வீட்டின் முன்னால் இருந்த திண்ணையில் முகம் வாடிப்போன நிலையில் இருந்தான் கதிரேசன். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் முதன் முதலாக, மனசாட்சிக்கு எதிராகச் செய்த ஒரு செயல். ஆமாம், மகத்தான தவறு. ஆனால் யாருக்குமே அது தெரியாது.
யாரும் அவனைக் குறை கூற முடியாது. அவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செய்த குற்றம். அவனாக வாயைத் திறந்து சொன்னாலொழிய ஒரு ஈ எறும்புக்குக் கூடத் தெரியாது. அப்படி ஒரு குற்றத்தைச் செய்து விட்டாலும் மாட்டிக் கொள்வோம் என்கிற பயமே கதிரேசனுக்கு இல்லை. அவன் தைரியமாக இருந்தான். இருந்தாலும் அவன் மனம் உறுத்திக் கொண்டே இருந்தது.
பக்கத்துத் தெருவில் இருந்த ராமாயி அம்மா இறந்துவிட்ட செய்தியை அவன் கேள்விப்பட்டதிலிருந்து அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இறந்து போன ராமாயி அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள், மூன்று மருமகள்கள், பேரன் – பேத்திகள் என்று ஒரு குறையுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கணவனை இழந்த பின்னரும் தன்னம்பிக்கை தளராமல் தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் வளர்த்துப், படிக்க வைத்து, ஆளாக்கி, தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருக்கும் ராமாயி அம்மாள் அந்த ஊருக்கே ஓர் அதிசயம்தான். கதிரேசனுக்கு அவர்கள் வீட்டில் அனைவரிடமும் நல்ல விதமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆமாம், அவனுடைய அப்பா காலத்திலிருந்து அவர்கள் குடும்ப நண்பர்களாக அந்தக் குடும்பம், பல காலமாகப் பழகி வந்தது.
ராமாயி அம்மா பெறாத பிள்ளையாகவே கதிரேசன் இருந்தான். அந்த அளவிற்கு அந்தக் குடும்பத்துடன் ஒன்றிவிட்டான். நல்லது கெட்டது என்று அனைத்திலும் இவன் இல்லாது அந்த விட்டில் ஒன்றும் நடக்காது. ஒருநாள் அந்த ராமாயி அம்மா, அவனைக் கூப்பிட்டு, “டேய் கதிரேசா, ஒன்னை நம்பி, ஒங்கிட்ட ஒரு வேலையைக் கொடுக்கப் போறேன், செய்வியா?” என்றாள்.
கதிரேசனுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி என்னமோ சொல்லாறாங்க கேட்டுத்தான் பார்ப்போம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “அதுக்கென்னம்மா, செய்யறேன். சொல்லுங்க” என்றான் கதிரேசன்.
அந்தக் குடும்பத்தில் யாருக்குமே தெரியாமல் ஒரு லட்ச ரூபாயினைக் கதிரேசனின் கையில் கொடுத்து அதை யாருக்கும் தெரியாமல் வங்கியில் அவளுடைய பேரில் போடச் சொன்னாள் ராமாயி. அவனை நம்பி பணத்தை ஒப்படைத்தாள். பணத்தை வாங்கிய கதிரேசன் எதற்கு என்பதுபோல் ராமாயி அம்மாளைப் பார்த்தான்.
அவனின் பார்வையில் தெரிந்த கேள்வியைப் புரிந்து கொண்ட அந்த அம்மாள், “இங்க பாருப்பா… நான் இறந்து போயிட்டேன்னா ஏம்பிள்ளங்க கஷ்டப்படாம என்னத் தூக்கிட்டுப் போயி அடக்கம் பண்ணணும். என்னோட அந்திமச் செலவுக்காக யாரும் கஷ்டப்படக் கூடாதுப்பா… இது ஒனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியணும். வேற யாருக்கும் தெரியக் கூடாது. நான் இறந்து போன பிறகு நீ ஏம்பிள்ளகள் கிட்டச் சொல்லிரு..” என்று கூறினாள்.
ராமாயி அம்மாள் அதுவரை யாரிடமும் கையேந்தாமல் கௌரவமாக வாழ்ந்து விட்டாள். தன்னுடைய இறுதிக் காரியங்களுக்குக் கூட பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது. இப்பணம் அப்போது அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தில் ராமாயியம்மாள் அவளுடைய கணவனுக்கு வந்த பென்ஷன் பணத்தில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம். அவள் கணவன் இறந்த பின் வந்த குடும்ப ஓய்வூதியத்தினை வைத்துக் கொண்டு சிறுசிறு வேலைகளையும் செய்து அந்தக் குடும்பத்தை நிமிரச் செய்தாள். இன்றுவரை அவள் திருப்தியாக அவளது கடமைகளைச் செய்துவிட்டாள். கதிரேசன் நீட்டிய வங்கிக் காகிதங்களில் நம்பிக் கையெழுத்திட்டாள் ராமாயி அம்மாள். அப்போது கூட கதிரேசன், மனிதனாகத்தான் இருந்தான்.
ஆனால் எப்போது அவன் மூளைக்குள் சாத்தான் புகுந்ததோ தெரியவில்லை. அந்தப் பணத்தை வங்கியில் போடாமல் தன் வீட்டிலேயே கொண்டுபோய் வைத்துவிட்டான் கதிரேசன். அது வரை மனிதனாக இருந்த கதிரேசனின் மூளைக்குள் ஓர் எண்ணம். ராமாயி அம்மா இந்தப் பணத்தை நம்மிடம் கொடுத்தது யாருக்குமே தெரியாது. இதை அப்படியே அமுக்கிவிட்டால் என்ன? எந்தக் காலத்தில் தன்னால் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்று அவன் காதுகளுக்குள் சாத்தானின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்தச் சாத்தானின் குரலுக்குக் கதிரேசன் செவி சாய்த்தான். தீயதைச் செய்யும் போது, தீய சக்திகள் உதவும் என்பது எவ்வளவு உண்மை. அவன் மனத்துக்குள் சாத்தான் புகுந்து, அவனை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.
ராமாயிஅம்மாள் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள். பிள்ளைகளைக் கூட நம்பாமல் பெறாத பிள்ளையாகிய கதிரேசனை இவள் நம்பினாளே...! அவள் வைத்திருந்த நம்பிக்கை இப்படி ஒரு கீழ்த்தரமான செயலுக்குத் தன்னை ஆளாக்கும் என்று ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் குடும்பத்தாரோடு பழகுவதைத் தவிர்த்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. காலம் கடந்த ஞானோதயம். அவன் மேலேயே அவனுக்கு வெறுப்பாயிருந்தது. கதிரேசனின் செயலுக்கு உதவுவது போல் திடீரென்று யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லாமலே இருதயத் தாக்குதலினால் பணம் கொடுத்த அன்று இரவே இறந்து போனாள் ராமாயி அம்மாள். அப்பாடி அந்த ராமாயி அம்மாளும் இறந்து போயாச்சு. இனி தான் செய்த அந்தக் காரியம் யாருக்குமே தெரியாது. கதிரேசனுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
செய்தியினைக் கேள்விப்பட்டு கதிரேசன் ராமாயி அம்மாவின் வீட்டுக்குப் போனான். அவனைக் கண்ட ராமாயி அம்மாளின் மகன்கள் அனைவரும் வந்து கட்டிப் பிடித்து அழுதனர். அந்த அம்மாவின் மூத்த மகன் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.
ராமாயி அம்மாளின் இரண்டாவது மகன், “இப்போ அம்மாவோட காரியங்கள் நடத்தப் பணம் வேணும். என்ன கஷ்டப்பட்டாலும் நாங்க மூணுபேரும் பங்கு போட்டுக்கிட்டுச் செய்வோம்…” என்று அருகிலிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தது அனைவரின் காதுகளிலும் விழுந்தது.
“கதிரேசா, ஒன்னைப் பத்தி அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ‘கதிரேசன் என் வயித்திலே பொறக்காத இன்னொரு மகன்’னு” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு பெருமூச்சு விட்டார் மூத்த மகன். இந்தச் சொற்களைக் கேட்டதும் கதிரேசன் மனத்தில் இருந்த சாத்தான் இறந்து போனது. அவன் மனதை யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பதைப் போன்றிருந்தது. அவனது மனதில் ராமாயியம்மாள் உயிரோடு உலவத் தொடங்கினாள்.
கதிரேசன் அவனையும் அறியாமல், “நீங்க யாரும் கடசீ வரை கஷ்டப்படக் கூடாதுன்னு நேத்திக்கிதான் என்கிட்ட ஒரு லட்ச ரூபாயைக் குடுத்து அவங்களோட கடைசீ செலவுக்கு வெச்சிக்க சொன்னாங்க. அதுக்குள்ளே இப்பிடி நம்மையெல்லாம் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டாங்களே… அம்மா” என்று அழுதபடி கதிரேசன், ராமாயி அம்மாளின் உடலுக்கு அருகில் சென்று அவளது கால்கள் தன் தலையில் படுமாறு வைத்துக்கொண்டு, “அம்மா.. அம்மா..” என்று குலுங்கிக் குலுங்கி அழுதான் கதிரேசன்.
அவன் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கிற்று. அவன் மனதிற்குள் இருந்த பாரமும் உறுத்தலும் இருந்த இடமே தெரியவில்லை.
“நல்லவர்க் கெல்லாம் சாட்சிகளுண்டு ஒன்று மனசாட்சி… அது தெய்வத்தின் சாட்சியம்மா… அதுதான் உண்மைக்கும் சாட்சியம்மா…” என்ற கண்ணதாசனின் பாடல் டி.எம்.எஸின் குரலில் வானொலிப் பெட்டியிலிருந்து காற்றலையாக மிதந்து வந்தது.