எங்கும் அமைதி. ஆற்றங்கரையின் ஓரம் மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. அதிகாலைப் பொழுதின் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சரயு ஆறுமட்டும் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை. பறவைகள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப் பொழுது. ஆற்றை ஒட்டிய குடிசையின் சாளரத்தின் வழியாக ஒரு முகம் வெளியே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
சுருக்கம் நிறைந்த அந்த முகம், மந்தரையினுடையது. சுருக்கம் விழுந்து காலம் என்னும் பேராற்றில் எதிர் நீச்சல் போட்டுக் களைத்துச் சலித்து... இன்னும் புரியும்படி சொல்வதானால் அம்முகம் கூனியுடையது. குழி விழுந்த அந்தக் கண்கள் பரதன் அவன் ஆசிரமத்திலிருந்து வருவதைப் பார்த்து பிரகாசம் அடைந்தன. அதிகாலை நேரத்திலேயே குளித்து முடித்து, இறை வழிபாட்டிற்காகப் போய்க்கொண்டிருந்தவனைப் பார்த்துப் பெருமிதத்தால் மந்தரையின் மனம் பூரித்துப்போனது.
வீரமும் கருணையும் ஒருங்கே பெற்றவன் அல்லவா இந்தப் பரதன்? பெரியவர்களை மதிப்பதில் எவ்வளவு உயர்வானவன். அவ்வளவு பணிவு; அவ்வளவு அடக்கம். கைகேயியின் மகன் வேறு எப்படி இருப்பான்? அவள் மனம் பரதனை விட்டுக் கைகேயியிடம் தாவியது. கைகேயியைப் போல ஒரு நல்ல, திறமையான பேரரசியை இந்த அயோத்தி மட்டுமல்லாது பரதகண்டமே பார்த்திருக்குமா என்பது சந்தேகம் தான். அவளும் கைகேகியும் அறிமுகமான அந்த நாளை மந்தரையால் மறக்க முடியுமா? மறக்கக் கூடிய நாளா அது? இன்னும் அந்த நாள் மந்தரையின் மனத்தில் பசுமையாக நிழலாடியது.
அப்போது மந்தரை இளமையின் வாசலில் நின்ற பருவம். கேகய நாட்டின் ஒரு நந்தவனத்தில் தன் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடு, குழப்பமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளைப் பெண்கள் விளையாடும் சத்தம் கலைத்தது. ஒன்பது அல்லது பத்து வயதில் தங்கப் பதுமையாக பந்தாடிக் கொண்டிருந்த பெண் குழந்தைதான் இளவரசி கைகேயி என்று அவர்கள் பேச்சின் மூலம் மந்தரை அறிந்தாள். அவளும் விளையாட்டை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஒரு பெண் அடித்த பந்து மந்தரையின் பக்கம் வர, அதை எடுத்து வைத்துக்கொண்டாள். கைகேயியின் தோழிகளில் ஒருத்தி ஓடி வந்து, “ஏ கூனி, என்ன விளையாட்டு இது? மரியாதையாகப் பந்தைக் கொடுக்கிறாயா? இல்லையா...?” என்று மிரட்டினாள். மந்தரைக்கு முகம் சுண்டிப் போனது. அந்தச் சிறுபெண் திட்டியதற்காக அவள் வருந்தவில்லை. மாறாக அவளது கூன் விழுந்த முதுகைப் பார்த்து, “ஏய்... கூனி...” என்றாளே அந்தச் சொல்தான் அவளது உள்ளத்தைப் பாடாய்ப்படுத்தியது. அவள் தனது வருத்தத்தை வெளிக்காட்டாது பந்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள்.
சிறுபெண்கூட கேலி செய்யும் அளவிற்குத் தனது நிலை இருக்கின்றதே... என்று அவள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது கைகேயி ஓடி வந்து, “ஏய் மந்தாகினி! என்ன பேச்சு இது? பெரியவர்களை மரியாதையின்றிப் பேசலாமா? பெரியவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உனக்குத் தெரியாதா...?” என்று கேட்டுவிட்டு மந்தரையின் பக்கம் திரும்பி “பெண்ணே நீ யார்? ஏன் இங்கு இப்படி தனியாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று அன்பொழுகப் பேசி, அவளைப் பற்றி அறிந்துகொண்டு, மந்தரைக்கு அடைக்கலம் அளித்தாள். அது மட்டுமல்லாது மந்தரையைத் தன் உயிர்த்தோழியாகவும் ஆக்கிக்கொண்டாளே! அவளல்லவா மகாராணி. இந்தக் குணம் யாருக்கு வரும்? ஏதுமற்று ஏங்கி அழுது கொண்டிருந்தவளுக்குப் புகலிடம் கொடுத்து வாழ்க்கை கொடுத்த கைகேயியின் மனம் உயர்ந்ததல்லவா? எல்லா உறவுகளுமா இறுதி வரைக்கும் வந்துவிடுகின்றது? சில உறவுகள் மட்டுமே இறுதி வரை வருகின்றது. அதிலும் இந்த நட்பு இருக்கின்றதே அது உறவை விட மேலானது. வாழ்வின் இறுதி மூச்சுவரை நம்மோடு நட்பு பயணிக்கின்றது. கைகேயிக்கும் எனக்குமுள்ள இந்த நட்பு இந்த ஜென்மத்தில் முடியாது. அது ஜென்மஜென்மத்திற்கும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்... என்று அந்தநாளை மந்தரை அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.
மந்தரை கைகேயியோடு மனம்விட்டுப் பேசி, பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பேசவா? ஒரு பார்வை, ஒரு புன்னகை? ம்ஹூம்!! இப்போதெல்லாம் அது கூட இல்லை. ஹூம்! இந்தப் பாழும் அரசியல்! எப்படி எல்லாம் மனிதர்களை மாற்றிவிடுகின்றது. எல்லாம் நம் நேரம் என்று எண்ணியவளாய் தன்னை மீறிய பெருமூச்சொன்றை உதிர்த்தாள் கிழவி.
அப்போது குடிசையின் கதவைப் படீரென்று திறந்துகொண்டு வெள்ளமென உள்ளே நுழைந்தாள் கயல்விழி. மந்தரைக்கு உதவியாக இருக்க கைகேயிதான் அவளை நியமித்திருந்தாள்.
“ஏய் கூனி, விஷயம் தெரியுமா உனக்கு? ஸ்ரீராமர் பதினான்கு வருட வனவாசத்தை முடித்துக்கொண்டு, இலங்கை அரசன் இராவணனையும் வென்று, அயோத்தி திரும்புகிறாராம். இந்த நல்ல செய்தியை அவரின் தூதர் வானர வீரர் அனுமான் என்பவர் வந்து தெரிவித்திருக்கிறார். நாளை பொழுது சாயும் நேரம் அவர்கள் அனைவரும் வந்துவிடுவார்களாம். இப்போது என்ன செய்வாய் கிழவி?” என்று எகத்தாளமாகக் கேட்டாள்.
அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மந்தரையின் காதில் அமுதத் துளிகளாய் விழுந்தன. இராமன் வருகிறானா? பதினான்கு ஆண்டுகள் அவ்வளவு சீக்கிரத்திலா ஓடிவிட்டன? என்று சிந்தனையில் மூழ்கிய மந்தரையை, “அடுத்த சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டாயா கூனி? ஸ்ரீராமரை மீண்டும் பழிவாங்க நினைக்கின்றாயா...? என்ற கேள்வியுடன் கலைத்தாள் கயல்விழி.
அப்போது அங்கு வந்த அவளின் தோழி “உனக்கென்ன கிறுக்கா பிடித்துவிட்டது? கூனியிடம் பேசிக்கொண்டு நிற்கிறாயே? சீக்கிரம் வா. நகரம் முழுவதிலும் தோரணங்கள் கட்டவும் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைக்கச் சொல்லவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வேலைகள் நிறைய இருக்கின்றன” என்று கூறி கயல்விழியை அழைத்துக் கொண்டுபோய் விட்டாள்.
தனித்து விடப்பட்ட மந்தரை, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
இராமன் வருகிறானா? குழந்தை சீதையும் உடன் வருவாள் அல்லவா? இவள் எதிர்பார்த்தபடி அவர்கள் மாறியிருப்பார்களா? காட்டிற்குச் சென்ற உடனே அவர்களுள் மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. யாரோ படகோட்டியாம், குகன் என்று பெயராம். அவனைத் தன் சகோதரனாகவே ஏற்றுக்கொண்டானாமே இராமன். இன்று அவனுடைய தூதனாக ஒரு வானர வீரனைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறானே. அது மட்டுமா? அவனுடைய படையில் கரடிகளும் கூட உண்டாமே.
எல்லாரும் நான் இராமனுக்கு அநீதி இழைத்துவிட்டதாகவே நினைக்கின்றார்கள்… என் மனதை யாராவது புரிந்து கொண்டார்களா என்றால் கிடையாது. நான் விரும்பும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை காட்டுக்கு அனுப்பித் துன்புற நினைப்பேனா? இந்தப் பதினான்கு ஆண்டுகள் என் மனம் எந்த அளவு துன்புற்றது என்று யாருக்காவது தெரியுமா? இராமன் படும் துன்பங்களை நினைத்து நினைத்து என் மனம் அனலில் இட்ட மெழுகுபோல் உருகியதை யார் உணரப் போகிறார்கள். அனைவரும் கூனி பொல்லாதவள் என்றல்லவா கூறிக் கொண்டிருக்கிறார்கள்... என்ன செய்வது... என்று மனதில் எண்ணிக் கொண்டு தரையில் உட்கார்ந்தபடியே சிந்தனையால் காலத்தின் ஏடுகளைப் புரட்டினாள் மந்தரை.
அது ஒரு இனிய வசந்த காலம். இராமன் உள்ளிட்ட தசரதகுமாரர்கள் நால்வரும் அரண்மனை நந்தவனத்தில் விளையாட்டு அம்புகள் விட்டு பழகிக்கொண்டிருந்த பருவம். இராமனைப் போலக் குறி பார்த்துச் சரம் தொடுக்க யாராலும் முடியாது. அதிலும் மந்தரையின் வளைந்த முதுகில் அம்பு எய்வதென்றால் அவனுக்குத் தனி ஆனந்தம். இராமனின் அழகு ததும்பும் முகத்தைப் பார்க்கும் ஆசையில் ஒரு முறை மந்தரை இராமனின் அம்பை மறைத்து வைத்துவிட்டாள். இராமன் வந்து கேட்க, இவள் மறுத்தாள். உடனே அவன் “ஏ கூனி, அம்பைக் கொடுக்கப் போகிறாயா, இல்லையா? உன் அசிங்கம் பிடித்த முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது?” என்று வெறுப்பை உமிழ்ந்தான். அதனைக் கேட்ட மந்தரையின் இதயத்தில் இரத்தம் வடிந்தது. அவள் வேதனையோடு அம்பைக் கொடுத்தாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் பரதன் ஓடி வந்து, “அண்ணா இன்று ஏனோ கோபமாக இருக்கிறார். இல்லையென்றால் இப்படிப் பேசவே மாட்டார். நீ ஒன்றும் தவறாக நினைக்க வேண்டாம்” என்று காயத்திற்கு மருந்திட்டுப் போனான். இராமனின் இத்தகைய போக்கு குறித்துக் கைகேயிக்கும் கவலை உண்டு. குருகுல வாசம் அவனை மாற்றி விடும் என்று நம்பினாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கைகேயி பல முறை இது குறித்து மந்தரையிடம் பேசியிருக்கிறாள். “என் இராமன் மிகச் சிறந்தவன் தான். அதில் ஐயமில்லை. ஆனால் எல்லா மக்களையும் சமமாக எண்ணும் மனப்பாங்கு இல்லையே. அரசனாக வேண்டியவன் அல்லவா அவன்? இப்போது அவனைக் கொண்டாடும் மக்கள், அவன் அரசனான பின் இந்தப் போக்கின் காரணமாக வெறுக்கத் தொடங்கிவிட்டால்? அத்தகைய நிலையை நினைத்தே பார்க்க முடியவில்லையே” என்று புலம்பியிருக்கிறாள். திருமணம் அவனுள் மாற்றத்தை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. சீதை உலகமறியா சிறு குழந்தையாகவே இருந்தாள். பரந்து விரிந்த நாட்டின் பேரரசியாகும் மனப்பக்குவம் அவளிடமும் இல்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தார் தசரதச் சக்கரவர்த்தி. இராமனுக்குப் பலவிதமான மக்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் அனுபவப் பாடம் பெறவும், வெறும் நகரம் மட்டுமே நாடு அல்ல, காடுகள், மலைகள், அவற்றில் வாழும் பல இனத்தைச் சேர்ந்த மக்கள் இவையெல்லாம் சேர்ந்தது தான் நாடு என்ற உண்மையை உணர்த்தவும் வேண்டும். அனுபத்தால் முதிர்வு பெற்ற இராமன் புடம்போட்ட தங்கம் போன்றிருப்பான். அவனைக் காலம் பக்குவப்படுத்திவிடும். இராமன் அனுபவ அறிவைப் பெறுவதற்கு என்ன வழி என்று மந்தரை கைகேயியோடு ஆலோசித்தாள். அதன் விளைவுதான், கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்.
எப்படியோ அயோத்திக்கு மிகச் சிறந்த அரசன் கிடைத்தால் சரி. கைகேயி வாழ வந்த நாடல்லவா? அந்நாடு மிகுந்த பொலிவோடு இருக்க வேண்டாமா...? என்னையும் கைகேயியையும் இவ்வுலகம் என்னவேண்டுமென்றாலும் நினைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் என் கண்மணி இராமன் எங்களைப் புரிந்து கொண்டால் அதுவே போதும். கூனியை இராமன் சிறுவயதில் கூனில் அம்பெய்து அவமானப்படுத்தினான். அதனால்தான் கூனி அவனைப் பழிவாங்கிவிட்டாள் என்று உலகம் தவறாகவே கருதும். நான் என் இராமனைப் பழிவாங்குவேனா? அவன் சிறுபிள்ளை... அவனைப் பழிவாங்குவது என்னை நானே பழிவாங்குவது போன்றதல்லவா? அனுபவம் பெற்று உலகை ஆளும் அறிவிற் சிறந்தவனாக என் இராமன் விளங்க வேண்டும். அந்த அனுபவ அறிவை இராமன் பெறவே நானும் கைகேயியும் இணைந்துசெயல்பட்டோம். ம்...ஹூம்...ம்... இதெல்லாம் யாருக்குப் புரியப் போகிறது... என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தாள் மந்தரை. எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாளோ தெரியாது, வெளியில் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரங்கள் அவளைக் கலைத்தன.
அதோ என் இதயம் கவர்ந்த இராமன் வருகிறான். காலத்தால் பக்குவப்படுத்தப்பட்ட இராமன் வருகிறான். இலக்குவனோடும் சீதையோடும் சென்ற இராமன் இன்று வானர சேனை ஒரு பக்கமும், இலங்கை அரக்கர்கள் சேனை மறுபுறமும் சூழ, வருகிறான். அவன் படையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இப்போது அவன் பார்வையில் அனைவரும் சமம். எங்கும் வளங்கொழிக்கும் இராமராஜ்யம் மலரப் போகிறது.
மந்தரைக்கு மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் மறு நொடியே அவள் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. “கண்மணி இராமன் என்னைப் புரிந்துகொண்டிருப்பானா? உலகின் மிகச் சிறந்த அரசனாக உருவாக இந்த வனவாசம் அவனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி என்பதை இராமனால் புரிந்துகொண்டிருக்க முடியுமா?”
அலைமோதிய கூட்டத்தில் இராமனின் கண்கள், யாரையோ தேடின. இந்தப் பக்கம் யாரும் இல்லையே! அமைச்சர்கள், தாய்மார்கள் எல்லோரும் மறுபுறம் அல்லவா நிற்கிறார்கள். அப்படியிருக்க அவன் கண்கள் யாரைத் தேடக்கூடும்? இப்போது சீதையின் பார்வையும் இராமனைத் தொடர்ந்தது. அவர்களிருவரின் பார்வையும் மந்தரையின் மேல் விழுந்தது. தாங்கள் அனுபவப் பாடம் கற்கக் காரணமாக இருந்த மதியூகி மந்தரையைப் பார்த்து அவர்களிருவரது கைகளும் சொல்லி வைத்தாற்போல் ஒருசேரக் கூம்பின. அவர்களது கண்கள் மந்தரைக்கு நன்றியைக் கூறின.
அப்பப்பா இதுபோதும்!! இது போதும்!! இராமன் என்னுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டானே... அதுபோதும்... உலகம் இனி என்னை என்ன நினைத்தால் என்ன? கண்மணி இராமனும் சீதையும் என்னைப் புரிந்துகொண்டார்களே... நான் பழிவாங்கவில்லை என்று புரிந்து கொண்டார்களே...! நான் வஞ்சகி இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்களே... நான் குலத்தைக் கெடுக்க நினைத்தவள் இல்லை... மாறாக குலத்திற்குப் பெரும்புகழ் சேர்க்கத் துணை நின்றவள் என்பதைப் புரிந்து கொண்டார்களே... அதுபோதும்... கண்களாலும் அவர்களது செய்கையாலும் பல விஷயங்களை எனக்குப் புரிய வைத்து விட்டார்கள்... இனி என் பிறவி கடைத்தேறும்... என்று மந்தரை மகிழ்ந்தாள். அந்த மகிழ்ச்சியால் அவளது கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தோடின. மந்தரை அதனைத் தடுக்க முயற்சிக்கவில்லை. அவள் மனம் பெருநிறைவு கொண்டது.