“வீடுவரை உறவு வீதிவரை மனைவி...
காடுவரைப் பிள்ளை கடைசிவரை யாரோ...?
கடைசி வரையாரோ...?”
என்ற டி.எம்.எஸ். பாடல் மனதைத் தொட்டு கசக்கிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் அனைவரும் சுந்தரம் பிள்ளையின் கைகளைத் தொட்டு விட்டு அங்கு கிடந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். சுந்தரம்பிள்ளை கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.
தளர்ந்திருக்கும் அவருடைய உடலும் முகமும் சுந்தரம் பிள்ளைக்கு எண்பெத்தி எட்டு வயதிருக்கும் எனக் காட்டியது. அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டிருந்தார். இப்போது அறுபத்தைந்து வயதான அவரது மூத்த மகனும் ஹார்ட் அட்டாக்கில் உயிரை விட்டிருந்தபடியால் கண்களில் வழியும் சிறிதளவு கண்ணீரோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் சுந்தரம் பிள்ளை.
சுந்தரம் பிள்ளை அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் ஓரளவு தெரிந்த பெரிய மனிதர்தான். இருந்தாலும் வீம்பும் பிடிவாதமும் பிடித்தவர். கதர் சட்டை வேட்டிதான் அணிவார். இன்றும் அந்த ஆடையைத் தவிர வேறு அணிந்ததில்லை. ஒரு காலத்தில் வியாபாரத்தில் உச்சத்தில் இருந்தார்.
தன்னுடைய பணத்தை எல்லாம் நிலங்களாக வாங்கிக் குவித்திருந்தார். ஊரில் முக்கால்வாசி நிலம் அவருடையது. அப்படி இருந்தாலும் அவருக்கு இன்னும் மண்ணாசை அடங்கவில்லை. ஊருக்குள் யாராவது நிலம் விற்கிறார்கள் என்று தெரிந்த உடனேயே அவரிடம் சென்று பேசி நிலத்தை வாங்கிவிடுவார். அவ்வாறு நிலத்தை வாங்காது விட்டுவிட்டால் அவருக்கு மனசே ஆறாது.
பிள்ளைகள் நான்கு பேரும் அவ்வளவு வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இரண்டு பெண் பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுத்து மாப்பிள்ளைகளின் தயவில் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்திவிட்டு பிள்ளைகளையும் பெற்று இளம் வயதிலேயே நோயின் காரணமாக அடுத்தடுத்த சில வருடங்களில் இறந்து விட்டனர்.
சுந்தரம் பிள்ளை தன்னுடைய மனைவி இருந்தவரை கம்பீரமாக சுற்றித் திரிந்தவர். இன்று வியாபாரத்தைக் குறைத்துக் கொண்டு நிலங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் தன்னுடைய பணத்தினை யாருக்காகவும் செலவழிக்காதவர். பிறருக்கு மட்டுமல்ல தனக்கு உடம்பு சரியில்லா விட்டால்கூடப் பணம் செலவாகாமல் உடம்பு சரியாக வேண்டும் என நினைக்கும் தாராளமான குணம் படைத்தவர்.
இப்போதுகூட இறந்த தனது மூத்த மகனின் மருத்துவச் செலவுக்குச் சல்லிக்காசுகூடச் செலவழிக்காதவர். மூத்த மகனின் மனைவிக்குத் தனது துக்கத்தைச் சொல்லி அழக்கூட உறவினர்கள் யாருமில்லை. அமைதியாக வழியும் கண்ணீரோடு கணவனை வெறித்துப் பார்த்தபடி அவள் அமர்ந்திருந்தாள்.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் சுந்தரம் பிள்ளையை மறைமுகமாக வசைபாடிக் கொண்டிருந்தனர். “இந்தக் கெழவனுக்கு எப்புட்டு ஆசை... எச்சிக் கையில கூடக் காக்காய விரட்டமாட்டான் போலிருக்கே... ஆமா ஏய்யா இம்புட்டு பணத்தையும் வச்சுக்கிட்டு மனுசன் என்னத்தப் பண்ணப் போறாராம். இவரு மட்டும் கொஞ்சம் பணத்த செலவழித்திருந்தால் அவரு மகனக் காப்பாத்தி இருக்கலாம்யா... ஆனாலும் மனுசனுக்கு இப்புட்டு ஆசையும் பிடிவாதமும் இருக்கப்படாது...” என்றார் பக்கத்துவீட்டு கன்னையா.
அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொன்னையா, “இங்க பாருய்யா மனுசனுக்கு ஒரு கைப்பிடி தவிட்டைத் தூக்குற பலம் உடல்ல இருக்கற வரைக்கும் ஆசை விடாதுய்யா... இன்னக்கி நேத்தா இவரப் பாக்குறோம்... எனக்கும் எழுவது வயசாயிருச்சி... இந்த மனுஷன் மண்ணாசை பிடிச்சி அலையிறான்... இனிமே எங்க இந்த ஆளுக்குப் புத்தி வரப்போகுதுங்கற...” என்று அங்காலாய்த்தார்.
அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மேற்குத்தெரு சின்னு அவர்களின் உரையாடலில் தானும் கலந்து கொண்டார். அவருக்கும் ஏறக்குறைய எழுபத்திரண்டு வயதிருக்கும். இன்றுவரை உழைத்துத்தான் காலத்தை அவர் கடத்திக் கொண்டிருந்தார்.
அவர் பொன்னையாவைப் பார்த்து, “பொன்னையாண்ண நாய்க்கித் தேங்கா கிடைச்சா எப்படி இருக்குமோ, அது மாதிரிதான் இவரோட பணமும். புள்ளைகளுக்கு கூட உதவாத அந்தப்பணம் எதுக்கு? நிலமா வாங்கி குவிக்கிறாரே...! இவரு சாகுறப்போ கொண்டா போகப்போகிறார்...? அவனவன் எங்க எப்போ சாவன்னே தெரியாது. ஆறடி மண்ணுதான்னு சொல்லுவாக... ம்ம் இதெல்லாம் அவருக்கு எங்க தெரியப் போகுது...” என்று தன்மனதில் உள்ளதைக் கொட்டினார்.
இவ்வாறு ஆளாளுக்கு அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
ஆளாளுக்கு இவ்வாறு பேசினாலும் அவற்றை எல்லாம் காதில் வாங்காதவராக எந்தச் சலனமும் இன்றிச் சுந்தரம் பிள்ளை சேரில் கல்லுப் பிள்ளையார் போன்று அமர்ந்திருந்தார். இறந்த உடலை தூக்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர் மனதில் உள்ளது யாருக்குத் தெரியும்.
அவர் சின்ன வயதில் நடந்த சம்பவம். அந்தச் சம்பவம் இன்றும் அவர் மனதில் நிழலாடியது. அவருக்குப் பதினைந்து வயதிருக்கும். அவரும் அவருடைய அப்பாவும் ஊர்ப் பெரியதனக்காரருக்குச் சொந்தமான நிலத்தில் தங்களுடைய மாட்டை மேயவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த ஊர்ப் பெரியதனக்காரர், “யார்ரா... அது இங்க வந்து மாடு மேச்சிக்கிட்டு இருக்கறது? எங்களுக்கெல்லாம் ஆடு மாடு இல்லையா...? அறிவு கெட்ட நாய்களா...? கையகலம் இடமில்லாத நாய்க்கு எதுக்குடா ஆடு மாடு...? காடுகரை வச்சிருந்தாத் தாண்டா ஆடுமாடு வச்சிருக்கணும்... இல்லாட்டி எதுக்குடா வச்சிருக்கீங்க...” என்று பேசி நிலத்தில் வேலை செய்வோர் மத்தியில் அவனையும் அவனது அப்பாவையும் அவமானப்படுத்தினார்.
அந்த அவமானம் தாங்காது அவனது அப்பா அழுத அழுகை அவனுக்குத்தான் தெரியும். அந்த அவமானம் அவரைக் கூனிக்குறுக வைத்துவிட்டது. அவர் அவனைப் பார்த்து, “டே தம்பி கேட்டுக்கிட்டியாடா... இந்தப் பய பேசுனத... ஊருக்குள்ள இருக்கற நெலத்தை எல்லாம் தாம்பேருக்கு பொய்யாப் பட்டாப் போட்டுக் கிட்டவன் பெரிய மனுஷன்... நீ தலையெடுத்துத் தாண்டா எனக்கேற்பட்ட இந்த அவமானத்தைப் போக்கணும்... இந்த ஊருலேயே அதிகமா நெலம் வச்சிருக்கறவங்க நாமதான்னு எல்லாரும் பேசணும்... என்னோட இந்த ஆசைய நீ தாண்டா நிறைவேத்தணும்...” என்று அவனிடம் வாய் ஓயாமல் கூறிக் கொண்டே இருப்பார்.
ஊர்ப் பெரியதனக்காரர் செய்த அவமானமே அவரது உயிருக்கு விரைவில் உலை வைத்தது. அதன் பின் குடும்ப பாரம் சுந்தரம்பிள்ளையின் தலையில் விழுந்தது. படிப்பு நின்றுபோக சிறு சிறு வியாபாரத்தைச் செய்து, இன்று ஊரில் பல ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். ஊரில் இவருக்குத்தான் நிலங்கள் அதிகம். இன்று சுந்தரம்பிள்ளையும் ஊரில் பெரியதனக்காரர் ஆகிவிட்டார்.
அன்று அவரது தந்தையாரும் அவரும் பட்ட அவமானமே, அவரை நிலங்களை வாங்கி வாங்கிக் குவிக்க வைத்தது. இவையெல்லாம் அவரது உழைப்பால் வாங்கப்பட்டவை... வாயைக் கட்டி வயித்தைக் கட்டி இவற்றை வாங்கிச் சேர்த்தார் சுந்தரம்பிள்ளை. ஒவ்வொரு முறையும் நிலத்தை வாங்கும் போதும், இந்த ஊருல பெரிய பண்ணையாரு நாங்கதாய்யா... கையகல இடமில்லேன்னா சொன்னீங்க... பாத்துக்குங்க இப்பக் கடலளவு எக்கிட்ட இருக்கு...” என்று அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரையும் பார்த்து மனதிற்குள் கூறிக் கொள்வர். பலவாறு எண்ணங்கள் சுழன்றோட அமர்ந்திருந்த சுந்தரம் பிள்ளையின் தோளின் மீது ஒரு கை பட்டவுடன் அவர் நினைவுகளிலிருந்து திரும்பி நிகழ்காலத்திற்கு வந்தார்.
வந்தவர் சுந்தரம் பிள்ளையின் பால்ய சிநேகிதரான பெருமாள் அம்பலம். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். நெருக்கமான நண்பர்கள். அவர் துக்கம் விசாரிக்க அப்போதுதான் காரில் இறங்கி வந்து சுந்தரம் பிள்ளையின் அருகில் அமர்ந்திருந்தார். அவரும் சுந்தரம் பிள்ளைக்கு ஈடான வசதி படைத்தவர்தான். அவர் தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தித் திருமணமும் முடித்துக் கொடுத்து விட்டார்.
அவரைப்பார்த்தவுடன் சுந்தரம் பிள்ளைக்கு ஒரு பக்கம் சந்தோசம். அவருடைய இடம் ஒன்றினை ஏற்கனவே விலைக்குக் கேட்டிருந்தார். அதை வாங்குவதற்கான சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. அந்த எண்ணம் சுந்தரம் பிள்ளையின் மனதில் ஓடி மறைந்தது. சில சம்பிரதாய விசாரிப்புகளுக்குப்பின் பெருமாள் அம்பலம் அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். பொழுது சென்று கொண்டிருந்தபடியால் உடம்பினைச் சீக்கிரம் தூக்க வேண்டும் என்றனர். அனைவருக்கும் பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. வந்தவர்களுக்கும் அழுது கொண்டிருப்பவர்களுக்குச் சுக்கு காப்பி கொடுத்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது.
சுந்தரம் பிள்ளையிடம் உறவினர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுங்கள்... வந்தவர்களுக்கு காப்பித் தண்ணி வாங்கித் தரணும் என்று கேட்டார். அதற்குச் சுந்தரம் பிள்ளை, “அதெல்லாம் இப்ப எதுக்குய்யா... இப்போதான் கிளம்பிருவோம்ல...” என்று மறுத்து விட்டார். உறவினர் முணு முணுத்துக் கொண்டே துண்டை வாயில் பொத்தியபடி மரப்பெஞ்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டார். மற்ற செலவுகளை இன்னொரு மகன்தான் செய்து கொண்டிருந்தார்.
உடம்பு தூக்கப்பட்டது. பொறியையும் எள்ளையும் தூவியபடி முன்னால் ஒருவன் செல்ல உடம்பின் பின்னே அனைவரும் வரிசையாகச் சென்றனர். பூக்களை ஒருவன் அள்ளி அள்ளி இறைத்துக் கொண்டே வந்தான். உறவினர்களோடு சுந்தரம் பிள்ளையும் மெதுவாக நடந்து சென்றார்.
இப்போது அவரது மனதில் இறந்து போன மகனைக் காட்டிலும் பெருமாள் அம்பலம் தான் இருந்தார். அவரின் இடத்தை வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம்தான் பணம் தேவை. என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே சுந்தரம் பிள்ளை நடந்து வந்தார். மயானத்தில் எல்லாச் சடங்குகளும் முடிந்து கொள்ளி வைக்கப்பட்டது. சுந்தரம் பிள்ளைக்குத் திடீரென ஒரு யோசனை வந்தது. இறந்து போன தனது மூத்த மகன் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த பணம் இவரிடம்தான் இருந்தது. அதையும் சேர்த்தால் எப்படியும் பெருமாள் அம்பலத்தின் இடத்தை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை அவர் மனதில் வந்துவிட்டது.
உடலின் மீது வைக்கப்பட்ட தீ இப்போது “மளமளவென...” எரியத் தொடங்கியிருந்தது. அந்தத் தீயைப் போன்றே சுந்தரம் பிள்ளையின் மனதிலும் மண்ணாசை எனும் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் மயானத்தை விட்டுச் சோகத்தோடு வந்து கொண்டிருந்தனர். சுந்தரம் பிள்ளை தெளிவான உள்ளத்துடன் வேகமாக வீட்டிற்கு நடந்து வந்தார்.