என் மீதே எனக்குக் கோபம் கோபமாக வந்தது. இதற்கு என்ன காரணம் என்றும் எனக்குத் தெரியவில்லை. மனதில் ஏதோ ஒருவிதமான அரிப்பு. அலுவலகத்தில் அதிகமான வேலை. அவற்றையெல்லாம் ஒரு வழியாக முடித்தாகி விட்டது. வெகுவிரைவில் வீட்டிற்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அலுவலகத்தில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. மேலாளரிடம் கூறிவிட்டு என்றைக்கும் இல்லாமல் இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
ஆறும் கடலும் சந்திப்பதைப் போன்று பகலும் இரவும் சந்திக்கும் வேளை. நீலநிற வானம் மறைத்து இருட்டினை பூசிக் கொண்டிருந்தது. வீட்டின் முகப்பு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். வீட்டில் வழக்கம்போல் டிவி அலறிக் கொண்டு தானும் இந்த வீட்டின் ஒரு அங்கத்தினர் என வெளிப்படுத்தியது. என் மனைவி காய்கறி நறுக்கிக் கொண்டே தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கொண்டிந்தாள்.
நான் வந்ததைப் பார்த்தவுடன், “வாங்க…. வாங்க... இன்னைக்கு என்னங்க சீக்கிரமே வந்துட்டீங்க” என்று தொலைக்காட்சியிலிருந்து கண்களை விலக்காமலேயே என் முகம் பாராமல் கேட்டாள்.
என்னன்னே தெரியலே. வீட்டுக்குச் சீக்கிரம் போகணும்னு தோணுச்சு. அதுமட்டுமில்லாம இன்னைக்கு எங்க ஆபீஸ் ஸ்டாப் ஒருத்தரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். ஏழு மணிக்கெல்லாம் என்னய வரச் சொன்னார். அதான் வந்துட்டேன். மணி இப்பவே ஏழாயிடுச்சு. குளிச்சிட்டு சீக்கிரம் கிளம்பணும்” என்றபடியே சேரில் உட்கார்ந்தேன். சூடாக டீக் குடித்தால் நன்றாய் இருக்கும் போலத் தோன்றவே என் மனைவியைப் பார்த்து, “சசிகலா... சூடா டீப்போட்டுக் கொடுக்குறீயா..?” என்று கேட்டேன்.
அதற்கு அவளோ, “என்னங்க சத்த நேரம் இருங்க நாதஸ்வரம் தொடர் போயிக்கிட்டு இருக்கு. அற்புதமான சீனு ஓடுது. கோவிச்சுக்காம நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் டீ போட்டு வைக்கிறேன்” என்று கூறி என்னைச் சமாளித்தாள்.
அவள் சொல்லி முடிக்கவும் சரியாக விளம்பர இடைவேளை வந்தது. தொலைக்காட்சியில் எனக்குப் பிடித்ததே இந்த விளம்பர இடைவேளைதான். அப்போதுதான் எனக்குத் தேவையானவைகளைக் கேட்டுப் பெற முடியும். அதனால் விளம்பரதாரர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
விளம்பர இடைவேளை வந்தவுடன் என் மனைவி, “ஹூம்..ம்..ம்...எப்பப் பாரு விளம்பரத்தை இடையில் போட்டு கடுப்பேத்துரானுக” என்று அலுத்துச் சலித்துக் கொண்டே எழுந்தாள். அங்கிருந்த என்னைப் பார்த்து, “ஏங்க இப்பக் குளிக்கப் போகாதீங்க…. சத்த இருங்க டீ போட்டுத் தாரேன். டீயைக் குடிச்சிட்டு அப்புறம் போய்க் குளிங்க” என்றாள்.
என் தலைவிதியை நொந்து கொண்டேன். வீட்டில் என் முகம் பார்த்துப் பேசக்கூட மனைவிக்கு நேரமில்லாமல் போய்விட்டது. தொலைக்காட்சி அந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது. என்மீது அவளுக்குப் பிரியமில்லாமல் போய்விட்டதா? அல்லது என் முகம் பழசாகி விட்டதோ அல்லது இந்த முகத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்து விட்டதோ? என்று பலவாறாக எண்ணியபடியே சட்டையை கழற்றிக் கொண்டே என் மகன் கெளதமைக் கூப்பிட்டேன். அவன் வராததால் அவனைத் தேடி மொட்டை மாடிக்குச் சென்றேன்.
அங்கே என் மகன் கெளதம் உட்கார்ந்து கொண்டு மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கல்லூரியில் இரண்டாமாண்டு கணிணியியல் படிக்கின்றான். அவனைப் பார்த்து, “டேய் கெளதம்... இங்க என்னடா பண்ற?” என்று கேட்டேன்.
“ஏப்பா... கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருக்கறேன்...” என்று மொபைல் போனை பார்த்தவாறே பேசினான்.
எனக்குச் சற்று கடுப்பாக வந்தது. “ஏண்டா எப்பவும் மொபைல் போனையே நோண்டிக்கிட்டு இருக்கியே... ஒனக்குப் போரடிக்காதா? போய் புக்ஸ எடுத்து படிடா... இப்படியே பார்த்துக்கிட்டிருந்தா சீக்கிரம் கண்ணாடி போடுற மாதிரி வந்துரும் பார்த்துக்க...” என்றேன்.
அவனோ, “அப்பா எல்லாத்தையும் காலேஜ்லேயே படிச்சாச்சுப்பா... போரடிக்குது... அதுதான் மொபைல் போன்ல விளையாடிட்டு இருக்கேன்” அவன் என்னை நிமிர்ந்து பார்த்துக் கூடப் பதில் சொல்லவில்லை.
ஏன் இந்த வயது பசங்களுக்கு முகத்தப் பார்த்துக் கூடப் பேசமுடியலை...? தலை போற மாதிரி இந்தப் பய மொபைல் போன்ல எதையோ தேடிக்கிட்டு இருக்கான். அப்படி விளையாட்டுல என்னத்தத் தேடுறான். அப்பா வந்திருக்காரேன்னு கொஞ்சனாச்சும் பயங்கறது இருக்கா அவனுக்கு...? சரி அவன் என்னோட முகத்தினை பார்த்தாவது பேசக்கூடாதா? என்று பலவாறு நினைத்தவாறே கீழே இறங்கினேன்.
டீ டேபிள்மேல் இருந்தது. சசிகலாவின் முகம் தொலைக்காட்சியை நோக்கி இருந்தது. தொலைக்காட்சியில் யாரோ ஒரு பெண் சத்தமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். நான் அமைதியாக டீயைக் குடித்துவிட்டுக் குளிக்கச் சென்றேன்.
குளித்துவிட்டு நிச்சயதார்த்த வீட்டிற்குச் செல்வதற்காக வேறுடையை மாற்றிக் கொண்டேன். என் மனைவியை கூப்பிடலாம் என நினைத்தேன். அவளோ நாதஸ்வரத் தொடரில் ஒன்றிப் போயிருந்தாள். அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்தபடியே, “எம்மா…நான் வரக் கொஞ்சம் லேட்டாகும்... ராத்திரிக்கு எனக்குச் சாப்பாடு வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவளது பதிலுக்காகக் காத்திராமல் வாசலை நோக்கிச் சென்றேன்.
அவளோ தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே “ம்...ம்...” என்று ம் கொட்டிவிட்டுத் தொலைக்காட்சியில் ஒன்றிப் போனாள். இப்போது தொலைக்காட்சியில் வேறு யாரோ ஒருவர் அழுது கொண்டிருந்தார்.
வண்டியை எடுத்துக் கொண்டு திருமண மண்டபம் நோக்கிச் சென்றேன். நிச்சயதார்த்தம் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... எனப் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
பெண்களின் உடலில் பட்டுச் சேலைகள் பளபளத்தன. கழுத்தில் தங்க நகைகள் தகதகவென்று ஜொலித்தன. அனைவரின் முகத்திலும் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. ஒவ்வொருவரையும் பார்க்கும் போது போலியான விசாரிப்புகள், கைகுலுக்கல்கள்.
ஒரு பக்கம் குழந்தைகள் சந்தோசமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். பெரியவர்கள் அனைவரும் சேரில் அமைதியாக அமர்ந்திருந்தனர். பலர் தங்களது காதில் செல்போனை வைத்துக் கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர். நேரில் இவ்வளவு பேர் இருந்தும் பேச ஆள் கிடைக்காமல் போன் போட்டு பேசுகிறார்களோ? அல்லது தாங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறோம் என்று பிறரிடம் காட்டிக் கொள்வதற்காகப் பேசுகிறார்களோ? எல்லாம் போலியான வாழ்க்கையா ஆயிப்போச்சு… என எண்ணினேன். ஒருவேளை இப்படி இருப்பதுதான் மரியாதையோ? என என் மனதில் நானாக நினைத்துக் கொண்டேன்.
சில பேர் என்னிடமும் நலம் விசாரித்தனர். நானும் பதிலுக்கு விசாரித்தேன். ஆனால் அவர்களின் விசாரிப்பில் உண்மையில்லை. போலித்தன்மையே மிகுந்திருந்தது. அவர்களது முகத்தில் சிரிப்பும் உண்மையாக வரவில்லை. அவர்களைப் பார்க்கப் பார்க்க எனக்கு மனதில் சிரிப்புத்தான் வந்தது. இவர்களெல்லாம் ஏன் இப்படி இருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, நண்பரிடம் சொல்லிவிட்டுச் சீக்கிரம் கிளம்பிவிட்டேன்.
நேரம் ஒன்பதரை ஆகியிருந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்து ரோட்டில் மெதுவாக வந்து கொண்டிருந்தேன். குளிர்ந்த காற்று உடலெங்கும் பரவி உடல் சில்லிட்டது. ரோட்டில் நிலவின் வெளிச்சம் அழகாக விழுந்தது. அது பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. எல்லோரும் வேகமாக எங்கோ போய்க் கொண்டிருந்தார்கள் அல்லது வந்து கொண்டிருந்தார்கள். ரோட்டில் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டே வண்டியை மெதுவாக ஓட்டினேன்.
திடீரென சாலையில் பெருங்கூட்டம். வண்டியைச் சாலையோரமாக நிறுத்திக் கொண்டு என்னவென்று பார்த்தேன். யரோ ஒருவர் இறந்து விட்டார் போலும். ஆட்கள் அந்தப் பிணத்தினை வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றனர். கூட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது. இறந்தவர் வசதி படைத்தவராகவோ அல்லது ஏதாவது அரசியல் கட்சியின் பிரமுகராகவோதான் இருக்க வேண்டும். பிணத்தின் பின்னால் சிலர் கவலை தோய்ந்த முகங்களுடன் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் சிலர் தலையைக் குனிந்து கொண்டு சென்றனர். அவ்வாறு அவர்கள் சென்றது சோகத்தினை இப்படித்தானே காட்ட முடியும் என்பதற்காகக் கூட இருக்கலாம்.
இதைவிட இன்னொரு வேடிக்கையான நிகழ்வு அங்கு நடந்து கொண்டிருந்தது. பிண வண்டியின் முன்புறம் ஒரு கூட்டம் ஆடிக்கொண்டு சென்றது. ஒருவர் பட்டாசைக் கொளுத்திக் கொண்டு முன்னால் சென்றார். டிரம்செட்காரர்கள் அடி வெளுத்துக் கொண்டு சென்றனர். அவர்களின் அடிகளுக்கேற்பவே கூட்டம் ஆடியது.
இவர்கள் ஆடியது நல்லவன் ஒருவன் போய்விட்டான் என்ற சோகத்திற்காகவா? அல்லது அயோக்கியன் ஒருவன் போய்விட்டான் என்ற சந்தோசத்திற்காகவா? எனக்கு எதுவும் புரியவில்லை. எனக்குப் பிணத்தின் முகத்தினைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. முடியவில்லை. கூட்டத்திலிருந்து விலகி வருவதே பெரும்பாடாக இருந்தது.
ஒரு வழியாகக் கூட்டத்திலிருந்து விலகி வந்தேன். பிணத்தின் முகத்தினைப் பார்க்காமல் வந்துவிட்டோமே என எண்ணினேன். ஒருவேளை அதுதான் உண்மையான முகமாய் இருக்க வேண்டும். போலியான முகத்திலிருந்து தன்னை விடுவிப்பதுதான் மரணமா? அல்லது போலியான பல முகங்களிடமிருந்து தப்பிப்பதுதான் மரணமா? எது மரணம்? என் மனதில் பல்வேறு எண்ணச் சுழல்கள் சுழன்று கொண்டே இருந்தன. ஆனால் ஒன்றுக்கும் விடைதான் கிடைக்கவில்லை. இருந்தாலும் இவற்றையெல்லாம் நினைவில் அசைபோட்டுக் கொண்டே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டினுள் இன்னமும் தொலைக்காட்சி அலறிக் கொண்டு இருந்தது. தொலைக்காட்சியில் இப்பவும் யாரோ ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள். எதற்காக அழுகிறாள்? என மனைவியிடம் கேட்கலாம்தான். அவளோ முதலில் இருந்து கதை சொல்லத் தொடங்கி விடுவாள். நான் வந்ததை அறிந்த என் மனைவி, “என்னங்க பங்சன் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டாள். அவள் என்னைப் பார்த்து பேசுவாள் என்று நினைத்தேன். எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
நான் ஒன்றும் சொல்லாமல் நாற்காலியில் அமர்ந்தேன். பையன் இப்பவும் அதே மொபைல் போனில் விளையாடிக் இருந்தான்.
“எல்லாரும் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டேன்.
யாரிடமிருந்தும் பதில் இல்லை.
“கெளரி என்ன பண்றா?”
“வேற என்ன பண்ணுவா? அவ ரூம்ல கம்ப்யூட்டரப் பார்த்துக்கிட்டு இருக்குறா. இவனுக்கு எப்பவும் போன்தான்” என்று சலிப்புடன் கூறினாள் சசிகலா.
எனக்கு உடனே, “ உனக்கு எப்பவும் டிவிதான்” எனச் சொல்லி விடலாம் என்றிருந்தது. அவள் மொலுமொலு என்று சண்டை போடத் தொடங்கி விடுவாள். அதற்குப் பயந்து அமைதியானேன்.
சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். சிந்தனை எங்கெங்கோ ஓடியது. சின்ன வயதில் இந்த ரெண்டு பிள்ளைகளும் என் பின்னாடியே சுற்றுவார்கள். எப்பவும் இவர்கள் அப்பா செல்லம்தான். என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். வண்டியில் அமர்ந்து கொண்டு ஊரைச் சுற்றச் சொல்லுவார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் மீது ஏறி யானை விளையாட்டு விளையாடுவார்கள். அவர்களிருவருக்கும் நான் தினமும் கதை சொல்ல வேண்டும். என்னுடன் பேசிக்கொண்டு இருப்பதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்.சசிகலாவும் அப்படித்தான். திருமணமான புதிதில் நான்தான் அவளின் உலகம் என்று இருந்தாள். அவள் பிறந்த வீட்டிற்குக் கூட அவ்வளவாகப் போக மாட்டாள். என்னுடன் இருப்பதில் அவ்வளவு விருப்பம் என்று அடிக்கடி கூறுவாள். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது அவளுக்குத் தொலைக்காட்சிதான் உலகம் என்றிருக்கிறாள்.
வீடே அமைதியாக இருந்தது. தொலைக்காட்சியில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திட்டிக் கொண்டிருந்தாள். அவள் கண்கலங்கி நின்றாள். என் மனைவியின் முகத்தினைப் பார்த்தேன். இவளும் கண்கலங்கிக் கொண்டு இருந்தாள்.
தொலைக்காட்சியில் இப்போது தொடரும் என்று போட்டிருந்தார்கள். சசிகலா என் முகத்தினைப் பார்த்தாள். பார்த்தவள், “என்ன அமைதியா ஒக்காந்திருக்கீங்க? அப்படி என்ன யோசனை?” என்றாள்.
என்னை நானே தேடிக் கொண்டிருக்கிறேன் என்று அவளிடம் நான் எப்படி சொல்லுவது. ஒன்றும் பேசாது சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எல்லோருமே உயிரற்ற ஒரு பொருளின்மீது வைத்திருக்கும் தொடர்பை, விருப்பத்தை உயிர் உள்ளவர்கள் மீது ஏன் வைக்க மாட்டேங்கறாங்க... என்ன காரணம்... வீட்டுக்குள்ளாற ஒருத்தர் கூட ஒருத்தர் பேசமாட்டேங்கறாங்களே? அவங்க அவங்க தனித்தனித் தீவா ஆகிட்டாங்களே...? ஒவ்வொருத்தரும் எதையோ எவற்றிலோ தாங்கள் விரும்பியதைத் தேடுவது போல் எனக்குத் தோன்றியது. ஒவ்வொருத்தரின் செயல்பாடுகளும் எனக்குப் புரியவில்லை.
ஏன் இப்படி எல்லாரும் மாறிப்போயிட்டோம்... எல்லாரும் வீட்டுக்குள்ள ஒண்ணா சேர்ந்திருந்து பேசிச் சிரிச்சி இருந்த காலமெல்லாம் மலையேறிப் போயிடுச்சா? எவை இவற்றையெல்லாம் மாற்றியது? என் உள்மனத் தேடல் தொடங்கியது. எப்போதோ நான் படித்த, “இனி நினைந்து இரக்கமாகின்று” (இன்றைக்கு நினைத்தாலும் வருத்தமாகவே இருக்கின்றது) என்ற புறநானூற்று வரி மனதிற்குள் ஓடியது. எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.
நான் எதுவும் கூறாது தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். தொலைக்காட்சியில் செல்லமே என்ற அடுத்த தொடர் தொடங்கி விட்டது. சசிகலா என்னிலிருந்து பார்வையை விலக்கி மறுபடியும் தொலைக்காட்சியின் மீது தன் கவனத்தினைக் குவித்தாள்.