வீடெங்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. என் கணவர் கண்ணன் துணிகளை எடுத்து ஒரு பைக்குள் திணித்தார். விடுவிடென்று வேகமாகப் போய் சாமிபடத்தின் முன் நின்று, மனமுருக வேண்டிக் கொண்டு திருநீற்றை எடுத்து வந்து என் நெற்றியில் பூசிவிட்டார். எனக்கு இடுப்புவலி அதிகரித்தது. என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு இது ஐந்தாவது பிரசவம். மனதில் அனைத்துத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன்.
கடவுளே இந்தப் பிரசவத்திலாவது எங்களுக்குப் பையன் பொறக்கணும்... என்னோட வீட்டுக்காரருக்குப் பிடிச்ச மாதிரி பையன் பொறந்துட்டா முருகா ஒன்னோட வாசலுக்கு வந்து மொட்டை போட்டுக்கறேன்... என்று என் இடுப்பு வலியையும் பொறுத்துக் கொண்டு பழனி முருகனை மனதிற்குள் நினைத்து மனமுருக வேண்டினேன்.
என் கணவர் போன் செய்து உடனே ஆட்டோவை வரவழைத்தார்... ஆட்டோவும் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எனது நான்கு பெண் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நானும் என் கணவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். என் கணவர், ஆட்டோ டிரைவரைப் பார்த்து, “தம்பி... சுசீலா நர்சிங் ஹோமிர்க்கு வண்டிய விடப்பா...” ஆட்டோ டிரைவரும் சரியென்று தலையை ஆட்டிவிட்டு மிக வேகமாக வண்டியை ஓட்டினார். அடுத்த பத்தாவது நிமிஷத்தில் மருத்துவமனையில் இருந்தோம்.
என்னை என் கணவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார். எப்போதும் எங்களுக்கு மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவர் வந்து என்னை உடனே பெட்டில் சேர்த்துப் பிரசவத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். என் கணவர் பிரசவ அறைக்கு வெளியில் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.
கண்களை மூடிக் கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் எனக்குச் சுகப் பிரசவமானது... வலிவேதனையைப் பொறுத்துக் கொண்டு அமைதியாக நர்ஸைப் பார்த்தேன்... என் காதின் அருகில் ஐந்தாவது பிறந்ததும் பெண்பிள்ளை என்று, நர்ஸ் சொன்னதும் என் நெஞ்சே ஒருகணம் நின்று உயிர் போய் உயிர் வந்தது! ஒவ்வொரு பேறு காலத்தின் முடிவிலும் டாக்டரம்மா எனக்கு எச்சரிக்கைதான் செய்கிறாள். நானும் பிழைத்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரு வேளை, ஆறாவது பிள்ளையாவது ஆணாகப் பிறந்து என் வயிற்றில் பாலை வார்க்காதா, என்ன...?
இருபது ஆண்டுகளாகத் தவமிருந்தும் தீராத ஓர் ஆத்ம தாகம்! பொங்கிப் பொங்கி மோதும் கடல் அலையாய் வருகிறது! நெஞ்சின் உட்கருவைச் சுட்டெரித்து, உடல். உயிர் இரண்டையுமே உருக்கித் திரவமாக்குகிறது! அதற்கு வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. செய்யாத தர்மம் இல்லை. இரவு பகல் எந்நேரமும் என்னைப் பேயாய்ப் படுத்த, செக்குமாடாய் ஒன்றையே சுற்றிச் சுற்றி, மயக்கம் அடைகிறேன்.
இந்தப் பாழும் வயிற்றில் ஓர் ஆண் மகவு பிறக்காதா? வேண்டாத பெண் ஜென்மங்களாய்ப் பிறக்கிறது. அதற்கு நான் காரணமா? அல்லது அவர் காரணமா? ஒவ்வொரு பிரசவத்திலும் எனக்கு ஏமாற்றம்தான்! இந்த அக்கினிப் பரீட்சைக்கு நானே பலியாகி விட்டால், பிறகு இந்த ஐந்து பிள்ளைகளையும் யார் கப்பாற்றுவது? பிறக்கும் பெண் பிள்ளைகளைக் கண்டு கண்ணீர் வடிக்கிறேன்.
தெய்வமே! உனக்குக் கருணை இல்லையா? எப்போது எனக்குப் புலிக்குட்டிபோல் ஓர் ஆண் மகன் பிறப்பான்? ஐந்தில் ஒன்றாவது ஆணாகப் பிறக்கக் கூடாதா? தினமும் நொந்து நொந்து வேகிறது மனம்! ஆத்மாவின் அந்தரங்க சுத்தமான ஆசையெல்லாம் நிறைவேறும் என்பதெல்லாம் உண்மைதானா?
என் உடம்பையே பகடைக்காயாக வைத்துச் சூதாட்டம் ஆடுகிறேன். இதுவரைத் தோற்றால்தான் என்ன? ஒரு முறையாவது வெற்றி கிட்டாதா? எனக்கு அதில் பயம் இல்லை. துணிச்சல் இருக்கிறது. தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இந்தச் சென்னை நகரில் பெரிய குடும்பத்தையும் பராமரித்து விடலாம் என்ற குருட்டு ஊக்கம் உள்ளது. அசையாத திடசக்தியோடு அடுத்தடுத்து விதியோடு மோதிப் பார்க்கிறேன். முதலில் பிள்ளை வரம் பெற்று, எமனையே ஏமாற்றி இறுதியில் கணவன் உயிரை மீட்கவில்லையா, சாவித்திரி?
ஆனால் இப்போது பார்த்து எங்கள் தாம்பத்திய உறவு அற்று விடுகிறது. என் கணவர் என்னைத் தீண்டுவதில்லை! கண்ணோடு கண்ணினை நோக்கி, காந்தவலை வீசி என்னைக் கவர்வதில்லை! ஏன்? இப்போது! ஐந்து குஞ்சுகள் பொரித்து விண்டவெறுங் கூடாக இருக்கிறேன், சுட்ட கத்தரிக்காய் போல் சூம்பிய என்முகம், அவரைக் கவர முடியவில்லை! எனது அருகாமையை அவர் மிகவும் வெறுக்கிறார். என்னை விட்டுத் தூர விலகிச் செல்கிறார். ஐந்து ஜீவன்களைப் பெற்றபின் பட்டமரம் போல் காட்சி அளிக்கிறேன். கோடித்துணி ஒரு வெள்ளாவிக்கும் குமரிப் பொண்ணு ஒரு பிள்ளப் பெத்த பின்னாலும் வெளுத்துரும் என்ற பழமொழிக்கு ஏற்ப நான் தளர்ந்துவிட்டேன். பெண் மேனியில் மிளிரும் காந்த சக்தி எனக்கு மந்தமாகி விட்டது. இளமையில் துளிர்க்கும் வளர்பிறை போய், எனக்குத் தேய்பிறைக் காலம், இப்போது! பாலை வனத்தில் தாகத்தோடு அலைகிறேன்!
என்னவரோ சீர் குலையாமல், சிங்கம் போலிருக்கிறார். மன்மதன் இவரைப் போல்தான் இருக்க வேண்டும்! என்னைப் போல் அவருக்கும் நாற்பது வயதுதான். முப்பது வயது வாலிபன் போல் முறுக்குடனும், செருக்குடனும் திரிகிறார்.
இப்போது அடிக்கடி எங்களுக்குள் சண்டை வருகிறது. பயங்கரச் சண்டை! வாய்ச்சண்டைதான்! கருத்தொருமித்து, காதலித்து, கல்யாணம் செய்து கொண்ட கலியுகத் தம்பதிகள்தான்! இருந்தாலும் சண்டை... எதற்கெடுத்தாலும், “ஒரு ஆம்பளப் பிள்ளையைப் பெத்துக் கொடுக்கத் துப்பில்லை... மூதேவி நீயெல்லாம் ஏண்டி பேசற” என்ற குத்தல் பேச்சுவேறு... ஆம்பளப் பிள்ளையைப் பெறாததற்கு என்னமோ நான் மட்டுமே பொறுப்பு என்பது போல் பேசுகிறார். அதற்கு அவரே பொறுப்பு என்பதை மறந்து பேசப்பேச என்னுள் எரிமலை வெடிக்கிறது. இருந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்கிறேன்.
எங்களது காதல் திருமணம்தான்... எங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை...இந்தக் காதல் திருமணம் இன்று என் வயிற்றில் ஆண்பிள்ளை பிறக்காததால் மோதலில் நிற்கிறது.
எங்களுக்குள் பண விஷயத்திலே தான் முதலில் சண்டை தொடங்கும். அது பிறகு மகாயுத்தமாக முடியும்! பல நாட்கள் எங்களுக்குள் பேச்சு வார்த்தையே இருக்காது.
சென்னை நகரில் திருவான்மீயூரில்தான் எங்கள் வாடகை வீடு. அபார்ட்மெண்ட் கட்டடத்தில் ஒரு பகுதி. மூவாயிரம் ரூபாய் வாடகை. எங்கள் மாளிகையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். சோப்பு டப்பா பிளானில் கட்டிய வீடு! முன்னால் ஓர் அறை. பின்னால் சமையற் கட்டு தனி. இடையில் கக்கூஸ் உடன் குளியல் அறை. இந்தப் பங்களாவில் தான் ஆறு பெண்கள், ஓர் ஆண்! ஏழு உயிர் ஜென்மங்கள் உண்பது, உறங்குவது, குளிப்பது, உடை மாற்றிக் கொள்வது, பிள்ளைகள் படிப்பது, பெற்றோர் சண்டை இடுவது, பின் சமாதானமாகிக் கொள்வது என்று எல்லாம்!
ஆபீஸிலிருந்து கணவரின் சம்பளப் பணம் கையில் முழுசாகப் பதினைந்தாயிரம் ரூபாய் வருகிறது. வீட்டு வாடகை மற்றும் கணவர் கைச் செலவு போக, எஞ்சிய தொகை என் கைக்கு வருகிறது. சரியான உணவு உண்டா? உடை உண்டா? ஒரு சினிமா உண்டா? மாதக் கடைசியில் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டி வரும். கடன் வாங்குவது அவர். கடனை அடைக்க வேண்டியது என் பொறுப்பு! நான் எங்கே சம்பாதிக்கிறேன்? சண்டையின் ஆரம்பமே இங்குதான்!
சண்டை களைகட்டும். சாப்பிடும் தட்டுகள், பறக்கும்! இறுதியில் அவர் சாப்பிடாமல் வெளியேறி விடுவார். தலை மறைவில் இருந்து, சில நாட்கள் கழிந்து வருவார். பின் என்னிடம் இரவில் கொஞ்சுவார்! ஐந்து பிள்ளைகள் எப்படி பிறந்தன? இப்படித்தான்! இது சகஜமாக நடப்பது! அபூர்வ காதல் தம்பதிகள்! இப்படியே என்னுடைய வாழ்க்கை ஓடியது.
இந்தச் சமயத்தில்தான் எனது சொந்த ஊரான மதுரையிலிருந்து ஓர் அதிர்ச்சியான தகவல் எனக்கு வந்தது. நோயில் கிடந்த என் தந்தை இறந்து விட்டதாக எனது தங்கை காயத்திரி மதுரையிலிருந்து போனில் பேசினாள். என்னால் உடனேயே கிளம்ப இயலவில்லை... உடனடியாகக் கையில் பணமில்லாததால் மறுநாள் அதிகாலையில் பஸ்ஸில் புறப்பட்டு மாலையில் நான் மட்டும் மதுரைக்குச் சென்று சேர்ந்தேன். எல்லாம் முடிந்து விட்டது. என்னால் எனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை... என் தலைவிதி... எனது தந்தையின் உடலை வைத்திருக்க முடியாது உடனே தகனம் செய்துவிட வேண்டும் என்று அக்கம்பக்கத்து உறவினர்கள் கூறிவிட்டதால் நான் போவதற்குள் அனைத்துக் காரியங்களும் நடந்தேறிவிட்டன. நான், வெறும் வீட்டைத்தான் கண்டேன். என் தந்தையை நினைத்து நினைத்து என் மனம் குமுறியது. வாசலில் நின்று கொண்டு நான் கதறிக் கதறி அழுகிறேன்.
துக்கம் உருக்கி விட்ட காயத்திரியைக் கண்டு என் இதயம் துடிக்கிறது. அம்மா இறந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன. என் தங்கை மட்டும் இப்போது தனி மரம்! முப்பது வயதைத் தாண்டிய குமரி! இதுவரை ஓரு கல்யாண ஏற்பாட்டைக் கூட என் தந்தையால் செய்ய முடியவில்லை. பாயில் படுத்து நோயில் கிடந்து கண்ணை மூடிவிட்டார்.
காயத்திரிக்கு மூன்று தடவை நிச்சயமாகி, திருமணம் நடக்காமல் நின்று விட்டது. அதற்குப் பின் அவளும் கல்யாணமே வேண்டாமென்று வெறுப்புடன் வேலை பார்க்கிறாள். எம்.பி.ஏ. பட்டதாரியான காயத்திரி, மதுரையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் டீச்சராக இருக்கிறாள். கட்டுக் குலையாத மேனி! கவர்ச்சியான தோற்றம்! ஆனாலும் நிலவில் மறு இருப்பது போன்று அவளுக்கும் ஒரு சிறு குறை? ஒரே ஒரு குறைதான்! பொங்கிவரும் முழு நிலவா, முகம்? இல்லை! அரை நிலவு! காந்தவலை வீசும் கண்கள் இரண்டா! இல்லை! ஒன்றுதான்! வாணிக்கு ஊனமாய்ப் போனது ஒரு கண்! சிறு வயதில் பெரியம்மை நோய் வந்து, ஒரு கண்ணில் வெள்ளை விழுந்து விட்டது. கறுப்புக் கண்ணாடி போட்டு மறைத்துக் கொள்கிறாள். அப்போது அவளைப் பார்த்தால், அழகுப் பதுமைதான்! காலம் அவளது வாழ்க்கையில் குரூரத்தை ஏற்படுத்திவிட்டதே என்று என்னுள் உறுத்தல்.
திருமணச் சந்தையில் இரண்டாம் தாரம், ஏன் மூன்றாம் தாரமாக் கூட காயத்திரி விலை போகவில்லை!
யாருமற்ற ஆனாதரவாக நின்றிருந்த என் தங்கையை நான் என்னுடன் சென்னைக்கு அழைத்து வந்து விட்டேன். அதுதான் நான் செய்த முதல் பிசகு! நவ நாகரீக சிங்காரச் சென்னை நகரம் அவளைப் புதிய பறவையாய் ஆக்கியது! நடை, உடை, பாவனை, நளினம் எல்லாம் மாறி, அவள் ஓர் அழகு மேனகையாகத் தோன்றினாள்!
சென்னை வந்த உடனேயே காயத்திரிக்கு தனியார் கல்லூரியில் லெச்சரர் வேலை கிடைத்தது. அதுவும் என் கணவர் உதவியால். இரண்டாயிரம் ரூபாய்ச் சம்பளம்!
காயத்திரியின் கால்கள் தரையிலே இல்லை! வானில் பறந்தாள், விடுதலைப் பறவையாய்! வீட்டில் பணம் செழித்தது. அவள் சம்பாத்தியத்தில் எல்லாருக்கும் நல்ல சுவையான உணவு! வயிறு நிறைய உணவு! அலங்கார உடை! உல்லாசப் பொழுதுபோக்கு! பிள்ளைகளுக்குக் காயத்திரியை மிகவும் பிடித்து விட்டது. 'சித்தி, சித்தி' என்று எல்லாரும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்! என் கணவரோ, அவள் காந்த மண்டலத்தில் இழுக்கப்பட்டு, அவள் நிழலாகவே ஆகி விட்டார்!
காயத்திரி என்னுடைய இடத்தைச் சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டாள். என்னுடைய இரக்கமே... பலவீனமாகி என் வாழ்க்கைக்கு உலைவைக்கத் தொடங்கியது... அவள் என் கணவரைக் கைப்பற்றி, என்னிடமிருந்து அவரைக் களவாடிக் கொண்டாள்! நான் செய்யவேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் அவளே அவருக்குச் செய்தாள்.
மனைவி என்ற பெயரில் நான் ஒருத்தி முன்னால் இருந்தும், இருவர் கண்களுக்கும் தெரியாது போயிற்று! பிரைவசி இல்லாத சோப்பாக்ஸ் வீட்டில் நெருங்கிப் பழகவும், விரிந்த சென்னை நகரில் திரிந்து புரளவும், இருவருக்கும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன! எங்கும், எப்போதும், எதற்கும் இணைந்தே போவார்கள். இணைந்தே வருவார்கள். அபார்ட்மெண்டின் மொட்டை மாடியில் மாலையிலும், இரவிலும் மணிக்கணக்காய் உரையாடுவார்கள். ஒன்றாக இருப்பார்கள்.
பொருமினேன், நான்! புழுங்கினேன், நான்! வெடித்தேன், நான்! என்ன பயன்? அவர்களது நட்பு இறுகிக் கொண்டது! இருவரில் ஒருவரைப் பிரிப்பது என்று முடிவு செய்தேன். யாரைப் பிரிப்பது? எப்படிப் பிரிப்பது? சம்பாதிக்கும் கணவனை வெளியேற்றுவதா? அல்லது மணமாகாத, அனாதைத் தங்கையை விரட்டி விடுவதா? எதைச் செய்வேன், நான்? மதுரையிலிருந்து அவளைச் சென்னைக்கு அழைத்து வந்தது, என்னுடைய முட்டாள்தனம்! காயத்திரிக்கு நான் செய்த கல்யாண ஏற்பாடெல்லாம் எதுவும் பலன் தரவில்லை! பார்த்துவிட்டுக் கடிதம் போடுகிறேன் என்று சென்றவர்களிடமிருந்து திரும்பக் கடிதம் வருவதில்லை! இந்த விபரீத நட்பு எதில் போய் முடியப் போகிறது?
தீயின் அருகில் விட்டில் பூச்சி வட்டமிட்டுக் கொண்டே இருந்தால் என்ன நடக்கும் ? இரவும் பகலும் எனக்கு வேதனைதான்!
எது நடக்கக் கூடாது என்று பயந்து கொண்டிருந்தேனோ, அதுவும் ஒருநாள் நடந்து விட்டது! ஒரு நாள் காலையில் குளியல் அறையில், யாரோ வாந்தி எடுக்கும் அரவம் கேட்டு, எழுந்து வந்து பார்த்த எனக்குப் பகீரென்றது! தொண்டையில் ஏதோ அடைத்தது, எனக்கு. நெஞ்சே பிளந்து இரு கூறாக விழுவதுபோல் வலித்தது! என் அருமைத் தங்கை காயத்திரிதான்! எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.
'அடிப் பாவி! என்ன காரியம் செய்தே? இது துரோகமில்லே! ஒன்ன எப்படி உயர்வா நெனச்சேன்...சே... வெட்கக்கேடு! மானம் மரியாதையோடு இனி எப்படி வாழ்வது? இந்தப் பெண்பிள்ளைகள் என்ன நினைக்கும், உன்னைப் பற்றி? கேட்டால், நான் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? எங்கள் குடும்ப வாழ்வையேப் பாழாக்கி விட்டாயே, பாவி!' என்று தலையில் அடித்துப் புலம்புகிறேன். அவளைத் திட்டிக் குவிக்கிறேன்.
காயத்திரியோ, எதுவும் பேசாமல், கேளாதவள் போல் தலையைத் திருப்பிக் கொண்டு அகன்று விடுகிறாள். எவ்விதக் குற்ற உணர்ச்சியும் அவளிடம் இல்லை! எந்தவித அதிர்ச்சியோ, அவமானமோ, அருவருப்போ அவளிடம் ஏற்படவில்லை! வந்ததெல்லாம், எனக்குத்தான்!
எதிரே வந்த கணவரையும் மானங்கெட, மரியாதையின்றி மனதாரத் திட்டுகிறேன்.
என் கணவரும் பதில் பேசாமல் என்னைக் காணாதபடி போகிறார்! எப்போதும் பதிலுக்குப் பதில் சண்டையிடும், போர்க்கணவனைக் கூட சாந்த மூர்த்தியாக்கி விட்டாளே, காயத்திரி! இருவரும் இப்படி ஊமையாயிருந்தால், இதற்கு என்ன அர்த்தம்? என்னைத் தோற்கடித்து விட்டோம் என்றா அர்த்தம்?
காலை விடிந்ததும் பிரச்சனையும் முடிந்தது! சிக்கலான முடிச்சு சுலபமாக அவிழ்ந்தது! இல்லை ஒரு சிக்கல் நீங்கி, இன்னுமொரு சிக்கலை உண்டாக்கியது! நெஞ்சிலிருந்து பாரம் இறங்கி, என் தலைமேல் போய் விழுந்தது!
'சித்தியைக் காணோம்' என்று என் இளைய பெண் ஓடி வந்து என்னிடம் சொன்னாள்! 'அப்பாவைக் காணவில்லை' என்று மூத்த பெண் பதறிப்போய் சொன்னாள்! எனக்கு எல்லாம் புரிந்து விட்டது! இதயத்திலே மின்னல் தாக்கி குப்பென எரிகிறது! இடி விழுகிறது என் தலையில்! எப்படிக் காப்பாற்றுவேன், இந்த சின்னஞ் சிறிய பிள்ளைகளை? தள்ளாடி மயக்கமோடு தரையில் சாய்கிறேன்! பிள்ளைகள் புரிந்தும், புரியாமலும் விழித்தார்கள்! தொண்டை அடைத்துக் கொள்ள, கண்ணீர் அருவியாய்க் கொட்ட, உடற் சக்தி எல்லாம் உருக, விக்கி விக்கி அழுகிறேன்!
ராணிசம்யுக்தை பிருதிவிராஜனை இழுத்துக் கொண்டு எங்கேயோ போய்விட்டாள்! எங்கே? எங்கே? எங்கே? என்று என் மனம் துளைத் தெடுக்கிறது! காயத்திரியைச் சாபமிடுகிறேன்! என் கணவனைக் காரி உமிழ்கிறேன்!
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருஷங்களாகி, எப்படியோ ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன...! பெண் பிள்ளைகள் யாவரும் வளர்ந்து விட்டார்கள். முதல் மூன்று பெண்களும் 'பெரியவர்களாகி ' விட்டார்கள்! ஓடிப் போன மிருக ஜென்மங்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை! எங்கே ஒளிந்து கொண்டு குடித்தனம் நடத்துகிறார்கள்? அவர்கள் வேலை செய்த ஆபீஸிலும் யாருக்கும் தெரியவில்லை! எல்லாம் மர்மமாகவே இருந்தது!
மூத்த பெண்கள் மூவரும், நானும் வேலை செய்கிறோம், டைப்பிஸ்டுகளாக!. வேறு வழி இல்லை! கால் வயிற்று, அரை வயிற்றுச் சாப்பாட்டில் உயிர் வாழ்கிறோம்! கடல் அலைகளில் மூழ்கியும் மூழ்காமலும், ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு, கரை சேர முடியாதபடி தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்!
அடுத்து ஒர் இடி மின்னல் எங்களை எல்லாம் தாக்குகிறது! இது பேரிடி! 'அத்தான், மாரடைப்பில் காலமானார் ' என்று காயத்திரி அடித்த தந்தி வருகிறது! துக்கம் என் நெஞ்சைக் கோடாரியால் உடைத்துப் பிளக்கிறது! 'அப்பா போய்விட்டாரே' என்று பிள்ளைகளெல்லாம் கோவென அழுகிறார்கள். எதிர்நீச்சல் போட்டுக் கரையேறும் போது, தரையே வெள்ளத்தில் கரைந்து போக வேண்டுமா?
தந்தி ஹைதராபத்திலிருந்து வந்திருந்தது. ஒரு மொட்டைத் தந்தி! முகவரியில்லை! காயத்திரியின் பெயர் மட்டும் தான் இருந்தது! எங்கேயோ கணவர் வேறு ஒருத்தியோடாவது உயிரோடிருக்கிறார், என்ற என் சிற்றின்பத்தையும், விதி பறித்துக் கொண்டு போய் விட்டதே!
எதற்காக இப்படி ஒரு மொட்டைத் தந்தி? என் முகத்தில் விழிக்க, காயத்திரிக்கு மன உறுதி இல்லையா? ஹைதராபாத்தில் எப்படி இறந்தார்? எங்கே இறந்தார்? தனியாக எப்படி அவரை அடக்கம் செய்தாள், காயத்திரி? பிள்ளைகளும் நானும் இறுதிச் சடங்கில் பங்கு கொள்ள வேண்டாமா?
இனிமேலும் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்? அவளும் இப்போது... என்னைபோல்...! அந்த வார்த்தையைச் சொல்ல என் நா கூசுகிறது...!
இப்போது இந்தப் பெண் பிள்ளைகளுக்கு அப்பா இல்லை! அவர் பெற்ற பிள்ளைகள். கல்யாணம் போன்ற நல்ல காரியங்கள் நடக்கும் போது, கைப்பிடித்துக் கொடுக்க அப்பா என்றோர் ஆத்மா இருக்காது! இனி அந்த இடம் காலியாக இருக்கும்! பாவி காயத்திரி, சுயநலக்காரி! பெண்களுக்குத் தந்தை இல்லை என்று சொல்ல வைத்து விட்டாள். எனக்கும் கணவன் இல்லை என்னும்... அந்த பயங்கரப் பட்டத்தையும் சூட்டி விட்டாள், என் அருமைத் தங்கை காயத்திரி! அவளது பேராசைக்கு அவர் பலி! திருடித் தின்ற கனியும் தீய்ந்து போனது!
நாட்களும், மாதங்களும் ஆமைபோல் நகர்கின்றன. காயத்திரியிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன ஆயிற்று அவளுக்கு? எங்கே தனியாக இருக்கிறாள், அவள்? ஏன் தலைமறைவாக இருக்கிறாள்? மொட்டைக் கடிதமாவது வராதா? என்று தினம், துடிக்கிறது மனம்! இப்படியே ஆறு மாதங்கள் ஓடி விட்டன!
ஒருநாள் காலை. உடல் நலமில்லாமல் படுத்திருந்தேன். கதவு தட்டும் ஓசை கேட்டு, தாழ்ப்பாழை இழுத்துக் கதவைத் திறந்தேன். யாரோ நடுத்தர வயதுள்ள ஒரு பெண், கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாள். அருகில் ஒரு சிறு பையன். வந்தவள் எதுவும் பேசாது, என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டுகிறாள்.
ஆச்சரியத்தோடும், ஆர்வத்தோடும் கடிதத்தை வாங்கிய நான், வைத்தகண் வாங்காமல் என்னையே நோக்கும் சிறுவனைப் பார்க்கிறேன். பால் வடியும் அந்தப் பிஞ்சு முகத்தில் காயத்திரியின் கண்களையும், கணவரின் சாயலையும் கண்டு என் நெஞ்சு பாகாய் உருகியது! கை நடுங்கிப் பதட்டம் ஏற்பட்டது. கைகளில் கடிதத்தைப் பிடிக்கமுடியவில்லை. இருந்தாலும் கைநடுநடுங்க அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன்.
'அருமை அக்கா!
காலம் கடந்து இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு என்னை மன்னித்துவிடு. என்னை நீ மன்னிப்பாய் என்று நம்புகிறேன். எனக்கு எல்லாமுமாக இருந்த உனக்கே துரோகம் செய்தவளல்லவா நான்... என்னை எப்படி மன்னிக்க முடியும்? நான் அவ்வாறு கேட்பதும் முறையற்றது... இருந்தாலும் நான் மனமுருக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
யாரும் இல்லாத நிலையில் நான் நம் தந்தையை இழந்து, தன்னந்தனியாய்த் தவித்தபோது என் கைபிடித்து உனக்கு நானிருக்கிறேன் என்று கூறி அடைக்கலம் தந்து உதவினாயே... எனக்கு... அந்த நன்றியை மறந்த அபலையான உன்தங்கை இன்று தன்னுடைய செயல்களுக்கெல்லாம் உன் கால்களைத் தன் கண்ணீரால் கழுவி மன்னிப்புக் கோர வேண்டும்.
அதெல்லாம் தற்போது என்னால் இயலாது... சென்னைக்கு வரும் என் சிநேகிதி, நர்ஸ் மிருதுளா ஆதவனை உன்வசம் ஒப்படைப்பாள். அக்கா! அவனை ஏற்றுக் கொள். என் வயிற்றில் பிறந்த ஆதவனை, உன் மகனாக வளர்த்து வா. அக்கா... என் கண்மணியைக் காப்பாற்று. அவனுக்கு இப்போது யாருமே இல்லை. தாயால் கைவிடப்பட்டவன்... அவளோ தன்னுடைய வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறாள்... தந்தையையும் இழந்துவிட்டான்... ஏன் அவன் ஓர் அனாதையாக இப்போது உன் முன் நிற்கிறான்... நான் நமது தந்தையை இழந்துவிட்டு உன் முன்னால் கண்கலங்கி நின்றேனே அதுபோன்று என் கண்மணியும் நிற்கிறான்.
அவனைக் கைவிட்டுவிடாதே... வாழ்வைக் கெடுத்தவளின் மகன் என்று தள்ளிவிடாதே... இந்தப் பாவியின் வயிற்றில் பிறந்தவன் தான் அக்கா இந்த ஆதவன்…சுமைதாங்கியான உன்மேல் இன்னுமொரு சுமையையும் என் சம்மதமின்றி ஏற்றி வைக்கிறேன். வேறு வழி இல்லை.
ஒரு குறையை உடைய நான், எல்லோரையும் போல வாழ முடியவில்லை. ஆனாலும் உன்னால் எனக்கு ஒரு நிறைவு கிடைத்தது. வழிப்பறி செய்து அறம் செய்வதைக் கைமாறு என்று கூற மாட்டேன். அக்கா! குறுக்கு வழியில் சென்ற எனக்கு இறைவன் சரியான தண்டனையைக் கொடுத்துவிட்டான். ஒன்றைப் பெறவேண்டும் என்றால் இன்னொன்றை இழக்கத்தான் வேண்டும். இந்தக் கூற்று என்வாழ்வில் நிதர்சனமாகிவிட்டது அக்கா! வாழ்க்கையில் 'நிறை, குறை' என்னும் ஒரு தெய்வ நியதி சிலரை ஏற்றி இறக்குகிறது! சிலரை இறக்கி ஏற்றுகிறது!
அக்கா! உங்களை எல்லாம் விட்டுப் பிரிந்த வேதனை தாங்க முடியாமல்தான், அத்தான் வெகுசீக்கிரம் இந்த உலகை விட்டுப் போய்ச் சேர்ந்தார்.
நான் மூன்று மாதங்களாக ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். எனது நாட்கள் எண்ணப்படுகின்றன! கர்ப்பப் பையில் ஏதோ புற்று நோயாம்! அக்கா! என்னைப் பற்றிக் கவலைப் படாதே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாதே! என்னைக் காணவும் முயற்சி செய்யாதே! நான் ஒரு வஞ்சகி!
ஒரே ஒரு இறுதி வேண்டுகோள்! என் கண்மணியை ஏற்றுக் கொண்டு, அவனை ஆளாக்கு. அத்தானின் மரண இன்ஸ்சூரன்ஸிற்கான ரூபாய் இரண்டு லட்சத்துக்கான காசோலையை இக்கடிதத்தில் வைத்து அனுப்பி இருக்கிறேன்.
உன் அன்புத் தங்கை,
காயத்திரி.
கடிதம் முடிவடைவதற்கு முன்பாகவே, என் கண்கள் இரண்டும் குளமாயின. அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம் போல், அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது! இதயத்தில் ஒரு எரிமலை வெடித்துத் தீப்பொறிகள் பொங்குகின்றன! கண்ணீரும் கம்பலையுமாக ஓடி, ஆதவனை வாரி அணைத்துக் கொண்டு முத்த மாரி பொழிந்து, கதறிக்கதறி அழுகிறேன்! பெண்களும் வாஞ்சையோடு அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
என்தங்கையின் நிலையிலிருந்து நான் சிந்தித்ததேயில்லை... ஒரு தாயாக இருந்து நான் அவளுக்கு ஒரு நல்லதைச் செய்திருக்க வேண்டும்... முயன்றேன்... ஆனால் என் முயற்சி முழுதும் சுவற்றில் எறிந்த பந்துபோல் திரும்பத் திரும்ப என்பக்கமே வந்தது... ஆனால் பருவம் அதன் வேலையைச் செய்து முடித்தது… வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சிறு நிகழ்வு கூட மிகப் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணிவிடும், என்பார்கள். என் வாழ்க்கையிலும் என் தங்கையின் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சிறு நிகழ்வு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
சுமைதாங்கியாக வாழ்ந்த என் வாழ்வு சுமைதாங்கியாகவே தொடர்கிறது. இந்தச் சுமைகூட எனக்குச் சுமையாகத் தெரியவில்லை... என் நீண்ட நாளாசையான ஒரு சிறு மனச்சுமை இந்தச் சுமையால் குறைந்தது. வாழ்க்கையையும் துன்பங்களையும் சுமைதாங்கியாகச் சுமந்துதிரிந்த எனக்கு சுமைதாங்கியாகவே வாழ்க்கை அமைந்து விட்டதை எண்ணி வியப்பதா! அழுவதா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை...! எங்கிருந்தோ வானொலியில் “மண்ணுக்கு மரம் பாரமா? மரத்திற்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா?” என்ற திரைப்படப் பாடல் காற்றில் மிதந்து வந்தது. அதனைக் கேட்ட நான் ஆதவனை என் மார்போடு இறுக அணைத்துக் கொண்டேன்!