குளிர்ந்த வாடைக்காற்று அடித்தது. நேரம் நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது. இனிமேல் யார் சவாரிக்கு வரப்போகிறார்கள். காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்த சிவநேசன் தனது காரைக் கிளப்பிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான். பத்தாண்டுகளாகக் காரை வாடகைக்கு ஓட்டித் தொழில் செய்து வருகிறான் சிவநேசன். வாழ்க்கை ஏதோ நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இந்தக் கார்தான் இப்போது இவனுக்கு உணவிலிருந்து அனைத்தும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. படித்து முடித்து வேலை தேடித்தேடி அலுத்துப்போன சிவநேசன் தனக்குத் தெரிந்த டிரைவர் வேலை பார்ப்பது என முடிவெடுத்து முதலாளி ஒருவரிடம் டிரைவராகச் சேர்ந்து வேலை பார்த்து வந்தான். நாளடைவில் தானே ஒரு காரை வாங்கி வாடகைக்கு ஓட்டிச் சம்பாதிக்கக் கூடாது என்று எண்ணினான். அந்த எண்ணம் நிறைவேறியது.
வேகமாக ரோட்டில் வந்த சிவநேசனை ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நடுரோட்டில் நின்றுகொண்டு வண்டியை நிறுத்தச் சொன்னாள். ஒன்றும் புரியாத சிவநேசன், “இந்தாம்மா ரோட்ட விட்டு விலகி நில்லும்மா... நான் இன்னும் சாப்படலலை. இந்த நட்ட நடுராத்திரியில வண்டி எங்கயும் வராது... செட்டுக்குப் போகுது... பாதைய விடு” என்று வல்லுவல்லு என்று எரிந்து விழ, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி, “தம்பி கோவிச்சுக்காதீங்க தம்பி. என் மக பிரசவ வலியால துடிக்கிறா... தம்பி வேற யாரும் ஒதவிக்கு வரமாட்டேங்குறாங்கப்பா... ஒன்னக் கும்புடுறேன்பா... என் பொண்ண ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயிக் காப்பாத்தப்பா...” என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுதுகொண்டே அவனிடம் கெஞ்சினாள்.
அந்தத் தாயின் அழுகையைக் கண்ட சிவநேசன், “சரிசரி நான் வர்றேன்... ஆனா ஐந்நூறு ரூபாய் வாடகை தரணும் தருவியா?” என்று கேட்டான். வாடகையைக் கூடக் கேட்டால் வராமல் திரும்பிப் போய்விடுவாள் என்று எண்ணியே அவ்வாறு அதிகமாக வாடகைப் பணத்தைக் கேட்டான்.
அந்தப் பெண்மணியோ, எதைப் பற்றியும் யோசிக்காது, “ஐந்நூறு என்ன தம்பி... ஆயிரம் ரூபாயே தர்றேன்... ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி எம்பொண்ணயும் அவ வயித்துல இருக்கிற பிள்ளையையும் காப்பாத்துப்பா” என்று இறைஞ்சினாள்.
அதனை எதிர்பார்க்காத சிவநேசனும் அவளைச் சமாதானப்படுத்தி அவள் குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று அவளது மகளை ஏற்றிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி வண்டியை விரட்டினான். உள்ளே ஏறிய இளவயதுப் பெண் பிரசவ வலியால் துடிதுடித்தாள். வலியால், “அய்யோ... அம்மா...!” என்று முனகிக் கொண்டு அங்கும் இங்குமாகத் திரும்பித் திரும்பி உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவளின் துடிப்பு அவனை வேகமாகக் காரை ஓட்ட வைத்தது. நடுத்தரவயதுப் பெண் தனது மகளின் வயிற்றைத் தடவிக் கொடுத்து, “ஆத்தா கொஞ்சம் பொறுத்துக்கப்பா… இந்தா ஆஸ்பத்திரி வந்துடும்” என்று கூறுவதும் இறைவனிடம் பின்னர் வேண்டுவதுமாக இருந்தாள்.இரயில்வே லெவல் கிராஸிங்கைக் கடந்தே மருத்துவமனைக்குக் காரில் செல்ல முடியும். வேகமாக ஒட்டி வந்த சிவநேசன் இரயில்வே கேட்டைக் கடந்து விடவேண்டும் என்று ஆக்சிலேட்டரை மிதித்து காரின் வேகத்தை அதிகரித்தான். ஆனாலும் இரவு நேர இரயில் வரும் நேரமாதலால் கேட்கீப்பர் இரயில்வே கேட்டை மூடிவிட்டான். இரயிலும் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
காரினுள் இருந்த பெண் வலியின் வேதனையில் அழுது கதறினாள். அவளால் வலியைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. சிவநேசனின் மனம் வலித்தது. அவனால் அவள் படும் வேதனையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அவன் மனதிற்குள் தெய்வங்களை வேண்ட ஆரம்பித்தான். அதேசமயம் இரயில் கடந்தவுடன் கேட்கீப்பர் கேட்டைத் திறக்கவே காரை ஓட்டி வேகவேகமாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்ததான்.
கார் மருத்துவமனைக்கு வந்தவுடன் அங்கிருந்தவர்கள் பிரசவ வலியெடுத்த பெண்ணை ஸ்ட்ரெக்சரில் வைத்துத் தள்ளிக் கொண்டு சென்று அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவன் பொறுமையாக மருத்துவமனையின் வெளியிலேயே காத்திருந்தான்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. நடுத்தர வயதுப் பெண்மணி கண்களை மூடிக் கடவுளிடம் மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் வெளியில் வந்த நர்ஸ், “ஏம்மா ஒங்க பொண்ணுக்கு ஆம்பளப் பிள்ள பொறந்திருக்கு... சுகப் பிரசவந்தாம்மா... போயி ஒங்க பேரப்பிள்ளையப் பாருங்க... ஒங்க மகளும் பேரனும் நல்லா இருக்காங்க...” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. அவள் மருத்துவமனைக்குள் செல்லாமல் வேகவேகமாக வெளியில் ஓடிவந்து சிவநேசனைப் பாரத்து, “தம்பி நீ நல்லா இருப்ப... எனக்குப் பேரன் பொறந்திருக்காம்பா... நீ செஞ்ச ஒதவியாலதான் இது நடந்ததுப்பா... இந்தாப்பா நீ கேட்டதுக்கும் மேலேயே ஆயிரம் ரூபாயா வச்சிருக்கேம்பா... வச்சிக்க...” என்று பணத்தைக் கொடுக்க அவனோ “ இல்லம்மா... வேணாம் நீங்களே வச்சுக்கோங்க... முதல்ல ஒங்க மகளப் போயிப் பாருங்க... ரொம்ப நன்றி... நான் வர்ரேறம்மா...” என்று கூறி தனது காரை நோக்கி நடந்தான்.
அவன் செல்வதையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். காருக்குள் ஏறியவன் கண்களில் கண்ணீர்த்துளிகள்... தேம்பித் தேம்பி அழுதான். “...ச்சே... இப்படி மிருகத்தனமா நடந்துகிட்டோமே... நானெல்லாம் மனுசனா... எப்படிப்பட்ட கொடுமையைச் செஞ்சுப்புட்டேன்... நான் செஞ்சது பெரிய பாவம்... அதுக்குக் கழுவாயே கிடைக்காது...” என்று பலவாறு புலம்பிய சிவநேசன் தனது தலையில் அடித்துக் கொண்டே சிறிது நேரம் அழுதான்.
இப்படித் துடிதுடிச்சித்தானே நம்மளையும் நம்ம அம்மா பெத்துருப்பாங்க... அப்படிப்பட்ட தாயை வெறுத்து வெரட்டிட்டோமே... எனக்கெல்லாம் நல்ல கெதிகிடைக்குமா...? நான் எங்க கூட்டிபோறேன்னுகூடத் தெரியாம, “டேய் தம்பி நாளைக்கு வந்துருவியில்லப்பா... என்று சின்னக் குழந்தைபோன்று என்னைப் பார்த்துக் கேட்ட அம்மாவிடம், இந்தப்பாரு எதுவும் பேசாதே... வாய மூடிக்கிட்டு வா... பேசாம இங்கேயே இரு... நாளைக்கு வர்றேன்” என்று கூறிவிட்டு முதியோர் இல்லப் பெண்ணிடம் அவளை அனாதை என்று கூறிவிட்டுவிட்டு வந்துவிட்ட நிகழ்வு அவனது மனதைப் பிசைந்தது. தன்னையே அவன் மிகவும் நொந்து கொண்டான். இப்படிப் பலப்பல எண்ணங்களில் அவனது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
பின்னர் ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனாகத் தனது செல்பேசியை எடுத்து அதில் ஒரு எண்ணைத்தட்டிப் பேசத் தொடங்கினானன். எதிர் முனையில் “ஹலோ... இது அன்னைதெரசா முதியோர் இல்லம்... ஆமா இதென்ன நேரங்கெட்ட நேரத்துல... ஒங்களுக்கு என்ன வேணும்...” என்று பெண்குரல் ஒன்று கேட்டது.
சிவநேசன் கம்மிய குரலில், “அம்மா மன்னிச்சிக்கோங்க... ஒரு முக்கியமான விஷயம் ஒண்ணு ஒங்ககிட்ட கேக்கணும் அதனாலதான் நான் ஒங்களுக்குப் போன்பண்ணேண். தொந்தரவுக்கு மன்னிச்சிக்கோங்க... நாலு நாளைக்கு முன்னால அனாதையின்னு ஒரு வயசான அம்மாவைக் கூட்டிக் கொண்டுவந்து ஒங்க இல்லத்துல சேர்தேன்ல... அந்த அம்மா நல்லா இருக்காங்களா...” என்று தயங்கித் தயங்கிக் கேட்கவே, “மறுமுனையில் ஆமா அந்தம்மா நல்லா இருக்காங்க... அவங்களுக்கு இப்ப என்ன?” என்று கேட்டாள்.
சிவநேசனோ,”இல்லம்மா நாளைக்குக் காலையில வந்து அவங்கள நான் கூட்டிக்கிட்டுப் போறேன்மா... அதுக்கு ஒங்களோட அனுமதி வேணும்... அதுக்குத்தான் ஒங்களுக்குப் போன் பண்ணினேன்...” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திராமல் செல்பேசியின் தொடர்பைத் துண்டித்தான்.
சிவநேசனின் மனதில் இப்போது ஒரு நிம்மதி பிறந்தது. தனது கண்களைத் திறந்துவிட்ட அந்தப் பிரசவலியால் துடித்த பெண்ணிற்கு மானசீகமாக நன்றி சொன்னான். தன் அறிவுக்கண் திறந்த அந்தப் பெண் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு தனது காரை வீட்டைநோக்கி ஓட்டினான். அவனது மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. கனத்த அவன் மனம் காற்றைவிட லேசாக மாறியது.