வீடு அமைதியாக இருந்தது. சுற்றிலும் தென்னை மரங்கள்... அதன் நடுவில் வீடு... எத்தனை அழகான அமைப்பு... இந்த மாதிரி இடத்துல இருக்கறதுங்கறதே மனதுக்கு ரொம்ப இதமா இருக்கும். இப்படிப்பட்ட எடத்துல இருக்கறவங்க நல்ல மனசு படைச்சவங்களாத்தான் இருப்பாங்க... இப்படிப்பட்டவங்க எப்படி இவங்க பொண்ண அந்த பிடுங்கல்ல கொடுத்தாங்க... என்று எண்ணமிட்டவாறே கண்ணுச்சாமி வீட்டை நெருங்கி, “ஏங்க வீட்டுல யாருங்க...?” என்று கேட்கவும் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு, “யாரு...?” என்று கேட்டுக் கொண்டே வந்த சோலையப்பன், கண்ணுச்சாமியைப் பார்த்தவுடன், “அடடே கண்ணுச்சாமி அண்ணனா... வாங்க... வாங்க... என்ன நல்லா இருக்கறீங்களா...? வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா...? ஒங்க ஊருலதான ஒங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்டுல ஏந்தங்கச்சியக் கட்டிக் கொடுத்துருக்கேன்... எப்படிண்ணே இருக்குது...?” என்று சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே வந்து அவரை வரவேற்றான்.
“ம்...ம்... நல்லாருக்கேன் தம்பி... இந்தப் பக்கமா வந்தேன்... ஒன்னையப் பாத்து ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்று பூடகமாகப் பேசினார் கண்ணுச்சாமி.
வீட்டிலிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டவாறே தன் மனைவியிடம் காப்பி போடுமாறு கூறிவிட்டு, “என்னண்ணே விஷயம்... ஏந்தங்கச்சிக்கு ஏதாவது ஒடம்புக்கு முடியலியா...?” என்று நெஞ்சம் படபடக்கக் கேட்டான் சோலையப்பன்.
வந்தவரோ... "அட ஆமாப்பா... ஒந்தங்கச்சிய அவ வீட்டுக்காரன் போட்டு அடியோ அடின்னு அடிக்கிறான்...? யாராரோ சொல்லிப் பாத்துட்டாங்க... மனுஷன் கேட்கமாட்டங்கறான்... ம்முன்னா அடி... ஆன்ன அடி... பாவம்பா ஓந்தங்கச்சி... எங்களாள பாத்துக்கிட்டு சகிச்சிக்கிட்டு இருக்க முடியல... அதான் மனசு கேக்காம வந்து ஓங்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன்... அவனெல்லாம் மனுஷனாயா...? அந்தப் புள்ளையப் போட்டு அந்த அடி அடிக்கிறான்... நீ போயி என்னன்னு கேளு... அப்பத்தான் அவன் அடங்குவான்...” என்று ஆவேசம் வந்தவரைப் போன்று மனதில் உள்ளவற்றை எல்லாம் அவன் முன் கொட்டினார் கண்ணுச்சாமி.
அவர் கூறியதைக் கேட்ட சோலையப்பன் திகைத்துப் போய்விட்டான். “என்னன்ணே...? நீங்க சொல்றதெல்லாம் உண்மையாண்ணே...? என்னால நம்பவே முடியலையேண்ணே... கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுங்கண்ணே...“ என்று சோலையப்பன் கண்ணுச்சாமி சொன்னதை நம்ப முடியாமல் கேட்டான்.
“என்னப்பா... என்னத்தை விவரமாச் சொல்லுறது? ஒனக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னுதான் நெனச்சேன். ஓந்தங்கச்சிய அவ புருஷன் போட்டு அடிக்கிறதை எத்தனை முறை நான் ஏம்வீட்டு மாடியிலே இருந்து பார்த்திருக்கேன் தெரியுமா? அந்தப் பொண்ணு எல்லாத்தையும் மறைச்சிட்டு எங்கக் கிட்ட சிரிச்சி பேசும். ஏம்பொண்டாட்டி கேட்டாக் கூட அதெல்லாம் ஒண்ணுமில்லையேன்னு மழுப்பிடும். ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டாக் கூட அந்த மனுஷனுக்கு வேலை போனதிலிருந்து ரொம்பத்தான் அவளைப் போட்டு வதைக்கிறான். எனக்கே மனசு தாங்கலை. அதுதான் உன்கிட்ட சொல்லுறேன். நான் அந்நியன். நான் கேட்டா அது தப்பாப் போயிடும். நாளைக்கு ஏதாவது ஒணணுன்னா நீங்க சொல்லவே இல்லையேன்னு என்மேல நீ வருத்தப்படக் கூடாதுன்னு தான் ஓங்காதிலே போட்டேன். இனி ஓம்பாடு. ஓந்தங்கச்சி பாடு. நான் கிளம்புறேன்...” என்று காப்பியை வாங்கிக் குடித்துவிட்டுக் கண்ணுச்சாமி தன்ஊருக்குக் கிளம்பிவிட்டார்.
வந்தவர் தனது மனப்பாரத்தை இவனிடம் இறக்கி வைத்துவிட்டுத் தன் பாரத்தைக் குறைத்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் சோலையப்பனால் அவர் இறக்கி வைத்த பாரத்தைச் சுமக்க முடியவில்லை. ஆத்திரத்தில் அவனது கண்கள் சிவந்தன. அவனது கன்னமும் மீசையும் துடி துடித்தது. அவனைப் பார்க்கும் போது அவன் மனைவி காமாட்சிக்குப் பயமாக இருந்தது.
“என்ன திமிர் இருந்தால் ஏந்தங்கச்சியப் போட்டு அடிப்பான் அவன்... நாதாரிப் பய... அவனத் தட்டிக் கேட்க ஆளில்லைன்னு நெனச்சிட்டானா...? அவ்வளவு திமிரா அவனுக்கு? இந்தத் திமிரு எப்படி வந்துச்சு? யாரும் வந்து கேட்க மாட்டாகன்னு நெனச்சிட்டானா... வர்றேன்டா... அயோக்கியப் பயலே... வர்றேன்டா... காலையிலேயே கிளம்பி வர்றேன். வந்து ரெண்டுல ஒண்ணு பாத்துப்புடுறேன்... அந்தக் களவாணிப் பயலோட சட்டையைப் பிடிச்சி இழுத்து நடு ரோட்டுல போட்டு ஒதைச்சாத்தான் அவன் சொன்னபடி கேப்பான். அவனைச் சும்மா விட போறதில்லை நான்...” என்று தனக்குத்தானே பேசிக்கொண்ட சோலையப்பனைப் பார்த்த அவன் மனைவி காமாட்சி உடல் நடுங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குக் கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை... திருதிரு என்று விழித்துக் கொண்டிருந்தாள்.
“ஏய்... என்னடி திரு திருன்னு முழிக்கிறே. நாளைக்கிக் காலையிலேயே ஏந்தங்கச்சியப் பார்க்கப் போகணும். எல்லாத்தையும் ரெடி பண்ணி வை...” என்று சோலையப்பன் தன் மனைவியைப் பார்த்து அதட்டினான். அவள் அங்கிருந்து நகரவே இல்லை.
“என்னடி? சொல்லிக்கிட்டே இருக்கேன். போகாம அப்படியே நிக்கறே... என்ன ஒங் காதுல விழலையா? போயி என்னோட சட்டைவேட்டியெல்லாம் அயர்ன்பண்ணி ரெடியா வையி...” என்றான்.
ஆனால் அவளோ “ஏங்க... நான் ஒண்ணு கேக்குறேன் தப்பா நினச்சிக்கிடாதீங்க... நீங்க ஒங்க தங்கச்சி வீட்டுக்குப் போறது அவசியந்தானா...?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“என்னடி...? என்னங்கறேன்...? நாம்போறது அவசியமில்லைன்னு சொல்லுறியா? கண்ணுக்குக் கண்ணா வளர்த்த தங்கச்சிய அவன் அடிப்பான்... ஒதப்பான் நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்கணும்ணு சொல்லுறியா...?” என்று காட்டுத்தனமாகக் கத்தினான் சோலையப்பன்.
“நான் கேட்க வேணான்னு சொல்லலைங்க. அவளே வந்து சொன்னாள்ன்னா நாம கேட்கலாம். இதெல்லாம் சாதாரணமானது. புருஷன் பொண்டாட்டி சண்டையில போயி நாம தலையிடுறது நமக்கு மரியாதையில்லைங்க... அதுக்குத்தான் சொல்றேன்...” என்றாள் அவன் மனைவி காமாட்சி.
“எது புருஷன் பொண்டாட்டி சண்டை? அடுத்தவன் பார்த்துட்டு வந்து சொல்ற அளவுக்கு இருக்குது. நான் போய் கேக்கலைன்னா என்ன நினைப்பாங்க... அவனுக்கும் குளிருவிட்டுப் போயிரும்?”
“ஏங்க அமைதியா இருங்க... அவங்க எதையாவது நெனச்சிக்கிட்டுப் போகட்டும். ஆனால் நீங்க இப்போ போறது அவ்வளவு நல்லதா எனக்குப் படலைங்க...”
“ஏய்... இங்க பாருடி பேச்சை நிப்பாட்டு இதுக்கு மேல உன் அறிவுரையைக் கேக்க நான் தயராயில்லை. என்னுடைய தங்கச்சிய பத்தி எனக்குத்தான் தெரியும். இதுக்கு மேல நீ எதாவது சொன்னேன்னு வச்சுக்கோ பல்ல உதுத்துப்புடுவேன் ஆமா...” என்று கூறிவிட்டுக் கோபமாக எழுந்து போய்விட்டான் சோலையப்பன்.
இதற்கு மேல் அவனிடம் எதையும் பேச முடியாது. பெருமூச்சுடன் தன் வேலையைக் கவனித்தாள் காமாட்சி.
மறுநாள் காலையில் தங்கையின் வீட்டில் கால் எடுத்து வைத்தவுடன் “வாங்க மாமா... வாங்க... வாங்க... வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா...?” என்று முகம் மலர வரவேற்றது தங்கையின் கணவன் தான். ஏதோ வேலையாக வெளியே கிளம்புவதற்குத் தயாராக இருந்தான்.
“ஆமா... மாமா... என்ன திடீர்ன்னு வந்திருக்கிறீக? ஆச்சர்யமா இருக்குது! நாங்க வாங்க வாங்கன்னாலும் வரமாட்டீங்க இப்ப திடுதிப்புன்னு வந்து நிக்கிறீக...? ஏம்மாமா ஏதாவது முக்கியமான விசயமா?” ஆவலுடன் கேட்ட மாப்பிள்ளையிடம் தங்கையை அடித்த விசயத்தைப் பற்றி சோலையப்பனுக்குக் கேட்க மனம் வரவில்லை.
“இல்ல மாப்பிளே. சும்மா தான் வந்தேன். ஒங்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சில்ல... அதான் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்” என்று எதையோ கூறி மழுப்பிவிட்டான்.
“சரி மாமா. நான் அவசரமா ஒரு வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கேன். போயி அந்த வேலைய முடிச்சிட்டு வர்றேன், வந்த பிறகு சாவகாசமா பேசலாம் மாமா... காமாட்சி... ஒங்க அண்ணனை நல்லாக் கவனி. நான் போற வழியில அவருக்குப் பிடிச்ச ஆட்டுக்கறி வாங்கி யாருகிட்டேயாவது கொடுத்து அனுப்புறேன்... என்ன... வரட்டுமா...?” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கிளம்பி விட்டான்.
காமாட்சி சோலையப்பனுக்குக் காபி கலந்து கொடுத்து விட்டு அண்ணி, குழந்தைகளின் நலன் விசாரித்தாள். ஊர் விசயங்களைப் பற்றிக் கலகலப்பாக பேசினாள்.
அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவள் மனத்தில் இல்லையே என்று சோலையப்பனுக்கு வருத்தமாக இருந்தது. பேசிக்கொண்டு இருந்தபோதே ஆட்டுக்கறி வரவே தன் அண்ணனுடன் பேசிக் கொண்டே அதனைச் சமைப்பதற்குத் தயாரானாள். வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்த தங்கையிடம் சோலையப்பன் அமைதியாகக் கேட்டான்.
“ஏம்மா காமாட்சி ... ஓம்வீட்டுக்காரனப் பத்தி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா...?”
“என்னன்ணே கேள்வி பட்டீங்க...?”
“ஓம்புருஷன் உன்னை எப்போப் பார்த்தாலும் மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறானாமே... என்னதான் நெனச்சிக்கிட்டு இருக்கான்? என்ன கேக்கப்பாக்க ஆளில்லைன்னு நெனக்கிறானா?” என்று கடுமையான கோபத்தில் கேட்டான்.
அதற்குக் காமாட்சியோ, “அப்படில்லாம் ஒண்ணுமில்லையே... ஏண்ணே என்னையப் போட்டு என்னோட வீட்டுக்காரரு அடிக்கிறாருன்னு ஒங்கக்கிட்ட யார் சொன்னது...?”
“இங்க பாருத்தா யாரு சொன்னா என்ன... என்கிட்ட எதையும் மறைக்காமல் சொல்லு. அவனை உண்டு இல்லைன்னு பண்ணிப்புடறேன்...” என்று கடுகடுப்பான முகத்துடன் கேட்டான்.
“அப்படியெல்லாம் இல்லண்ணே... எப்பவாவது கோபம் அதிகமா வந்திருச்சின்னா அதைக் கட்டுபடுத்த முடியாமல் என்னப் போட்டு அடிக்கிறாரு. அதுவும் எப்போதாவதுதான்...” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“என்னம்மா இப்படிச் சொல்லுற? அவனுக்கு எதுக்காவது கோபம் வந்தா அதுக்காக ஒன்னைப் போட்டு அடிப்பானாமா...?”
“அப்படியில்லண்ணே. அவருக்கு அவரு மேலேயே கோபம். தான் குறைவா சம்பாதிக்கிறோமேங்கற ஆத்திரம். வீட்டுச் செலவுக்கு அது பத்தமாட்டேங்குதேன்னு ஆத்திரம். அதுமட்டுமில்லாம தன் தங்கையை கல்யாணம் செஞ்சி கொடுக்கணுமேன்கிற மனவருத்தம். இதையெல்லாம் தாங்கிக்க முடியாத போது, நான் ஏதாவது கேட்கப்போய் அந்தக் கோபத்தையெல்லாம் என் மேல திருப்பி விடுறார். அவ்வளவு தான்... இதப்போயிப் பெரிசா எடுத்துக்கிடாதீங்க...”
“அவனோட ஆத்திரத்தத் தீத்துக்கறதுக்காக நீதான் கிடைச்சியா...? ஆத்திரத்தத் தீத்துக்கணும்னா அவன் அம்மாவையோ அவந்தங்கச்சியையோ போட்டு அடிக்க வேண்டியது தானே? அவனால கட்டிக்கொடுக்க முடியலைன்னா ஒரு கூலி வேலை செய்யிறவனுக்குக் கட்டிக் கொடுக்கிறது தானே... இவன் இருக்கிற லட்சணத்தில் தங்கைக்குப் பணக்கார இடமாப் பார்த்தா முடியுமா...?”
“என்னண்ணே சொல்ற? நீ மட்டும் ஓந்தங்கச்சிக்கு நல்ல இடமா... சம்பாதிப்பவனா பார்த்துத்தானே கட்டிக் கொடுத்த. ஒன்னோட வருமானத்துல எனக்கு ஒரு கூலிவேலை பாக்குற மாப்பிள்ளையை ஏன்ணே பார்க்கலை. என் மேல நீ வச்ச பாசத்தால தானே வரவுக்கு மீறி கடன் வாங்கி கல்யாணம் செஞ்சு வச்சே. அப்போ ஒனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது. எத்தனை முறை என் கண்ணெதிரிலேயே அண்ணியப் போட்டு அடிச்சிருப்ப. அதே மாதிரிதான் அவங்க நிலையில இப்போ நான் இருக்கிறேன். விடுங்கண்ணே... வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கத்தானே செய்யும்... எல்லாத்தையும் பெரிசுபடுத்தினா குடும்பம் எப்படி உருப்படும்...” என்றாள்
சோலையப்பனுக்கு மனதில் யாரோ ஓங்கி மிதித்தாற்போன்று இருந்தது. அவன் எதுவும் பேசாமல் யோசித்தவாறு இருந்தான். காமாட்சி கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்காக... அப்படியே விட்டுற முடியுமா...?
“இல்லை காமாட்சி... மனசு கேட்கலை. நான் அவன் வந்ததும் இதைக் கேட்கத் தான் போறேன்...” என்றான்.
“வேண்டாம்ண்ணே. நீ இதைக் கேட்டால் ஒங்களுக்குள்ள இருக்கிற மரியாதை போயிடும். நீ எப்படி அண்ணி வீட்டுக்காரர்களை மதிக்கலையோ... அதே மாதிரி இவரும் ஒங்கள மதிக்காம நடந்துக்குவார். எனக்கும் ஒன் வீட்டுக்குமான உறவும் போயிடும். எனக்கு அண்ணியோட வாழ்க்கையே பாடமாயிடுச்சுண்ணே... அதனால் தயவு செஞ்சு நீ இதைக் கண்டும் காணாமல் இருந்திட்டுப் போயிடு. அது தான் நமக்கு நல்லது... ஏம் வீட்டுக்காரரு கோபக்காரருதான்... ஆனா ஒம்மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காருண்ணே... அத வீணாவுல கெடுத்துக்காத... எல்லாஞ் சரியாப் போயிரும்...” என்றாள் சரஸ்வதி.
சோலையப்பனுக்கு மனம் பக்குவப்பட்டுப் போனது... தன் தங்கச்சியா இப்படிப் பேசுறா...? அவளை வியப்பாகப் பார்த்தான்... எவ்வளவு பக்குவம்... எனக்குத் தெரியாததெல்லாம் இவளுக்குத் தெரியுதே... பாசம் என்னோட கண்ண மறைச்சிடுச்சு... வாழ்க்கைப் பாடத்தை எவ்வளவு கச்சிதமாச் சொல்றா...” என்று மனதிற்குள் எண்ணமிட்டவாறு தன் தங்கையைக் கண்கலங்கப் பார்த்தான்.
மதியம் அவள் சமைத்துப் போட்டதை உண்டவுடன் ஊருக்குக் கிளம்பினான்... தன் தங்கையின் உயர்ந்த எண்ணத்தை எண்ணி எண்ணிப் பூரித்துப் போனான்.
அவன் மனதில் அவன் எப்போதோ படித்த, “அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்” (அறிவையும் பண்பாட்டையும் எங்கு கற்றுக் கொண்டாள்...?) என்ற குறுந்தொகை வரிகள் பளிச்சிட்டன.