காலையில் இருந்தே வானம் மந்தமாக இருந்தது. வானத்தைப் போன்றே நானும் மந்தமாகத்தான் இருந்தேன்... எப்பொழுதும் இப்படித்தான் என்றில்லை. இன்று மட்டும்தான் நான் இப்படி இருக்கின்றேன்.
எனக்கே என் மீது வெறுப்பாகத்தான் இருந்தது. வாரம் முழுக்க முழுக்க வேலை தேடி அலைந்து அலைந்து எனக்கு அலுப்புத் தட்டிவிட்டது. என்னுடைய மந்தத்தனத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கே ஏன் என்று தெரியவில்லை? அம்மாவும் என்னை எழுப்பிவிடவில்லை...!
மறந்தே போனேன் ஞாயித்துக் கிழமை நேற்றே முடிந்து விட்டது; ஞாயிற்றுக் கிழமை என்று நான் பாட்டுக்குத் தூங்கிவிட்டேன்... என் பேதமையை என்னவென்று சொல்வது. இன்று திங்கட்கிழமை ஆயிற்றே...? ச்சே... ஞாயிற்றுக்கிழமை சற்று நீண்டு இருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டே... ஜன்னலைத் திறந்து, எனக்கு முன் எழுந்த சூரியனைப் பார்த்து... உன்னால்தான் பிரச்சினை ஏன் நீ தெனமும் எனக்கு முன் எழுகிறாய்? என்று கேட்டு விட்டு...
காலைக் கடன்களை முடித்தவாறு அம்மாவைத் தேடினேன்...! “அம்மா! அம்மா!!” குழந்தை போல் அல்ல இருபத்தி ஐந்து வயது இளைஞனாக... இன்னும் என் அம்மாவின் குழந்தையாகத் தான் அழைத்தேன்... எத்தனை வயதானாலும் என் அம்மாவிற்கு என்றும் நான் குழந்தைதானே...! அம்மாவைத் தேடிக் கொண்டு அவள் இட்டிலி சுட்டு விற்கும் இடத்திற்குச் சென்றேன்.
காலையில் எழுந்து இட்லி சுடுவதுதான் அம்மாவுக்குத் தொழில். அவளின் ஒவ்வொரு இட்லியும் என் கல்லூரிப் புத்தகத்தின் பக்கங்கள்...
ஆம்! என் அப்பா இறந்ததில் இருந்து அம்மா நிற்கதியானாள். எனக்கும் அம்மாவுக்கும் யாரும் ஆதரவு இல்லை. அவள் தைரியமாக இட்லிக் கடை போட்டு வாழ்க்கையில் உறுதியுடன் இருந்து என்னை இந்நிலைக்கு உயர்த்தினாள். அம்மாவும் அவள் சுடும் இட்லியும் தான் என்னை படிக்க வைத்தனர். அப்பா எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே இறந்துவிட்டார்...! அவர் இறந்த போது அழக் கூட எனக்குத் தெரியவில்லை... என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை... நான்பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்... சொந்தங்கள் எல்லாம் என்னையும் இளவயதில் விதவையான என் அம்மாவையும் இரக்கத்துடனும் பரிதாபத்துடனும் பார்த்தனர்... எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது... ம்ம்... அது ஒரு புரியாத காலம்... இன்றைக்கு நெனச்சாலும் எனக்கு மனசைப் போட்டு என்னமோ செய்யுது...
நான் அம்மாவை தேடிக் கொண்டே எண்ணங்களில் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறேன்... இதோ அம்மா இட்லி தான் சுட்டுக் கொண்டிருக்கிறாள்!
“அம்மா! என்னாம்மா இன்னிக்கு இன்டர்வியூக்குப் போகணும்னு தெரியும்ல ஏம்மா என்ன எழுப்பல...?” என்று கோபம் கலந்து கேட்பது போல் பாசாங்கு செய்து கொண்டே கேட்டேன். அம்மாவின் உழைப்பில் தண்டச்சோறு உண்ணும் எனக்கு இந்தக் கோபம் தேவையா?
“இல்லப்பா இன்னிக்குத் திங்கள் கிழமை இல்ல... வேலைக்குப் போறவங்க எல்லாம் நெறைய வருவாங்கன்னு சீக்கிரமா எழுந்து இட்லியப் போட்டுட்டு இருந்துட்டேன். வேலையில ஒன்ன எழுப்ப மறந்துட்டேம்பா... இந்தா சூடா இந்த இட்லியப் புட்டுப் போட்டுக்கிட்டுக் கெளம்பு…” என்றாள்.
நானும், “சரிம்மா...” என்றபடி “ஏம்மா கற்பகம் அக்காவுக்குப் பணம் குடுக்கணுமே குடுத்துட்டியா...?" என்றேன்.
“இன்னும் குடுக்கலப்பா எங்கே கொடுக்க முடியுது..? எல்லாந்தான் வயித்துக்கும் வாயிக்குமே பத்தாம இருக்குது... அப்பறம் எங்க கொடுக்கறது...”
“ஏம்மா அஞ்சலை அக்கா நமக்குத்தான் பணம் கொடுக்கணுமில்ல... அவங்ககிட்ட இருந்து பணம் வாங்கி கொடுக்க வேண்டிதானே?” என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டேன்.
“இல்லப்பா அஞ்சலைக்கிட்ட நீ இதுக கேட்டுப்பிடாதே... ஆமா... நானே கேட்டுக்கிறேன்... ஏன்னா... அவ புருஷன் ஒரு மாதிரி எதாச்சும் பண்ணிடுவான்... நீ இன்டெர்வியூக்கு கெளம்புப்பா... ஒனக்கு மட்டும் இந்த வேலை கிடைச்சுட்டாஅப்புறம் கற்பகத்தோட பணம் நமக்கெதுக்கு? ஒடனே குடுத்துருவோம்” என்றாள்.
படித்து முடித்து மூன்று ஆண்டுகளாகப் பல இடங்களில் தேடி இருக்கிறேன் எனக்கொரு வேலை கெடைக்க மாட்டேங்குது... குதிரைக் கொம்பா இருக்குது. ஒண்ணு பணம் கேக்குறான்... இல்லன்னா... சிபாரிசு வேணுங்கறான்... எனக்குப் படிப்பு மட்டும்தான் இருக்குது... அவங்க கேக்கறது இல்ல... யாராவது நல்லவங்க இல்லாமலா போவாங்க... இந்த நம்பிக்கையிலதான் இப்பவும் இண்டர்வியூக்குப் போயிக்கிட்டு இருக்கேன்...
கொஞ்சம் சுமாராகப் படித்திருந்தால் இதுதான் பிரச்சினை... எங்கும் நமக்கு முன் படித்த பிசாசுகள் இருந்து கொண்டே இருக்கும்... படிப்புக்கு மதிப்பு எனில் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமே? வேண்டுமேனில் அனைவரும் படிக்க வேண்டுமே... அனைவரும் படித்தால் விவசாயம்...?உழவன்...? அய்யய்யோ நேரமாச்சே...! என்று என் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ண ஓட்டங்கள்...
இதோ கிளம்பிவிட்டேன்... தோளில் வேதாளத்தைச் சுமந்து செல்லும் விக்ரமாதித்யனைப் போல... வேதாளம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்தால் தலை வெடிக்கும்... இங்கே என் தலை வெடிக்காது. ஏன் எனில் இது எனக்குப் புதிது இல்லையே...!
நான் கிளம்பும்போது என் நண்பன் சின்னையா எதிரில் வந்தான். அவன் என் உயிர்த் தோழன்... ஆனால் எனக்கும் அவனுக்கும் சிறு வயதில் இருந்தே ஒத்துப் போனதில்லை, இருந்தாலும் நண்பர்களா இருந்தோம்...
அவனைப் பார்த்ததும் என்மனதில் பழைய நினைவுகள் பின்னோக்கிச் சென்று உள்ளத்தில் படமாகக் காட்சியாக ஓடின... அப்ப... எனக்கு ஒன்பது வயசு இருக்கும்...
நானும் அவனும் மாங்காய் பிடுங்கித் திங்கறதுக்காக மச்சக்காளையோட தோட்டத்துக்குப் போறது வழக்கம்...தோட்டக்காரன் மச்சக்காளையப் பார்த்தா பயம்... ஆனா எனக்குச் சின்னையா தைரியஞ் சொல்லி அழைச்சிக்கிட்டுப் போயிட்டான்... அவனோட சேர்ந்து போனதால எனக்குப் பயம் போயிருச்சு... சின்னையா என்ன விடக் கொஞ்சம் அதிக புத்திசாலி... நேரங்காலம் பார்த்துத்தான் மாங்காய் பிடுங்கக் கூப்டுவான்...!
அது ஒரு சித்திரை மாசங்கரதுனால கொஞ்சம் வெயில் அதிகமாத்தான் இருந்துச்சு... மாந்தோப்பு பக்கம் யாருமே இல்லை...
நாங்க ரெண்டு பெரும் கையில ஆளுக்கு ஒரு கல்லெடுத்துக்கிட்டு மாந்தோப்புக்குள்ளாறப் போனோம்... திருட்டுத் தனமாப் புடுங்கித் திங்கிற மாங்கா ருசிக்கு எங்க பயத்த வித்துட்டு தைரியமாத்தான் போனோம்...
அந்தத் தோப்புல நெறைய சிட்டுக் குருவிங்க இருந்துச்சு... அதுங்க அப்ப ஏன் அங்க வந்துச்சுங்கன்னு தெரியல... தானியம் இருக்க பக்கத்துல நெறய பாத்திருக்கேன் ஆனா இங்க ஏன்...?
அப்புறம்தான் தெரிஞ்சுது அதுங்க பக்கத்துல இருக்குற மச்சக்காளையோட தானிய கிடங்க நம்பி அங்க கூடு கட்டி இருக்குறது...! பம்ப் செட்டுல தண்ணி எறக்கிற சத்தம் கொஞ்சம் அமைதிய குலைச்சுகிட்டே இருந்தது...
சரி சின்னையா என்ன பண்றான் பார்த்தா மாங்காயை விட்டுட்டு குருவிங்கள குறி பார்த்துக்கிட்டு இருக்கான்...!
நான் இவ்ளோ நேரம் ரசிச்சுகிட்டு இருந்த குருவில ஒன்னப் பார்த்து கல்லெறியப் பார்த்த சின்னையாவை நான் விடல... ஓடிப் போய் அவன் கையப் புடிச்சி, “டேய் சின்னையா குருவிய விட்டுட்டு மாங்காய எறி இல்லைனா எனக்கு கெட்ட கோவம் வரும்...”அப்படின்னு சொன்னேன்.
அத அவன் காதுல போட்டுக்கவே இல்ல... அவன் என்னப் பார்த்து, “டேய் சிட்டுக் குருவியச் சுட்டுத் தின்னா அருமையா இருக்கும்டா... விடுடா ரெண்டு பேரும் சுட்டுத் திம்போம்...” என்று சொல்லிக் கொண்டே குறிபார்த்தான்.
“முடியாதுடா அதுங்க நிம்மதியா, அமைதியா இரையத் தின்னுகிட்டு இருக்குதுக... பாவம்ட... அதுகளோட அமைதியா கெடுக்காதடா... அதுகலக் கொன்னுத் தின்னாப் பாவம்டா... உயிர் போனா வராதுடா" என்றேன்.
அவனோ, “போடா லூசு,ஏதாவது ஒளறிக்கிட்டு இருக்காத... ஆமா... இன்னிக்குச் சிட்டுக் குருவிய அடிச்சுச்சுட்டுத் திங்காமப் போகமாட்டேன்!” என்றான்.
“ஏலே ஏங் கண்ணுமுன்னாடி வேண்டாம், நீ குருவியக் கொல்றத நான் பார்த்துகிட்டுச் சும்மா இருக்க மாட்டேன்...” என்று கூறினேன்.
மீறி அவன் குறி வைத்த போது, “பளார்” என்று அறைந்தேன். அவனும் நானும் கட்டி புரண்டோம்... சிட்டுகள் தெறித்துப் பறந்தன...
ஒரு மாதம் என்னோடு அவன் பேசவில்லை, அதற்குப் பின் அவன் சிட்டுக்களை வேட்டை ஆடினானா இல்லையா என்று தெரியவில்லை...?
ஆனாலும் நாங்களிருவரும் நல்ல நண்பர்களாவே இன்றுவரை இருந்து வருகிறோம்.
இதோ டீக் கடை பெஞ்சில் அவன் வீட்டுக்குத் தெரிந்தே ரயில் ஓட்டிக் கொண்டிருக்கிறான் சின்னையா.
“என்ன மாப்ள ஏதும் விஷேசம் உண்டா...?”
“இல்லடா இப்போ டவுன் ல ஒரு இன்டெர்வியூக்கு போயிக்கிட்டு இருக்கேன். இந்த வேலை எனக்குக் கெடைக்கனும்னு வேண்டிக்கடா...”
“மெத்த படிக்காதடான்னா கேட்டியா... இப்ப... கஷ்டப்படு... பேசாம நீ என்னோட கூலி வேலைக்கு வந்துடுறியா? தினம் இரு நூறு ரூவா கெடைக்கும், ஒங்க அம்மாவுக்கு ஒதவியா இருக்கும்...!”
பளார்! என்று யாரோ முகத்தில் அறைந்தாற் போலிருந்தது... எம்.பி.ஏ படிச்சிட்டு கூலி வேலைக்காப் போறது?
“போடா அறிவு கெட்டவனே!” என்று சொல்லிவிட்டு வந்த பஸ்ஸில் ஏறிப் பறந்தேன். நாம் படித்த படிப்புக்கு கூலி வேலை செய்வதா...? இந்த வேலையை எப்படியும் வாங்கி விட வேண்டும்...
அம்மாவின் நம்பிக்கை உடைந்திடக் கூடாது, அதே நேரம் அம்மாவின் பணக் கஷ்டத்தையும் ஒழிக்க வேண்டும். எப்படியும் இந்த வேலையை வாங்கி விட வேண்டும்... ஜன்னல் வழி சினிமா போஸ்டர் கூட வேலை என்றுதான் எனக்குத் தென்பட்டது!
நடத்துனர் டிக்கெட் என்ற போதும் கூலி வேலை என்று சின்னையா தான் தெரிந்தான்...? இதை எல்லாம் மறந்து... கேள்விக் கணைகளை எதிர்நோக்கத் தயார்படுத்திக் கொண்டேன்...
மனதுக்குள், “டெல் மீ அபௌட் யுவர்ஸெல்ப்” ஓடிக் கொண்டிருந்தது.
அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும், வெறியோடு எதிர் நோக்கி இதோ இறங்கிவிட்டேன்... நியூரோ பெர்ட்டிலைசஸ் கம்பெனி எங்கே? எங்கே? எங்கே? தேடிப் பறந்தது மனம்...
எதிரில் வந்தவரிடம் வழி கேட்டுத் தேடித் திரிந்து இதோ கண்டுபிடித்து விட்டேன். செக்யூரிட்டியிடம் மல்லுக் கட்டி உள்ளே சென்று வெளியேயும் வந்து விட்டேன்.
மறுபடியும் ஒரு ஏமாற்றம்! எனது நூறாவது நேர்காணலுக்கு வழிவகுத்து விட்டது.
வெளியில் வந்தும் இன்டர்வியூவில் நடந்த நிகழ்வு என் மனதுக்குள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது...
“டெல் மீ அபௌட் யுவர்ஸெல்ப்” உள்ளே தேர்வுக் குழு கேட்டபோது, என்னைப் பற்றிச் சொன்னேன். அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி, சரி நமக்கு வேலை கிடைக்கப் போகுதுன்னு நெனச்சா அப்பப் பாத்து ஒரு போன் வர மேனேஜர், சாரிப்பா... எங்க எம்டி இந்த போஸ்ட்ட அவங்க சொந்தக்காரரோட மகனுக்குக் கொடுக்கச் சொல்லிட்டாரு...ன்னு சொல்ல மனம் நொறுங்க வெளியில் வந்தேன்.
சரி இருக்கட்டும் தொண்ணூத்து ஒன்பது பார்த்தாகி விட்டது, நூறாவது இன்டெர்வியுவில் தான் நான் கரை சேர வேண்டுமெனில்... ஆண்டவா! நீதான் பதில் சொல்ல வேண்டும்...!
இப்போது மீண்டும் சின்னையாவைப் பார்க்கும் பயம்!
அம்மாவிடம் மீண்டும் ஒரு தோல்வியைக் கூறி அவள் மடியில் சரணாகதி ஆக வேண்டுமே...!
அம்மா ஒரு நாளும் என்னைக் குறை சொன்னதில்லை... கற்பகமோ இல்லை அஞ்சலை அக்காவோ “என்ன பையன படிக்க வைச்சிட்டு இன்னும் ஏம்மா நீ இட்லி சுட்டுட்டு இருக்க? ஓம் பையனை இட்லிக் கடை வைக்கச் சொல்ல வேண்டியது தானே?” என்று நையாண்டி செய்த போதெல்லாம் பொறுமையாகப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள் அம்மா!
அவளுக்கு என் மீது நம்பிக்கை. எப்படியும் நம் மகன் நம்மைக் காப்பாத்தி விடுவான் என்று...! இதோ நான் எனக்கே கேள்விக் குறியாக...!
கொஞ்ச தூரம் நடந்தால் பேருந்து நிறுத்தம்... சிந்தனையோடு நடந்து கொண்டிருந்தபோது... திடீர் என்று அதோ தூரத்தில் யார் அது...?
“டேய் பங்காளி...!” என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான் பாண்டியன்! என் இளவயதுப் பள்ளித் தோழன், பார்த்துச் சில ஆண்டுகள் ஆகிறது...
மூச்சு வாங்கிக் கொண்டே... என்னைக் கேட்டான், “எப்படி இருக்க பங்காளி?”
எனக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்டு விட்டான் என்றால் என்ன பதில் சொல்வது...? மனதிற்குள் மறுகினேன்? இருந்தாலும் சமாளித்துக் கொண்டே, “பங்காளி நல்லா இருக்கேன்டா... ஆமா நீ எப்படிடா இருக்க...?”
“எனக்கு என்ன பங்காளி கொறச்ச...ல் நல்லா இருக்கேன்... கறிக் கடைவச்சி நடத்திக்கிட்டு இருக்கேன்... நல்லாவே பொழப்பு ஓடுது. ரத்தமும் சதையும் என்னக் காப்பாத்துது... நீ என்ன பங்காளி பண்ற? ஒங்க அம்மா எப்படி இருக்காங்க?”
எதைக் கேட்கக் கூடாது என்று மனதிற்குள் நினைத்தேனோ... அதை அவன் கேட்டே விட்டான். இருந்தாலும் என்னோட நிலைமை அவனுக்கு நான் சொல்லாமலேயே தெரிந்திருக்க வேண்டும். அவன் பதிலை எதிர்பாராது, “எங்க பங்காளி எம்.பி.ஏ. படிச்சி முடிச்சிட்டு வேலை தேடிக்கிட்டு இருக்கேன்... உருப்படியா ஒரு வேலையும் கிடைக்கல... அம்மா நல்லா இருக்கு... நாந்தான் குற்ற உணர்ச்சியோட அம்மாவுக்குச் சுமையா வாழ்ந்துகிட்டு இருக்கேன்...!”
“என்னடா... இப்படிச் சொல்ற... நீ படிச்ச படிப்புக்கு இன்னுமா வேலை கெடைக்கல...?”
“எங்க படிச்சா வேலை கிடைக்குது... படிப்புக்கு மேல நெறைய இருக்குடா... படிச்சா மட்டும் வேலை கிடைக்கறது இல்ல காலம் மாறி போச்சு... எல்லாம் ஆளு பலம்... பண பலம் இருந்தாத்தான் முடியுது...!”
“ஆமாடா, பாட்டன் பூட்டன் காலத்துல எல்லாம் எஸ்.எஸ்.எல்.சி படிச்சுட்டு கவர்ன்மன்ட் வேலைக்குப் போய்ட்டாங்க... இன்னிக்கு நாம எவ்வளவுதான் பெரிய அளவுல படிச்சிருந்தாலும் நம்ம பாடு திண்டாட்டமாத்தான் இருக்கு...!”
“ஆமாம், நீ ஒனக்குக் கலியாணம் எல்லாம் ஆயிருச்சா...?”
“எனக்கு கல்யாணம் ஆகிருச்சுடா... ஒரு குழந்தை... கடைய இப்போ தான் பெரிசா ஆக்கிட்டு இருக்கேன்...”
அவன் சொல்லச் சொல்ல எனக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் நண்பனாயிற்றே...!
“இருக்கட்டும்... நல்லா இருந்த சரி... பாண்டியா ஒனக்கு தெரிஞ்ச எடத்துல எதாச்சும் வேல இருந்த சொல்லி விடேன்டா...?” என் நண்பன் என்ற உரிமையில் அவனிடம் வாய்திறந்து கேட்டுவிட்டேன்.
யோசித்த அவன், “ம்...ம்...ம்... ஒனக்கு எந்த மாதிரி வேலைடா வேணும்...?”
“எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லடா... ஒரு ஐயாயிரம் ரூவா சம்பளத்துல எந்த வேலையா இருந்தாலும் சரி...!”
“ம்...ம்...ம்... அப்போ நான் ஒண்ணு கேட்டா... நீ... தப்பா எடுத்துக்க மாட்டியே...”
“இல்ல... தாராளமா சொல்லுடா பங்காளி...?”
“இல்ல என்னோட நான் பெரிசாக்கின புதுக் கடைல ஒரு சூப்பர்வைசர் வேல இருக்கு. ஒனக்காக நான் ஆறாயிரம் சம்பளம் தாரேன்... வரியாடா... நீ படிச்சும் இருக்க அதனால கணக்கு வழக்கும் பார்த்துக்க எனக்குத் தோதா இருக்கும்... எனக்கும் நம்பகமான ஒரு ஆளுகிட்ட வேலையக் குடுத்த மாதிரி இருக்கும்... என்ன சொல்றடா பங்காளி... உன் விருப்பம் தான்... வேற வேலை கிடைச்சா விட்டுட்டு நீ போய்டு. நான் எதுவும் ஒன்னக் கேட்க மாட்டேன். இப்போதைக்கு ஒனக்கும் நான் ஒதவுனாப்ல இருக்கும்..."
எனக்குத் திடீர் என்று என்ன சொல்வதென்றே தெரியவில்லை... பாண்டியனை நான் வணங்கும் சாமியாகவே பார்த்தேன்... அவனைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல் இருந்தது... ஆனால்... எந்தக் கண்ணால் அன்று சிட்டுக்களை கொல்வதைப் பார்க்க கூடாது என்று கதறினேனோ அந்தக் கண்களால் கோழிகளை வெட்டும் இந்தக் கொடூரங்களை எப்படிப் பார்ப்பது...?
என்னை... என் உள்ளுணர்வை நடப்பியல் வாழ்க்கை வென்று விட்டது! என்னை இந்த நிலைக்குத் தள்ளியதில் விதிக்குச் சற்று மகிழ்ச்சி இருக்கட்டும் என்று... நான் மெளனமாக இருப்பதை அறிந்த நண்பன்... என்னைப் பார்த்து ஏன்டா யோசிக்கறே... நான் எதுவும் தப்பாச் சொல்லிட்டேனா...?” என்றான்.
அதற்கு நான், "இல்லடா பங்காளி... இந்த இக்கட்டான நேரத்துல எனக்கு ஒதவ வந்த தெய்வம் மாதிரிடா நீ... ரொம்ப நன்றிடா! நாளைக்கே ஒன்னோட கடைக்கு வந்து வேலையில சேந்துக்கிறேன்டா...” என்றவாறு அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன்...
மனதிற்குள் வியந்தேன்... வாழ்க்கை எப்படிப்பட்டது... எப்படியெல்லாம் நம்மைத் திசை மாற்றுகிறது... நாம் நினைப்பது ஒன்று... நடப்பது ஒன்று... காலத்தின் பிடியில் நம் வாழ்க்கை பயணிக்கின்றது என்று நினைத்துக் கொண்டே எதிரில் வந்த பேருந்தில் ஏறிப் பயணித்தேன்.
பேருந்தில்,
“எங்கே வாழ்க்கை தொடங்கும்..
அது எங்கே எவ்விதம் முடியும்…?
இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது…?”
என்ற பி.பி.சீனிவாசின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.