பல்கலைக்கழகம் தனக்குக் கொடுத்த சான்றிதழ்களை ஒவ்வொன்றாக தேடிப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள் இளவரசி. முறையே ஏழு வருட ஐந்து வருட பெண் குழந்தைகள், பெரியவள் இளவரசி கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்க, சின்னவள் அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருந்தாள்.
“ஏ பாப்பா கொஞ்சம் அமைதியாயிரு... அம்மா முக்கியமா தேடிக்கிட்டிருக்கேன்ல?”
குழப்பமும் பயமும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியும் இளவரசி மனதில் அழுத்திக் கொண்டிருந்தது. உடல் எடையே இல்லாத மாதிரி லேசாக இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. அவயங்கள் அதன் போக்கில் போவது போல் உணர்ந்து கொண்டிருந்தாள்.
“கவலப்படாத தாயீ... நானிருக்கன்ல?” அப்பா சொன்னது நினைவிருந்தாலும், வயதானவரால் என்ன செய்து விட முடியும் என்ற கலக்கம் இவளை ஏதேதோ நினைக்கச் செய்தது.
“உள் பீரோலதான வச்சேன்னு சொன்னாரு...”
“பிளஸ்டு சர்டிபிகேட் மட்டும் இருக்கு, டிகிரி சர்டிபிகேட்ட காணமே...” எரிச்சலோடுதேடினாள்.
சின்னவள் பால் கேட்க, அப்படி அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு“பாப்பா எதையும் தொட்ராத” என்றுபெரியவளிடம் சொல்லி விட்டுப் பாலைக் காய்ச்சிச் சின்னவளுக்குக் கொடுத்துவிட்டுப் பெரியவளைப் பார்த்து“தோச சாப்பிர்ரயாடீ?” என்றாள்.
“ம்... சட்னி வேணா... ஜாம் போட்டுக்குடு... இல்ல இல்ல சாஸ்போட்டு... இல்ல இல்ல... ம்... ரெண்டும் போட்டுக் குடு”
கொசுவர்த்தி லிக்யுட்டை பொருத்தி பாய் தலகாணியை விரித்து இருவரையும் படுக்க வைத்தாள். “ஏழுமணிக்கே ரெண்டுந்தூங்கிருச்சுக...”
“நடுராத்திரி எந்திருந்சுக்குட்டு தொல்ல பண்ணப் போதுக...” என்று நினைத்தபடியே தன் தேடல் படலத்தைத் தொடர்ந்தாள்.
சர்டிபிகேட்டுகளை எடுத்துக் கொண்டு போய் அருகில் உள்ள கண் மருத்துவமணையில் காண்பித்து ஆபீஸ் அசிஸ்டண்ட் வேலை கேட்க வேண்டும். நாலாயிரம் சம்பளம் கிடைக்கும் என்று சொன்னார்கள். இப்போதைக்கு இதை வைத்து ஒப்பேத்த வேண்டும், மற்றபடி பின்னர் யோசித்துக் கொள்ளலாம், உடனடியாக ஏதாவதுவேலைக்குப் போவதே உசிதம் என்று நினைத்தாள் இளவரசி. வீட்டில் வேறுகாசுஇல்லை, ஆனால் வங்கியில் அவர் பேரில் பணம் இருக்கிறது என்றாலும் உடனடியாக எடுக்க முடியாது.
“இப்பதான படுத்தா? அதுக்குள்ள படுக்கையிலேயே உச்சா போயிட்டாளா?”
“படுக்குமுன்ன உச்சா போயிட்டு படுரின்னா கேக்குறாளா?” சின்னவளுக்குத் துணியை மாற்றிவிட்டு ஈரம் இருக்கும் இடத்தில் துண்டை விரித்து மீண்டும் படுக்க வைத்தாள்.
“சர்டிபிகேட்ட எங்க வச்சுருப்பாரு?” அலமாரி மேலிருந்த சூட்கேசை எடுத்துத் திறந்துஒவ்வொன்றாய் அள்ளிப் போட்டாள். பெரியவள் பிறந்த போது அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோ தென்பட்டது. நினைவலை பின்னோக்கி பாய்ந்தது. விழிகளில் கண்ணீர் முன் நோக்கிப் பொங்கியது. தலையைத் தூக்கிக் கண்களை மூடினாள், கன்னத்தில் விழ வந்த கண்ணீர் இமை மூடியதால் துண்டாகித் தெறித்து இவள் பாதத்தில் விழுந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டாள். சத்தமில்லாமல் அழுவதையும் தேடுவதையும் தொடர்ந்தாள்.
“இளவரசீ... இளவரசீ...”
“எங்கம்மா இருக்க?”
“உன்னைய பாக்க வந்திருக்காங்கம்மா உங்க வீட்டுக்காரரோட ஆபீசிலருந்து...” பக்கத்து வீட்டுப் பெண் கதவை தட்டினாள்.
“ஆங்... இத வர்ரேங்க்கா... ” கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள்.
“வாங்க, வாங்க. உக்காருங்க” என்றாள்.
“இருக்கட்டும்ங்க” நான்கு பேரும் அமர்ந்தார்கள். சற்று நேரம் அமைதி காத்த பின் “திடீர்னுஇப்டியாகும்னுநெனக்கல.. ரொம்ப சூட்டிகையான ஆளு... எல்லாத்துக்குமே சங்கடமாப் போச்சு...” என்று ஆரம்பித்தார் ஒருவர்.
ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் துக்கத்தைத் தூண்டுகிறார்களே என நினைத்தாலும் அவர் சம்மந்தமான பிஎப் மற்றும் இதர விசயங்கள் குறித்து அறிய வேண்டுமே என்பதால் முகத்தில் எந்த ரியாக்சனுமின்றி டிவி ஸ்டேண்ட் அருகே நின்று கொண்டிருந்தாள் இளவரசி. யார் ஆறுதல் சொன்னாலும் அவளுக்குத் துக்கம், பயம் அதிகரித்துக் கொண்டுதான் போனதே தவிர குறைந்தபாடில்லை. குழந்தைகள் ஸ்கூல், வீடு உள்ளிட்ட அனைத்து விசயங்களுக்கும் பல ஐடியாக்களைச் சொன்னார்கள்.
“வேலையில இருக்கும் போது இப்டியானதுனால பிஎப் பணத்தோடு அதுக்குஞ் சேத்து மூனுலட்சம் சொச்சம் கைல கெடைக்கும்மா…”
“ஆனா நம்ம கம்பெனில பென்சன் கிடையாதுன்னுஉனக்குத் தெரியும்னுநெனக்கிறேன்...” என்றார் மேனேஜர்.
“ஆங்...தெரியுங்க...” இந்த பணத்த மட்டுங் கொஞ்ச சீக்கரமா...
“பத்தே நாள்ள அவர் அக்கவுண்டல் ஏறிரும்மா...”
“லீகல்ஹேர்ஸ் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்துப் பணத்த நீ எடுத்துக்கலாம்மா...” இடைமறித்தார் மேனேஜர்.
“எதுன்னாலும் எங்கள காண்டக்ட் பன்னும்மா” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
உள்ளபடியே ஆறுதலடைந்தது போல முகபாவத்தை அவர்களிடம் காண்பித்து, அவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பினாள் இளவரசி.
தன் வாழ்க்கையின் உன்னதத்தை, பற்றிக் கொண்டிருந்ததை, அதுவே எல்லாம் என்றிருந்ததை இழந்தவர்களுக்கு எது ஆறுதலாக இருக்க முடியும்? இழந்ததை இனி ஒரு போதும் பெறமுடியாது... தன்னுடைய இரண்டு பிள்ளைகள் முகங்களில் அதைக் காணமுடியும், அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் மட்டுமே அதை அவள் காணமுடியும். என்னையே மயக்கும் எனது முப்பத்திரண்டு வயது உடலமைப்பு இனி மற்றவர்களுக்கு வேலி இல்லாத பயிராகப் பார்க்கத் தோன்றும் நிலையாகி விட்டதே, உதவி என்ற பேரில் இந்தப் பயிரை அசைத்துப் பார்க்க, சுவைத்துப் பார்க்க வரப்போகும் தொந்தரவுகளை எண்ணி அஞ்சும் நிலை வந்துவிட்டதே. இனி எந்தெந்த விதத்தில் சிரமப்படப்போகிறோமோ என்ற எண்ணத்திலேயே அவள் மனம் போய்க் கொண்டிருந்தது. இவள் கல்லுரித் தோழி சொன்ன புதிய துணை யோசனை என்பதுபேச்சுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும், நடைமுறைக்குப் பொருந்துமா? இன்னும் இருபது நாட்கள்கூட கழியவில்லையே, அதற்குள் ஏதேதோ நினைப்பு வருகிறதே? புலம்புகிறேனே... ஐயோ... கடவுளே எனக்கு ஏன் இந்த நிலை வர வேண்டும், பிள்ளைகளை நினைத்தால் என் உடம்பு நடுங்குகிறதே...
தூங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள், கோடி மலர்களைக் கொட்டியது போல் இருந்தது அவளுக்கு. இதமாய் உணர்ந்தாள், சின்னவள் தூக்கத்தில் சிரித்தாள், இளவரசி துக்கத்தில் சிரித்தாள்.
வாஷ் பேசனில் குனிந்து முகத்தைக் கழுவி, வயிற்றுப் பகுதியில் படர்ந்திருக்கும் நைட்டியைத் தூக்கிப் பிடித்து முகத்தை துடைத்து விட்டுச் சூட்கேசை பெட் மீது வைத்து மீண்டும் சர்டிபிகேட்டை தேடத் துவங்கினாள்.
“எங்க இருக்கும்….?” தேடிக் கொண்டே தூங்கிப் போனாள்.
பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, இருக்கின்ற சர்டிபிகேட்களை எடுத்துக் கொண்டு முதலில் போவோம், டிகிரி சர்டிபிகேட் அம்மா வீட்டில் இருக்கிறது என்று சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து தோழிக்குப் போன் செய்தாள் இளவரசி.
“அஞ்சுமணிக்கு டூட்டி முடிஞ்தசும் நா அங்க வந்திர்ரேன்... நீ ஒரு ஆறு மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்திரு...” என்றாள் தோழி.
அவள் என்ன உற்சாகமாய்ப் பேசுகிறாள், ஒவ்வொரு வார்த்தையிலும் என்னமாய் துள்ளல் வெளிப்படுகிறது... ஆனால் என்னை அறியாமலேயே என் குரல் உள் வாங்கிக் கொண்டதே... எந்த வார்த்தை பேசினாலும் கெஞ்சும் தொனியிலேயே பேசுகிறேனே... ஏன்? அவரே கதியாய் கிடந்ததால் இனி உனக்கு எவருமில்லை என்ற உள்ளுணர்வினாலோ? கட்டியவன் இருக்கிறான், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்று அவனையே சார்ந்திருந்தது குற்றமா? எதையும் எதிர்பார்த்தே வாழ முடியுமா? குழப்பம் வரும் போதெல்லாம் பிள்ளைகளிருவரின் சிரிப்பை நினைத்தே அமைதிப்பட்டாள். ஆறு மணி ஆவதற்குள் ஆறு வருசமானது போலிருந்தது. ஸ்கூலிலிருந்துவந்த பிள்ளைகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.
“என்ன லேட்டாயிருச்சா?” என்றாள் தோழி.
“அதெல்லாமில்லை... நானே இப்ப அஞ்ச நிமிசத்துக்கு முன்னதான வந்தேன்”
“நீ இங்கருக்குற ரிசப்சன்ல ஒக்காரு... நா உள்ள போயி என்னோட பிரண்ட பாத்துக் கேட்டுட்டு வந்துர்ரேன், சரியா?” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
“யாரு... இளவரசியா தங்கம்? நல்லாயிருக்கியா தங்கம்?”
“கேள்விப்பட்டேம்மா... பிள்ளைக எல்லாம் எப்பிடி இருக்குக?” என்றாள் கண் செக்கப்புக்கு வந்த இவள் அம்மாவின் சினேகிதி கமலா.
“ம்... நல்லாயிருக்காங்கம்மா...” துக்கம் தொண்டையை அடைத்தது இளவரசிக்கு. அழுகையை அடக்க முடியவில்லை. திடீரென்று கரண்ட் கட்டாகி விட்டது. அனைவரும் இருட்டில் அமர்ந்திருந்தார்கள். இவர்களிருவரும் காற்றாட வெளியில் வந்து நின்றார்கள்.
“பிள்ள பெறக்காத வீடு இருக்கு தங்கம்... ஆனா சாவு விழுகாத வீடிருக்கா தங்கம்? எங்கவீட்டுல அவர் செத்து போனப்ப நா மட்டும் மலச்சிருந்தா எம் புள்ளைகளைக் கர சேத்திருக்க முடியுமா? எதையும் ஏத்துக்குற பக்குவத்த வளத்துக்கனுந் தங்கம்... கவலப்படாத தங்கம்… எல்லாஞ் சரியாயிடும்”
இளவரசி மனம் லேசானது. எத்தனையோ பேர் ஏதேதோ சொன்னதில் கிடைக்காத ஆறுதலை கமலாம்மா சொன்ன வார்த்தையில் உணர்ந்தாள்.
மின்இணைப்பு வந்தவுடன் பளிச் பளிச்சென டியூப் லைட்டுகள் எறிந்து வெளிச்சத்தினைப் பாய்ச்சின. அருகிலிருந்த பீடா கடையிலிருந்த ரேடியோ பாடிய பாட்டு இவள் காதுக்குத் துல்லியமாகக் கேட்டது.
“வரும் காற்றினில் அணையா சுடர்போல... இனி கந்தன் தருவான் எதிர்காலம்... கந்தன் தருவான் எதிர்காலம்... எனக்கும் இடம் உண்டு... அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில், எனக்கும் இடம் உண்டு...”
வீட்டில் சர்டிபிகேட் வைத்திருந்த இடம் நினைவுக்கு வந்த அதே நேரத்தில் தோழியின் அழைப்பும் வந்தது. பையை தூக்கிக் கொண்டு நடந்தாள் இளவரசி. நடையில் அவளுக்கே புதிய தெம்பு தெரிந்தது.