் பின்னியவன் பவ்வியமாகப் பயத்துடன் காசாளரைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு அலுவலகமாகச் சென்று அங்கிருக்கும் சேர்களின் பழைய பிய்ந்து போன வயர்களையும்…அடிப்பகுதி புஷ்களையும் மாற்றிக் கொடுத்து வயிறு வளர்ப்பவன் அவன். எங்க எதுவும் பேசினால் பணம் கொடுக்காது விட்டுவிடுவாரோ என்று தலையைக் குனிந்து கொண்டே நெஞ்சப் படபடப்புடன் நின்று கொண்டிருந்தான்.
‘யோவ்!… என்னய்யா இந்தச் சேர் மட்டும்தான் ஆடுதா…? இல்ல எல்லாச் சேரும் ஆடுதா…? ஆமா… எல்லாச் சேர்களுக்கும் கரெக்டா புது வயர் மாத்திட்டியா?” காசாளர் அவனைப் பார்த்து அதட்டலாகக் கேட்க,
‘இல்லீங்க சார்… சரியா பண்ணி முடிச்சுட்டேன் சார்! வாங்கிட்டு வந்த புஷ்ஷூல ஒண்ணு மட்டும் கொறஞ்சு போச்சு சார்!….மத்தபடி எல்லாச் சேர்களுக்கும் புது வயரும்…புது புஷ்களும் மாத்தியாச்சுங்க சார்! ஒரே ஒரு புஷ்ஷை வாங்கிட்டு வந்து நாளைக்கு மாட்டி விட்டர்றேன் சார்……” என்று பயந்து பயந்து பதில் கூறினான்.
“ஆமா யாராவது வந்து சேரெல்லாம் செக் பண்ணினாங்களா இல்லையா?”
“யாரும் செக் பண்ணலைங்க சார்… ஆனா அதுக்கு அவசியமே இல்லைங்க சார்… எல்லாத்தையும் சரியாப் பின்னிட்டேன் சார்…” எனறான்.
‘அப்படியா?… அப்பறம் எப்படி இது மட்டும் ஆடுது…?” என்று காசாளர் எழுந்து நின்று தன் சேரை இழுத்து அவனிடம் ஆட்டிக் காட்ட, அது ஒரு பக்கம் புஷ் இல்லாமல் நொண்டியது.
அவன் துணுக்குற்றவனாய், அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘ஏண்டா…எல்லாச் சேருக்கும் புஷ் போட்டாச்சுன்னு பொய்யாடா சொன்னே?”
‘இல்லைப்பா… ஒரே ஒரு புஷ் பத்தலை… அதான்!” பையன் நடுங்கியபடி சொன்னான்.
‘என்கிட்ட சொல்ல வேண்டாமா?….” என்று பையனைக் கடிந்து விட்டு, காசாளரைப் பார்த்து, ‘சார்… மன்னிச்சிடுங்க சார்… வேணுமின்னு செய்யாம விடலே சார்… நான் அதைச் சரியாக் கவனிக்காம விட்டுட்டேன்…ஒரே ஒரு புஷ்தானே சார்?…அத…நாளைக்கே கொண்டாந்து மாட்டிடறேன் சார்!” என்று கெஞ்சிக் கேட்டான் அவன்.
‘என்னய்யா வெளையாடறியா?… எல்லாச் சேர்களுக்கும் வயர் மாத்தியாச்சு… புஷ் போட்டாச்சுன்னு பொய் சொல்லி பில்லை சாங்ஷன் பண்ணிட்டு வந்திருக்கே… அப்படித்தானே?”
‘சார்…சார்…வந்து…வந்து…ஒரு புஷ்தானே…சார்…நாளைக்கு வந்து மாத்திக் கொடுத்தர்றேன் சார்…”
‘யோவ் பேசாதய்யா!…உன்னையெல்லாம் ஆபிசுக்குள்ளாற விடறதே தப்பு!…ஏதோ போனாப் போகுதுன்னு வேலையக் கொடுத்தா ஃபிராடா பண்றே?” வானத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார் காசாளர் வணங்காமுடி.
அத்தனை பேர் முன்னிலையிலும் காசாளர் பேசிய பேச்சில் கூனிக் குறுகிப் போனான் அவன். வத்திப் போன அவனது உடல் வெடவெட என்று நடுங்கத் தொடங்கியது.
“வயசானவன்னு பார்க்கறேன்!…இல்லேன்னா பில்லைத் தூக்கி மூஞ்சில வீசி ‘போடா நாயே வெளிய”ன்னு தொரத்தியடிச்சிருப்பேன்!…போய்யா…போ….போயி நாளைக்கு இன்னொரு புஷ்ஷோட வந்து மாத்திக் கொடுத்துட்டு மொத்தப் பணத்தையும் வங்கிக்கிட்டுப் போ….!”
காசாளர் கூறியதைக் கேட்ட வயர் பின்னியவன் அதிர்ந்தே போனான். ஒரு வாரத்திற்கும் மேலாக எங்கும் வேலையே கிடைக்காமல் வறட்சியில் கிடந்தவனுக்கு அதிர்ஷ்டவசமாய் இன்றைக்கு இந்த ஆபீசில் வேலை கிடைத்தது. வேலை முடித்ததும் கிடைக்கும் பணத்தில் இன்றைக்காவது தானும் தன் மகனும் வயிறார சாப்பிடலாம் என்று கனவு கண்டிருந்தான். காசாளரின் பேச்சி அவன் தலையில் இடியை இறக்கியது போன்றிருந்தது… அவன் பதற்றத்துடன்…
“சார்….சார்…பாதிக் காசாவது குடுத்தீங்கன்னா…ஒங்களுக்குப் புண்ணியமாயிருக்கும் சார்…!” என்று அவன் கேட்க நினைத்தான். ஆனால் காசாளரின் இரத்தம் குடிக்கும் ஓநாய்ப் பார்வையைக் கண்டதும் பேச வந்ததை அப்படியே வாய்க்குள்ளேயே விழுங்கிக் கொண்டான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சற்றுத் துணிச்சல் வந்தது. ஆபீசிலிருந்த மற்றவர்கள் அந்த வயர் பின்னுகிறவனுக்கு சாதகமாய்ப் பேசத் துவங்கினர். அவர்களுள் ஒருவனான டெஸ்பாட்ச் மோகன்,
“கேஷியர் சார்…அவன்கிட்டப் போயி ஏன் சார் தகராறு பண்ணிட்டிருக்கீங்க?... அவனப் பாத்தாப் பறிதாபமா இருக்கு சார்… அவங்கிட்ட பணத்தைக் கொடுத்தனுப்புங்க சார்” என்று கூறினான். இதனைக் கேட்ட காசாளருக்கு வியப்பாக இருந்தது. அட நம்மகிட்ட பேசவே பயப்படுற இந்த ஆபிசுலே நம்மப் பாத்து இந்தப் பயலுக்காக வக்காளத்து வாங்க வர்றானே…இவன இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்…சமயம் வர்றபோது பாத்துக்குவோம்… என்று மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டு… அதனை வெளிக்காட்டாது,
“இவனுக்குப் பணங் கொடுக்கறதைப் பத்தி ஒண்ணுமில்லை மோகன்…இவனுகளையெல்லாம் நம்ப முடியாது…இந்த ஒரு புஷ்ஷூக்காக இவன் நாளைக்கு வருவானா…? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க….கண்டிப்பா வரமாட்டான்!…வேற எங்காவது வேலை கெடைக்கும்…அங்க போய்டுவான்…இதை அப்படியே மறந்திடுவான்! இவன நம்பி எப்படிப் பணங் கொடுக்கறது” என்று வணங்காமுடி இன்னும் பிடிவாதமாகவே பேசினார்.
இதனைக் கேட்ட மோகன், “சார்… பாவம் சார்…அவன்…. வேணும்னா….அந்த ஒரு புஷ்ஷோட அமௌண்ட்டை கழிச்சிட்டு மீதியக் குடுத்தனுப்பலாமில்ல?” என்று விடாமல் பேசினான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த காசாளர் இனிமேல் பேச்சை வளர்ப்பது சரியல்ல என்பதை உணர்ந்து கொண்டு, “ஓ.கே!…நீங்க சொல்லறதுனால தர்றேன்…அதுவும் மொத்த அமௌண்ட்டையும் தர்றேன்!…”யோவ்…வாய்யா….இந்தா ஃபுல் பேமெண்ட்டுமே வாங்கிக்க!… ஆனா நாளைக்கு கண்டிப்பா வந்து புஷ்ஷ மாத்திக் கொடுத்துட்டுப் போகணும்!… என்ன?” என்று பணத்தைக் கொடுத்தார்.
“சரிங்க சார்!… கண்டிப்பா வந்து ஒங்க சேருக்கு ஒரு புஷ்ஷப் போட்டுட்டுத்தான் வேற வேலைக்கே போவேன்” என்று முகமலர்ச்சியுடன் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றான் அவன். பையனும் பெரிய ஆட்டுக்குப் பின்னால் ஓடும் குட்டி ஆட்டைப் போல் கூடவே ஓடினான்.
மறுநாள் மாலை ஐந்து மணியிருக்கும், அலுவலகமே அதிர்ந்து போகும் அளவிற்குக் காசாளர் தாம்தூம் என்று குதித்தார், மோகனை வரவழைத்து,
“என்னமோ பெரிய தர்மப் பிரபு மாதிரி அந்த வயர்ப்பின்றவனுக்கு சப்போர்ட்ப் பண்ணி பேசினீங்க…நான் சொன்னதைக் கேட்கவேயில்லையே நீங்க… பாத்தீங்களா?….இன்னிக்கு அவன் வரவேயில்லை!…எனக்குத் தெரியும் சார் இவனுகளைப் பத்தி. வேற எங்கயாவது வேலை கெடைச்சிருக்கும்…டக்குன்னு ஓடியிருப்பான்!... கொஞ்சமாவது அனுபவம் வேணும் சார்… நான் என்ன அரக்கனா…? எதுவும் தெரியாதவனா… என்னோட அனுபவத்துக்கு முன்னால நீங்கள்ளாம்…கொசுறு….இப்ப என்னாச்சு பாத்தீங்கள்ள….” கடுமையாகப் பேசினார்.
பதில் பேச முடியாத நிலையில் வாயடைத்துப் போய்விட்டான் மோகன். தனது தவறை உணர்ந்து காசாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு தன்னிடத்திற்குச் சென்றமர்ந்து வேலையில் ஈடுபட்டான். அவன் வேலையில் மும்முரமாய் மூழ்கியிருப்பதைப் போல் பாவ்லா காட்டினான். வேலையில் அவனால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. தன்னுடைய மனசுக்குள், ‘அடப்பாவி…ஏழையாச்சேன்னு அவனுக்கு பரிஞ்சு பேசினது தப்பாப் போச்சு!…இப்ப நம்மையே தலை குனிய வெச்சிட்டான்!” என்று அந்த வயர் பின்னுபவனைத் திட்டித் தீர்த்தான்.
மறுநாளும் அந்த வயர் பின்னுபவன் வரவில்லை. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களும் அவன் வராததால், நாள்தோறும் காசாளரின் அர்ச்சனையைத் தாங்க முடியாத நிலையில் நாமே அதனைச் சரி செய்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தான் மோகன். அப்போதுதான் இந்தக் காசாளரின் அர்ச்சனையிலிருந்து தப்ப முடியும். இல்லையென்றால் மனுஷன் தன்னை வாட்டி வளவெடுத்துவிடுவார். இந்த நினைப்பில் அலுவலகப் பையனை அழைக்க மோகன் எத்தனித்தபோது சரியாக அந்தச் சிறுவன் மட்டும் வந்து நின்றான்.
வந்தவன் நேராக காசாளரின் அறைக்குச் சென்றான். அவனைப் பார்த்த காசாளர், “வாய்யா…பெரிய மனுசா…இப்பத்தான் ஒனக்கு வழி தெரிஞ்சுதா?…எங்க ஒங்கப்பன்?…இங்க வரப் பயந்திட்டு ஒன்னைய அனுப்பிச்சிட்டானா?…” என்று நக்கலாகப் பேசியவாறே எழுந்து நின்றார்.
காசாளரின் சேரைத் தலைகீழாகத் திருப்பி அந்தப் புஷ்ஷை சரியாக மாட்டி விட்டுச் சிறிதும் ஆடாதபடி செய்து விட்டுக் கிளம்பினான் சிறுவன்.
அவன் டெஸ்பாட்ச் மோகனின் டேபிளைக் கடந்து செல்லும் போது, அவனை அருகில் அழைத்த மோகன், “ஏம்பா?….மறுநாளே வர்றேன்னு சொல்லிட்டுத்தானே போனீங்க?… இப்ப என்னடான்னா பத்து நாளு கழிச்சு நீ மட்டும் வந்திட்டுப் போறே!… ஒங்கப்பனுக்கு வக்காலத்து வாங்கப் போயி நான் இந்தாளுக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டேன்” என்றான்.
அவன் கூறியதைக் கேட்ட சிறுவனின் கண்களில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தது… கண்ணீர் வழிந்த முகத்துடன் அவன் மோகனைப் பார்த்து, ‘சார்… மன்னிச்சிடுங்க சார்... வேணுமின்னு பண்ணலே சார்… நாங்க அன்னிக்கு இங்கிருந்து போனோமா?…அன்னிக்கு ராத்திரியே எங்கப்பாவுக்கு மாரடைப்பு வந்திடுச்சு சார்… ஆசுபத்திரிக்குக் கொண்டு போறதுக்குள்ளாற எங்கப்பா செத்துப் போயிட்டாரு... சார்..! ஒங்கள ஏமாத்தணும்னு எண்ணமில்ல சார்…” என்ற சிறுவனின் கண்களில் நீர்.
அதனைக் கேட்ட காசாளரும் டெஸ்பாட்ச் மோகனும் அதிர்ந்து போயினர். அழுது கொண்டே சிறுவன் தொடர்ந்தான்.
“எங்கப்பா செத்துப் போனதும், அவரு முடிக்க வேண்டியதை எல்லாம் முடிக்க வேண்டியது என்னோட கடமை சார்…. அன்னிக்கு நீங்க அவரைத் திட்டியது… அவர் மறு நாள் வர்றேன்னு உறுதியாச் சொல்லிட்டுப் போனது எல்லாத்தையும் நான் பார்த்திட்டுத்தான் இருந்தேன்…!…அதனால... எங்கப்பா ஒங்ககிட்ட சொன்னது மாதிரி நான் அடுத்த நாளே இங்க வரணும்னு கிளம்பினேன்… ஆனா எங்க சொந்தக்காரங்கதான் ‘பத்தாம் நாள் சடங்க முடிச்சிட்டுத்தான் போகணும்னு என்ன நிறுத்திப்புட்டாங்க!…இன்னிக்குத்தான் பத்தாம் நாள்… அங்க சடங்கு வேலைக முடிஞ்சதும் நேரா இங்கதான் வர்றேன்!…என்ன மன்னிச்சிடுங்க சார்…” பரிதாபமாய்ச் சொல்லி விட்டுக் கண்ணீருடன் வெளியேறினான் அவன்.
அவன் சென்று வெகு நேரம் ஆன பின்னரும் அந்த ஒட்டுமொத்த அலுவலகமே அமைதியில் உறைந்து போயிற்று. ஒவ்வொருவர் மனதிலும் அந்தச் சிறுவனும் அவனது கடமை உணர்வுமே நிறைந்திருந்தது. நிலைமை அறியாது அவனையும் அவனுக்கு உதவிய மோகனையும் வார்த்தையால் வறுத்தெடுத்த காசாளரை ஏளனமாக அற்பப் புழுவைப் பார்ப்பது போல் அனைவரும் பார்த்தனர்.
“..ச்சே மத்தவங்களோட மனசைப் புரிஞ்சுக்காத இவனெல்லாம் ஒரு மனுஷனா..” என்பது போன்றிருந்தது அவர்களின் பார்வை.
அவர்களின் பார்வையால் கூனிக் குறுகிப் போன காசாளர் வணங்காமுடியின் இதயத்தில் யாரோ சம்மட்டியால் தாக்கியது போன்றிருந்தது. இது நாள் வரையிலும் மற்றவர்களின் சூழலையும் மனதையும் உணராமல் இருந்து விட்டோமே என்ற கழிவிரக்கம் அவரது உள்ளத்தைக் கரையானைப் போன்று அரித்தது.
யாரையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியமே அவரிடம் இல்லை. அவர் இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தார். இப்போது தான் அமரும் சேரைத் தன்னிச்சையாக அசைத்துப் பார்த்தார். அது ஆடவில்லை. அது ஆடாமல் அசையாமல் சரியாக இருந்தது. ஆனால் அவர் மனம் மட்டும் அமைதி இழந்து ஊசல் குண்டுபோல் அங்குமிங்குமாக ஆடிக் கொண்டிருந்தது. அதனை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.