வீட்டு வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. வெளியில் நிறைய மண் கிடந்தது. அதனை அள்ளித் தளத்திற்குப் போட வேண்டும். அந்த வேலையை வயதான ஒரு பெண் செய்து கொண்டிருந்தாள். அவள் காய்ந்த விறகுக் குச்சி போல இருந்தாள். தடுக்கி விழுந்தால் விழுந்து நொறுங்கி விடுவது போலத் தோற்றம். அவளது உடல் வற்றி வறண்டு போயிருந்தது. ஏழ்மை அவளது உடலில் பல்வேறு மாறுதல்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது. அவளது முதிர்ந்த உடலில் செதில் செதில்களாய்ச் சுருக்கம். அவள் தனது மீன் முள்ளைப் போன்ற வெளிரிய குட்டையான மயிரை வாரிச் சுருட்டியிருந்தாள். அவள் செய்யும் வேலையில் படு நிதானம் தெரிந்தது. தனது உடல் இயலாமையைக்கூட வெளிப்படுத்த முடியாமல் அவள் முக்கி முனகி செய்து கொண்டிருந்தாள்.
சுந்தரம் வாத்தியார் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு கட்டிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். கட்டிடம் மேலே ஒட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டது. ஏராளமான பணத்தைக் கற்களும் சிமெண்டும் தின்று முடித்தது போக, கூலி வேறு ஆளை விழுங்கிவிடும் அளவிற்கு ஆகி விட்டது. சுந்தரம் வாத்தியாருக்கு எப்படியாவது தனது ஓய்வுக் காலத்திற்குள் ஒரு வீடு கட்டிக் குடிபோய்விட வேண்டும் என்ற ஆசை. அவரது ஆசை இப்போது கட்டிடமாக உருவாகிக் கொண்டிருந்தது. வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள். எப்படியோ திடமனத்துடன் காரியத்தில் இறங்கிவிட்டார். இறங்கிய பின்னர்தான் அவருக்கே இதில் இருக்கும் சூட்சுமம் தெரிந்தது.
வாத்தியாருக்கு ஏன் தான் இந்தக் காரியத்தில் அவசரப்பட்டு இறங்கினோம் என்ற எரிச்சல் வந்து விட்டது. தொடக்கத்தில் வானம் தோண்டிக் கடைக்கால் போடும் போதிலிருந்தே பிரச்சினை. கல்லு வாங்கணும், மண்ணு வாங்கணும், அரளை வாங்கணும், வண்டிப் புடிக்கணும், சிமெண்ட் வாங்கணும், ஆளப் புடிக்கணும், இப்படி ஒரு பக்கம், மறு பக்கம் அரசாங்க லோனப் பாக்கணும், வீட்டப் பாக்கணும், கடன் வாங்கணும் இப்படித்தான் ஓடி ஓடி அலைந்தார். மனமும் உடலும் ஒரு நிலையில் இல்லை. அலைச்சல்... அலைச்சல் அப்படியொரு அலைச்சல்... பள்ளிக்கூடம் போனோம் பாடம் நடத்தினோம், மனைவி மக்களைப் பார்த்தோம் என்ற நிலை மாறி, ஒரே அல்லல் மயமாய் ஆகிப் போனது. படுக்கும் போதும் எழும் போதும் கட்டிடத்தைப் பற்றிய நினைவுகள் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தன. எப்படி வீட்டைக் கட்டி முடிப்போம்... என்ற எண்ணமே அவரது மூளை அழுத்திக் கொண்டிருந்தது. ஏ பிளஸ் பி ஓல்ஸ் கொயர் என்பதற்குப் பதிலாக அவர் வாய் மண்ணு, கல்லு, கொத்தனார் என்று முணுமுணுக்கத் தொடங்கியது. அவருக்கே இது வியப்பாகப் போய்விட்டது. கணக்கே கதி என்று கிடந்த தானா இப்படி மாறிப்போய்விட்டோம் என்று...
என்ன செய்வது வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் இதையெல்லாம் பார்த்தால் முடியுமா...? அவர் உணவுகூட சரியாக உண்ணாது கட்டிடத்திற்கும் வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் பேங்கிற்குமாக அலைந்து திரிந்தார். அவர் கையில் சிறு பையைச் சுமந்த படி கட்டிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். கட்டிடம் கோடிட்ட கிராப்ட் நோட்டு போல வரி வரியாய் வரி பிசகாமல் இருந்தது. இடையிடையே சார மரங்கள் கூட்டலும் கழித்தலுமாய் நீட்டிக் கொண்டிருந்தன. கட்டிடத்தைச் சுற்றி வந்து பார்த்தவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த வயதான பெண் வேகமாக வேலை செய்யாமல் மெதுவாக வேலை செய்வதைப் பார்த்துவிட்டுக் கடுப்பானார். இந்தம்மா எப்ப வேலை பார்த்து முடிக்கப் போகுது... சும்மா வீட்டுல இருக்க முடியாம இங்க வந்து நம்ம உயிர வாங்குது... என்று மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டு, அந்தம்மாவைப் பார்த்து,
'இந்தாம்மா, நானும் தான் பாக்குறேன், மசமசன்னு வேலை பார்த்துக்கிட்டு இருக்கே... ஒடம்புக்கு முடியலைன்னா ஏன் வேலைக்கு வர்ற... வீட்டுலேயே இருந்துக்க வேண்டியதுதானே... ' என்று எரிந்து விழுந்தார்.
'கோவுச்சுக்காதீங்கய்யா கொஞ்சம் ஒடம்புக்கு முடியல' என்று மன்னிப்புக் கோருபவளைப் போன்று கூறினாள். அதனைக் கேட்ட சுந்தரம் வாத்தியாருக்குச் சட்டென்று கோபம் தலைக்கேறியது.
'ஒடம்புக்கு முடியலைன்னா ஏன் வரணுங்கறேன்... வீட்டுலயே இருக்க வேண்டியதுதானே... நானும் கஷ்டப்பட்டுத்தான் வீட்டக் கட்டறேன்...' என்று கத்தினார்.
அதனைக் கேட்ட வயதான அந்தம்மா வெலவெலத்துப் போனாள்... பயந்து கொண்டே, 'எப்படிங்கய்யா... வீட்டுல இருக்க முடியும்... வேலைக்குப் போனாதாய்யா சோறு... வேலை பார்த்தாக் காசு... வேஷம் போட்டாக் கூலி... எங்க பொளப்பு இப்படித்தான்ய்யா இருக்குது' என்று வேதனையுடன் கூறியபடி அவள் தலை குனிந்துகொண்டு நின்றாள்.
இருந்தாலும் சுந்தரம் வாத்தியாருக்கு இது பிடிக்கவில்லை... தன்னை இந்தக் கிழவி அவமானப்படுத்தியதாகக் கருதிக் கொண்டு கோபம் தலைஉச்சிக்கேற, 'ஆமாம்மா நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கறேன்; காலைலேர்ந்து ஊத்துன ஊத்துன இன்னும் செவுரு நனைஞ்ச பாடில்ல... என்ன தண்ணி ஊத்தற... இப்படியே வேலை செய்யாம பேருக்கு நின்னுக்கிட்டு என்னோட பணத்தையெல்லாம் வெரயமாக்கலாம்னு பாத்தியளாக்கும்... '
'இல்லீங்கய்யா கட்டடத்த சுத்தி இப்ப மூணாம்மொற ஊத்துறேன்'
'ஆமாம்... எங்கண்ணு பொடரியில இல்ல இருக்கு... அம்மா தண்ணி ஊத்துனத நான்தான் பாக்கல போலிருக்கு'
'ஐயோ சாமி அப்படில்லாம் இல்ல சாமி ஒழைக்காம கெடைக்கிற பணம் எங்களுக்கு வேணாம்யா' என்றாள் தழுதழுத்த குரலில்... அதனைக் கேட்ட வாத்தியாருக்கு முகம் ஜிவ்வென்று சிவப்பாகிக் கருத்தது...
'என்னம்மா இல்ல சாமி, நொல்ல சாமின்னுகிட்டு, நான் இங்க இருக்கிற வரையில வேலைசெய்யற மாதிரி நடிக்கிறது... அப்பறம் நான் இந்தப் பக்கம் போன ஒடனேயே ஒக்காந்திட வேண்டியது தான்... அப்படித்தானே...'
“இல்லீங்க... இந்தச் சுண்ணாம்புப் பாறையில கைப்பம்பு போட்டிருக்கீங்களே, தண்ணி அடிச்சா எகிருது, கை ஒதறது, நெஞ்சு விறிஞ்சு போவுது வலியெடுக்குது... அதனாலதான் மொள்ளமா சொவத்துல தண்ணி ஊத்தவேண்டியதா இருக்குது... ஒங்க காசு எனக்கெதுக்குங்க...' என்றாள் கண்கலங்கியபடி.
அதனைக் கேட்ட வாத்தியார், கொதித்தெழுந்தார்.
'அடேயப்பா... இந்தா பாரும்மா... நான் வாயக்கட்டி வயித்தக் கட்டிவீட்டக் கட்டுறேன்.ஒங்களுக்கெல்ல்லாம் இளக்காரமப் போச்சு இல்லையா... என்னோட வயிறு எரியுதும்மா... இந்தப் பேச்செல்லாம் என்கிட்டப் பேசாதே மொத்தல்ல பேச்சைக் கொறச்சுக்க... ஒன்னால முடியலைல்ல... நீ நாளையிலருந்து வேலைக்கு வராத, நின்னுக்க... என்ன புரிஞ்சதா...?' என்று சட்டியில் போட்ட கடுகு போல் பொறிந்து தள்ளிவிட்டார்.
அதனைக் கேட்ட அந்த வயதான பெண்... பதறிப் போனாள். 'அய்யா... சாமி அப்படில்லாம் சொல்லாதீங்கய்யா... எனக்கு நாளைக்கு வொடம்பு சரியாயிடுமுய்யா... நீங்க சொல்ற வேலையெல்லாம் செய்யறேன்யா... எந்த வேலையாயிருந்தாலும் செய்யிறன்யா...' என்று கெஞ்சினாள்.
அதனைக் கேட்ட வாத்தியார் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட குவாரிப் பாறையைப் போன்று ஆனார்.
'அதெல்லாம் சுத்தப்படாது, நான் என்ன தர்மத்துக்கா வீடு கட்டறேன்... ஒன்கிட்டப் பேசி என்னாத்துக்கு ஆகப் போகுது... ஒன்ன வேலைக்குக் கூட்டிக்கிட்டு வந்தாருல்ல அந்த மேஸ்திரி கிட்ட பேசிக்கிறேன்...' என்று கூறியவாறு சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த மேஸ்திரியைப் பார்த்து, 'யோவ் மேஸ்திரி இங்க வாய்யா...!'
சுந்தரம் வாத்தியாரின் மிரட்டல் தொனியில் அமைந்த குரலைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு அவரிடம் மேஸ்திரி ஓடிவந்தான்.பதற்றத்துடன், 'வணக்கம் சார்... என்னையக் கூப்புட்டீங்களா சார்?'
'ஆமாய்யா... நானும் ரெணடு நாளா பாக்குறேன். இந்தக் கெழவி மசமசன்னு வேல செய்யிது; இந்தம்மாவ வேலைய விட்டு நிறுத்திட்டு வேற நல்ல ஆளாக் கூப்புடுய்யா'
'சார் அந்தம்மா நல்லா வேலை செய்வாங்க... சார்... இன்னிக்குத்தான் ஏதோ முடியல போலிருக்கு, வயசாவுதில்லயா சார்...'
'யோவ் எனக்கு அதுவா முக்கியம்... எனக்கு வேல நடக்கணும்யா... இந்தம்மா காலைலேர்ந்து தண்ணி ஊத்திக்கிட்டே இருக்குது... ஆனாக்கா... கட்டிடமே நனையில... அப்புறம் இந்தா அந்தாக் கெடக்குதுல்ல மண்ணு அதை அள்ளி கட்டிடத்துக்குள்ள கொட்டச் சொன்னேன். சாயந்தரம் ஆகப்போகுது... இப்படியிருந்தா எப்பிடி...'
மேஸ்திரி குனிந்து கண்களை உருட்டினான். கிழவி பக்கம் திரும்பினான். அவள் ஒடுங்கிப் போய்க் குறுகி நின்றிருந்தாள். அவளது முகத்தில் ஏராளமான சுருக்கமும் பல்வேறுவிதமான கேள்விக்குறிகளும் தென்பட்டன. கருணை கலந்த பார்வையோடு அவள் மேஸ்திரியையும், சுந்தரம் வாத்தியாரையும் நிமிர்ந்து பார்த்தபடி, 'ஐயா நாளைக்குச் சீக்கிரமே வந்து அள்ளிக் கொட்டிடறேன்யா... வேலை இல்லன்னு மட்டும் சொல்லிப் போச்சொல்லிறாதீங்கய்யா... நீங்க நல்லா இருப்பீங்க...' என்று மன்றாடினாள்.
'என்னத்த நானும் ரெண்டு நாளாத்தான் பாக்குறன்... தண்ணி ஊத்தறன் ஊத்தறன்னு சொல்லியே காச வாங்கிட்டுப் போகுது' என்றார்.
அதனைக் கேட்ட மேஸ்திரி, 'சார் கோச்சுக்காதீங்க சார். நான் சின்ன வயசிலேர்ந்து பாக்குறேன். இந்தப் பெரியம்மா கட்டிட வேல தான் செய்யிறாங்க. நல்லா கல்லுமண்ணு சொமப்பாங்க... கீழே இருந்து கல்ல மேல விட்டு எரிஞ்சா கல்லு கடம்பமாகும் சார். இவுங்க பாத்து வளர்ந்தவன் நான். வைரம் பாய்ஞ்ச வொடம்பு. சம்பாதிச்சு ஒரே பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க... ஆனா... அந்தப்பய பொண்டாட்டி பேச்சக் கேட்டுக்கிட்டு இந்தம்மாவைக் கவனிக்கிறதே இல்ல. மனசு நொந்து போயி இந்தம்மா அப்படியே நிராதரவா இடிஞ்சு ஒக்காந்திருச்சு. இல்லேன்னா வேலைல என்னையே தூக்கி சாப்புட்டுறும் சார் '
'ஆமாய்யா நல்லா வெளக்கம் சொன்ன போ... எனக்கு இந்த வெளக்கமெல்லாம் தேவையில்லை... நான் எத்தன பேருகிட்ட மொத்துப்பட்டு கேவலப்பட்டுக்கிட்டுக் கெடக்கறேன்னு ஒனக்குத் தெரியுமா; ஓடியாடி பணம் பொரட்டுனா கைய்யில ஒரு நிமிசம் கூடத் தங்க மட்டேன்னு கறஞ்சு போவுது’
'சார் நீங்க பரவாயில்ல, பணம் கறஞ்சாலும் வெலவாசி ஏத்தத்துல இப்பவே எல்லாம் சொத்தாயிடுது; எங்களப் போல உள்ளவங்களச் சொல்லுங்க; ஒழைச்சுக் கூலி வாங்குனாத்தான் எல்லாம்... இல்லாட்டி வயித்துல ஈரத்துணியச் சுத்திக்கிட்டுப் பட்டினியாக் கெடக்க வேண்டியதுதான்...'
'ஆமாய்யா... சொத்து பெரிய சொத்து... அடப் போய்யா... இந்தச் சொத்தச் சேக்கதான் இந்தப் பாடு... ச்சே... எங்க போனாலும் ஏமாத்து வேல தான்... யாரத்தான் நம்புறதுன்னு தெரியல... சரி... சரி இந்தா ரூபா. நாளைக்குச் சொன்ன மாதிரியே இந்தம்மாவை வந்து காலைலேயே மண்ண அள்ளிக் கொட்டச் சொல்லு; அப்புறம் சொவத்துக்குத் தண்ணி ஊத்தலாம்...' என்று மேஸ்திரியிடம் பணத்தைக் கொடுத்து வயதான பெண்மணியிடம் கொடுக்கச் சொன்னார்.
அவள் மேஸ்திரியிடமிருந்து வாங்கிய இருபது ரூபாயை உள்ளங்கையில் அழுத்திப் பிடித்தபடி நகர்ந்தாள். மேஸ்திரி மறுநாள் பார்க்க வேண்டிய வேலையைப் பற்றி வாத்தியாரிடம் பேசி விட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
மறுநாள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாகவே கட்டிடத்திற்கு வந்துவிட்டார் சுந்தரம் வாத்தியார். வேலைத்தளத்திற்கு ஆட்கள் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தார்கள். ஆனால் அந்தக் கிழவி மட்டும் வரவேயில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுந்தரம் வாத்தியாருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவர் மேஸ்திரியைப் பார்த்து,
'என்னய்யா மேஸ்திரி எல்லா ஆளுகளும் வந்துட்டாக... ஆனா அந்தக் கெழவி மட்டும் வரலை… அந்தம்மாவுக்குப் போயி நீ வேற வக்காலத்து வாங்கினியே இப்ப பாத்தியா' என்று எகத்தாளமாகக் கேட்டார்.
அதனைக் கேட்ட மேஸ்திரி, பவ்யமாக, 'சார் அந்தம்மாவுக்குக் காய்ச்சல் அதிகமாப் போயிடுச்சுங்க... வர்ற போது அதப் போயிப் பார்த்துட்டுத்தான் வந்தேன்... குளுரு காச்சல்ல பெனாத்திக்கிட்டுக் கெடக்குங்க சார்... எனக்கு ஒண்ணும் புரியல. அக்கம் பக்கத்துல இருக்கிற ஆளுககிட்டப் பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன். ஒங்கக்கிட்ட சொல்லிட்டுத்தான் அந்தம்மாவை ஆசுபத்திரியிலக் காட்ட டவுனுக்குப் போகணும்... சார் கொஞ்சம் மனசு வையிங்க சார்... அந்தம்மாவை டாக்டருக்கிட்ட காட்டிட்டு ஒரு மணி நேரத்தில வந்துடறேன் சார்...' என்று கெஞ்சினான்.
தன்னிடம் வேலைபார்க்கும் சக மனுஷியைக் காப்பாற்ற நினைக்கும் மனிதநேயம் அவனது பேச்சில் இருந்தது.
ஆனால் கல்மரமான சுந்தரம் வாத்தியாரோ, 'ஐயய்யோ குடியே கெட்டுச்சு... போ, இன்னைக்கு கல்லு ஒட்டணும்னு சொல்லி ஆளு வந்து நிக்குது. நீ பணத்தைக் கை நீட்டி வாங்கிக்கிட்டு கிண்டல் பண்றியா... இந்தப் பாருய்யா மேஸ்திரி... எனக்கு இதெல்லாம் தேவையில்லாதது... போயி மரியாதையா வேலயப் பாரு... அந்தம்மா இல்லன்னா வேற ஆளப் பாத்துக் கூப்பிட்டுக்குவம் '
வாத்தியார் பிடித்த பிடியில் உறுதியாக இருந்தார்.
மேஸ்திரி விடுவதாக இல்லை. 'சார்... சார்... அவுங்க ஆதரவில்லாதவங்க. கொஞ்சம் பொறுத்துக்கோங்க சார்... நான் என்னேரமாயிருந்தாலும் வந்து வேலைய முடிச்சிடறேன்...' என்று காலில் விழாத குறையாகப் பரிதாபமாகக் கெஞ்சினான்.
ஆனால் கெட்டிபட்டு இறுகிப் போன சிமிண்டுக் கல்லைப் போன்று இருந்த சுந்தரம் வாத்தியார் மனம் அதற்கெல்லாம் மசியவில்லை.
வாத்தியார் மேஸ்திரியைப் பார்த்து, 'யோவ் மேஸ்திரி வானத்தைப் பாருய்யா இருட்டிக்கிட்டு வருது. மழ வந்து கெடுத்திடப் போவுதுய்யா. கலவையெல்லாம் வீணாப் போயிருமுய்யா... பேசமாப் போயி வேலயப் பாருங்கய்யா' என்று அதட்டி விரட்டினார்.
மேஸ்திரி என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் பேசாமல் நிற்பதைப் பார்த்த வாத்தியார், 'மேஸ்திரி அந்தக் கெழவிய அக்கம் பக்கத்துல இருக்கவங்க பாத்துக்குவாங்கய்யா... நீங்க மொதல்ல கவலப்படாதீங்க.... சட்டுப்புட்டுனு வேலையப் பாருங்கய்யா...'
மனம் நொந்து போன மேஸ்திரி செய்யவதறியாது ஆண்டவன் விட்டவழி என்று நினைத்துக் கொண்டு நிதானமாகத் திரும்பி கட்டிடத்தின் அருகில் சென்று வேட்டியை மடித்துக் கட்டினான். தன்னருகில் நின்றிருந்தவர்களைப் பார்த்து, 'டேய் யார்டாவன் குத்துக்கல்லு மாதிரி நிக்கறவன்... போயி... ஒன்றச் ஜல்லிய அள்ளிப் போட்டு சிமிண்டப் போட்டு குலைச்சுவிடுறா...” என்று கூறிக் கொண்டே வேலையைத் தொடங்கினான்.
மேஸ்திரியின் பேச்சைக் கேட்ட சுந்தரம் வாத்தியாருக்குத் தலையில் யாரோ சம்மட்டி கொண்டு அடித்தது போன்றிருந்தது. குத்துக்கல் என்ற வார்த்தை அவரது உள்ளத்தை என்னவோ செய்தது. அதற்குமேல் அவர் அங்கு நிற்காது தனது சைக்கிளில் ஏறி மிதித்தார்.