வீட்டின் முன் பகுதியில் வேப்பமரம் இருந்தாலும் வெயில் கனகனத்துக் கொண்டிருந்தது. சூரியன் சுறுசுறுப்பாய் வானில் முன்னேறி தன் செங்கதிர்களால் சுட்டெரித்துக் கொண்டிருந்த முற்பகல் வேளை. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மின்விசிறியைச் சுழலவிட்டு அன்றைய நாளிதழ்களின் இணைப்புகளை சாவகாசமாகப் படித்துக் கொண்டிருந்தார் சந்தானம்.
அவரது மனைவி முறத்தில் எதையோ போட்டுப் புடைத்துக் கொண்டிருந்தார். அப்போது “ஐயா...!” என்று முதியவர் ஒருவர் வாசலில் நின்றுகொண்டு அழைக்கின்ற குரல் கேட்டது.
குரலைக் கேட்டு நிமிர்ந்த சந்தானத்தின் மனைவி சசிகலா, சன்னலின் வழியாக யாரென்று பார்த்தார். வெளியே நின்றிருந்த முதியவரைப் பார்த்துவிட்டு, “ச்சே... இந்தாளுக்கு வேலையே இல்லை! எப்பப் பாரு பையைத் தொங்கப்போட்டுக்கிட்டு மாசம் ரெண்டு தடவையாவது லோலோன்னு வந்துடறான்... வேற எங்கயாவது போயித் தொலைய வேண்டியதுதான... என்ன ஜென்மங்களோ...?” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.
அவளின் முணுமுணுப்பைக் கண்ட சந்தானம் “என்ன சசி! வெளியில யாரு வந்திருக்கறது...? கதவைத் திறக்காம நீபாட்டுக்கு வாயிக்குள்ளேயே முணுமுணுத்துகிட்டு இருக்கே! போயிக் கதவ திறப்பா...!” என்றார்.
“போறேன்...போறேன்...! நான் என்ன தெறக்க மாட்டேன்னா சொன்னேன்... ஆளோட எளக்காரத்தப் பார்த்துப்பிட்டு அந்தாளு எப்பப் பாத்தாலும் இங்கயேதான் வந்துகிட்டு இருக்காரு... தேவையில்லாததெல்லாம் அவருகிட்ட இருந்து வாங்கிக்கிட்டே இருக்கீங்க... நான் வேண்டாம் வேண்டாம்னு தலைதலையா அடிச்சிக்கிட்டாலுங்கூட நீங்க கேக்கவா போறீங்க! ஒங்க தலையிலே மிளகாய் அரைக்கறதுக்குன்னே அந்தாளு வர்றாரு!” என்று கூறியபடியே சேன்று சசிகலா கதவைத் திறந்தாள்.
வீட்டின் வெளியே அறுபது வயதைக் கடந்த நிலையில் ஒல்லியான உடம்புடன் வெடவெடவென்று உயரமாக, நரைத்த முடி! கண்களில் அந்தக்கால சோடாப்புட்டிக் கண்ணாடி, தோளில் ஒரு ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு நின்றிருந்த அந்த முதியவர் சசிகலாவைக் கண்டவுடன் கைகளைக் கூப்பி, “வணக்கம்மா!” என்றதும் “வணக்கம் வணக்கம்! உள்ளே வாங்க! என்றவாறு வீட்டிற்குள் விரைந்து சென்றாள்.
வீட்டிற்குள் வந்த அந்த முதியவரைப் பார்த்த சந்தானம் எழுந்து நின்று “வாங்க ஐயா! இப்படி உட்காருங்க!” என்று கூறி வரவேற்று அவரைச் சேரில் அமர வைத்தார். தன் மனைவியைப் பார்த்து, “ஏம்மா சசி கொஞ்சம் காபி போட்டுட்டு வர்றியா...?” என்று கேட்டார்.
சேரில் அமர்ந்தவாறே... “அதெல்லாம் இருக்கட்டும் தம்பி! இந்தத் தள்ளாத வயசுல ஒங்களை மாதிரி ஒரு சிலபேரு வாடிக்கையா வாங்கிறதுனாலே என்னோட பொழைப்பு ஓடுது. இல்லைன்னா சொல்லவே முடியாது தம்பி...” என்று மனம் நொந்து கூறியவர், பையில் இருந்து மெழுகுவத்தி, ஊதுபத்தி பாக்கெட்டுக்களுள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொடுத்தார். பத்து பாக்கெட்கள் அடங்கிய ஒரு பண்டல் அது. சந்தானம் அந்தப் பெரியவரைப் பார்த்து, “ஐயா, இந்த முறை ஊதுபத்தியில ரெண்டு பண்டலாக் கொடுங்க! என்று கூறி வாங்கிக் கொண்டார். பண்டலை சந்தானத்தின் கைகளில் கொடுத்த பெரியவரின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி தெரிந்தது.
அதற்குள் காபி போட்டுக் கொண்டு வந்த சசிகலா, சந்தானம் வாங்குவதைப் பார்த்து, “ஏங்க எதுக்குங்க ரெண்டு பண்டல்...?” என்று ஜாடையில் கண்களிலேயே கேட்டாள். அவளின் கண்மொழியைக் கண்ட நான் அதனைப் புரிந்து கொண்டு அவளைப் பேசாமல் இருக்குமாறு சைகை செய்தேன்.
அந்தப் பெரியவர் காபியைக் குடித்துவிட்டு ரெண்டு பண்டல்களுக்குரிய பணத்தையும் வாங்கிக்கொண்டு, “ரொம்ப நன்றிங்க தம்பி! இன்னிக்கு நீங்க ரெண்டா வாங்கிக்கிட்டதாலே எனக்கு கொஞ்சம் அலைச்சல் கொறைச்சலாப் போச்சு... நீங்க நல்லா இருப்பீங்க தம்பி! நானு வரேன் தம்பி! என்று கூறி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அந்தப்பெரியவர்.
அவர் சென்றது சற்று நேரத்தில் இடி மின்னல் போன்று, சசிகலா வரிந்து கட்டிக் கொண்டு தன் கணவனுடன் சண்டை போடத் தொடங்கிவிட்டாள். “ஏங்க ஒங்களுக்கு வெளங்கவே வெளங்காதா... நம்ம வீட்டுல மட்டும் என்ன பணம் கொட்டியா கெடக்குது...? இப்படிப் போயி வெரயமாக்குறீங்களே...! இது ஒங்களுக்கே நல்லாருக்கா...? அந்தப் பெரியவர் விற்கிற அந்த ஊதுவத்தில வாசனையே வராது. அதைப்போயி ஒண்ணுக்கு ரெண்டா வேற வாங்கறீங்க! ஒரு பண்டல் பத்தியே நமக்கு அதிகம். இது நல்லால்லேன்னு நா வேற தனியா கடையிலே வாங்கறேன். இனிமே இப்படி வாங்காதீங்க... ஒரு தடவையாவது அவரத் திருப்பி அனுப்புங்க... அப்பறம் அந்தப் பெரியவரு இந்தப்பக்கமே வரமாட்டாரு…” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
அவளின் பேச்சில் உண்மை இருந்தாலும் அதனைக் கேட்டு வருத்தமடைந்த சந்தானம் பொறுமை இழந்து, “இந்தாப்பாரு பேச்சைக் கொறை... கொஞ்சநாச்சும் மத்தவங்களப் புரிஞ்சிக்க... கல்லாட்டம் இருக்காதே... நாம வேண்டாத செலவா எவ்வளவோ செலவழிக்கிறோம்...? அதெல்லாம் கணக்குப் பார்த்தா செய்யறோம்? இருநூறு ரூபா செலவு பண்ணா நாம ஒண்ணும் கொறஞ்சுபோயிட மாட்டோம்!” என்று கூற, பதிலுக்கு சசிகலா, “ஆமாங்க இந்த இருநூறு ரூபா மட்டும் நமக்குச் சும்மா வருதாங்க! ஒரு தடவை ஐயோ பாவம்னு வாங்குனாப் பரவாயில்லை! மாசா மாசம் சும்மா சும்மா அந்தாளுக்கிட்டே ஏன் வாங்கணும்? இது போதாதுன்னு தேவையில்லாம மெழுகுவத்திய வேற வாங்குறீங்க... நமக்கெதுக்கு மெழுகுவத்தி... அதவேற வாங்கி வாங்கி அடுக்கி வைக்கிறீங்க ஒங்களுக்கு ஏதாவது ஆகிப்போச்சா...? ஏன் இதெல்லாம் தேவையில்லைன்னு புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க...?
அதைக்கேட்ட சந்தானம், “எனக்குப் பைத்தியம் முத்திருச்சுன்னு நினைக்கிறீயா?” என்று கேட்கவும்,
“ஆமா... அத நான் எப்படி சொல்றதாம்...? ஆனா நீங்க செய்யறதப் பார்த்தா அப்படித்தான் ஆகிப்போச்சோன்னு தோணுது!” வாசனையே வராத இந்தப் பத்திப் பாக்கெட் வேணும்னா ஒரு பாக்கெட் வாங்கிட்டு அனுப்பிச்சரலாம்... ரெண்டு பண்டல் வாங்கி அடுக்கறீங்களே! அதுதான் ஏன்னு விளங்கலே...” என்று ஆதங்கப்பட்டாள் சசிகலா.
அதனைக் கேட்ட சந்தானம், அவளை அமரவைத்து பொறுமையாக கூறத்தொடங்கினார்...
“சசி! கோவிச்சாக்காதம்மா...! நான் செய்யறதப் பார்த்தா ஒனக்கு இந்த மாதிரி கோவம் வரத்தான் செய்யும்... நான் இப்ப கேக்குறதுக்குப் பதில மட்டும் சொல்லு... இங்க வர்ற அந்தப் பெரியவருக்கு வயசு என்ன இருக்கும்னு நெனக்கிறே?”
“என்ன எழுபதுக்கு மேல இருக்கும்! அதுக்கு என்ன இப்போ?”
“விஷயம் இருக்கு... சொல்றேன்... ஆமா... அவரு இத்தனை வயசுக்கு மேல எதுக்கு இப்படி வீடுவீடாப் போய் சம்பாதிக்கணும்... சொல்லு?
“ஹூம்... ம்... அதுவா... அது அவரோட தலைவிதி!”
“இந்த பாரு சசி தலைவிதி அது இதுன்னல்லாம் சும்மா சொல்லிட்டுப் போயிடக் கூடாது! இதுவே அவர் ஒன்னோட அப்பாவா இருந்தா தலைவிதின்னு சொல்லிட்டு விட்டுருவியா?”
“ஏங்க இந்த நெலமை எங்க அப்பாவுக்கு வரணும்... அவருக்கெல்லாம் இந்தமாதிரி நெலமை கனவுல கூட வராது தெரிஞ்சுக்கோங்க!”
“அடடே... வராது... நான் என்ன வரணும்னா சொல்றேன்... ஒரு உதாரணத்துக்குத்தான் கேட்டேன்... ஒரு வேளை வந்துருச்சுன்னே வச்சுக்கோயேன்... அப்ப என்ன பண்ணுவே! சொல்லு...”
“அதெப்படிங்க வரும்! எங்க அப்பாவப் பாத்துக்க என்னோட அண்ணன், தம்பி எல்லாரும் இருக்காங்க... அவங்க பார்த்துக்க மாட்டாங்களா...? ஏன் இப்படி ஒங்க எண்ணம் தாறுமாறா ஓடுது...”
“அட ஏன் இதுக்குப் போயி கோவுச்சுக்கிறே... நான் சொல்றதக் கேளு... இந்தப் பெரியவருக்கு ரெண்டு மகங்க இருக்காங்க... இருந்து என்ன பிரயோசனம்... நல்லா அவங்கள அவரு படிக்க வச்சாரு... வேலை வாங்கிக் கொடுத்துக் கலியாணமும் பண்ணி வச்சாரு... ஆனா அவனுக இருந்தும் இல்லாமப் போயிட்டாங்க... இவர அந்தப் பயலுங்க வீட்டவிட்டுத் தொரத்தி விட்டுட்டாங்க... யாருமே இவர வச்சுப் பாத்துக்கல... இப்ப இந்தப் பெரியவரு அனாதை ஆசிரமத்துல இருக்கார். அங்கதான் ஊதுவத்தி சுத்தறதுக்கு, மெழுகுவத்தி தயாரிக்கிறதுக்கெல்லாம் கத்துக் கொடுக்குறாங்க! சிலபேரு அதைச் செய்யறாங்க! செஞ்சதை சிலபேரு விக்கிறாங்க! இங்க வர்ற பெரியவரும் ஆனாதை ஆசிரமத்துல செஞ்சததைத்தான் விக்க வர்ராரு... இந்த வயசுல எத்தனையோ பேர் ரோட்டுல பிச்சை எடுத்துட்டு இருக்கிறதை பாத்துருப்பே! இவர் அப்படி இல்லாம சுயமா ஒழைச்சுச் சாப்பிடறார். அனாதை இல்லத்துல கூட இலவசமா தங்கிச் சாப்பிடக்கூடாதுன்னு இப்படி உழைச்சு வருகின்ற பணத்தைக் கொடுத்துத் தங்கி இருக்கார். இவரோட ஊதுவத்திலே வாசனை இல்லதான்... மெழுகுவத்தி நமக்குத் தேவையில்லதான்... ஆனா அந்த ஊதுவத்தியிலயும் மெழுகுவத்தியிலயும் அவரோட மனஉறுதியும் நேர்மையும் இருந்து மணக்குதுல்ல... அந்த உழைப்பை நான் மதிக்கறேன்... அவரோ உழைப்புக்குக் கொடுக்கற மரியாதைக்காகத்தான் ரெகுலரா வாங்கிறேன்... மணம் பெருசில்ல... அவரோட மனஉறுதிதான் பெருசு... ஒனக்கு அவரு கொடுக்குற பொருளப் புடிக்கலன்னா அதவாங்கி எங்கயாவது நாம கொடுத்துடலாம்... ஆனா அந்தப் பெரியவரை பிச்சைக்காரன் மாதிரி நெனச்சு அவமதிக்காத... மரியாதைக் கொறைவாவும் பேசாத...” என்றார் சந்தானம்.
“என்ன மன்னிச்சிருங்க... புரியாமப் பேசிட்டேன்... மதிப்பு பொருள்ள இல்லங்க... மனுசனோட எண்ணத்துலயும் அவனோட உழைப்புலேயுந்தான் இருக்குதுன்றதப் புரிஞ்சிக்கிட்டேன்... நாம மட்டுமில்லங்க மத்தவங்ககிட்டயும் சொல்லி அந்தப் பெரியவருக்கிட்ட இருந்து பொருள வாங்கச் சொல்லுவோம்...” என்று கண்கலங்கக் கூறினாள் சசிகலா.
மனைவியின் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி அவளை அன்பொழுகப் பார்த்தார் சந்தானம். பக்கத்து வீட்டு பண்பலை வானொலியிலிருந்து, “ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிப்பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்” என்ற திரைப்படப் பாடல் காற்றில் மிதந்து வந்தது.