அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள் மஹாலட்சுமி. அவள் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சின்னக்காளை இவ்வாறு எல்லாம் பேசுவான் என அவள் நினைக்கவும் கூட இல்லை. அவன் கூறிய சொற்கள் இன்னும் அவளுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. தனது கணவரின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன எனக் கூறி, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மருத்துவர் முதன்முதலில் விளக்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சிக்குச் சற்றும் குறைந்தது அல்ல சின்னக்காளையின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சி.
மஹாலட்சுமியின் கணவர் செல்லையா அம்பலத்திற்கு இரண்டு பாதங்களிலும் திடீரென வீக்கம் ஏற்பட்டு, நடந்தால் மூச்சிரைப்பும் ஏற்பட்டது. பசி எடுப்பதும் படிப்படியாகக் குறைந்து வந்தது. தன்னுடைய உடல் நலத்தைப் பற்றி அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ளாத அவரை மஹாலட்சுமிதான் வற்புறுத்திக் மதுரையில் உள்ள ஒரு மருத்துவரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றாள்.
இரத்தப் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ஸ்கேனிங் எனப் பல சோதனைகளுக்குப் பிறகு மருத்துவர் மஹாலட்சுமியை மட்டும் அவருடைய அறைக்கு அழைத்தார்.
மருத்துவர் என்ன சொல்லுவாரோ எனப் பயந்து கொண்டே அறைக்குள் நுழைந்த மஹாலட்சுமியிடம், “உட்காருங்க… அம்மா!” என இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார் மருத்துவர்.
“என்னோட... வீட்டுக்காரருக்கு என்ன ஆச்சுங்க?”- மஹாலட்சுமியின் குரல் பலகீனமாக ஒலித்தது.
“ஏம்மா உங்க வீட்டுக்காரருக்கு இரத்த அழுத்தம் இருப்பது தெரியுமா?"
“ஆமாங்க... ஏழெட்டு வருசமா மாத்திரை சாப்புட்டுக்கிட்டு வராருங்க....”
“டாக்டர் கூறியபடி தவறாமல் மாத்திரை சாப்பிட்டு வந்தாரா? அப்பப்போ மருத்துவப் பரிசோதனை செஞசுக்குவாரா?”
“இல்லைங்க... அப்பப்போ மாத்திரை மட்டும் சாப்புடுவாருங்க...பெறகு கண்டுக்க மாட்டாருங்க..அவரோட நான் சண்டை போட்டாத்தான் டாக்டருகிட்டே போவாருங்க.”
“அதுதாம்மா தப்பாப்போச்சு. தொடர்ந்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிலேயே வச்சிருக்கணும். அப்படிச் செய்யாமே போயிட்டார். அதனாலே இப்போ கிட்னி... அதுதான் சிறுநீரகம்னு சொல்லுவோம்ல... அது செயலிழந்து போயிருச்சு.”
“அப்படினாங்க?...”
தொடர்ந்து மருத்துவர் சிறுநீரகங்களின் செயல் இழப்பு பற்றியும், டயாலிசிஸ் செய்வதன் அவசியம் பற்றியும், சிறுநீரகத்தை மாற்றுவது பற்றியும் கூறக் கூற மஹாலட்சுமிக்குத் தரை பிளந்து தான் அமர்ந்து இருந்த இருக்கையோடு பூமிக்கு உள்ளே படுபாதாளத்துக்குள் வேகமாகச் சரிவது போலத் தோன்றியது.
“தைரியமா இருங்கம்மா... சரி செய்துவிடலாம்” என மருத்துவர் கூறி முடித்த போது மஹாலட்சுமி தன்னுணர்வோடு இருந்தாள் எனக் கூற முடியாது.
பிறகு கணவருடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து, பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தது எதுவும் அவளுக்கு நினைவில்லை. விடிய விடிய அழுதாள். தனது மனச்சுமையைக் கண்ணீரால் கரைத்து வெளியேற்ற நினைத்தும் முடியவில்லை.
மஹாலட்சுமியின் கணவர் பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். கிணற்றுப் பாசனம் கொண்ட பூமி. நெல்லும், கரும்பும், வாழையும் விளையும் வளமான பூமி. திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் அத்தம்பதியினருக்குக் குழந்தை எதுவும் இதுவரை இல்லை.அது பற்றி அவர்களுக்கு உள்ளூர வருத்தம் உண்டுதான். இருப்பினும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு மனம் ஒத்து வாழும் கணவன்-மனைவியாய் இருந்து வந்ததால் அவர்களுக்குள் பிரச்சினைகள் எதுவும் எழாமல் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் பலரும் குழந்தைக்காக இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளுமாறு அவளுடைய கணவருக்கு ஆலோசனை கூறியும் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவர்களுடைய சந்தோச வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கோளாறு பேரிடியாய் வீழ்ந்தது.
தொடர்ந்து அவருக்கு வாரம் ஒருமுறை, சில சமயங்களில் இருமுறை டயாலிசிஸ் செய்யப்பட்டது. சிகிச்சைக்காகப் பணம் தண்ணீராகக் கரைந்தது. தொடர்ந்து நீண்ட நாள்களுக்கு டயாலிசிஸ் செய்ய முடியாது என்றும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது நல்லது என்றும் மருத்துவர் கூறினார்.
மஹாலட்சுமி தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தனது கணவருக்கு வழங்கத் தயாராக இருந்தும் அவளுடைய இரத்தப் பிரிவு அவளுடைய கணவனின் இரத்தப் பிரிவிலிருந்து வேறுபட்டிருந்தது. அதனால் அது பொருந்தாது என மருத்துவர் கூறிவிட்டார்.
பிறரிடம் இருந்துதான் சிறுநீரகத்தைப் பெற்று அவருக்குப் பொருத்தியாக வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் எழுந்தது. நெருங்கிய உறவினர்கள் இருந்தாலும் யாரிடம் சென்று கேட்பது? சிறுநீரகத்தை வழங்க அவ்வளவு எளிதில் முன்வருவார்களா? ஒப்புக்கொள்வார்களா?
எதிர்பார்த்தவாறே பல்வேறு காரணங்களைக் கூறி நெருங்கிய உறவினர்கள் தங்களுடைய விருப்பமின்மையை வெளிப்படுத்தினார்கள்.
பணம் கொடுத்து வெளியில் யாரிடமிருந்தாவது சிறுநீரகம் வாங்குவது நடைமுறையில் இருந்தாலும் அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய செயலா? வாழ்வா சாவா என்ற கேள்விக் குறியுடன் வேதனையில் புதைந்திருந்த மஹாலட்சுமி தன் வீட்டின் நிலைப்படியில் சோர்ந்து உட்கார்ந்து இருந்தபோதுதான் அவர்கள் தோட்டத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் கருத்தச்சாமியின் மகன் சின்னக்காளை வந்தான்.
சின்னக்காளையின் கொள்ளுத்தாத்தா, செல்லையா அம்பலத்தின் தாத்தா காலத்தில் அவருடைய தோட்டத்தில் பண்ணையாளாகச் சேர்ந்தார். தொடர்ந்து சின்னக்காளையின் தாத்தா, தந்தை என அங்கேயே பண்ணையாளாகப் பணி தொடர்ந்தது. அவர்களுடைய பரம்பரையில் சின்னக்காளைதான் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவன். பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் அவனுடைய தந்தைக்குத் துணையாக அவ்வப்போது தோட்ட வேலைக்கு வருவான். பள்ளிப்படிப்பை விட்டாலும் தொடர்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பான். எப்பொழுதும் அருகிலிருப்பவரிடம் எதாவது ஒரு பொருள் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பான். அவனுடன் இருப்பவர்களுக்கு அவன் பேசும் சில விசயங்கள் புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருக்கும். சில சமயங்களில் எதுவும் புரியாது. அதனால் அவனுக்கு கிறுக்கன் என்ற பட்டப் பெயரும் அவர்கள் மத்தியில் புழங்கி வந்தது.
சின்னக்காளையைக் கண்டதும் மஹாலட்சுமி, “ஏண்டா... சின்னக்காளை, ஒங்க அப்பா.. இன்னைக்கு வேலைக்கு வரலியா?” எனக் கேட்டாள்.
“இல்லிங்க... அவருக்குக் கொஞ்சம் ஒடம்புக்கு முடியலீங்க...அதான் நான்..வந்தேன்” என்ற சின்னக்காளை, “ஏங்க... ஐயாவுக்கு ஆபரேசன் எப்பங்க?” என்றான்.
அதைக் கேட்ட மஹாலட்சுமி, “என்னத்தச் சொல்ல?... சாவறதா இல்லே... பொழைக்கிறதான்னே தெரியலே. டாக்டரும் சீக்கிரமே ஆபரேசன் பண்ணனும்னு சொல்றாரு. கிட்னி என்ன கடையில கெடைக்கிர சரக்கா... ஒடனே வாங்கிட்டு வரதுக்கு. நாங்களும் யாரு யாருகிட்டயோ விசாரிச்சுப் பாத்துட்டோம். தேடாத இடமில்லே. கிட்னிதான்... கெடைக்கவே மாட்டேங்குது.” எனக் கூறிக் கண்ணீர் விட்டாள்.
சிறிது நேரம் மவுனமாயிருந்த சின்னக்காளையிடமிருந்து, “ஐயாவுக்கு ...நான்... தறேன்க.. கிட்னி...” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன.
மஹாலட்சுமிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. உண்மையில் சின்னக்காளைதான் அந்த வார்த்தைகளைக் கூறினானா? இல்லை, வெறும் கனவா? அல்லது மனப் பிரமையா? தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். சின்னக்காளையைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. அப்படியானால் சின்னக்காளைதான் அந்த வார்த்தைகளைக் கூறியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வரவழைத்துக் கொண்ட மஹாலட்சுமி அதை உறுதிப்படுத்திக் கொள்ள, “என்னப்பா சின்னக்காளை, நீயா பேசுனே?” என்று கேட்டாள்.
“ஆமாங்க...நாந்தான். ஐயாவுக்கு என் கிட்னி பொருந்தினா... நான்... தரத் தயாருங்க” என்றான்.
மஹாலட்சுமிக்கு சின்னக்காளையின் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. சிறுநீரகத்தை வழங்கினால் எங்கு எதிர் காலத்தில் தமது உயிருக்கு ஆபத்தாகிவிடுமோ என அஞ்சி நெருங்கிய உறவினர்கள் கூடத் தர மறுத்து விட்ட நிலையில் இந்த இளம் வயதுப் பையன் தான் தருகிறேன் எனக் கூறுகிறானே! இளங்கன்று பயம் அறியாது போல அதைக் கூறுகிறானா? மஹாலட்சுமி குழம்பினாள்.
எதற்கும் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இல்லை என்றால் அவனுடைய அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியது போல ஆகிவிடுமே என அவள் அஞ்சினாள்.
“ஒரு கிட்னியைத் தந்துட்டா பின்னாலே ஏதாவது உசுருக்கு ஆபத்தாயிருமோனு பயப்படறாங்க... ஒனக்கு அந்தப் பயமில்லையா...? சின்னக்காளை...”
“இல்லேங்க... உசுரு வாழ ஒரு கிட்னியே போதுமுன்னு நா படிச்சிருக்கேங்க... அதனாலேதான்... நான்... பயப்படலிங்க... ரெண்டு கிட்னி இருந்தாலும் ஒரே சமயத்திலே ரெண்டும் பழுதாவாதுன்னு கூற முடியுமுங்களா?... ஐயாவுக்கு இப்போ எப்படி ரெண்டும் ஒரே சமயத்திலே பழுதாச்சுங்கோ?” என்று சின்னக்காளை தெளிவாகப் பதில் கூறினான்.
இந்த ஜென்மத்தில் கூட இது சாத்தியமா? சென்ற நிமிடம் வரை கொத்தடிமையாக, கேவலமானவனாகத் தனக்குத் தோன்றிய சின்னக்காளை இப்பொழுது அவளுக்குத் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளின் அவதாரமாகத் தோன்றினான்.
தொடர்ந்து சின்னக்காளைக்குப் பல மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அவனது சிறுநீரகம் செல்லையா அம்பலத்திற்குப் பொருந்தும் என உறுதி செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருந்த பிறகு செல்லையா அம்பலமும், சின்னக்காளையும் வீடு வந்து சேர்ந்தனர்.
மஹாலட்சுமி மருத்துவமனையில் அவர்களுடன் கூடவே இருந்து உதவி செய்து வந்தாள்.
இப்பொழுதுதான் மஹாலட்சுமியின் முகத்தில் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் காண முடிந்தது. கணவனைக் காப்பாற்றி விட்டோம் என்ற தெம்பில் வந்த மகிழ்ச்சி அது.
தனக்கு மறுவாழ்வு தந்த சின்னக்காளைக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என நினைத்தார் செல்லையா அம்பலம்.
மஹாலட்சுமியிடமும் அதைத் தெரிவித்தார். அவள் எண்ணமும் அதுவாகவே இருந்தது. சின்னக்காளைக்கு ஒரு கணிசமான தொகை வழங்க வேண்டும் என இருவரும் முடிவு செய்தார்கள். அதைக் கொடுப்பதற்காகச் சின்னக்காளையின் வீட்டிற்கு மஹாலட்சுமி தன் கணவனோடு மகிழ்ச்சியோடு சென்றாள்.
அவர்களிருவரும் வந்தபோது சின்னக்காளை தனது கூரை வீட்டிற்கு அருகில் இருக்கும் வேப்பமரத்தின் நிழலில் ஒரு கயிற்றுக் கட்டிலில் ஓய்வாகப் படுத்திருந்தான். அவர்களைக் கண்டதும் வழக்கம்போல சின்னக்காளை கட்டிலிலிருந்து எழுந்து நின்றான். அவர்கள் எவ்வளவோ கூறியும் அவன் கட்டிலில் உட்கார மறுத்துவிட்டான்.
“இவ்ளோ தூரம் ஏன் வந்தீங்க...? சொல்லிவிட்டிருந்தா நானே வந்திருப்பேனே!” என்றான்.
“அது சரி இல்லேப்பா. நீ ஓய்வு எடுத்துக்கோணும். நீ இல்லாட்டி எங்களுக்கு இப்போது உள்ள வாழ்வே இல்லை. அதுக்கு நாங்க ஏதாவது நன்றிக்கடன் செய்தாவணும். இல்லாட்டி எங்க மனசு ஒத்துக்காது. எங்களாலே முடிந்த ஒரு தொகையக் கொடுக்கலாம்னு நெனைக்கிறோம். மறுக்காம நீ அதை வாங்கிக்கணும்.” என்றாள் மஹாலட்சுமி.
அதைக் கேட்டதும் சின்னக்காளையிடமிருந்து சன்னமான ஒரு சிரிப்புச் சத்தம் வெளிப்பட்டது.
“என்னப்பா... சிரிக்கிறே...” என்றாள்.
“இல்லேங்க... நீங்க நன்றிக்கடன்னு சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்துட்டதுங்க. நான்... கைமாறு கருதி ஐயாவுக்கு என்னோட கிட்னியைத் தரலீங்க. ஒரு சக மனுசனோட உசுரைக் காப்பாத்த நம்மாலே முடியும்னா அதைச் செய்யணும்கிற எண்ணத்திலேதான்... நான்... கிட்னி தந்தேன். நன்றிக்கடன் கருதி இல்லே. அப்படி நீங்க நன்றிக்கடன் செய்ய நெனைச்சீங்கனா... எதெதுக்குத்தான் செய்வீங்க? ஆண்டாண்டு காலமா, பரம்பரை பரம்பரையா நாங்க ஒங்களுக்கு ஒழைச்சு வந்துருக்கிறோமே... அதுக்கு ஒங்களாலே என்ன நன்றிக்கடன் செய்ய முடியும்? நீங்க குடியிருக்கும் வூடு வெறும் கல்லாலும் சுண்ணாம்பலும் மட்டும் ஆனதுன்னு நெனைக்காதிங்க.... அதுலே எந்தாத்தாவோட ஒழைப்பும், வேர்வையும், ரத்தமும் இருக்குது. ஒங்களோட தோட்டத்து நெல்லுக்கும், கரும்புக்கும், வாழைக்கும், ஒங்களோட வாழ்வுக்கும் ஆதாரமா இருக்குதே அந்தக் கெணத்தை வெட்டுனது என்னோட கொள்ளுத்தாத்தா. நீங்க சாப்புடறிங்களே... அரிசிச்சோறு... அது எங்களோட வேர்வையிலே வெளைஞ்சது. ஒங்களோட வூடு, ஒங்களுடைய நிலபுலன்கள், சொத்து, சொகம் எல்லாத்திலும் எங்க ரத்தம் ஓடுதே... அதுக்கு நன்றிக்கடன் செய்ய முடியுமா? உங்க ஒடம்பிலே ஓடுற ரத்தத்திலும் நீங்க விடுற மூச்சுக் காத்திலும் எங்க உதிரம் இருக்குதே! அதுக்குக் கைமாறு செய்ய முடியுமா? எதெதுக்குத்தான் நீங்க நன்றிக்கடன் செய்வீங்க? எல்லாத்துக்கும் ஒங்களாலே நன்றிக்கடன் செய்ய முடியும்னு நெனைக்கிறீங்களா...?” என்று சின்னக்காளை தொடர்ந்து கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே சென்றான்.
அவனுடைய கேள்விகள் ஒவ்வொன்றும் மஹாலட்சுமியின் காதுகளில் குத்தீட்டிகளாகப் பாய்ந்தன. அவளுடைய உணர்வுகள் அனைத்தும் மெல்ல மெல்ல அடங்கி மரத்துப் போக அதிர்ச்சியில் உறைந்தாள். அவளுக்கு தலை கிறுகிறுவெனச் சுழன்றது. அவள் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது கட்டிலருகிலேயே அமர்ந்து விட்டாள்.
சின்னக்காளை ஓடிவந்து அவள் கீழே விழுந்து விடாது தாங்கிப் பிடித்துக் கட்டிலில் அமர வைத்தான். கட்டிலில் அமர்ந்த மஹாலட்சுமி சின்னக்காளையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நாத்தழுதழுக்க அழுதாள். அழுதுகொண்டே, “தம்பி.. ஒன்னத் தப்பா நெனச்சுட்டேம்பா… என்ன மன்னிச்சுடுப்பா… அதோட மட்டுமில்ல என்னோட கண்ணயும் தொறந்துட்டேப்பா… நான் இப்ப உன்னோட எஜமானி இல்லப்பா… அந்த எஜமானி எப்பவோ செத்துப் போயிட்டாப்பா… எங்களுக்குக் குழந்தை இல்லன்னு நெனச்சோம்… ஆனா கர்ணன் கவசகுண்டலத்தக் கொடுத்த மாதிரி ஒன்னோட கிட்டினியக் கொடுத்து எங்களுக்குப் புதுவாழ்வக் கொடுத்துட்டப்பா… நீ தாம்பா எங்களோட குழந்தை… எங்க சாதிசனம் ஒவ்வொருத்தரும் என்னென்னவோ காரணங்களச் சொல்லி எங்களவிட்டுப் போயிட்டாங்க…ஆனா நீ தானா வந்து எங்களுக்கு ஒதவுனே… நீயும் ஒங்க அப்பாவுந் தாம்பா எங்களோட உண்மையான உறவு.. இந்த உறவு தெய்வந் தந்த உறவுப்பா….”
என்று கண்ணீர் மல்கக் கூறியழுதாள்.
அவளது கணவன் சின்னக்காளையைக் கண்ணீர் மல்கப் பார்த்தான்… அங்கு ஒரு புதிய உறவு முகிழ்த்தது.. அவர்களைக் கண்ட சின்னக்காளையின் கண்களிலிருந்தும் கண்ணீர்த் துளிகள் உருண்டோடின… அது புதிய உறவுச் செடிக்கு நீர் விடுவதைப் போன்றிருந்தது. அப்போது எங்கிருந்தோ “யாதும் ஊரே யாவரும் கேளிர்..அன்பே எங்கள் உலக தத்துவம்” என்ற பாடல் வானொலியிலிருந்து காற்றில் மிதந்து வந்தது.