ராஜன் அந்த வீட்டில் டிரைவர் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள்ளேயே, அந்தவீட்டுத் தலைவரின் பேரனுக்குப் பிறந்த நாள் விழா வந்தது. விழா முடிந்ததும், போட்டோகிராபரிடம் எஜமானர், "நம்ம டிரைவர் ராஜனை மட்டும் தனியாக ஒரு போட்டோ எடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
அதன் படியே அவனுடைய போட்டோவும் எடுக்கப்பட்டது.
ராஜனுக்கோ பெருமை பிடிபடவில்லை. புதிதாகச் சேர்ந்த தன்னையும் மதித்து ஒரு தனிப் புகைப்படம் எடுத்திருக்கிறார்களே என்று மட்டற்ற மகிழ்ச்சி.
அன்று இரவு காரின் சாவியைக் கொடுக்க விட்டினுள் நுழைந்த போது, எஜமானர் அவர் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது.
"காரணம் இல்லாமே ராஜன் போட்டோவை நான் எடுக்கச் சொல்லலை. நாம அவனைப் பற்றி சரிவர விசாரிக்காமல் நம்ம அவசரத்துக்காக வேலைக்கு அமர்த்தி விட்டோம். இப்போ சமீப காலமாக நடக்கற சில கொலைகள், ஆள் கடத்தல் விஷயங்களில் டிரைவர்கள் சம்பந்தப் பட்டிருப்பது நமக்குத் தெரியும். அதனால் அவன் போட்டோ நம் கைவசம் இருந்தால் பிற்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்து நாம் போலீசுக்குப் போக நேரிட்டால், போலீசுக்கு அடையாளம் காட்ட அது உதவும் இல்லையா?. ஒரு முன்ஜாக்கிரதை நடவடிக்கைதான் இது" என்ற போது ராஜனுக்கு தூக்கிவாரிப் போட்டது.