வீடு களைகட்டியிருந்தது... அண்ணனும் அண்ணியும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அண்ணி அண்ணனுக்குப் பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு வசந்தாவிடம் வந்து நின்று அவளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினாள். ஆம்...! இன்று வசந்தாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதுதான் வசந்தாவின் அண்ணி சுமதி அவளை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.
வசந்தா அண்மையில்தான் சென்னை வந்திருந்தாள். அவள் அண்ணன் வெங்கடேசனோ தன் தங்கை மீது உயிரையே வைத்திருந்தான். தன் தங்கைக்காக எதையுமே செய்யத் தயாராக இருந்தான். அவன் தனக்குத் தெரிந்த புரோக்கார் மூலமாக தன் ஆருயிர்த் தங்கைக்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தான். பெண் பார்க்க வருபவர்களோ மண்பார்த்துத் தலை கவிழ்ந்து சென்றனர். அவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்? கை நிறையச் சீதனம் கொடுக்க அவள் அண்ணன் தயாராகவேயுள்ளான். அவள் குணத்திற்கு நிகர் அவளே தான். மொத்தத்தில் சொல்லப் போனால் பத்தரை மாற்றுத் தங்கம். இறந்த காலத்தின் நிராகாரிப்புகளைத் தாங்கிக் கொண்டு எதிர்காலத்தின் நம்பிக்கைகளைச் சுமந்து வாழும் ஓரு நிகழ்காலப் பெண்ணவள்.
வசந்தா அமாவாசையன்று பிறந்து விட்டாளோ? என்னவோ? அவளது நிறமும் அமாவசையாய்...! ஆனாலும் அவள் பார்க்கக் களையாக இருப்பாள்... வசந்தா உண்மையிலேயே ஓர் வசந்தம் தான். அவள் வாய் திறந்து பாடினால் அனைவரும் அப்படியே மயங்கி நின்று தம்மை மறந்து ரசிப்பார்கள். அவளிடம் பல திறமைகள் இயல்பாகவேயிருந்தன. இருந்தும் அவளைத் துணையாகக் கைப்பிடிக்க எந்தவொரு ஆண்மகனும் முன்வரவில்லையே. அவளைப் பெண் பார்த்தவர்கள் எத்தனைபேர். அவளை நினைக்கும்போது,
“பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்!
பூவாகப் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலியே
நான் பூமாலை ஆகலியே”
- என்ற மேத்தாவின் கவிதை வரிகள்தான் மனதினுள் ஓடியது.
அவள் பிறந்த கிராமத்தில் அவளது பெற்றோர்கள் எத்தனையோ மாப்பிள்ளைகள் பார்த்தனர்... ஆனாலும் ஒன்றும் மசியவில்லை... ஒன்று மாப்பிள்ளை வீட்டார் ஒத்துப் போனால் அதனை அக்கம் பக்கத்தார் பேசிப் பேசியே கெடுத்தனர். அவளது பெற்றோர் எவ்வளவு முயன்றும் அவை விழலுக்கு இறைத்த நீராகவே முடிந்தது. கருப்பாகப் பிறந்தது என்ன வசந்தாவின் குற்றமா என்ன? மனிதர்கள் ஏன் இப்படி சிவப்பு சிவப்பு என்று அலைகிறார்கள்... நாட்கள் கடந்தனவேயல்லாது வசந்தாவிற்கு நல்ல வரன் அமையவே இல்லை...
அவளொத்த பெண்களுக்கு மணமாகி அவர்கள் குழந்தை குட்டியாகி குடும்பம் நடத்திக் கொண்டிருக்க இவளுக்கோ ஓரிடமும் ஒத்துவராமல் தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. வசந்தாவைப் பற்றி, ஊரில் உள்ள அனைவரும், “இப்படிக் கருப்பா இருந்தா இவள எவன் கட்டிக்கிடுவான்?” என்று ஏளனமாகப் பேசினர். அவர்களின் இதயமற்ற பேச்சு வசந்தாவின் உள்ளத்திற்குள் உளியால் குத்தியது போன்று இருந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாது வசந்தாவின் பெற்றோர் வரன் தேடும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர். கிராமத்தில் இருந்தால் பல வரன்கள் தட்டிப் போகும் என்றறிந்த வசந்தாவின் அண்ணன் அவளைத் தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்று மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்கினான்.
வசந்தாவிற்கு, “ஏன் இவர்கள் எனக்காக வரன் பார்த்து இவ்வளவு சிரமப் படுகிறார்கள்?” என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. இருந்தாலும் தான் இவர்களுக்கு ஒரு சுமையாகி விடக் கூடாதே என்ற நினைப்பின் உந்தலாலேயே இன்றும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு ஒப்புக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டார் போனபின் அண்ணாவின் துடிப்பு அவள் மனதைக் கசக்கிப் பிழிவது போலிருக்கும். ஆண்டவன் மேல் கோபம் கோபமாக வரும், ஏன் என்னை இப்படிப் படைத்தாய்... ஏன் ஒனக்கு எம்மேல வஞ்சனை... எல்லா உயிர்களையும் ஏதாவதொரு சமயத்துல கொல்றியில்ல... என்னயும் அதுமாதிரி கொன்னுட்டா நிம்மதியா போய்ச் சேர்ந்துருவேன்ல... என்றெல்லாம் மானசீகமாகக் கடவுளிடம் மன்றாடிக் கடவுளுடன் சண்டை போட்டாள். அவளின் மனம் எரிமலை போன்று பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சுமதி ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்வது போல வசந்தாவை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். இருவரிடையேயும் மெளனம் நிலவியது. அந்த மெளனத்தைக் கலைத்தான் வெங்கடேசன். மாப்பிள்ளை வீட்டார் வந்தாகிவிட்டது என்று ஒருவித படபடப்புடன் வெளியே போனான் அவனைத் தொடர்ந்து சுமதியும் போய்விட்டாள். சிறிது நேரத்தின் பின் பெண்ணை அழைத்து வரும்படி மாப்பிள்ளையின் அம்மா கூறினார்.
இவங்களுக்கு மட்டுமென்ன என்னைப் பிடிக்கவா போகுது? எல்லோரும் என்னோட தோலின் நிறத்தைத்தானே பார்க்கிறார்கள். அவங்க கண்ணுக்கு என்னோட நல்ல குணம் தெரியாதா...? செகப்பு நெறம் என்ன ஒசத்தியா...? இந்த ஒலகத்துல மனுஷங்களுக்கு ஏன்? இந்த மாதிரியான எண்ணம்...? ஏன் நல்ல எண்ணமே அவங்க உள்ளத்துல வராதா? என்ற பற்பல சிந்தனைகளுடன் தேநீர்த்தட்டை ஏந்திய வண்ணம் வசந்தா மெல்ல நடந்து வந்தாள். அவள் கைகள் நடுங்கின. அவள் உள் மனமோ என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போகப் போகிறவர்களுக்குத் தானே நான் தேநீர் கொண்டு போகின்றேன் என்று ஓலமிட்டது. வெள்ளைத் தோலிருந்தால் குணம் நடை பார்க்காமல் கட்டத் துடிக்கும் இளைஞர் கூட்டம் மலிந்த இந்த உலகில் யாருக்கு என்னை ஏற்க மனம் வரும்?
ஒவ்வொருவருக்கும் தேநீர்த்தட்டை நீட்டியபடியே போலியாக ஓரு புன்னகையைத் தன்னைப் பார்த்துச் சிரித்த மாப்பிள்ளையின் அம்மாளிடம் வீசியபடியே தன் அறைக்குள் விர்ரென்று போய்விட்டாள். தான் நடந்து கொண்டவிதம் சிறிது அநாகரிகமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அவளுக்கு அப்படிச் செய்தால்தான் அவள் மனம் சிறிது ஆறுதலடையும் போலப்பட்டது. அவள் பள்ளித் தோழி செளமியா கூட அவர்களுடன் வந்திருந்தாள். அவளைப் பார்த்தாவது நான் சிரித்திருக்கலாம். அட அவள்கூட என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். சீ... அவளுக்கு என்னை நன்கு தெரியும். ஆனால் இப்போ எட்டு வருஷங் கழிச்சு இன்னக்கித்தான் அவளைப் பாக்குறேன்.
அவள் மனம் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அவள் மனம் எரிவதை மற்றவர்களால் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்.
வசந்தா வெறுப்புடன் ஜன்னலினூடே வெளியே பார்த்தாள். வசந்த காலமாதலால் வீட்டிற்கருகிலுள்ள பூங்காவில் எங்கும் பல வண்ணங்களிலே பூக்கள் பூத்துக் குலுங்கின. மரங்கள் துளிர்விட்டு எங்கும் பச்சை நிறம் படர்ந்திருந்தது. பறவைகள் கூட எவ்வளவு சந்தோசமாக இந்த வசந்த காலத்தை அனுபவிக்கிறன. அவைகளை என்னைப் போன்று யாரும் ஓதுக்கிவிட மாட்டார்களா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வசந்தா பெருமூச்சொன்றை விட்டாள். அது அவள் மனத்திலே கொதித்துக் கொண்டிருந்த எரிமலையின் வெளிப்பாடாகவே இருந்தது. அந்த வெம்மையைத் தணிப்பது போல் ஜன்னலினூடே மெல்லெனத் தவழ்ந்து வந்த தென்றல் அவளின் தலைமுடியையும் கன்னங்களையும் மெல்ல மெல்ல வருடி விளையாடியது. வசந்தா தன்னையே மறந்து சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.
ஊரிலே அம்மாவும் அப்பாவும் பார்க்காத வரன்களா? நான் ஓர் இசை ஆசிரியை என அறிந்தும் கூட என்னை ஒருவரும் ஏற்க முன் வரவில்லையே. இங்கு சென்னையில் பக்கத்து வீட்டாரையே தெரியாத நிலையில் இருக்கும் போது இதுவெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்.? அண்ணாவும் அண்ணியும் தங்கள் மாப்பிள்ளை தேடும் படலத்தில் சலிப்பதாகத் தெரியவில்லை. என் பயணத்தைத் தொடர எனக்கு ஒரு துணை தேவை. அதற்கு என்னை ஒருவராலும் ஏற்க முடியாதுள்ளதே. நான் ஓரு கூட்டுப் புழுவாக குறுகித் தவிப்பது யாருக்குப் புரியும்.? நானும் பெண் தானே. எனக்கும் கல்யாண தேசம் போக ஆசை. ஆனால்.. ஆனால்.. என்னை அங்கு அழைத்துச்செல்ல இருக்கும் ஒரு மனிதர்... அந்தத் துணை எங்கே...? யார் அவர்? என் கனவுப் பயிர்களை நிஜமாக அறுவடை செய்ய யார் வருவார்கள்? கன்னத்தின் ஓரத்தில் ஓர் மயிர் நரை காண... கண்ட கனவுகள் மெல்ல மெல்லக் கரைந்தோட... மற்றோரை மகிழ்விக்க மரியாதைப் புன்னகைகள்...
தோளிலே ஒரு கைபட நினைவுகளினின்றும் மீண்டு மெல்லத் திரும்பியவள் தன் தோழி செளமியா சிரித்தபடியே தன் கரங்களை அப்படியே இறுகப் பற்றிப் பிடிப்பதை உணர்ந்தாள். வசந்தா நீ எப்படி இருக்கிறாய்? எத்தனை வருஷங் கழிச்சு ஒன்னைப் பார்க்குறேன் தெரியுமா? உனக்கு இந்த டிரஸ் நல்லா பொருத்தமாயிருக்கு...! அதற்கு மேல் அவர்களுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. இருவரும் தம் கரங்களை இறுகப் பற்றிப் பிடித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிலையாக நின்றனர். வாசலிலே காலடிச் சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே சிரித்தபடியே மாப்பிள்ளையாக வந்திருந்த கிருஷ்ணனும் அவனருகில் வசந்தாவின் அண்ணன் வெங்கடேசனும் நின்றிருந்தனர்.
வசந்தாவின் அண்ணன் அவளைப் பார்த்து, “அம்மா வசந்தா எல்லாருக்கும் ஒன்னப் பிடிச்சுப்போச்சு... இனி உன் சம்மதத்தில தான் எல்லாமே இருக்கு... ஒன்னோட விருப்பத்தை மாப்பிள்ளைக்கிட்டயே சொல்லிறலாம்... மாப்பிள்ளை ஓங்கிட்ட பேசணும்னு சொன்னாரு... நீங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டிருங்க...” என்று கூறியவாறே அறையை விட்டு மெல்ல நழுவினான்.
கிருஷ்ணனும் வசந்தாவும் தனிமையில் விடப்பட்டனர். வசந்தாவால் நம்பவே முடியாமலிருந்தது. இப்படியும் ஒருத்தரா...? அதுவும் இந்தச் சென்னையிலா...? அதுவும் என்னைப் பார்த்த பின்புமா...? அவளது உள்ளத்தில் ஆச்சரிய அலைகள் ஆர்ப்பரித்தன... அந்த அமைதியைக் கிழிக்கின்ற வண்ணம், “என்ன யோசிக்கிறீங்க? என்னை ஒங்களுக்குப் பிடிச்சிருக்கா? வசந்தா... ஒங்களப் பத்தி எல்லாமே எனக்குத் தெரியும். இந்தச் சென்னையில நான் பல பெண்களைப் பார்த்தேன். ஆனால் நான் தேடுகின்ற ஏதோ ஒண்ணு அவர்களிடம் இருப்பதாக எனக்குப் படவில்லை. ஆனால் நான் எதிர்பார்க்கின்ற எல்லாமே ஒன்றாக ஒங்ககிட்ட இருக்கிறதா நான் உணர்ந்தேன். செளமியா ஒங்களப் பத்தி எல்லாமே சொல்லியிருக்கிறாள். செளமியாவின் அண்ணனும் நானும் பிரண்ட்ஸ்...” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான் கிருஷ்ணன்.
அவன் கூறியதைக் கேட்ட வசந்தாவின் நெஞ்சு படபடத்தது. அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை ஊடுருவித் தன் உயிரில் கலப்பதாக உணர்ந்தாள். அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு இதமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. அவள் இதயம் படபட வென்று பலமாக அடித்துக் கொண்டது. அந்த ஓசை அவனுக்குக் கேட்டுவிடுமோவென அஞ்சினாள். அவள் கைகள் வியர்த்தன.
“என்னங்க நான்பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க ஒண்ணுமே பேசாம உம்முன்னு இருக்கறீங்க...” என்றான் கிருஷ்ணன்.
அவள் அவன் கண்களை நிமிர்ந்து அப்போது தான் முதல் தடவையாகப் பார்த்தாள். அந்தக் கண்களின் பார்வையில் பொய்யில்லை. அந்தக் காந்தக் கண்களின் கவர்ச்சியில் கட்டுண்ட வசந்தா அப்படியே ஈர்க்கப்பட்டு விட்டாள். அவளின் விருப்பத்தை அவளின் கண்கள் அவனுக்குத் தெரிவித்தன. கடவுளாகிய கண்ணனே தன் முன்பு நின்றிருப்பதாக வசந்தா உணர்ந்தாள். வெட்கத்தால் அவளது தலை தானாகக் கவிழ்ந்து மண் பார்த்தது. அதனைக் கிருஷ்ணனும் அங்கு வந்த அவளது அண்ணனும் கண்டு மகிழ்ந்தனர்.