நாச்சம்மைக்கு மனம் குழம்பிப் போயிருந்தது. என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. குழந்தையின் உடல் அனலாய்க் கொதிப்பதைக் கண்டு அவளுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சமையல் செய்ய வேண்டும் என்ற நினைவு கூட இல்லாது குழந்தையின் பக்கத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
கூலிவேலைக்குச் சென்ற அவள் கணவன் இன்னும் வீட்டிற்கு வரவேயில்லை. அவளின் கணவன் கிடைத்த வேலையைச் செய்துவிட்டு வயிறு முட்டக் குடித்துவிட்டு வருவான். அவனுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. மனைவி, குழந்தை என்ற எந்த அக்கறையும் அவனுக்குக் கிடையாது. அவனுண்டு அவனுண்டு அவன் குடியுண்டு... என்று பெருங்குடிகாரனாகத் திரிந்தான்.
அவளிடம் சத்தியமாக இனி குடிக்க மாட்டேன் என்று பலமுறை சத்தியம் செய்திருக்கிறான். ஆனால் அது வெறும் கானல் நீராகவே போய்விட்டது. இன்று குழந்தைக்குக் காய்ச்சலாக இருந்ததால் அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. டாக்டரிடம் காட்டுவதற்குக் கூட அவளிடம் பணம் இல்லை. அவள் கணவனிடமிருந்து ஏதாவது வாங்கித்தான் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்றிருந்தாள்.
“பாவி பறப்பான்... கட்டையில போறவன்... அந்தாளு இன்னிக்காவது குடிக்காம வரணும்... பிள்ளையாரப்பா! நீதான் என் வீட்டுக்காரருக்கு நல்ல அறிவக் கொடுக்கணும்...” என்று நாச்சம்மை வேண்டிக் கொண்டிருந்த போதே சாராய நெடியுடன் அவளுடைய கணவன் நல்லதம்பி உள்ளே நுழைந்தான்.
அதைக் கண்ட நாச்சம்மைக்கு அடக்கமுடியாத அளவிற்கு ஆத்திரம் பொங்கியது. கணவனைப் பார்த்து, “ஏய்யா! ஒனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? குடும்பம் பிள்ள குட்டி பொண்டாட்டின்னு ஏதாவது அக்கறை இருக்கா? பொழுதன்னைக்கும் சம்பாதிக்கிறதை இப்படி குடிச்சே அழிக்கிறியே... நீயெல்லாம் மனுசனா...? இல்ல மிருகமாய்யா...? இங்க பெத்தபுள்ள காய்ச்சல் வந்து குளிருல கிடந்து தவிக்குது... நீ குடிச்சுட்டு வந்து கும்மாளம் போடுற...” என்று வெடித்துச் சிதறினாள் நாச்சம்மை.
இதனை நல்லதம்பி சிறிதும் லட்சியம் செய்யாமல், “ஏண்டி... என்னடி வந்ததும் வராததுமா சத்தம் போடற... புள்ளயாவது குட்டியாவது... எனக்குப் பசிக்குது மொதல்ல சோறு போடுடி...!” என்று அதிகாரத் தோரணையில் மனைவியை அதட்டினான்.
“யோவ்! என்னய்யா… ஒனக்குச் சொரண இருக்குதா இல்லயா...? நான் என்னா சொல்றேன்... நீ என்னா கேக்குற... பச்சப்புள்ளை காச்ச குளுர ஆட்டிக்கிட்டுக் கிடக்கு ஒனக்குச் சோறு கேக்குதாக்கும்... அடப்பாவி கெடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வையிடாங்கற கதையாவுள்ள இருக்கு...”
“அடப்போடி நான் பசிச்குதுங்குறேன் இவபாட்டுக்கு என்னன்னமோ சொல்லி மனுசனுக்கு வெறுப்பேத்துறா... இந்தா பாருடி எனக்குப் பசிக்குது இப்ப சோறுபோடப்போறியா இல்லையா...?”
“இந்தா பாருய்யா ஒனக்கு என்ன நெஞ்சழுத்தம்... புள்ள கெடக்கிற கெடயில நானு எப்படியா சோறாக்க முடியும்... இங்க சோறுகீறு ஒண்ணும் ஆக்கலை...”
“என்னது சோறு ஆக்கலையா...? அப்ப வீட்டுல என்னத்தை... புடுங்கிட்டு இருந்தே...! புருஷன்காரன் பகல் முழுக்க வேலை செஞ்சிட்டு ஊட்டுக்கு வந்தா ஒரு புடி சோறு வக்கணையா ஆக்கி போட முடியுதாடி உன்னால...?”
“ யோவ்! நீ என்னாத்தை சம்பாரிச்சு கொண்டு வந்து கொட்டிட்டேன்னு அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கே... சம்பாரிக்கற எல்லாத்தையும் பொழுதன்னைக்கும் தண்ணியடிச்சுப்புட்டு வந்தா இங்க என்ன இருக்கும்...? என்ன ஓட்ட அதிகாரமா பண்ற...? வக்கத்த கழுதைக்குப் பேச்சு என்ன வேண்டிக்கிடக்கு...”
இப்படி நாச்சம்மை கூறவும் நல்லதம்பிக்குக் கோபம் சிவ்வென்று தலைக்கு ஏறியது. அவன் அவளது கண்ணத்தில் பளார் என்று ஓங்கி அறைந்துவிட்டு, “ஏண்டி என்னப்பாத்து வக்கில்லாதவன்னா சொல்ற... என்ன தகிரியம் ஒனக்கு...” என்று வாயில் வந்தவாறு பேசினான்.
நாச்சம்மையும் அவனை விடுவதாக இல்லை. “யோவ்! பெத்த பிள்ளை மூணுநாளாக் கண்ணைத் தொறக்காம கெடக்குது... அத ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக முடியாம நான் கஷ்டப்பட்டுக்கிட்டுக் கெடக்கிறேன்... ஒனக்கு அதெல்லாம் தெரியல... சோறுபோடுன்னு அடிக்க வந்துட்டே... அதுலயும் ரோஷம் பொத்துக்கிட்டு வருதாக்கும்...?” என்றாள்.
“ஆமாம்! ஊரு ஒலகத்துல இல்லாத புள்ளை... இவதான் பெத்தா...! எப்ப வந்தாலும் சோத்தை போடாம ஒரே பொலம்பல்... போடி நீயும் ஓம்புள்ளையும்... ரெண்டுபேரும் செத்துத் தொலைங்க... அப்பவாவது நான் நிம்மதியா இருப்பேன்” என்று சத்தம் போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான் நல்லதம்பி.
“செத்தாத் தெரியும்... நீயெல்லாம் ரோட்டுலேயே அலஞ்சு சாகத்தாம் போற... துப்புக்கெட்ட கழுத... கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்குதா ஒனக்கு...” என்று புலம்பிய நாச்சம்மை ஊர் பெரியதனக்காரரைப் பார்த்துப் பணம் ஏதும் வாங்கி வரலாம் என்று எண்ணியவாறே அங்கு கிளம்பினாள்.
பெரியதனக்காரரின் வீட்டில் எடுபிடி வேலைக்கு நல்லதம்பிதான் அவளைச் சேர்த்து விட்டிருந்தான். இரண்டு நாட்களாக மகனுக்குக் காய்ச்சல் என்று போகவில்லை... இன்று போய் ஏதாவது பணம் வாங்கி மகனை ஆஸ்பத்திரியில் காட்டி வரலாம் என்று நினைத்துத்தான் அவரைப் பார்க்க வந்தாள் நாச்சம்மை. வீட்டின் வாசற்படியில் நின்றவாறே,
“அய்யா...” என்று அழைத்தாள் நாச்சம்மை.
“அடடடே யாரு நாச்சம்மையா? வாவா... என்னம்மா ரெண்டுநாளா வேலைக்கு வரலை? அட்ரஸூகிட்ரஸூ தெரியாம அலைஞ்சி இப்பதான் அட்ரஸக் கண்டுபிடிச்சி வர்றியாக்கும்...?”
“இல்லேய்யா... ஏம்மவனுக்கு ரொம்பக் காச்சய்யா அவன் காச்சலால கெடந்து தவிக்கிறான்.. அதனாலதான் வரமுடியல... கோவிச்சிக்கிடாதீங்க... இன்னும் ரெண்டுநாளு பொறுத்துக்கங்கய்யா... வேலைக்கு வந்திடறேன்...”
“ஓஹோ... இதைச் சொல்லத்தான் இப்ப வந்தியாக்கும்... நான் என்னமோ வேலை செய்ய வந்திருக்கேன்னுல்ல ஒனக்காக நிறைய வேலைங்க ஒதுக்கி வச்சிருக்கேன்” என்று நக்கலாகச் சொன்னார் பெரியதனக்காரர்.
நாச்சம்மைக்கு அவரது நக்கல் கோபத்தை உண்டு பண்ணியது, இருந்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு “அய்யா...” என்று பணம் கேட்கக் வெட்கப்பட்டுக் கொண்டு மெதுவாக இழுத்தாள்.
“என்னம்மா... அதான் சொல்லிட்டேனே... ரெண்டு நாள் பொறுத்துதான் வா!”
“அதில்லை ஐயா... கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ணா எம் புள்ளைய ஆஸ்பத்திரியிலே காட்டிருவேன்...”
“ ஏம்மா! கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே இப்பல்லாம் பணம் கேக்கறாங்களா என்னா...? ஒன்ன மாதிரி ஏழைபாழைங்க என்ன பண்ணுவீங்க பாவம்...? ” கேலியாகப் பேசினார் பெரியதனக்காரர்.
“ஐயா! இது டெங்குக் காச்சாலாம்யா தனியார் ஆஸ்பத்திரிக்கு டவுனுக்குக் கொண்டுபோகணும்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே உள்ளவங்க சொல்லிட்டாங்க!”
“அப்ப நிறைய பணம் செலவாகுமே!”
“நீங்க கொஞ்சம் கடனா கொடுத்து ஒதவுனா... நல்லதுங்கய்யா”
“ஏம்மா! நான் யாருக்கும் அடமானம் இல்லாம கடன் கொடுக்க மாட்டேனே! என்று எகத்தாளமாகக் கூறிய பண்ணையாரின் கண்கள் அவளின் உடலை அங்கங்கே நின்று மேய்ந்தன. அதனைக் கண்ட நாச்சம்மை கூனிக்குறுகிப் போனாள்.
“ஐயா! வேலை செஞ்சே ஒங்களோட கடன அடச்சிடுறேன்...!”
“அடேங்கப்பா என்னா நாணயம் என்னா நேர்மை... இந்தா பாரும்மா ஓம் புருஷன் முன் பணம் வாங்கிட்டுதான் உன்னைய இங்க வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கான். அந்தக் கடனே இன்னும் தீரல... இப்ப வந்து புதுசா வேறக் கடங்கேக்குற... மொதல்ல ஓம்புருஷன் வாங்குன கடன கட்டிட்டு அப்பறம் பணம் கேளு நான் தர்றேன்... இல்லேன்னா ஏதாவது பொருளுகிருளு இருந்தா கொண்டாந்து அடமானம் வையி... அத வச்சிக்கிட்டு ஒனக்குப் பணந்தர்றேன்... சும்மல்லாம் பணம் தரமுடியாது என்ன... தெரிஞ்சிக்கிட்டியா”
“அடமானம் வைக்க ஏங்கிட்ட எதுவும் இல்லீங்களே ஐயா!”
“என்னது எதுவும் இல்லையா... இதோ பாருபுள்ளே... எதுக்கு வழவழன்னு பேச்சை வளத்துக்கிட்டு...! நீ மட்டும் எனக்குச் சரின்னு சொல்லிட்டேன்னு வச்சிக்க அப்பறம் பாரு... ஒன்னை மட்டுமல்லே ஓங்குடும்பத்தையே வச்சு காப்பாத்தறேன்... சரின்னு ஒரு வார்த்தை சொல்லு ஓம்மகனை இப்பவே டவுனு ஆஸ்பத்திரியிலே சேர்த்துடறேன்... ஓங்குடிசையைக் கோபுரமா மாத்திடறேன்... என்ன சரியா?” என்று கூறி நாச்சம்மையின் கையைப் பிடித்தார்.
உடலில் நெருப்பை அள்ளிக் கொட்டியதைப் போன்று துடித்த நாச்சம்மை பதறிப்போய் பெரியதனக்காரரின் கையைப் பட்டென்று தட்டிவிட்டு பளாரென்று கன்னத்தில் அறைந்தாள்.
பெரியதனக்காரரை அறைந்த நாச்சம்மை, “ச்சீ பொறுக்கி நாயே! நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்! அடுத்தவன் பொண்டாட்டியை எப்படிடா இப்படி வாய் கூசாமா கேட்கத் தோணுது? ஏண்டா கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம அடுத்தவன் பொண்டாட்டியைப் பெண்டாள கூப்பிடறியே? ஓம் பொண்டாட்டிய அடுத்தவங்கிட்ட கூட்டிவிடுவியா... எச்சிக்கலை நாயே... மானத்துக்காகத்தான் சேலை கட்டுறோம்... ஏழைங்கன்னா ஒங்களுக்கெல்லாம் எளப்பமாப் போச்சா... ஒனக்கெல்லாம் எதுக்குய்யா வெள்ளைச் சட்டை வேட்டி!” என்று அவரின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு அந்த இடத்திலிருந்து நாச்சம்மை புயலென வெளியேறினாள்.
அவள் வீடு திரும்பிய சமயம் நல்லதம்பி வீட்டிலிருந்தான். நாச்சம்மையின் மகன் குழந்தை காய்ச்சலின் கொடுமை தாளாமல் அனத்திக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த நாச்சம்மையைக் கண்ட நல்லதம்பி, “ஏண்டி இவ்வளவு நேரம் எங்கடி போயி ஊரு மேய்ஞ்சிட்டு வரே நாயே!” என்று கேவலமாகத் திட்டினான்.
அதனைக் கேட்ட நாச்சம்மை, “யோவ் இந்தா பாருய்யா... பேசாதய்யா நீ ஒழுங்கா இருந்தா... இப்படியெல்லாம் நடக்குமா? குடிச்சிக் குடிச்சி நீயும் கெட்டதோடு இப்பக் குடும்பத்தையும் கெடுத்துட்டியேய்யா... நீ மட்டும் குடிக்காம நல்ல விதமா நடந்துக்கிட்டியனா கண்ட கண்ட நாயெல்லாம் இந்தமாதிரிக் கேவலாமா என்னை கேள்வி கேக்குமா?” என்று அவனை ஏசிவிட்டு பெரியதனக்காரர் வீட்டில் நடந்ததை கூறி அழுதாள் நாச்சம்மை.
“ஏண்டி... என்னடி பத்தினி வேசம் போடுற... ஒத்துக்கறதுதானே... இதுல என்ன கெட்டுப் போகுது... நான் வேலை செய்யாமலேயே நாள் முழுக்க குடிப்பேன்... நீயும் ஒக்காந்து சோறு சாப்பிடலாம்ல... புரியாதவளே...”
தனக்கு ஆதராவாக இருந்து ஆறுதல் கூறுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போன நாச்சம்மை எரிமலையானாள்.
“அடச்சீ... நீயெல்லாம் ஒரு மனுசனாயா...? கேடுகெட்ட மிருகம்ய்யா... எவனாவது தன்னோட பொண்டாட்டிய இப்படித் தரக்குறவா நடத்துவானாய்யா... ஒனக்கு வெக்கமில்லை...” என்று கண்ணீரும் கம்பலையுமாகப் பொறிந்து தள்ளினாள்.
அதனைக் கேட்ட நல்லதம்பி தள்ளாடியவாறே “அடியேய்... ஏம்பொண்டாட்டிங்கற உரிமையிலதாண்டி நானு அவருகிட்ட ஒன்னைப் போகச் சொல்றேன்... குடும்ப முன்னேத்தத்துக்காகச் செய்யறது தப்பில்லே”
இதனைக் கேட்ட நாச்சம்மைக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
“சே! வெக்கம் கெட்ட நாயே...! பொண்டாட்டியை அடுத்தவன் கிட்ட விட்டு சம்பாதிக்க நினைக்கறியே ஒனக்கு மானம் வெக்கம் சூடு சொரணை ஏதாவது இருக்காய்யா...? குடிச்சிக் குடிச்சி ஒடம்புதான் கெட்டுப் போச்சின்னு நெனச்சேன் ஒனக்கு சொயஅறிவும் மழுங்கிப் போயிருச்சா...? ஒனக்கெல்லாம் எதுக்குய்யா பொண்டாட்டி...? நான் ஒம்பொண்டாட்டின்னு சொல்லிக்கவே வெக்கப்படறேன். அப்படிச் சொல்லவே எனக்கு நாக்கூசுதுய்யா... இனிமே நான் ஓங்கூட வாழறது தப்புய்யா... அது பிணத்தோட வாழறதுக்குச் சமம்... நீ கட்டுன தாலி ஏங்கழுத்துல இருக்கறதே அசிங்கம்... எத்தனை கஷ்டம் வந்தாலும் தாலியை அடகு வைக்கக் கூடாதுன்னு நெனப்பேன்... ஆனா நீ பொண்டாட்டியையே அடகு வெக்க துணிஞ்சிட்டியே... பாவி” என்று ஆவேசம் வந்தவள் போன்று கத்தித் தீர்த்தாள் நாச்சம்மை.
தள்ளாடியபடியே அவளருகில் வந்த நல்லதம்பி, “என்னாடி...? ரொம்ப ஓவரா நீபாட்டுக்குப் பேசிக்கிட்டே போறே? ஒனக்குக் கொழுத்துப் போச்சா... எவ்வளவு திமிராப் பேசுறா...” என்று கூறி கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.
அடிக்கவரும் அவனைப் புழுப்போலப் பார்த்த நாச்சம்மை அடிக்க ஓங்கிய அவனது கையை மடக்கிய வண்ணம், “யோவ்... நிறுத்துய்யா! நீயெல்லாம் ஒரு புருஷன்...! ஓங்கூட நான் வாழறதைவிட வாழாவெட்டியாவே இருந்துட்டு போறேன்... இனிமே என்னைய அடிக்கற வேலையெல்லாம் வெச்சுக்காதே... ஒனக்கு மொகத்துல மீசையின்னா எனக்கு மொழங்காலுல மீசை... கையக்கால ஒடிச்சிவிட்டுறவன்... நீ கட்டுன தாலியை அத்து இப்பவே கொடுத்துறுவேன்... அப்படி செஞ்சா அதயும் வித்து குடிச்சு நாசமாப் போயிருவே... அந்தத் தாலிய வித்து ஏம்மவனுக்கு வைத்தியம் பார்க்கப் போறேன்... அதனாலதான் நான் அதைச் செய்யலை! இனிமே உன் கூட வாழறதைவிட நாலு வீட்டுல பத்துப் பாத்திரம் தேச்சிப் பொழச்சுக்கறேன்... பொண்டாட்டிக்குப் பாதுகாப்பா இருக்க வேண்டிய நீயே பாதகம் நெனக்கிறியே...! இப்ப வெளியில இருக்கறவங்களப் பத்தி எனக்குப் பயமில்லை... ஒன்னப் பாத்துத்தான் எனக்குப் பயமா இருக்கு... ஓங்கூட இருந்தா எனக்குக் கேவலம். என்னக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்... குடி ஒன்ன மட்டுமில்ல... குடும்பத்தையே கெடுத்துருச்சு... நீ செத்துட்டேன்னு இப்பவே நெனச்சிக்கிட்டேன்... நீ நடமாடுற பிணம்யா... பிணத்தோட வாழ முடியாது... இந்தா நீ கட்டுன தாலிக்கயிறு...” என்று கூறி தாலியை மட்டும் எடுத்துக் கொண்டு தாலிக்கயிறை அவனது முகத்தில் வீசி எறிந்துவிட்டு தனது மகனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு விறுவிறென்று நாச்சம்மை வீட்டைவிட்டு வெளியில் நடந்தாள்.
அவளின் பாதை தெளிவாக இருந்தது. தெளிவின்றி நின்றிருந்த நல்லதம்பி தன் முகத்தில் விழுந்த தாலிக்கயிறைப் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் பிணமாக நின்று கொண்டிருந்தான்.