சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கெல்லாம் தரமான பொருட்களை குறைந்த விலைக்கு கொடுத்துப் பெயர் வாங்கிய மளிகைக் கடை அது. சுப்பையா மளிகைக் கடை என்றால் தெரியாதவர்கள் யாருமிருக்க மாட்டார்கள். ஊரில் பல கடைகள் காளான்கள் போல் முளைத்திருந்தாலும் சுப்பையா மளிகை என்றால் அந்த வட்டார மக்களிடத்தில் அதற்குத் தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது.
கடையின் உரிமையாளர் சுப்பையா நேர்மையான மனிதர். பணத்திற்காக எதையும் செய்ய மாட்டார். எதிலும் நேர்மையுடன் செயல்படுபவர். அதனால் அவர் கடையில் நம்பி எதையும் வாங்கலாம் என்று மக்கள் அந்தக் கடையையே நாடிச் செல்வர்.
அப்படிப்பட்ட சுப்பையாவிற்குச் சில நாள்களாக உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவரது மகன் கணேசன் கடைக்கு வந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டான். அந்தக் கடையில் பல ஆண்டுகளாக மாணிக்கம் வேலை பார்த்து வருகிறார். அவர் சுப்பையாவைப் போலவே நல்லவர். பெயரில் மட்டும் அவர் மாணிக்கம் அல்ல. குணத்திலும் அவர் மாணிக்கமாகவே இருந்தார்.
அவரைச் சுப்பையா வேலைக்காரராக நடத்தவில்லை. தனது குடும்பத்தில் ஒருத்தராகவே நடத்தினார்.
கல்லாப் பெட்டியிலிருந்த கணேசன், "அண்ணே... அண்ணேய்... மாணிக்கம் அண்ணே..." என்று அழைக்கவே பொட்டலம் மடித்துக் கொண்டிருந்த மாணிக்கம், "என்ன தம்பி..." என்று கேட்டுக் கொண்டே கையில் பொட்டலத்தை மடித்தபடி உடம்பெங்கும் மளிகைச் சாமான்களால் ஏற்பட்ட அழுக்கோடு உள்ளிருந்து வந்தார்.
அவரிடம் கணேசன், “ஏன்ணே, நான் தெரியாமத்தான் கேக்குறேன்... நம்ம கடையில எல்லாச் சாமானும் சுத்தமானதுதானே...?" என்று கேட்டான்.
அவன் கேட்டது புரியாதவராக மாணிக்கம், “ஆமாந் தம்பி... அதுல என்ன உங்களுக்கு என்ன சந்தேகம்...? தரமானத விக்கிறதுனாலதான் நம்ம கடை வியாபாரத்தோட யாராலயும் போட்டி போட முடியலை... அதத் தெரிஞ்சுக்கோங்க" என்று பெருமையாய் சொன்னார்.
"ஆமாண்ணே... அது சரிதான்... அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் முன்னேறாம இப்படியே இருக்கோம். நேத்தைக்குக் கடை வச்சவனெல்லாம் பணக்காரனாயிட்டான். ஆனா நாம இருந்த இடத்திலேயே இருக்கோம்...ஆமா ?" என்றான் சற்றே கோபத்துடன்.
அவன் கூறியதைக் கேட்ட மாணிக்கத்திற்கு படபடவென்று வந்தது. இருந்தாலும் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "என்ன தம்பி சொல்றீங்க..?" என்று அவனைத் திரும்பக் கேட்டார்.
"ஆமாண்ணே... நமக்குப் பின்னால கடை வச்சவனெல்லாம் வீடு தோட்டம் தொறவுன்னு வசதியாச் செட்டிலாயிட்டான். நாம மட்டும் இன்னும் எந்த வசதியும் இல்லாம அதே பழைய ஓட்டு வீட்டுலேயே இருக்கோம்... இப்படி இருந்தா எந்தக் காலத்துல நாம முன்னுக்கு வர்றது… அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்..." என்று பொறிந்து தள்ளினான்.
அதனைக் கேட்ட மாணிக்கம், "அ... அதனால... என்ன செய்யப் போறீங்க... தம்பி..?" என்று அவன் கூறப் போவதைக் கேட்கத் தயாரானார்.
"நம்ம கடையில விக்கிற பொருளை நூறு சதவிகிதம் சுத்தமாக் கொடுக்காம கொஞ்சம் கலப்படம் பண்ணி வித்தா நல்லா லாபம் கிடைக்குமுல்ல…? கொஞ்சம் நெனச்சுப் பாருங்க…என்ன நான் சொல்றது...?"
"என்ன தம்பி சொல்றீங்க... வேண்டாம்பா... இது… ரொம்ப ரொம்பத் தப்பு தம்பி… அப்பா இந்த நல்ல பெயரை சம்பாதிக்க ராப்பகலா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரு தெரியுமா...? கொஞ்ச நஞ்சக் கஷ்டமில்ல தம்பி… அதக் கெடுத்துப்புடாதீங்க…”
கணேசனுக்கு சிவ்வென்று கோபம் தலைக்கேறியது. அவன் மாணிக்கத்திடம், "பேச்சை நிறுத்துங்கண்ணே…அவரு சிரமப்பட்டு சொத்தச் சம்பாதிக்கலையே... நல்ல பேரை மட்டும்தானே சம்பாதிச்சு வச்சிருக்காரு... அந்த நல்ல பேரை வச்சி என்ன பண்றது. நாக்கு வலிக்கிறதா…? பெருமை சோறுபோடுமாண்ணே...? இந்தக் காலத்துலேயும் நாம தர்மம் நியாமுன்னு பார்த்துக்கிட்டு இருந்தா கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டியதுதான். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்..." என்றான்.
"எ... முடிவு எடுத்திருக்கீங்க தம்பி..." என்று மாணிக்கம் தயங்கித் தயங்கிக் கேட்டார்.
"இனிமே மிளகுல மூணுல ஒரு பங்கு பப்பாளி விதையைக் கலக்குறோம்... சீனியில ரவாவைக் கலக்குறோம்... அதே மாதிரி..." செல்வம் வரிசையாகச் சொல்லிக் கொண்டே போக...
மாணிக்கத்தால் கோபத்தை அடக்க முடியாமல் அவன் பேச்சை இடைமறித்தார். "வேண்டாம் தம்பி... இது மக்கள் நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு நாம செய்யிற துரோகம்பா... கஷ்டப்பட்டு உருவாக்கியிருக்கிற நல்ல மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துப்புடுவீங்க போலருக்கே… கடையில எல்லாப் படமும் இருக்கலாம் தம்பி... ஆனா கலப்படம் மட்டும் இருக்கக் கூடாதுப்பா... நல்ல பேரச் சம்பாதிச்சிருக்கிற ஒங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சா... என்ன நடக்கும்னே சொல்ல முடியலப்பா… வேணாம்பா இந்த மாதிரியான கெட்ட எண்ணத்தை விட்ருப்பா" என்றார்.
இதனைக் கேட்ட கணேசன் கண்கள் சிவக்க, மாணிக்கத்தைப் பார்த்து, "நிறுத்துங்கண்ணே.... ஏதோ எங்க குடும்பத்துல் ஒருத்தரா பழகிட்டீங்கங்கிறதால உங்ககிட்ட இந்த விசயத்தைப் பத்தி பேசினேன். இல்லைன்னா நானே செஞ்சிருப்பேன்..." என்றான்.
"இல்ல தம்பி... வேண்டாந் தம்பி. நான் சொல்றதக் கேளுங்க தம்பி" என்று பொறுமையுடன் அவனைப் பார்த்துக் கூறினார் மாணிக்கம். அதைக் கேட்கத் தாயரில்லாதவன் போன்று கணேசன், "இதப் பாருங்கண்ணே... பேச்சை நிறுத்துங்க... இந்த வீணாப் போன அறிவுரையெல்லாம் எனக்குத் தேவையில்லை... நான் சொல்றதை நீங்க செய்யிங்க... அதை விட்டுட்டு நியாயம் தர்மம்னு பேசிக் காரியத்தைக் கெடுக்கப் பாக்காதீங்க... எனக்கும் நியாயம் தர்மம் பத்தித் தெரியும்..." என்று கோபமாய்ப் பேச, பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் மாணிக்கம்.
பேசாமல் நகர்ந்த மாணிக்கத்தைப் பார்த்து, "இனிமே நான் சொன்னதெல்லாம் தொடர்ந்து நடக்கணும்... இதப் பத்தி அப்பாக்கிட்ட சொன்னீங்க நான் பொல்லாதவனாயிடுவேன்..." என்று அவர் முதுகுக்குப் பின்னால் தடித்த குரலில் மிரட்டும் தொனியில் கணேசன் சொல்லிக் கொண்டிருந்தான்.
நாட்கள் உருண்டோடின. கணேசனின் அப்பாவிற்கு உடல்நிலை சரியாகாததால் கணேசனே முழுக்க முழுக்கக் கடையை நடத்திக் கொண்டிருந்தான். ஒரு சில நாட்களுக்குப் பிறகு... ஒரு மதியவேளை...
"தம்பி கணேசன்… அப்பா இல்லையா..." என்று கேட்டபடியே அந்தத் தெருவில் வசிக்கும் ஆசிரியர் கருப்பையா வந்தார்.
அவரைப் பார்த்து எழுந்த கணேசன், "வணக்கம் சார்…வாங்க... அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை... அதனால கடைய நான்தான் பார்த்துக்கிறேன்... ஏன் சார் சும்மாதானே... இல்ல… சாமான் எதுவும் வேணுமா... சார்?" என்று கேட்டான்.
"இல்ல தம்பி ஒரு விசயம்... அதை அப்பாகிட்டத்தான் சொல்லணும்..." என்று கருப்பையா இழுத்தார்.
"என்ன சார் விசயம்... எங்கிட்ட சொல்லலாமுன்னா சும்மா சொல்லுங்க நான் அப்பாகிட்ட சொல்றேன்..." என்றான்.
"இல்லப்பா இப்ப நான் சொல்லப் போற விசயத்தைக் கேட்டு நீங்க தப்பா நினைக்கக் கூடாது. நம்ம கடையில இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்தது கிடையாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிய சாமானெல்லாம் சுத்தமா இல்லை... ஏதோ கலப்படம் பண்ணினது மாதிரி தெரியுதுப்பா... நான் நம்ம கடையில் அது மாதிரி செஞ்ச்சிருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா நீங்க மொத்தமா பொருள் வாங்கிற இடத்துல இந்த மாதிரி பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு இல்லையா... எங்க வீட்ல கூட சொன்னாங்க சுப்பையாண்ணன் கடையிலயும் கலப்படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு... நான் சத்தம் போட்டேன்... உங்க அப்பா இந்த மாதிரி ஒருக்காலமும் செய்யமாட்டாருன்னு... அவரு ராமன் மாதிரிப்பா... இதுவரைக்கும் இங்க பொருள் வாங்கின யாருமே நேர்ல வந்து சொல்ல மாட்டாங்க. ஏன்னா... அப்பா மேல அவ்வளவு மரியாதை…. அவருக்கே தெரியாம நடக்க வாய்ப்பிருக்கு இல்லையா...? நீங்க பொருட்களைப் பார்த்து வாங்கணுங்கிறதாலதான் நான் நேர்ல வந்து சொல்றேன். இனிமே பார்த்து வாங்குங்க தம்பி... உங்களுக்கு கெட்ட பெயர் வந்துடாம பார்த்துக்கங்க... நான் வர்றேன்..." என்று நடந்தார்.
அதனைக் கேட்ட கணேசனுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது. அவன் வெலவெலத்துப் போனான்.
"சரி... சா...சார்.... நான் பார்த்துக்கிறேன்... சார்…" என்றான் நடுங்கும் குரலில்.
அவர் சென்றதும் கணேசனிடம் மாணிக்கம், "தம்பி பாத்தீங்களா... நம்ம அப்பா மேல உள்ள மரியாதையை... இந்த மாதிரி நல்ல பேரைச் சம்பாதிக்கத்தான் தம்பி நாளாகும்... கெட்ட பேரை உடனே சம்பாதிச்சிறலாம்… ஆனா நல்ல பேரைச் சம்பாதிக்கிறதுக்கு நாளாகும்… அதே மாதிரிதான் தம்பி... பணத்தை எப்ப வேணுமின்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா நல்லவன்கிற பேரை சம்பாதிக்கிறது அவ்வளவு சுலபமில்லை… அன்னைக்கு என்ன சொன்னீங்க... அடுத்தவன் வீடு வாசல்னு இருக்கான்னுதானே... தம்பி இந்தக் கடையில் சம்பாதித்த காசுலதான் ஒங்க அப்பா தன்னோட மூணு பொண்ணுங்களை படிக்க வச்சசு நல்ல இடத்துல கல்யாணமும் பண்ணிக் கொடுத்திருக்காரு... அதோட மட்டுமில்ல... ஒங்களையும் நல்லாப் படிக்க வச்சிருக்காரு... அதெல்லாம் இந்த கடை வருமானம்தானே... இதையெல்லாம் அன்னைக்கே நான் சொல்லியிருப்பேன்... ஆனா அப்ப நீங்க கேக்கிற நிலையில இல்லை...
"நம்ம கடையில வாங்குன சாமான் நல்லாயில்லையின்னதும் வேற கடைக்குப் போகாம நேர வந்து சொல்லிட்டுப் போறாரு பாருங்க... அதுதான் அப்பா மேல உள்ள மரியாதை... இதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்துல சம்பாதிக்க முடியாது தம்பி... இனிமே கலப்படம் பண்ண கனவுல கூட நெனக்காதீங்க... நாம எப்பவும் போல இருந்தா போதும்..." என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
அதனைக் கேட்ட கணேசனின் கண்கள் கலங்கின. அவன் மாணிக்கத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு, "அண்ணே... என்னை மன்னிச்சிடுங்க.... பணமும் அதனால் வரும் பெருமையும்தான் வாழ்க்கையின்னு நான் தப்பா நெனச்சுட்டேன்... ஆனா நல்ல பேரச் சம்பாதிக்கிறதுதான் பெரிய சொத்து... அது அப்பாகிட்ட இருக்குன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்... இனிமே கலப்படம் பண்ணனுமுன்னு மனசாலகூட நினைக்க மாட்டேன்ணே... இங்க நடந்தது எதுவும் அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்..ணே…." என்றான்.
கணேசன் தன்னுடைய மனதிற்குள் அப்பாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டான். மாணிக்கம் அவனை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டார். அந்த அணைப்பில் அவனை அவர் மன்னித்து விட்டது தெரிந்தது.