அமைதியான அந்த அதிகாலைப்பொழுதில் செல்போன் அடித்தது. தூக்கக் கலக்கத்தோடு படுக்கையில் இருந்து எழாமல் கண்களை மூடியபடி செல்லை எடுத்து, 'ஹலோ' என்றான் கணேசன்.
"நான் அப்பா பேசறேம்பா" என்று மறுமுனையில் இருந்து குரல் கேட்டது. அப்பாவின் பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம் தெரிந்தது.
"என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க... ஏதாவது பிரச்சினையா... ஏப்பா?" என்று கூறியவனின் இதயம் படபடவென்று துடித்தது. தூக்கம் எங்கு போனதென்றே தெரியவில்லை.
"ஆமாடா... நம்ம அம்மா நம்மளை விட்டுட்டுப் போயிட்டாடா..." போனில் உடைந்து சிதறினார் அப்பா.
"அ... அப்பா... எ... என்ன சொல்றீங்க... அம்மா..." வாரிச்சுருட்டி எழுந்தவனுக்கு எதுவும் பேசவே வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
"எப்படிப்பா..." அழுகை பீறிட்டது.
"எப்பவும் போல எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு, டி.வி. பார்த்துட்டு தூங்கப்போனா... மூணு மணியிருக்கும் என்னை எழுப்பி நெஞ்சுல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்குங்கன்னு சொன்னா... நாங்க என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ளாற..." பேசமுடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.
"அண்ணனுக்குப் போன் பண்ணிட்டிங்களா...?"
"ம்... பண்ணிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்னான்... நீ... எப்படிப்பா... உன்னால வரமுடியுமா...?" கேட்கும் போதே அப்பாவின் குரல் உடைந்தது.
"தெரியலைப்பா... நான் எம்டிக்கிட்டப் பேசிட்டுப் போன் பண்றேம்பா... ஆனா அம்மா முகத்தை பார்க்கணும் போல இருக்குப்பா..." என்று அழுகையோடு கூறியவன் அதுக்கு மேல் பேசமுடியாமல் செல்போன் இணைப்பைத் துண்டித்தான்.
அம்மா தனக்காகச் செய்த பல்வேறு தியாகங்களை நினைத்து நினைத்து அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. வாய்விட்டுக் கதறி அழுதான்.
அவனது அழுகுரல் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த சக நண்பர்கள் எழுந்தார்கள். "டேய்... கணேசா என்னடா ஆச்சு...?" என்று பதறினர்.
"அம்மா... அம்மா..." அதற்குமேல் அவனால் கூறமுடியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொண்டனர். எழுந்து கணேசனுக்கு ஆறுதல் கூறி அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்.
"இப்ப நீ ஊருக்குப் போகணும் அவ்வளவுதானே...?" என்று கேட்டான் கணேசனின் நண்பன் சந்துரு. அதற்கு,
"ஆமாடா போயே ஆகணும்... ஆனா..." என்று கணேசன் மென்று முழுங்கினான்.
"விடிந்ததும் நம்ம சூப்பர்வைஸர்கிட்ட பேசுவோம். அவரு என்ன சொல்றாரோ அதுக்கேத்த மாதிரி செய்வோம்... என்ன புரிஞ்சதா" என்றான் மற்றொரு நண்பன் குணசேகரன்.
"ம்..." என்ற கணேசனின் கண்கள் மட்டும் அருவியாக.
நன்கு விடிந்ததும் நண்பர்கள் அவசர அவசரமாகக் கணேசனை இழுத்துக் கொண்டு சூப்பர்வைசரிடம் அழைத்துச் சென்று,"சார் நம்ம கணேசனோட அம்மா இறந்துட்டாங்களாம். அதிகாலை 4 மணிக்கு போன் வந்தது..."என்று கூறினர். அதனைக் கேட்ட அவர்,
"அட என்னப்பா நீங்க... எனக்கு அப்பவே இன்பார்ம் பண்ண வேண்டியதுதானே..." என்றவர் கணேசனின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொள்ள, கணேசன் மனம் உடைந்து அழுதான்.
கணேசன் புனேயில் உள்ள அமெரிக்கக் கட்டுமானக் கம்பெனியில் சைட் என்ஜினியராக வேலை செய்து வந்தான். இந்தக் கம்பெனியில் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டன. நினைத்தவுடன் லீவு போடமுடியாது. மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் லீவு போடமுடியும். அதுவும் ஐந்து நாள்கள் மட்டுமே.
கணேசனையும் அழைத்துக் கொண்டு கம்பெனிக்குச் சீக்கிரமே சென்ற மற்ற நண்பர்கள் சூப்பர்வைசரிடம், "கணேசன் ஊருக்குப் போகணுமின்னு விருப்பப்படுறான் சார்... கடைசியாக ஒரு தடவை அவங்க அம்மாவை பார்க்கணுமின்னு ஆசைப்படுறான்... அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும் சார். இவன் வரவுக்காக ஊர்ல எல்லாரும் காத்திருக்காங்க சார்"
"எப்படிப்பா... நம்ம கம்பெனியில மூணுமாதத்துக்கு ஒருமுறைதான் அனுமதி... அதுவும் கணேசன் ஒரு மாசத்துக்க முன்னாலதான் ஊருக்குப் போயிட்டு வந்தான். நம்ப கம்பெனியின் சட்டதிட்டம்தான் ஒங்களுக்குத் தெரியுமேப்பா... அதுவும் அவன் பார்க்கிற சைட்டோட வேலையை ஒரு மாசத்துக்குள்ளாற முடிக்கணும்ன்னு நம்ம எம்.டி. சொல்லியிருக்காரு... ம்..."
"சார்... அவங்க அம்மா முகத்தை ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்... ஒரு வாரம் மட்டும் லீவு வாங்கிக் கொடுங்க சார்... ப்ளீஸ்... எமர்ஜென்ஸியில போற மாதிரிப் பாருங்க சார்..." கணேசனுக்காக நண்பர்கள் அனைவரும் ஒட்டுமொத்தக் குரலில் கெஞ்சினர்.
அவர்களின் கெஞ்சலைக் கேட்டு இரக்கப்பட்ட சூப்பர்வைசர், "சரிப்பா... பத்துமணிக்கு எம்.டி. ரூமுக்கு வாங்க... எல்லோரும் வராதீங்க. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் கணேசன் கூட வாங்க... பார்க்கலாம். எப்படியாவது பேசி லீவு வாங்கித்தர முயற்சிக்கிறேன்" என்றார்.
அவர் சொன்னது போன்றே எம்.டி.யிடம் பேச, துக்க விஷயம் என்பதால் எம்.டி.க்குள் இருக்கும் தாய்மை உணர்ச்சி ஒப்புக்கொண்டது பத்து நாள் எமர்ஜென்ஸி லீவுல போயிட்டு வா என்று சொல்லிவிட்டார்.
விடுப்பு முடிவானதும் அவன் விரைவாக ஊருக்குச் செல்லும் பொருட்டு விமான டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
நண்பர்கள் உதவியுடன் விமான நிலையம் வந்து விமானத்தில் ஏறினான். அவனது மனசு மட்டும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது.மனசுக்குள் அம்மா தனக்காகப் பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, கண்கள் கண்ணீரை வடித்தபடி இருந்தன. எப்படியும் நாலு மணிக்கு திருச்சி போயிடலாம். ஆறு மணிக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம் என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் கடைசியாக அம்மாவின் முகத்தை பார்த்துடலாம் என்று நினைத்தபோது அழுகை வெடித்தது.
அப்போது "விமானம் ஒருசில காரணங்களால் சென்னையில் இறக்கப்படும். அங்கிருந்து திருச்சி செல்லும் பயணிகள் வேறொரு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தடங்கலுக்கு மன்னிக்கவும், நன்றி" என்ற அறிவிப்பு வெளியாக, "அய்யோ... அம்மா..." என்று அலறிய கணேசனை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.
சென்னையில் விமானம் இறக்கப்பட, திருச்சி செல்லும் பயணிகள் அனைவரும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போதே மணி மூன்று ஆகியிருந்தது. அங்கிருந்த போன் மூலம் தனது அண்ணனைத் தொடர்பு கொண்டான்.
"அண்ணே..." அழுகை முந்திக் கொண்டது.
"என்னப்பா... திருச்சி வந்துட்டியா...? உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்..."
"விமானத்துல ஏதோ பிரச்சினையாம்ணே... சென்னையில இறக்கிட்டாங்க அண்ணே... வேற விமானத்துல திருச்சிக்கு அனுப்புறாங்களாம். ஒரு மணி நேரத்துல திருச்சி வந்துடுவேன். வீட்டுக்கு எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்துடுவேன். அம்மாவைத் தூக்கிட வேணாம்ணே..."
"சரிப்பா... கவலைப்படாம வா..." அண்ணன் ஆறுதல் கூறினார்.
போனை வைத்தவன் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் சென்று, "எப்ப சார் திருச்சிக்கு எங்களை அனுப்புவீங்க" என்றான்.
"அஞ்சு மணியாகும்" என்று அவர் சாதாரணமாகச் சொல்ல, "அஞ்சு மணியா சார்... நான் எங்கம்மா இறந்ததுக்குப் போயிக்கிட்டு இருக்கேன் சார்..." என்று உணர்ச்சி வயப்பட்டுக் கத்தினான்.
"நான் என்ன சார் பண்ணட்டும்... திருச்சியில இருந்து வந்துக்கிட்டு இருக்கிற விமானத்துலதான் அனுப்ப முடியும். எத்தனை மணிக்கு வருதோ வந்த உடனே அனுப்பிடுவோம்" என்றார்.
உள்ளூர் விமானச் சேவையின் மீது அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. தனது தலைவிதியை நொந்தபடி சோகமாக அங்கு கிடந்த நாற்காலியில் அமர்ந்தான். ஆனால் அவனது ஊரில்... நிலைமை வேறுமாதிரியாக இருந்தது.
"என்னப்பா சோலை... மணி அஞ்சாயிடுச்சு இதுக்கு மேலயும் போட்டு வைக்கிறது நல்லா இல்ல... ஐஸ் வச்சிருந்தாலும் இனிமே தாங்காது. அதுவும் நாளைக்குச் சனிக்கிழமை வேற... அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் இன்னைக்கே முடிச்சிடுறதுதான் நல்லது..." என்றனர் ஊர்க்காரர்கள்.
"ஏப்பா சிதம்பரம்... தம்பிக்குப் போனப்போட்டு எங்க வர்றான்னு கேளுப்பா..."
"எப்படிப்பா... அவனாக் கூப்பிட்டாத்தான் உண்டு..." என்றான்.
"சரி... ஆகவேண்டியதைப் பாருங்கப்பா... கணேசன் வர்றபடி வரட்டும்... வந்தா நேராச் சுடுகாட்டுக்கு வரட்டும்..." என்று சொல்ல, இறுதி யாத்திரைக்கு அம்மாவைத் தயார் செய்தார்கள்.
விமானம் திருச்சி வரும்போது மணி ஆறேகால். கையில் லக்கேஜ் எதுவும் இல்லாததால் வேகமாக வெளியேறி, போனில் அண்ணனைத் தொடர்பு கொண்டான்.
"அண்ணே... திருச்சி வந்துட்டேன். கார் பிடிச்சுத்தான் வாறேன்... வேகமா வந்துடுவேன்..."
"சரிப்பா... நேராச் சுடுகாட்டுக்கு வந்துடு"
"சுடுகாட்டுக்கா...?"
"ஆமா... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கப் போறோம்... உனக்காக அங்க காத்திருக்கிறோம்... வேகமாக வந்துடு"
"ச... சரிண்ணே..."
விரைவாக வெளியேறி வாடகைக் காரில் பேரம் பேசாமல் ஏறிக்கொண்ட கணேசன் டிரைவரிடம் "எவ்வளவு சீக்கிரம் வேகமாப் போக முடியுமோ அவ்வளவு வேகமாக போங்க..." என்றவன் பணம் எவ்வளவு எனக் கேட்டு அதை அவரிடம் கொடுத்துவிட்டு கண்களை மூடியபடி அழுகையை அடக்கினான். கண்ணீர் கன்னத்தில் வழிந்தபடி இருந்தது. அவனது மனக்கண்ணில் அவனது அம்மாவின் நினைவுகள் சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தன.
"என்னப்பா சிதம்பரம்... கணேசன் எங்குன வர்றானாம்... நேரம் போயிக்கிட்டே இருக்குப்பா... வானம் ஒரு மாதிரி இருட்டிக்கிட்டு வருது. மழைகிழை வந்துட்டா சிரமமாயிடும்பா... குழிக்குள்ளாறத் தண்ணி நின்னுக்கிச்சுன்னா... என்ன பண்றது. லைட்டு எதுவும் இல்ல... இருட்டுல எந்தக் காரியமும் பண்ண முடியாதுப்பா... என்ன சின்னையா ஆகவேண்டியதைப் பார்க்கலாமா..."
"இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போமே... அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறதுக்காக அவன் புனேயில இருந்து வர்றான் மாமா..." என்று மகனுக்காகக் கெஞ்சினார் சின்னையா.
அப்போது ஒரு சில மழைத் துளிகள் விழ, "ஏப்பா சின்னையா தூறல் வேற போட ஆரம்பிச்சிடுச்சு... பெரிசா மழைபிடுச்சிக்கிடுச்சின்னா சிக்கலாப் போயிரும்பா..."
இதுக்கு மேலயும் உறவுகளைச் சரிக்கட்ட முடியாது என்று தெரிந்து கொண்ட சின்னையா, "சரி...சரி... ஆகவேண்டியதைப் பார்க்கலாம்... அவனுக்குக் கொடுத்து வச்சது அவ்வளவுதான்..." என்று சடங்குகளைச் செய்யச் சம்மதித்தார்.
சுடுகாட்டில் செய்யவேண்டிய சடங்குகள் முடிந்து மனைவியைக் குழிக்குள் இறக்கும் போதாவது கணேசன் வந்திடமாட்டானா என்று அவர் மனம் தவித்தது. கண்முன்னால் தன்னுடைய மனைவியைக் குழிக்குள் இறக்கப்படுவதைக் காண முடியாதவராய் கண்களை மூடிக் கதறியபடி மண் அள்ளிப்போட்டார் சின்னையா.
அவரைத் தொடர்ந்து பெரியவன் சிதம்பரம் அழுதபடி மண் அள்ளிப்போட மற்றவர்களும் மண் அள்ளிப்போட்டு விட்டு அங்கிருந்து நடந்தனர்.
கணேசன் காரை ரோட்டிலேயே நிறுத்தச் சொல்லி இறங்கி இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒடியவன்... எதிரே அனைவரும் திரும்பி வருவது கண்டு ஸ்தம்பித்து நின்றான். அம்மாவை இனி பார்க்க முடியாது என்பது அவனது நினைவில் உதிக்க "அம்மா..." என்று அந்தப் பகுதியே அதிரும்படி கத்திப் புரண்டழுதான் கணேசன். அவனது இதயத் துடிப்பு அதிகரித்தது. அவனது ஒவ்வொரு அணுவும் அம்மாவிற்காகத் துடித்தது. அவனது துடிப்பைக் கண்டவர்கள் அவனைத் தேற்றுவதற்கு வழிதெரியாமல் உறைந்துபோய் நின்றனர்.